ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யூதாஸின் முத்தம் - கதை

Status
Not open for further replies.

வினோ

New member
Wonderland writer
10 - பலனை எதிர்பாராதே

இன்பத்தையும் துன்பத்தையும், இலாபத்தையும் நஷ்டத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக நினைக்கும் ஒருவன் போர் புரியும்போது அவன் பாவத்தை செய்வதில்லை.

- பகவத்கீதை

-------------------

“நீதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பஸ்ஸுக்குள்ள வச்சு, நான் அவன போட்டுத்தள்ளீரட்டுமானு கேக்கும் போது, ‘நிம்மதியா இருப்பேன்னு' சொன்ன. அதுமட்டும் இல்ல, ‘அதான் கடவுள் உங்கள என்கிட்ட அனுப்பி வச்சிருக்காருன்னு நினைக்கேன்னும்' சொன்ன.” என்று கத்தி கூறினான்.

சட்டென நின்றவள், “பைத்தியம் மாதிரி பேசாதடா. நீ அந்த முகேஷ எதுக்காக்க கொன்னேனு தெரியாது, ஆனா எதுக்காக செஞ்சிருந்தாலும் அது தப்பு தான்.” என்று அவள் கூறும் போதே இவன் சட்டென, “நான் என்னோட காலேஜ்ல படிச்ச என் சீனியர் பொண்ணுக்காக கொன்னேன்” என்று தலையைக் குணிந்தான். கண்கள் நிரம்பி வழிந்தது.

“அவங்கள நான் காதலிச்சேன். ஆனா, அது அவங்களுக்குத் தெரியாது. ஏன், நான்.. (நாக்கால் உதட்டை ஈரமாக்கியபடி).... நான் யாருனு கூட அவங்களுக்கு தெரியாது.” என்று அழத் தொடங்கினான்.

இப்போது நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான். “இந்தக் கொலை அவளுக்காக நடந்ததுனு கூட அவளுக்குத் தெரியாது” என்றவுடன் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. இவனுக்காக கலங்கினாள். துக்கப்பட்டாள். இவன் ஒரு குழந்தையைப் போல அழுது கொண்டிருந்தான்.

“இவங்கள கொல பண்ணி என்ன ஆகப்போகுது. கொஞ்சம் யோசி. தெருவுக்கு இரண்டு பேரு இவங்கள மாதிரி இருக்கத்தான் செய்றாங்க. எல்லாத்தையும் கொல பண்ணிற முடியுமா உன்னால?”

“எல்லாரையும் கொல பண்ணீற முடியாதுதான். அந்த தைரியத்துல தான் அவனுங்க அதிகாரம் பண்ணிட்டு சுத்துறாங்க.”

“நீ உன் குடும்பத்த பத்தி யோசிச்சியா?. அவங்க வாழ்க்கையும் சேத்து நாசம் பண்ணிட்ட. நீ இதெல்லாம் தெரிஞ்சு தான் பண்றியா?”

அவன் முகம் இந்த இருட்டுக்குள் இன்னும் இருண்டு போனது. கண்ணில் நீர்த் திவளைகள் ததும்ப பேச ஆரம்பித்தான்.
“நான் கொல பண்றதுக்கு முன்னாடி உன் குடும்பத்த பத்தி யோசிச்சியானு யாராச்சும் கேட்டுருந்தா உண்மையாவே யோசிச்சுருப்பேன். பயந்துருப்பேன். ஒரு வேளை மொதக்கொலைய பண்ணிருக்க கூட மாட்டன். ஆனா இப்போ நிலம கைமீறிருச்சு. இந்த நிமிஷத்த நான் யோசிக்கிறேன்.”

“இல்ல. எதிர்காலத்தையும் யோசினு நான் சொல்றேன். ஏற்கனவே, முகேஷோட ஆளுங்க உன்ன தேட ஆரம்பிச்சுருப்பாங்க. யோசி. இதுல வேலுச்சாமியவும் கொன்னுட்டா நீ காலி.”

அவன் முகத்தில் வடிந்த வியர்வைகளை இரண்டு கைகளாலும் துடைத்தான். முகம் சற்று அமைதியானது. சில முறை மூச்சை இழுத்து வெளியேவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“நான் சொன்னது புரியுதா?” எனக் கேட்டாள்.

“நான் சொல்லுறேன். நீ இப்போ கேளு. முகேஷ் செத்துட்டான். கொல பண்ணது யாருனு யாருக்கும் இப்போ தெரியாது.”

“உன்ன போலீஸ் தேடுதுனு சொன்ன?”

“தேடலாம்.. அது நான்னு ஒருவேளை தெரிஞ்சிருந்தா? தேடலாம். ஆனா, இப்போ வேலுச்சாமிய கொன்னுட்டா, இது தொழில் போட்டில, ஒருத்தருக்கொருத்தர் பண்ணிக்கிட்டாங்கனு திசத்திருப்பீரலாம். நானும் தப்பிச்சிருவேன்.”

“வேணாம் இதோட முடிச்சிக்கோ. எனக்கு என்னமோ சரியா படல. ஏற்கனவே இந்த பழி வேலுச்சாமி மேல தான் விழும். அதனால இப்போவே விட்டுட்டு எங்கயாச்சு ஓடிப் போய்ரு. நான் இத யார்ட்டையும் சொல்ல மாட்டேன்.. என்னோட கடன் பிரச்சனைய நீ யோசிக்காத.. எப்படியாச்சும் நான் அடச்சிருவேன். புரியுதா?”

“நீ புரியாம பேசுற. வேலுச்சாமியும் போய்ட்டா உனக்கும் கடன் பிரச்சனை தீந்திடும். யோசிச்சு பாரு வேலுச்சாமியும் போய்ட்டா, என்னோட இந்த கேஸ்ஸும் மொத்தமா முடிஞ்சிரும். யாரு செஞ்சானு யாருக்கும் தெரியாது. போலீஸோட சந்தேகம் அந்த இரண்டு குரூப் மேல தான் இருக்கும். அதனால எந்த க்ளூவும் கிடைக்காம போச்சுனா கொஞ்ச வருசத்துல கேஸ் க்ளோஸ் ஆக கூட வாய்ப்பிருக்கு.”

அவள் தயங்கி நின்றாள். அவள் முகத்தில் இன்னும் பயத்தின் கலவரம் ஓடிக்கொண்டேதான் இருந்தது.

“என்னையும் உன் கூட்டாளினு நினச்சு பேசுறியா? ஏதோ நானும் உன்கூட சேர்ந்து திட்டம் போடுற மாதிரி இருக்கு.”

“நீ என்னோட வாழ்க்கைல ஏன் வந்தனு எனக்கு இப்போதான் புரியுது. இந்த மொதக் கொலையில இருந்து தப்பிக்க தான். அவன் வீடு எங்க இருக்குனு சொல்லு? என்ன காப்பாத்து” என்றான் வேகமாக.

