ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தனிமையில் உருகும் அனிச்சம் -கதை திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 1

"ஆராதனா " என்ற அழைப்பில் நிஜ உலகுக்கு வந்த போதிலும் அவள் மனமோ ரணத்தின் மத்தியில் துடித்துக் கொண்டு தான் இருந்தது... அலுவலகத்தில் அழக் கூடாது என்று அவளும் பார்க்கிறாள் ஆனால் முடியவே இல்லையே.. இப்படி ஒரு வாழ்க்கை தேவை தானா? அடுத்து என்ன? என்று அவள் மனதில் அடுக்கடுக்கான கேள்விகள்.. கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவளைப் பார்த்த அவளது சக ஊழிய பெண்மணி " சார் வர சொன்னார்" என்று சொன்னதும் தான் தாமதம் , தளர்ந்த நடையுடன் அவள் அலுவலக மேனேஜரின் அறையை நோக்கிச் சென்றாள். ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணவளுக்கோ வயிற்றை தூக்கிக் கொண்டும் நடக்க முடியவில்லை...

அறைக்குள் நுழைந்ததுமே " ஆராதனா, நாளைக்கு நம்ம ஆபீஸ்ல ஒரு மீட்டிங் இருக்கு... " என்று சொல்லவே இடைமறித்தவள் "சாரி சார் நாளைக்கு லீவ் எடுத்து இருக்கேன் " என்றாள்.. கம்பெனி மானேஜர் சதாசிவத்துக்கு அவள் அடிக்கடி லீவு எடுப்பது எரிச்சலாக இருந்தால் கூட கர்ப்பிணிப் பெண்ணவளை காயப்படுத்த மனம் இடம் கொடுக்காத காரணத்தினால் "ஓகே, கலாவை வர சொல்லுங்க" என்று சொன்னார். அவளும் சம்மதமாக தலையாட்டியபடி கலாவிடம் சொன்னவளுக்கு அடுத்த நாள் கோர்ட்டில் வழக்கு இருந்தது.. வேறு ஒன்றும் அல்ல விவாகரத்து வழக்கு தான்.. விவாகரத்து கேட்டது அவளது கணவன் அல்ல அவளே தான்.. வாழ்வில் வலியுடன் கடந்த நாட்கள் மனதில் ரணமாக இருக்க, தொய்ந்து இருக்கையில் அமர்ந்தவளுக்கு வேலை செய்யவே மனம் ஒத்துழைக்கவில்லை.. அப்படி என்ன பாவம் செய்து விட்டாள் அவள்? என்று கேட்டால் பதில் இல்லை தான்...

இது வரை ஆண்களால் ஏமாற்றபட்டவள் தான் அவள்.. யாரையுமே அவள் ஏமாற்றியது கிடையாது.. ஆனால் வலி மட்டும் அவளுக்கு.. பெண்ணாய் பிறந்த சாபம் என்று நினைத்தவளுக்கு இந்த திருமண வாழ்க்கையே கசந்தது..

அதே சமயம் அன்று அலுவலகத்துக்கு லீவ் போட்டு வீட்டில் இருந்த நரேன் அத்தோடு எத்தனையாவது பாட்டிலை திறந்து குடிக்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை.. போதையின் உச்சத்தில் தன் முன்னே இருந்த விவாகரத்து பத்திரத்தைப் ஆழ்ந்து பார்த்தான். தனக்கு என்ன வேண்டும் என்று அவனுக்கே தெரியாத நிலை.. மனிதன் பாதி மிருகம் பாதியாக இருப்பவன் யாசித்தது அந்த காதல் ஒன்றை தான்.

அவள் காலில் கூட விழுந்து இருக்கிறான்.. ஆனால் இன்று அவன் முன்னே அந்த விவாகரத்து பத்திரம்.. அவன் விரும்பிய ஒன்று கை விட்டு போகும் தருணமது.. நிலையில்லாத மனம் அவனுக்கு அதை அவனும் அறிவான்... காதலிக்கிறான் அவளை ..அதுவும் அளவுக்கு அதிகமாக காதலிக்கிறான்..

அவள் தான் அவன் உலகம்...எதுவும் அளவு கடந்தால் நஞ்சாகி போவது போல இந்த உறவும் நஞ்சாகி போனது..