“வேண்டாம், நீ பண்ற பாவத்துக்கு நான் துணையிருக்க மாட்டேன். நான் கடனத் திருப்பித்தராததுக்கு நான் செத்தாக் கூட பரவாயில்ல.”

“நீ இப்படி மன்னிக்க மன்னிக்க தான், எனக்கு கொல்லனுங்கற வெறி வருது. எவ்வளோ நல்ல பொண்ணா இருக்க நீ. உன்ன ஒருத்தன் இப்படி கஷ்டப்படுத்தும் போது அவன கொல்லனுங்குற வெறி என் உச்சிக்கு ஏறுது” என்றான் கண்கள் சிவக்க. அவன் கண்ணில் கண்ணீர் பொங்கி வந்தது. அதில் கோபமும் கருணையும் ஒன்றி இருந்தது. அதை அவனால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

“வேண்டாம். ப்ளீஸ். இருக்குற பாரத்துல என்னால இந்த பாவத்தயும் சுமக்க முடியாது” என்றாள் அழுதுகொண்டே.

“நான் சுமக்குறேன் சுபத்ரா” என்று அருகில் நகர்ந்து வந்தான். “நான் கொலகாரந்தான், நான் பாவம் செஞ்சவந்தான், ஏற்கனவே இருக்குற பாவத்தோட சுமையில இந்த சுமையயும் சேத்துக்கப் போறேன். சுபத்ரா அழாத. உனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல”

“இதெல்லாம் எனக்காக தான பண்ற. எப்படி எனக்கு இதுல பங்கு இல்லாம இருக்கும். வேணாம்”

“உனக்காக மட்டும் இல்ல. அவன்கிட்ட அவஸ்த்த படுற எல்லாருக்காகவும் தான். ஒருவேளை..........” எனறு தன் பேச்சை நிறுத்தி பின்னோக்கி சிறிது தூரம் நடந்தான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை பார்க்க முடியாமலிருந்தான். மனது கணத்துப் போனது. வெறி உச்சியில் ஏறி கொலை செய்யத் துடித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் அவள் அருகில் வந்து, “ஒருவேளை இந்த கொலைய நான் உனக்காக பண்ற மாதிரி உனக்கு தோணுச்சுனா, உனக்கு பாவம் பண்றமாதிரி தோணுச்சுனா, எதுவுமே தெரியாத, எந்த பாவமும் செய்யாத என்னோட குடும்பத்த கொஞ்சம் பாத்துக்கோ. எனக்காக செய்ய வேண்டாம். உன்னோட பாவத்தோட சுமைய என் மேல இறக்கி வை. அத நான் சுமக்குறேன். என் குடும்பத்தோட சுமைய கொஞ்சம் எடுத்துக்கோ. முடிஞ்சா. இது கட்டாயம் இல்ல. உனக்கு தோணுச்சுனா, உனக்கு ஆறுதலா இருக்கும்னா மட்டும் இத செய். இப்போ அவனோட வீடு எங்க இருக்குனு மட்டும் சொல்லு.” என்று அவள் பார்வைக்காக காத்திருந்தான்.

அவள் கோபமாக கிளம்பினாள். இந்த முறை அவளுக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமலில்லை. இருந்தும் அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவனது அழைப்புகள், ஆழமான இருளில் மோதி மறைந்துபோனது. அவனை தன்னிடமிருந்து துண்டித்துக்கொள்ள அவள் எவ்வளவு வேகமாக நடந்தும் முடியவில்லை என்றாலும் அவள் வேகமாகவே நடந்தாள். தொலைவில் இருளில் மறைந்துபோனாள்.

இவன் அவள் போன திசைநோக்கி நகர ஆரம்பித்தான். மணி இரவு 1 இருக்கும். ஏதேதோ யோசித்துக் கொண்டே நடந்தான். தன் முதல் கொலையை யாருக்காக செய்தானோ, அவள் இந்நேரம் நிம்மதியாக உறங்கி கொண்டிருப்பாள். இப்பொழுது தன்னிடமிருந்து துண்டித்துக் கொண்ட மற்றொரு பெண், வேதனையில் பயத்தில் முன்னேறிக்கொண்டிருப்பாள். இவன் தன் யோசனைகளை தடுக்க முடியாமலும், அவன் கால்கள் நடக்கும் திசையை தீர்மானிக்க முடியாமலும் நடந்தான். நடந்துகொண்டே இருந்தான். அவன் நடந்து வந்த பாதைகளில் இருளும் ஒளியும் மாறிமாறி வந்தன. ஆனால் தன்னை சுற்றிலும் இருள் இருப்பதாகவே உணர்ந்தான். அவன் கண்கள் எதையுமே சில நேரங்கள் காணவில்லை.

திடீரென தூரத்திலிருந்து ஒரு பெண் வேகமாக வருவது மங்கலாகத் தெரிந்தது. அது அவளே தான். இவன் அவளை நோக்கி ஓடினான்.

அவள் மூச்சு வாங்க, “வேலுச்சாமிய யாரோ வெட்டிட்டாங்க. ஆஸ்பத்திரில ரொம்ப சீரியஸா இருக்கானாம். நீ யாரையும் இனி கொல பண்ண வேண்டியதில்ல.” என கண்ணில் நீர் சுரக்க சிறிது சந்தோசத்தில் கூறினாள்.

“எப்போ?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான். ஒரே போலீஸா இருக்கு அவன் வீட்டுக்கு முன்னாடி. கண்டிப்பா முகேஷ் ஆளுங்க தான் அவன வெட்டிருக்கனும். இந்த பிரச்சன திச மாறுது. நீ எங்கயாச்சும் போய்ரு.”

“எந்த ஹாஸ்பிட்டல்?

“மீனாட்சினு சொல்றாங்க. எதுக்கு கேக்குற?”

“ஒருவேளை அவன் பிழச்சுட்டா?”
“வேணாம். போலீஸ் ஏற்கனவே சுத்தி இருப்பாங்க. கண்டிப்பா மாட்டிக்குவ.”

“எதுக்காக இத சொல்ல வந்த?” என்று கேட்டான்.

“புரியல?”

“அவன வெட்டிட்டாங்கனு சொல்ல, ஏன் வந்த?”

“தெரியல, சொல்லனும்னு தோணுச்சு” என்றாள் தயங்கியபடி.

அவள் தயக்கத்தின் அர்த்தம் புரியவில்லை. அதற்கு அர்த்தம் இல்லாமல் கூட இருக்கலாம். அனைத்திற்கும் அர்த்தம் இருக்க வேண்டுமா என்ன?
“சரி, நான் போறேன்.. இனி உன்ன எப்போ பாப்பேனு தெரியாது. ஒருவேளை நாளைக்கு பாக்கலாம். இல்ல இன்னும் ஒருவருஷம் கழிச்சு கூட பாக்கலாம். ஒருவேளை பாக்க முடியாம கூட போகலாம். ஆனா எதுவா இருந்தாலும் இந்த நைட் மாதிரி நிச்சயமா இருக்காது.”