அவனவளோ தனது மேடிட்ட வயிற்றை அலுவலக இருக்கையில் அமர்ந்து தடவிக் கொண்டே கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தாள் .. அவனுக்காக அவள் இழந்தது ஏராளம்.. தினமும் அவன் கூர் வார்த்தைகளில் மரித்து எழுந்தும் கூட அவனுடன் வாழ்ந்தாள் காதல் என்ற அந்த ஒற்றை வார்த்தைக்காக... மாலையானதும் அவள் மனதில் ஒரு பதற்றம்..வேலை முடிந்து என்ன பேசுவான் என்ற வலி .. இல்லாத ஒன்றை கேட்டே அவளை உயிருடன் புதைத்து இருந்தான்.. அவளை வதைக்கும் அடுத்த நொடி மன்னிப்பு யாசித்து காலையும் பற்றி விடுவான்..

விட்டு விலகவும் முடியாமல் கூட இருக்கவும் முடியாமல் தவித்தவள் இன்று மொத்தமாக விலகி விட்டாள் தன் வயிற்றில் வளரும் அவன் சிசுவுக்காக... அவளை காயப்படுத்த எந்த எல்லைக்கும் செல்பவன் " என் குழந்தை உன் வயிற்றில் வளர கூடாது கலைத்து விடு " என்று மிரட்டியதும் உண்டு.. அவளும் அதி உச்ச விரக்தியில் " கலைத்து விடுகிறேன் " என்று முடிவு சொன்ன பிறகு காலில் விழுந்து அவளை சமாதானப்படுத்தியதும் அவன் தான்..

அவளும் அவன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள் மீண்டும் அலுவலக வேலையில் மூழ்கி விட, அவனோ அன்று இரவு காரை எடுத்துக் கொண்டு ஆராதனா இருக்கும் இடத்துக்கு புறப்பட்டான்.. போகும் வழி முழுதும் அவன் மனதில் வலி மட்டுமே நிறைந்து இருக்க, ரேடியோவில் பாடலை ஒலிக்க விட்டான்.

"

தொலைவிலே வெளிச்சம்

தனிமையில் உருகும் அனிச்சம்

கனவுதான் இதுவும்

கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்

தினம் வருதே அச்சம்"



இந்த பாடல் வரிகளைக் கேட்கும் போதே அவன் மனதின் பாரம் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை... அவன் பொக்கிஷம் கை விட்டுப் போகும் போது அவனுக்கேது நிம்மதி..

அடுத்த நாள் காலையில், நீதிமன்ற வளாகத்தில் தந்தையுடன் நுழைந்தாள் ஆராதனா.. அவள் தந்தையோ தளர்வாக அவள் அருகே நடந்து வர, உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த சமயம், அப்போது தான் அங்கு வந்து சேர்ந்த நரேனும் அவளைப் பார்த்துக் கொண்டே ஷேர்ட்டின் கைகளை மடித்துக் கொண்டே வந்தவன் அங்கு ஆண்கள் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் அதுவும் அவள் தந்தையின் அருகே.. மருமகனை திரும்பி அவரும் பார்க்கவில்லை மாமனாரை அவன் நலம் விசாரிக்கவும் இல்லை.. அவன் உள்ளே நுழையும் போது அவன் மீது படிந்த அவளது கண்கள் அடுத்த கணமே திசையை மாற்றிக் கொண்டன.. காதலாக தீண்டி செல்லும் அவன் விழிகள் கோபம் வந்தால் அவளை பொசுக்கவும் தவறுவதில்லை.. இந்நிலையில் எங்கனம் அவளும் அந்த விழிகளை சந்திப்பாள்?

ஆராதனாவின் தந்தை வடிவேல் நரேனை திரும்பி பார்க்க கூட விரும்பவில்லை.. அவன் அவரிடம் கேட்ட கேள்வி அப்படி..எந்த தந்தையும் மகளை பற்றி கேட்க விரும்பாத கேள்வி.. அந்த கேள்வியில் அவர் ஒடிந்ததை விட உயிருடன் மரித்தவள் தான் ஆராதனா... நான் கன்னி என்பதை நீ அறியவில்லையா? என் குருதி நீ உணரவில்லையா? என்று பேச தயங்கும் அந்தரங்கத்தை கூட அனைவர் முன்னிலும் அவள் கேட்டாள். அவனோ மௌனியாகி போனவன் பிறகு தான் உணர்ந்தான் தனது வார்த்தையின் வீரியத்தை.... உணர்ந்து என்ன பயன் இன்று உணர்வுகளை தொலைத்த ஜடமாய் உயிர்ப்பே இல்லாமல் இருக்கும் அவள் அவனிடம் விவாகரத்து கோரி இருக்கிறாள் அல்லவா?

அவன் கெட்டவனா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.. நிச்சயிக்கப்பட்ட திருமணமதில் ஆராதனாவின் பெற்றோரால் பணம் புரட்ட முடியாமல் போக, தன்னுடைய பணத்தை அவன் தமக்கை அறியாமல் கொடுத்து, மீண்டும் அதையே தமக்கையிடம் கொடுக்க வைத்தவன்.. இப்படி எத்தனை ஆண்கள் கிடைப்பார்கள் என்றால் அது மிக மிக சொற்பம் தான்.. ஆராதனாவின் முன்னே அவனுக்கு பண தாள்கள் மதிப்பிழந்த வெற்று காகிதம் தான்..

சந்தேகமா? என்று கேட்டால் அதற்கும் பதில் நிச்சயமாக இல்லை என்று தான்.. அவள் தொழில் செய்யும் இடத்தில் பல ஆண்கள் இருந்த போதிலும் அவன் ஒரு வார்த்தை அவளை சந்தேகமாக கேட்டு இருக்கமாட்டான்.. சந்தேக கண் கொண்டு பார்த்து இருக்க மாட்டான்.. புடவை அணியும் பெண்ணல்ல அவள், திருமணம் ஆன பிறகும் நவநாகரீக ஆடை அணியும் நகரத்து பைங்கிளி.. அவளிடம் ஒரு வார்த்தை உடை பற்றி அவன் பேசி இருக்க மாட்டான்... தினம் சமைக்கும் இல்லத்தரசி அல்ல அவள், விடுமுறை நாளில் தூக்கம் வந்தால் எட்டு மணி வரை தூங்கி எழுந்து கடையில் சாப்பாடு வாங்க சொல்லும் சாதாரண பெண் தான்.. அதற்கு ஒரு நாளும் அவன் முகம் கோணியது கிடையாது.. சாம்பிராணி காட்டி, கடவுள் வணங்கும் ஆஸ்தீகவாதி அல்ல அவள், அவசரமாக திருநீறணிந்து செல்லும் ஆஸ்தீகத்துக்கும் நாஸ்தீகத்துக்கும் இடையே தத்தளிப்பவள்...

அவன் எதிர்பார்ப்போ காலையில் அவனுக்கு பெட் காபி கொடுத்து எழும்ப வைத்து பூஜை செய்து சமைத்து கொடுக்கும் பெண் தான்.. ஆனால் கிடைத்தது என்னவோ நம்மில் ஒரு ஆராதனா ..ஆனால் அவன் அவளை மாற சொல்லி ஒரு வார்த்தை சொன்னது கிடையாது... அவளை மேலும் மேலும் படிக்க வைத்தவனும் அவனே... பணத் தட்டுப்பாடு நேரம் தனது கழுத்தில் இருந்த செயினை அடகு வைத்து அவளை கல்வி கற்க வைத்தவன்..

அவள் சுதந்திரத்தில் அவன் தலையிட்டது கிடையாது... நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் ஹீரோவாக இருக்கும் அவன் அவளது இறந்த காலத்துக்கு வில்லனாகி போனான்..

அப்படி என்ன தான் பிரச்சனை என்றால் அதற்கு ஒரே பதில் "சிவா".. அவன் வாழ்வில் வெறுக்கும் பெயர்... அவளோ சொல்ல கூட விரும்பாத பெயர்... அவர்கள் வாழ்வில் இப்போது இல்லாத ஒருவனால் இன்று அவர்கள் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கிறார்கள்.. அடுத்து அவர்களது கேஸ் ஆரம்பமாக, அவளை நீதிபதி முன்னால் அழைத்தார்.. மேடிட்ட வயிற்றுடன் வந்தவளை பார்த்த நீதிபதிக்கே தொண்டை அடைத்தது.. எந்த பெண்ணும் இந்த நிலையில் விவாகரத்து கோருவாளா என்ற தவிப்பு அவருக்கு.. அவளை தன் மகளின் இடத்தில் வைத்து பார்த்தவரோ "சொல்லுங்க" என்று அவளது வக்கீலிடம் சொல்ல, வக்கீலோ " யோர் ஆனர், என் கட்சிக்காரர் மிஸிஸ் ஆராதனா நரேன் குடும்ப வாழ்வில் பல இன்னல்களை அடைந்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறார்" என்று ஆரம்பித்தவர் அவள் சொன்ன பிரச்சனைகளை சொல்ல, நரேனோ அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தான் தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.. அவள் கண்ணில் இருந்து அவளை மீறி கண்ணீர் வழிய, கரம் கொண்டு துடைத்தவளைப் பார்த்த நீதிபதிக்கே மனம் கனத்துப் போனது.