“வாழ்க்கைய கெடுத்துக்காத. வேணாம்” என தலையை ஆட்டினாள்.

“ஏற்கனவே கெடுத்தாச்சு.” என்றவன், தலையைக்குணிந்து பின் அவளைப்பார்த்து, “ஒரு ஒருநாளைக்கு முன்னாடியே ஏன் உன்ன பாத்துருக்கக் கூடாதுனு தோணுது.” என்றவன் கண்களில் கண்ணீர் படிந்திருந்தது.

“ஆம்” என்றபடி மீண்டும் தலையை மட்டும் ஆட்டினாள்.

“சுபத்ரா, ஒன்னு சொல்லவா?”
இந்தமுறை அவள் ஏதும் பேசவில்லை. கண்கலங்க மீண்டும் தலையை மட்டும் ஆட்டினாள்.

“இந்த உலகமே உன்ன வெறுக்கும் போதும் நீ உடஞ்சு போய்றாத. நீ இத மட்டும் நல்லா நியாபகம் வச்சிக்கோ.. நான் உனக்காக எப்பவும் இருப்பேன்கிறத…..”

அவள் பேச்சே வராமல், என்ன சொல்லவென்று தெரியாமல் பூமியின் பாரமே தன்னை அழுத்துவது போல உணர்ந்தாள். அவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். இப்போது அவளால் நகர முடியவேயில்லை.

வேலுச்சாமி மீனாட்சி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தான். யாரும் பார்க்காத நேரம் பார்த்து வேலுச்சாமியை வைத்திருந்த அறைக்குள் நுழைந்தான். முகத்தை ஆக்ஸிஜன் மாஸ்க் மறைத்திருந்தது. உடலில் பல இடங்களில் கட்டுப் போட்டு இருந்தது.

ரவுடியோ, அப்பாவியோ மருத்துவமனைக்குள் இருவரின் மேலும் ஒருவித கருணை பிறந்துவிடுகிறது. இவனுக்கு அந்தக் கருணை இப்போது உதித்து வதைத்தது. இந்த சமயத்தில் அவனை கொலை செய்வது நியாமா? என இவன் மனது யோசிக்க ஆரம்பித்தது.

ஆனால் நின்று யோசிக்க நேரமில்லை. யாரும் வரும்முன் முடித்துவிட வேண்டும். விறுவிறுவென அருகில் சென்றான். மாஸ்க்கை அகற்ற கையை நீட்டினான். வேலுச்சாமியின் கண்கள் மெதுவாக திறந்தது. “தண்ணீ” என்று முணங்கினான்.

இவனது கைகள் நடுங்கியது. கண்கள் கலங்கியது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது அவனுக்கு வலித்தது. வேலுச்சாமிக்கு காயங்கள் வலித்ததில் முணங்கிக் கொண்டிருந்தான். இவனுக்கோ மனது வலித்ததில் உள்ளுக்குள் முணங்கினான்.

மாஸ்க்கை விலக்கி, தண்ணீர் அளித்தான். வேலுச்சாமியின் கண்கள் கலங்க, கண்களாலேயே நன்றி கூறினான். வேலுச்சாமிக்கு மூச்சு திணற ஆரம்பித்தது.

“நீங்க சாகுறதுதான் எல்லாருக்கும் நல்லது” என்று கண்களில் கண்ணீர் பெருக, ஆக்ஸிஜன் மாஸ்க்கை மாட்டிவிடாமலும், மீண்டும் திரும்பிப் பார்க்காமலும் நடக்க ஆரம்பித்தான். வேலுச்சாமியின் மூச்சுத் திணறல் அதிகமாகி நெஞ்சு மேலும் கீழுமாக போய் கொண்டிருந்தது. வேலுச்சாமியின் பார்வை தன்னை காப்பாற்றும்படி அவனையே பார்த்துக்கொண்டிருந்தது. ஒருவேளை திரும்பிப் பார்த்தால் காப்பாற்றிவிடுவேனோ என்ற பயத்தில், திரும்பிப் பார்க்காமலேயே கதவைத் திறந்தான்.

வெளியே வேலுச்சாமியின் குடும்பத்தார் இருந்தனர். வேலுச்சாமியின் மகளுக்கு 8 வயது இருக்கும். அவளை ஒரு பார்வை பார்த்தான். அந்த குழந்தையின் உடல் வலியால் துடித்தது போல் துடித்துக் கொண்டிருந்தது. இவன் நொறுங்கிப் போனான். கதவின் கண்ணாடி வழியாகப் வேலிச்சாமியைப் பார்த்தான், வேலுச்சாமியின் உயிர் பிரிந்திருந்தது. வேலுச்சாமியின் கண்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், இனி அந்தக் கண்கள் எதையும் உணரப்போவதில்லை. உயிரற்ற ஒரு உடலில், வாழ்நாளில் தான் கொண்டிருந்த குரோதங்கள், கோபங்கள், செய்த துரோகங்கள், கொலைகள், கொள்ளைகள் என எதுவும் ஒரு நொடி கூட தங்கியிருப்பதில்லை. அதை உணர்ந்த இச்சமயத்தில் வேலுச்சாமிக்காகவும் இவன் துக்கப்பட்டான்.

வேலுச்சாமியின் மனைவி இவனைப் பார்த்ததும் கத்திக் கொண்டே வேலுச்சாமியின் அறையை நோக்கி ஓடி வந்தாள். அவள் கடந்து போகும் வரை நகராமல் அப்படியே இவன் நின்று கொண்டிருக்க, அந்த குழந்தையை நிறுத்தி, “என்ன மன்னிச்சிடு” என்று அந்த குழந்தையின் கையால் தன் முகத்தில் அறைந்தான். பின்பு அக்குழந்தையின் கைகளை விட்டான். ஓட ஆரம்பித்த அவன், அக்குழந்தையின் அலறல் சத்தம் அவன் காதுகளை எட்டிய சமயத்தில், ஓட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு மெதுவாக அழுது கொண்டே நடக்க ஆரம்பித்தான்.


வராண்டாவில் நின்று கொண்டிருந்த, வேலுச்சாமியின் ஆட்களும், இரண்டு போலிஸீம் ஓடி வந்தனர். வேலுச்சாமியின் ஆட்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மூன்று முறை தாக்கினர். இவன் கண்ணத்திலும், கண்ணின் புருவத்திலும் வெட்டுக்காயம் ஏற்பட்டு இரத்தம் பொழியத் தொடங்கியது. கொன்றுவிடுங்கள் என்பது போல நின்றுவிட்டான். போலீஸ் அவர்களை தடுத்தது. இவனை அங்கிருந்து, கைகளில் விலங்கிட்டு அழைத்துச் சென்றது.

வேலுச்சாமி, முகேஷ் என இரண்டு கொலைகள். கொலை புரிவதற்கு முன் இவன் அவர்களை பார்த்தது கூட கிடையாது. எதற்காக கொன்றேன் என யோசித்துப் பார்த்தான். தனது காதலுக்காக என்றது ஒரு மனம். தனது கொலை அங்கீகரிக்கப்படுமா என யோசித்தான். உயிருக்கு போராடும் ஒருவனை கொலை செய்வது எவ்வளவு மோசமானது. தனது எதிரியாக இருந்தாலும் கூட அது மோசமானது தான் என்று மறுமனம் கூறியது.

ஏழு வருட ஜெயில் வாழ்க்கை முடித்து, தற்போது தேவாலயத்தின் வாசலில் அமர்ந்திருப்பதை உணர்ந்து, சுயநினைவிற்கு வந்தான். குடும்பத்தின் நியாபகம் அவனை மீண்டும் அழுத்தியது. வீட்டை நோக்கி வேகமாக நடந்தான்.

- முத்தம் கொடுக்கப்படும்
 

வினோ

New member
Wonderland writer
11 - யூதாஸின் முத்தம்

“இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார் இயேசு.
யார் இயேசு என்பதை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒரு திட்டமிட்டிருந்தான். அவன் அவர்களிடம், “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு. அவரைக் கைது செய்யுங்கள்” என்றான். அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று,, “வணக்கம். போதகரே!” என்றான்.
இயேசு யூதாஸின் கண்களைப் பார்த்தபடி “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார்.
யூதாஸ் மனது நிலைதடுமாறியது. வெட்கிபோன யூதாஸ் நடுக்கத்துடன் இயேசுவை முத்தமிட்டான்.
பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள்.

- மத்தேயு 26: 46-50

-------------------

தெருவில் இவன் வருவதைக் கண்ட சிலர் பயந்து ஒதுங்கினர். அவர்களைப் பார்க்கக்கூட இவனுக்கு தைரியமில்லை. தன்னை நினைத்து தனக்கே அருவருப்பாக இருந்தது.
தனது வீட்டை அடைந்தான். ஆனால் வீடு பூட்டி இருந்தது. வீட்டின் கதவுகளில் புழுதி அப்பியிருந்தது. வருடக்கணக்காக யாருமே அந்த வீட்டில் இருந்திருக்கவில்லை என்பதை உணர்ந்தான். யாரிடம் கேட்பது என்பதைப் போல திரும்பிப் பார்த்தான். அனைவரும் கிசுகிசுத்தபடி இருந்தனர்.

மீண்டும் வீட்டை ஒரு பார்வை பார்த்தான். மனது வலித்துக் கொண்டிருந்தது. எங்கே போனார்களோ? என்ன ஆனார்களோ? என்று. அப்போது ஒரு போஸ்டர் ஒட்டியிருப்பதை கவனித்தான். அது புதிதாக இருந்தது. சுற்றிப் பார்த்தான். வேறு எங்குமே எந்தவொரு போஸ்டருமே இல்லை.

வேலைக்கு ஆட்கள் தேவை என்று போட்டிருந்தது. இவனுக்கு சட்டென அவளின் நியாபகம் வரவே, இது அவளே தான் என நினைத்துக்கொண்டு போஸ்டர் அருகில் சென்றான். அதில் ஒரு போன் நம்பர் கைகளால் எழுதப்பட்டிருந்தது. அந்த நம்பரை மட்டும் கிழித்து பையில் போட்டுக்கொண்டான். அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்தான்.

அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்து, வரவேற்பரைக்குச் சென்றான்.

“ஒரு போன் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டான்.

பணிவான குரலில் “சரி, இதுல பண்ணிக்கோங்க” என்றது அந்த பெண்ணின் குரல்.

தொலைப்பேசியை எடுத்து, போஸ்டரில் இருந்த நம்பரை அழுத்தினான். மணி ஒலித்தது. ஏழு வருடங்களாக இவனுக்குள் ஒலித்த அவளின் குரல் ஒருசில நொடிகள் தொலைவில் இருந்ததை உணர்ந்ததும் பதற்றம் அவனைத் தொற்றிக் கொண்டது.

மணி ஒலிப்பு நின்ற அடுத்த நொடி ஒரே மெளனமாக இருந்தது. இவன் மூச்சுவிடும் சத்தம் மட்டுமே கேட்டது.

“ஹலோ, சுபத்ரா”

மறுமுனையில் அழும் குரல் மட்டுமே கேட்டது.

“சுபத்ரா நீதானா?” என்ற இவனது குரல் தழுதழுத்தது.

“இன்னைக்கு நைட்டு எங்க தெரு மாரியம்மன் கோயிலுக்கு வா” என்றவுடன் சட்டென போனை வைத்துவிட்டாள்.

அது அவள் தான் என்பதும், தன்னை அவள் நியாபகம் வைத்திருந்ததும் மகிழ்ச்சியளித்தத்து. இவனுக்கு ஒரே படபடப்பாகவும் இருந்தது. ஏழு வருடம் கழித்து அவளை காணப்போகும் படபடப்பு தான் அது. அதுபோக, இவனால் நம்பவே முடியவில்லை இவ்வளவு எளிதாக அவளை கண்டுபிடித்ததை.

ஆனால் தனது குடும்பத்திற்கு என்ன ஆயிற்று என்பதை யோசித்தான். சந்தோசம் மறைந்து, பயம் அவனை தொற்றிக் கொண்டது. அருகில் உள்ள வீட்டில் விசாரிக்கச் சென்றான். அவர்கள் அவன் மீதுள்ள தங்களது கோபத்தையும், அதே சமயம் குடும்பம் எங்கு சென்றது என்பதைப் பற்றித் தெரியாத வருத்தத்தையும் தெரிவித்தனர்.

தனது மாமா வீட்டிற்கோ அல்லது பெரியம்மா வீட்டிற்கோ சென்று விசாரிக்க எண்ணினான். ஆனால் அவர்கள் தன்னிடம் முன்பை போல பேசுவார்களா என்பது சந்தேகம் தான் என நினைத்துக்கொண்டான். இரவு அவளை சந்தித்துவிட்டு, காலை செல்லலாம் என நினைத்துக்கொண்டான்.