நரேனின் மனதில் கூட ஊசியால் குத்தும் உணர்வு.. அவள் கஷ்டத்தை அவன் புரிந்து கொள்கிறான்.. ஆனால் அவனால் ஏனோ வாழ்வில் சில விடயங்களை ஜீரணிக்க முடியவில்லை.. அந்த வலி அவளிடம் வன்மமாக வெளிப்பட்ட தருணங்கள் ஏராளம்.. மிருகமாக அவன் நடந்து கொண்ட நேரங்கள் ஏராளம்.. அவளை கை நீட்டி அடித்தும் இருக்கிறான்..அடுத்த கணமே காலையும் பற்றி இருக்கிறான்.. அவனுக்கு அவள் வேண்டும்... அவள் மீது அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான அன்பு.. அவனுக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை... மொத்த அன்பையும் அவளிடம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான்.. அதன் விளைவு இன்று நிரந்தர பிரிவாக கோர்ட்டில் வந்து நிற்கின்றது..

அடுத்து அவனை அழைத்த நீதிபதி "இதற்கு என்ன சொல்றீங்க மிஸ்டர் நரேன்" என்று கேட்க அவனோ "அவ ஆசைப்பட்ட எல்லாமே கொடுத்தேன்... இதையும் கொடுக்கிறேன்" என்று பதிலளிக்க அவளோ விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையில் அந்த ஏக்கம் ஒரு வித எதிர்பார்ப்பு.. "என்னிடம் வந்து விடு" என்ற யாசகம்.. ஆனால் வயிற்றில் இருக்கும் குழந்தையை மீறி அவள் எங்கனம் அவனை நம்பி செல்வாள்? அவளோ கலங்கிய கண்களுடன் இருக்கைக்கு செல்ல, அவர்கள் வழக்கு இன்னும் இரு மாதங்கள் கழித்து ஒத்தி வைக்கப்பட்டது..

அவளும் வெளியேறி தந்தையுடன் செல்ல, அவள் பின்னே வந்தவன் " குட்டிம்மா" என்று அழைத்தான்.. அவளுக்கான பிரத்தியேக அழைப்பு அது.. இதுவரை அவள் பெயரை அவன் உச்சரித்தது இல்லை.. அவள் எப்போதுமே அவன் குட்டிம்மா தான்.. அந்த அழைப்பிலேயே நிலை குழைந்தவள் அப்படியே நின்று விட, அவள் தந்தையோ அவர்களுக்கு தனிமை கொடுத்து தள்ளி சென்றார்.. உடனே அவன் அவள் முன்னே வந்து "அவ்ளோ தானா?" என்று கேட்க அந்த குரலில் எண்ணில் அடங்காத வலி.. அந்த ஏக்கம்.. அவள் தனியே என்றால் அவன் பின்னாடியே சென்று இருப்பாள்.. ஆனால் குழந்தையுடன் அவனை நம்பி செல்ல முடியாமல் இருக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள், " ஐ ஸ்டில் லவ் யூ நரேன்... எனக்கு உங்க கூட வாழணும்னு ஆசையா இருக்கு... ஆனா இப்போ உங்க குழந்தையை நான் சுமந்திட்டு இருக்கிறேன்.. நம்ம சண்டைல இந்த புது உயிர் என்ன பாவம் பண்ணிச்சு? அந்த பயம்.. அந்த பதட்டம் என் பொண்ணுக்கு வேணாம்... அவ நிம்மதியா வாழணும்..அதுக்கு நாம பிரிஞ்சாகணும் " என்று சொல்ல, அவனோ "பொண்ணா" என்று கேட்டான்... ஆம் அவனுக்கு பெண் குழந்தைகள் என்றால் அலாதி பிரியம்.. அவளோ "எனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும் " என்று கூற "எனக்கு பொண்ணு ஒன்னை பெத்து கொடுடி" என்று சொன்னவன் அவன்... ஆனால் இன்று அந்த குழந்தையை ஸ்பரிசிக்க முடியாமல் அவள் மொத்தமாக விலக்கி வைக்கிறாள் அல்லவா? அவளோ "ம்ம்" என்று சொன்னவள் "அப்பா வெய்ட் பண்ணிட்டு இருக்கிறார்" என்று சொல்லி விட்டு செல்ல, அவள் முதுகை வெறித்துப் பார்த்தவன் கண்களை மூடி திறந்து தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டான்.




 
Last edited:
Status
Not open for further replies.
Top