மாலை நான்கு மணிக்கெல்லாம் கோவிலை அடைந்துவிட்டான். பங்குனி திருவிழா நடந்து கொண்டிருந்தது. விதவிதமான கடைகள், சிறிய விளையாட்டு அரங்கு, கோவில் திருவிழாவிற்கே உரித்தான இராட்டினம், சுற்றிலும் கூட்டம் என அந்த இடமே கலைகட்டியது. இதில் அவளை எப்படி தேடி கண்டுபிடிப்பது என்பதை எண்ணும் போது பெருமூச்சு விட்டான். அவளும் எப்படி தன்னை தேடி கண்டுபிடிப்பாள் என்பதை நினைக்கும் போது சோர்ந்தே போய்விட்டான். இரவு போகப்போக கூட்டம் அதிகரிக்கும். எனவே படபடப்பு கூடிக்கொண்டே போனது.

அவளது முகம் எப்படி மாறியிருக்கும், அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என யோசித்தான்.

முதலில் யார் அடையாளம் காண்போம், என்ன பேசுவோம் என்பதையெல்லாம் யோசித்துப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ என சட்டென நினைப்பு வந்தது. ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்தால், எதற்கு தனது கைப்பேசி எண்ணை எழுதி வைக்க வேண்டும். அதெல்லாம் ஆகியிருக்காது என உடனே மறுத்தான். கூட்டமில்லாத ஓர் ஒதுக்குபுறமாக பார்த்து உட்கார்ந்து கொண்டான்.

தனது தந்தையின் கையை கட்டி பிடித்தபடி எட்டு வயது சிறுமி ஒருத்தி கோவிலை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். தனது தந்தையை நோக்கி இவ்வாறு கேட்டாள். “அப்பா, அம்மா சாமிக்கிட்ட போய்ட்டாங்கள்லப்பா, அப்போ அம்மாவும் இங்க தான் இருப்பாங்களாப்பா?”

தந்தை சிரித்தபடியே, “ஆமா, இறந்தவங்க சாமிட்ட போய்ருவாங்க. இங்க தான் இருப்பா உங்க அம்மா. உன்ன பாத்துட்டு கூட இருப்பா.”

“எல்லாருமே சாமிகிட்ட போய்ருவமாப்பா?”

“ஆமடா தங்கம்.”

“ம்ம்ம். அப்போ ராசாத்தி பாட்டி சொன்னிச்சி, நம்ம வீட்டு பக்கத்துல செத்துபோன ஒருத்தங்க பேயா சுத்திட்டு இருக்காங்கனு.?”

“பேயா?”

“ஆமா, ராசாத்தி பாட்டி தான் சொன்னிச்சு. அப்போ பேயும் சாமி பக்கத்துலதான் இருக்குமாப்பா”

“அது எப்டி இருக்கும்?”

“அப்போ பேய்னா யாருப்பா?”

“ம்ம்ம்ம். இறந்த பிறகு, நல்லவங்க மட்டும் தான் சாமிக்கிட்ட போவாங்க, கெட்டவங்கல்லாம் பேயா மாறி சாத்தாங்கூட இருப்பாங்க”

“அப்போ அம்மா நல்லவங்களாப்பா?”

“ஆமா. உன் அம்மா ரொம்ப நல்லவ”

“கெட்டவங்கன்னா யாருப்பா?”

“ம்ம்ம்ம்.. திருடுறவங்க, ம்ம்ம்.. கொலை பண்றவங்க, ம்ம்ம் அடுத்தவங்கள ஏமாத்துறவங்க, பொய் சொல்லுறவங்க எல்லாரும் கெட்டவங்க”

“அப்போ நானும் கெட்டவளாப்பா?”

“நீ எதுக்குடி தங்கம் கெட்டவ? நீயும் உன் அம்மய மாதிரி ரொம்ப நல்லவ. போதுமா..”

“இல்லப்பா, எனக்கு என் க்ளாஸ்ல ப்ரீத்தியப் பிடிக்காதுப்பா. அவ ஒருக்கா என்கிட்ட தண்ணி கேட்டாப்பா, ஆனா நான் இல்லனு பொய்சொல்லிட்டேன்பா. அப்போ நான் சாமிட்ட போகமுடியாதாப்பா?”

“ச்சே ச்சே, அப்படி இல்லடா தங்கம். அடுத்த தடவ கேட்கும்போது தண்ணி குடுத்துரு. சரி ஆகிடும். ஆனா, உன்னோட எதிரியாவே இருந்தாக்கூட, தாகம்னு தண்ணி கேட்டா தண்ணி குடுக்கனும், அவங்க சாகுற நிலைமல இருந்தாலும் எப்படியாவது காப்பாத்தனும், புரியுதா?”

“ம்ம். சரிப்பா.”

“ஆமா, ப்ரீத்திய ஏன் உனக்கு பிடிக்காது…..” என தந்தை அந்த குழந்தையை கேட்டபோது, இவனை கடந்து சென்றுவிட்டனர்.

தான் வேலுச்சாமிக்கு தண்ணீர் குடுத்தது நியாபகம் வந்தாலும், அவனைக் கொன்றதும் உடனேயே நியாபகத்துக்கு வந்தது. தான் கெட்டவன் தான் என நினைத்துக் கொண்டான். தான் பேயாக மாறிவிடுவேனோ எனவும் நினைத்து சிரித்துக்கொண்டான்.

அவளிடம் இதை சொல்லவேண்டும் என்று இவனுக்கு தோன்றியது. அவளிடம் சொல்லுவது போலவும், பதிலுக்கு அவள் சத்தமாக சிரிப்பது போலவும் கற்பனை செய்துகொண்டான்.. மீண்டும் இவன் சிரித்துக்கொண்டான். ஆனால் ஒருவரை கொன்றுவிட்டு வாழும் வாழ்க்கை நரகம் என்பதை உணர்ந்தவன் இவன். இப்போதும் அந்த நரகத்தில்தான் இருப்பதாக உணர்கிறான். அவளால் இரட்சிக்க முடியும் என நம்பினான். அவளுக்காக காத்திருந்தான். அதுவும் ஏழுவருடங்களாக காத்திருந்தான். இப்போது அது நிகழப்போகிறது. ஆனால் நடக்கப்போகும் விபரீதத்தை இவன் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அதை அறியும் முன் அந்த விபரீதம் நடக்கப்போகிறது என்பது தான் உண்மை.

ஏழு வருடத்திற்கு முன் முகேஷை கொன்றது இப்போதும் அவனை துரத்துகிறதை அவன் ஒருபோதும் அறியவில்லை. முகேஷின் ஆட்களின் பிடிக்குள் அவனது குடும்பம் இருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்புமில்லை. மேலும், இத்தனை வருடங்களாக அவனது குடும்பத்திற்கு சுபத்ரா தான் உதவியாக இருந்தாள். சுபத்ரா குடும்பத்திற்குள் வந்த பிறகு, அவனது குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டது எனலாம். அடுத்த வேளை உணவிற்கு கஷ்ட்டப்பட்டு வந்தவர்கள் தற்போது கொஞ்சம் முன்னேறியிருந்தனர்.

அவனது குடும்பத்தை தலைமறைவாகவே இருக்கச் செய்து, இத்தனை வருடங்களாக சுபத்ரா தான் பார்த்துக்கொண்டாள். விடுதலை தினமான இன்று அவன் வருகையின் ஆனந்தத்தில், சிறைக்கு வெளியே வந்து நிற்கவே மாட்டிக் கொண்டனர்.
சுபத்ரா அவனது வீட்டில் போன் நம்பரை எழுதிவைத்து காத்திருக்கலாம் என்று தான் எண்ணினாள். ஆனால், விடுதலை தினமான அன்று, சுபத்ரா ஏனோ அவர்களை தடுக்கவில்லை அல்லது அவளும் அவனைக் காண ஏங்கியிருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் இது ஏழு வருட ஏக்கமாக இருக்கும். அவனது தங்கை மட்டும் வரவில்லை. அவள் வீட்டில் அண்ணனுக்காக பலகாரங்கள் சமைத்து வைத்துக் காத்திருந்தாள்.

ஆனால் முகேஷின் ஆட்களிடம் அவர்கள் மாட்டிக் கொண்டனர். இனி எங்கும் தப்ப முடியாது என்றும், ஒருவேளை அவன் தப்பித்துவிட்டால், அவனது தங்கையை கொன்றுவிடுவோம் எனவும் மிரட்டி இருந்தனர். சுபத்ரா யார் என்பது அவர்களுக்கு இப்போது வரை தெரியாது. சுபத்ரா ஏதோ உறவுக்கார பெண்ணாக இருக்கும் என்றே நினைத்தனர். அவள் சிறையின் வாசலிலே, சமாதானம் பேச முயன்றும் பலனலிக்கவில்லை.

அவனை கொல்வதற்கு இடம் குறிக்கப்பட்டது. மாரியம்மன் கோவிலின் முன்புறம். திருவிழாவில் வைத்து அனைவரின் முன்னாலும் கொலை செய்யவேண்டும் என திட்டமிட்டனர். அதற்கு அவனை அங்கு அழைத்துவரும் பொறுப்பு சுபத்ராவிடம் கொடுக்கப்பட்டது.

“இத்தன நாளா மறைஞ்சிருந்துருக்கலாம், ஆனா இனி எங்க கண்ணுல இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது. அவன் கிடைக்கலனா, அவன் தங்கச்சிய இன்னைக்கே போட்டு தள்ளீருவோம். அப்பறமும் கிடைக்கலன அவனோட அப்பன் ஆத்தால கொன்னுடுவோம். அதுக்கப்பறமும் கிடைக்கலனா உன்னயும் கொன்னுடுவோம். அப்றம் அவனும் ஒருநாள் சிக்காமயா போய்ருவான். மொத்தமா குடும்பத்தோட வேரறுத்துருவோம். நீயே முடிவு பண்ணிக்கோ, அவன் ஒருத்தனா, இல்ல மொத்தமா எல்லாருமானு” என மிரட்டினர். முகேஷின் ஆட்கள் இருவரை மட்டும் அவர்களை பின்தொடர வைத்துவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர்.

அவனது குடும்பமே நிலைகுலைந்து போனது. அவனது ஸ்தானத்தில் சுபத்ரா தான் இவ்வளவு நாளும் பார்த்துக்கொண்டதால், அவனது அப்பா, அம்மாவின் பார்வைகள் அவளை நோக்கியே இருந்தது.

அவள் பேச ஆரம்பித்தாள். அவனது தந்தையை நோக்கி, “அவன் எல்லாரையும் கொன்னுடுவேன்னு மிரட்டுரான். நம்ம எல்லாரோட உசுரா, இல்ல அவனோட உசுரா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்கனு சொல்றான்.” சுபத்ராவிற்கு மூச்சு வாங்கியது இதைக்கூறும் போது.

அவனுடைய தந்தை, “நான் செத்தாலும் பரவாயில்ல” என்று தீர்க்கமாக கூறினார்.

சுபத்ரா அவரை நோக்கி, “உங்க பொண்ணு உசுரா, இல்ல உங்க பையன் உசுரா? இப்படி யோசிங்க” என்று கூறும்போது அவள் கண்கள் பொங்கியது. பின் அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். “என் உயிரா மட்டும் இருந்துருந்தா கவலப்பட்டுருக்க மாட்டேனே. கூடப்பொறந்த அந்த சின்ன பொண்ணு ஏன் சாகனும்?” எனக்கூறி கேவிக் கேவி அழுதாள். சுபத்ராவை அவர்கள் ஒருநாளும் அழுது பார்த்ததில்லை.

அவள் சாய்ந்து அழுவதற்கு ஒரு தோள் கூட இதுநாள் வரை இருந்ததில்லை. ஆனால் தன் தோள்களில் அனைவரையும் அவள் சுமந்திருந்தாள். அவனுடைய தோள்களுக்காகக் காத்திருந்தாள். அனைத்து சுமைகளையும் அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் தோள்களில் சாய்ந்துகொள்ள ஏழு வருடங்களாக ஆசையோடு காத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, “நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க, அவனோட தங்கச்சிட்ட எதுவும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம். நான் பாத்துக்கிறேன் இத.”

“செத்தா ஒன்னாக்கூட நாங்க சாகுறோம், நீ கிளம்பும்மா. நீ பண்ணுன உதவிக்குலாம் எங்களால எதுவும் பண்ண முடியலைனு தான் வருத்தோம். நீ போயிரும்மா. நாங்க செத்தாச்சும் அவன எப்படியாச்சும் ஓட வச்சிருவோம்.. நீங்களாச்சும் சந்தோசமா இருங்க.” என அவனுடைய அப்பா தேம்ப ஆரம்பித்தார்.

சுபத்ரா தலையை இல்லை என்பது போல அழுதுகொண்டே மெதுவாக ஆட்டியபடி, “அவன் அத விரும்ப மாட்டான் மாமா. போயிருங்க நீங்க. அவனுக்கு இது தான் சந்தோசத்த குடுக்கும். ஒருவேள நானும் கூட திரும்ப வராம போகலாம்.”

“ஒரு தகப்பனால எப்படிம்மா…….. ஐயோ கடவுளே” என வார்த்தைகள் கிடைக்காமல் புலம்பினார் அவனது தந்தை. அவனது தாய் பிரம்மை பிடித்ததுவள் போல இருந்தாள். ஏழு வருடங்கள் கழித்து பொழுது விடிவது போல இருந்தது அவளுக்கு. ஆனால் பொழுது இனி எப்போதுமே விடியப்போவதில்லை என்ற செய்தி அவளை பேச்சற்ற நிலைக்கு தள்ளியது.

அவர்கள் இருவரையும் சுபத்ரா அனுப்பி வைத்தாள். அவர்கள் இருவரையும் முகேஷின் ஆள் ஒருவன் பின் தொடர்ந்தான். மற்றொரு ஆள் சுபத்ராவை பார்த்தபடியே நின்றிருந்தான்.

விடுதலையாகும் கைதிகள் வெளிவர ஆரம்பித்தனர். ஆனால், அவன் வெளியே வரவேயில்லை. நேரம் மதியத்தை தாண்டியும் அவன் வரவேயில்லை. அவன் போலீஸ் அதிகாரி ஒருவரின் காரில் சென்றுவிட்டதை இவர்கள் யாரும் கவனிக்கவுமில்லை.

முகேஷின் ஆள் சுபத்ராவின் அருகில் வந்து, “என்னடி… எங்கடி அவன்” என்றான் கோபத்துடன்.

“தெரியல” என்றபோது அவள் சந்தோசப்படவா, இல்லை துக்கப்படவா என குழம்பினாள்.

“தெரியலயா? என்னடி எல்லாரும் விளையாடுறீங்களா? அவன் மட்டும் இன்னைக்கு கிடைக்கல, குடும்பத்தோட அறுத்துப்போட்ருவோம்” என்றான் கொலைவெறியுடன்.

அப்போது தான் சுபத்ராவிற்கு அவனிடமிருந்து போன் வந்தது.

“ஹலோ, சுபத்ரா”


- முத்தம் கொடுக்கப்படும்
 

வினோ

New member
Wonderland writer
அது அவன் தான் என்பதை உணர்ந்து கொண்டான். இவள் அழ ஆரம்பித்தாள். முகேஷின் ஆள் புரிந்துகொண்டு, போனைப்பிடுங்கி ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

“சுபத்ரா நீதானா?” என்ற அவனது குரல் தழுதழுத்தது.

முகேஷின் ஆள் கண்களாலே மிரட்டினான்.

“இன்னைக்கு நைட்டு எங்க தெரு மாரியம்மன் கோயிலுக்கு வா” என்று அவள் கூறியவுடன், முகேஷின் ஆள் உடனேயே போனை அணைத்துவிட்டான்.

அவள் தனது அழுகையை அடக்க முடியாமல் அங்கேயே உட்கார்ந்துவிட்டாள். முகேஷின் ஆள், இந்த தகவலை அவனது கூட்டாளிகளிடம் கூறி அங்கேயே சுபத்ராவுக்காக காத்திருந்தான்.

இந்த சம்பவம் அனைத்தும் அவனுக்கு தெரியாது. அவனிடமிருந்து போன் வந்தது அவனது அப்பா அம்மாவிற்கு தெரியாது. அவனை கொலை செய்ய பலர் காத்திருக்கின்றனர் என்பது அவன் தங்கைக்கு தெரியாது.

அவன் சுபத்ராவின் வருகைக்கு காத்திருந்தான். அவனது குடும்பம் ஏதோ ஒரு கோர செய்தியை எதிர்பார்த்து காத்திருந்தது. சுபத்ரா, தான் இழைக்கப் போகும் பாவச்செயலுக்காக உடைந்துபோகக் காத்திருந்தாள். இங்கு அனைவரின் காத்திருப்பும் நிறைவேறத்தான் போகிறது. அதைத் தாங்கிக் கொள்ளத்தான் அனைவருக்கும் முடியாமல் போகிறது.

முகேஷின் ஆட்கள் கத்தி, அரிவாள்களுடன் கோவிலை சுற்றி வளைத்தனர். இரவு 7.15 மணி இருக்கும். அவளும் கோவிலை அடைந்தாள். கோவிலை அடைந்த சமயம், தான் செய்யப்போகும் காரியத்தை நினைத்துப் பார்த்தாள். கோவிலின் உள்ளிருக்கும் கடவுளை யோசித்துப் பார்த்தாள். அது வெறும் சிலையாகவே இப்போதும் இருப்பது கடவுள் நம்பிக்கையை இழக்க செய்தது. கடவுள் இருந்தால் நிச்சயம் அவனை காப்பாற்றியிருக்கும் என நினைத்துக் கொண்டாள்.

கூட்டத்திற்குள் அவனைத் தேடி நடக்க ஆரம்பித்தாள். அவனை கண்டுபிடித்துவிட்டால் அவன் உயிர் இழக்கத்தான் வேண்டும். ஒருவேளை அவனை கண்டுபிடிக்கவில்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை உணர்ந்திருந்ததால், அவள் கண்டுபிடிக்கவே ஆசைப்பட்டாள். ஆனால், அதில் சந்தோசம் துளியும் இல்லை. அவளுக்கு கொடுக்கப்பட்ட தேர்வுகள் அப்படிப்பட்டது. அவன் ஒருவனா? அல்லது மொத்த குடும்பமுமா?. அவன் ஒருவன் என்பதையே அவள் தேர்ந்தெடுத்தாள்.

ஒரு ஒதுக்குப்புறமாக அவன் அமர்ந்திருப்பதை கண்டுபிடித்தாள். அது அவன் தான் என்பதை ஊகித்தாள். முகத்தில் தழும்புகள் விழுந்து அடையாளமே மாறியிருந்தது. இவள் அவனை நோக்கி வருவதை அவனும் கவனித்துக்கொண்டான்.
மெதுவாக எழுந்து நின்றான்.

இவள் ஓ…வென அழ ஆரம்பித்தாள். இவளால் அதற்கு மேல் நகர முடியவேயில்லை. தனக்காகத்தான் அவன் அந்த கொலையை செய்தான். தனக்கான பாவத்தைத்தான் அவன் சுமக்கிறான் என எண்ணும்போது இவளால் அவனை நெருங்க முடியவேயில்லை. அவன் கண்களும் கலங்க ஆரம்பித்தது. அவனாலும் நகர முடியவேயில்லை. தன் கரங்கள் பாவத்தின் குருதியால் நனைந்துள்ளதை நினைக்கும் போது அவன் கால்கள் அவளை நோக்கி நகர மறுத்தது.

இந்த பூமியில் ஒருவன் அந்நியாயத்திற்கு வட்டித் தொழில் செய்யும் போதும், அதனால் அதிகாரத்தை ஒருவள் மீது செலுத்தும் போதும், அந்தப் பாவம் இன்னொருவனை கொலை என்னும் பாவத்தை புரிய வைக்கிறது. அந்தக் கொலை என்னும் பாவம், அவனை காட்டிக்கொடுக்கும் இன்னொரு பாவத்தை, இன்னொருவரை செய்யத் தூண்டுகிறது. காட்டிக்கொடுத்த இந்த பாவமானது இன்னும் என்ன பாவத்தைத் தூண்டக் காத்திருக்கிறதோ?

ஒரு பாவம் எத்தனை பேரை பாவம் செய்யத் தூண்டுகிறது. இது தான் இயற்கையின் நியதி போல. இந்த பூமி பாவ புண்ணியங்களால் ஆனது. ஒரு பாவம் இன்னொரு பாவத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஒரு புண்ணியமோ இன்னொரு புண்ணியத்திற்கு வழிவகுக்கும்.

இருவருமே தங்களின் ஆன்மாவில் பாவத்தின் கரை படிந்துள்ளதாக நினைத்துக் கலங்கினர். அவள் கதறியபடியே அவன் அருகில் சென்றாள். அவனுக்கு தெரியாது அவள் அவனை காட்டிக்கொடுக்க வந்திருக்கிறாள் என்று. ஒருவேளை தெரிந்தால் தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பானோ எனத் தவித்தாள். அவனிடம், தான் தன்னுடைய உயிருக்குப் பயந்து காட்டிக்கொடுக்கவில்லை என்பதை உணர்த்திவிட வேண்டும் என தவித்தாள். அவள் அவனை நெருங்க நெருங்க முகேஷின் ஆட்களும் அவளை நோக்கியே நெருங்கி வந்தனர். தனக்கு அவனிடம் பேசத் தீர்க்க ஏழு வருடங்கள் உள்ளது என்பதை உணர்ந்தவள், ஏழு நிமிஷமாவது கிடைக்குமா என ஏங்கியபடியே நடந்தாள். வேகமாக சென்று அவனை அடைந்துவிட்டால் உடனடியாக அவனை கொன்றுவிடுவார்களோ என பயந்தாள். மேலும் சில நிமிஷங்கள் அவனைக் காண ஆசைப்பட்டவள் மெதுவாக கேவியபடியே நடந்தாள்.

அவனிடம் உடனடியாக கூற வேண்டும். உன் குடும்பம் நலமாக உள்ளது என்று. அவர்களை நான் பார்த்துக்கொண்டேன் என்று. உன்னை காட்டிக்கொடுக்க வந்தததே அவர்களை காப்பாற்றத்தான் என்று.

அவள் கண்களையே அவன் பார்த்தான். அவள் தன்னை சுற்றி உள்ள முகேஷின் ஆட்களைப் பார்த்தாள். அவன் முகம் சுருங்க ஆரம்பித்தது. அவனும் சுற்றிப் பார்த்தான். ஏதோ விபரீதம் நிகழப்போவதை உணர்ந்தான்.

யூதாஸின் முத்தத்தைப்பற்றி ஏழு வருடத்திற்கு முன் அவர்கள் பேசிக்கொண்டது, அவளுடைய நியாபகத்திற்கு வந்ததது.
“என்ன இருந்தாலும் காட்டிக்குடுக்குறது தப்பு தான” என்றாள் அவள்.

அதற்கு அவன் கூறினான், “இயேசுவ யூதாஸ் தூரத்துல இருந்தே காட்டிக் கொடுத்துருக்கலாம். ஏன் யூதாஸ் இயேசுவ முத்தம் குடுத்து காட்டிக்குடுக்கனும். ஒருவேளை எதோ ஒரு சூழ்நிலைல யூதாஸ் சிக்கியிருப்பான். சூழ்நிலை தான மனுசங்கள தீர்மானிக்குது. யூதாஸோட முத்தம் எனக்கு சாதாரணமாத் தெரியல. அந்த முத்தத இயேசு மேல உள்ள காதலோட அடையாளமா பாக்குறேன், யூதாஸ் கேக்க நினைக்குற மன்னிப்போட அடையாளமா அந்த முத்தத்த நான் பாக்குறேன். காதலும், மன்னிப்பும் தான் யூதாஸோட அந்த முத்தமா இருந்திருக்கும். இது இயேசுவுக்கு மட்டும் தான் புரிஞ்சிருக்கும். உங்களுக்குலாம் புரியாது.”

யூதாஸின் முத்தத்தைப் பற்றியே சிந்தித்தபடி மெதுவாக நடந்தவள், பெருமூச்சுடன் நிகழ்காலத்தில் குதித்து, திடீரென வேகமாக அவன் அருகில் சென்று அவன் கண்ணத்தில் தனது கையை வைத்தாள். தழும்பு அவள் கையில் தட்டுப்பட்டது. தனக்கான பாவத்தின் சுவடு அது என்பதை உணர்ந்தாள். “நீ சொன்னது சரிதான். யூதாஸ் இயேசு மேல வச்சிருந்த அன்புனால தான், யூதாஸ் இயேசுவ காட்டிக்கொடுக்க இயேசுவுக்கு முத்தம் குடுத்தான். உன் குடும்பம் நல்லா இருக்கனும்டா” என்று கூறியபடியே அவன் கண்ணத்தில் இவள் கண்ணீர்துளிகள் படிய ஒரு முத்தமிட்டாள்.

அந்த ஒரு முத்தத்தில், அந்த கண்ணீர்த்துளிகளில், அந்த ஒரு விநாடிப் பொழுதில் அவன் அவளுடைய அளவற்ற காதலை உணர்ந்தான். அவள் தன் காதலை உணர்த்த அந்த ஒரு முத்தம் போதுமானதாக இருந்தது. அந்த கொஞ்சக் கண்ணீர்த்துளிகள் போதுமானதாக இருந்தது. அடுத்த நொடியே முகேஷின் ஆட்கள் வேகமாக அவனை சுற்றி வளைத்து அரிவாளை வெட்ட ஓங்கினர்.
சுதாரித்துக் கொண்ட அவன் அவளை பிடித்து ஓர் ஓரமாக தள்ளிவிட்டு, அரிவாள் வெட்டை தன் நெஞ்சில் வாங்கிக்கொண்டான். பின்னர் தன் முதுகில் மூன்று வெட்டுக்களை வாங்கினான். அவன் உடல் பூமியைத் தொட்டு துடிக்க ஆரம்பித்தது.பார்க்க மனமில்லாத அவள் கூட்டத்தை விலக்கி கத்திக்கொண்டே ஓடினாள். அவளது ஓலத்தின் சத்தம் அவன் காதுகளை எட்டியது. அது அவன் ஆன்மாவை ஓய்வெடுக்கச் சொல்வது போல ஒலித்தது. தரையில் கிடந்த அவனின் மெளனம் அவள் இதயத்தை எட்டியது. அது அவள் ஆன்மாவை அமைதியடையும் படிச்சொன்னது.

--------------------

.....நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. சுமார் மூன்று மணியளவில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு உரத்த குரலில் , “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள்,, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.

- மத்தேயு 27: 45-46

--------------------

- முத்தம் கொடுக்கப்பட்டது.

-முற்றும்-
 
Status
Not open for further replies.
Top