அத்தியாயம் 40
"அது வந்து... போன் மா" என்று தயங்கியபடியே கூறினான் விஜய்.
"புது போன்னா விஜய்?" என்று ஆர்வமாக கேட்டார் விஜயா.
"ஆமா ம்மா"
"யாருக்கு புது போன் உனக்கா?"
"இல்லை ம்மா... கோதைக்கு"
"என்னது கோதைக்கா! அதுவும் நீ வாங்கி தரியா?" என்று ஆவலுடன் கேட்க,
'ஐயோ! இவங்க உடனே மனசுல ஆயிரம் கனவு கோட்டை கட்டி வைச்சிடுவாங்களே...' என்று சலிப்பாக நினைத்தவன்,
"என்னால தானே ம்மா அவளுடைய போன் உடைஞ்சுது... அதான் புதுசு வாங்கிட்டு வந்து இருக்கேன் போதுமா?" என்று வேகமாக சற்று எரிச்சலாக கூறினான்.
"என்னது கோதையுடைய போன் உன்னால உடைஞ்சுதா? கீழே விழும் போது உடைஞ்சுடுச்சுனு தானே கோதை என் கிட்ட சொன்னா?" என்று சந்தேகத்துடன் கேட்டார் அன்னை.
"ஓ அப்படியா..! எனக்கு இந்த விஷயம் தெரியாதும்மா, நான் என்னவோ நான் தான் அவளுக்கு ஊசி போடும் போது என்னுடைய கை பட்டு ஃபோன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உடைஞ்சிப் போச்சுனு நினைச்சேன், ஆனால் இப்போ தானே தெரியுது அந்த ஃபோன் ஏற்கனவே உடைஞ்சுப் போனதுனு, ச்ச... இது தெரியாமல் குற்ற உணர்ச்சியில் புது ஃபோனை வேற வாங்கிட்டேன், இதை நானே வெச்சிக்குறேன்" என்று கூறியவன், விஜயாவை உற்று கவனித்தான்.
'அம்மா என்னை நம்பிடுங்க' என்று அவன் மனதில் நினைக்க,
"நீ தான் போன் வாங்கிட்ட இல்லையா?பாவம் டா கோதை, உடம்பு சரி இல்லாமல் இருக்காள். இப்போ அவளுடைய அப்பா அம்மாவை வேற ரொம்ப மிஸ் பண்ணுவாள் போன் உடைஞ்சு போய் ரொம்ப தனிமையில் இருப்பாள். அதனால கொஞ்சம் கோச்சுக்காமல் நீ வாங்குன போனை கோதைக்கே கொடுத்திடு விஜய்" என்று வேண்டுதலாக கேட்டார் அன்னை.
"சரி ம்மா, நீங்க இவ்வளவு கெஞ்சி கேட்குறீங்கன்றதுக்காக நான் இந்த போனை கோதைக்கே கொடுத்திடுறேன். ஆக்சுவலி எனக்கு கோதைக்கு கொடுக்க சுத்தமா மனசு இல்லை தான்... ஆனால் உங்களுக்காக தான் மா, உங்களுக்காக மட்டும் தான்..." என்று பொய்களாக அடுக்கி அவனுடைய அம்மாவையும் நம்ப வைத்தான்.
"ரொம்ப நன்றி விஜய், அம்மாக்காக நீ ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்... சரி உட்காரு... காபி போட்டு தரேன்" என்று கூறினார் அன்னை.
"நீங்க காபி போட்டுட்டே இருங்க மா, நான் ஒரு டாக்டரா கோதையை பார்த்துட்டு வரேன்" என்று அந்த "டாக்டர்" வார்த்தையில் அழுத்தத்தை கொடுத்து கூறினான்.
"சரி விஜய்" என்று கிச்சனிற்குள் விஜயா செல்ல, விஜய்யோ திறந்து இருந்த கோதையின் அறைக்குள் வேகமாகச் சென்றான்.
கோதை உறங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், மெதுவாக அவளின் துயிலின் கலையாதவாறு அவளின் தலையணைக்கு பக்கத்தில் இருந்த செல்போனை எடுத்து சிம்மை கழட்டியவன், தான் புதிதாக வாங்கி இருந்த அந்த பிராண்ட்டட் காஸ்ட்லி போனில் சிம்மை மாத்தினான்.
பழைய போனை தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் போட்டவன், ஒரு சின்ன ஸ்டிக்கி நோட்டில், "I am sorry for my mistake please accept this new phone as a token of forgiveness- VIJAY" ( என்னுடைய தவறுக்கு என்னை மன்னித்து விடு. தயவு செய்து இந்த போனை என்னை மன்னித்ததற்கு அடையாளமாக ஏற்றுக் கொள்- விஜய்) என்று எழுதி விட்டு புது போனின் பக்கத்தில் அதை வைத்து விட்டு, தான் அகல்யாவுக்காக வாங்கி வந்து இருந்த பெரிய சாக்லேட்களில் ஒன்றை அந்த பேப்பரின் மேல் வைத்து விட்டுச் சென்றான்.
டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவனுக்கு அப்போது தான் மனசு கொஞ்சம் இலகுவாக இருந்தது. விஜயா கையில் காபியுடன் வர,
"அம்மா, இந்த ஸ்பிரேவை கோதை எழுந்த அப்புறம் அவளுடைய கையில் தேய்ச்சு விடுங்க. தொடர்ந்து ரெண்டு நாள் ரெண்டு வேளை மறக்காமல் கண்டிப்பா பண்ணுங்க. சரி ஆகிடும்" என்று கூறி விட்டு காபி குடித்தான்.
"அகல்யா எங்கே?"
"அப்பா கூட வெளியே போய் இருக்காள் விஜய்"
"சரி ம்மா, இதெல்லாம் நான் அகல்யாவுக்கு வாங்கின சாக்லேட்ஸ் வாங்கிக்கோங்க" என்று தன்னிடம் இருந்த சாக்லேட் பாக்ஸ்ஸை கொடுத்து விட்டு அவனின் அறைக்குச் சென்றான்.
தன் அறையில் உள்ள பால்கனியில் நின்று இருந்தவனுக்கு மாலை நேர குளிர் காற்று முகத்தை வருடினாலும் அது அவனின் மனதை வருடவில்லை.
'எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுனு புரிய மாட்டிங்குதே! அவள் கிட்ட பேச கூடாதுனு நினைச்சாலும் அவள் கிட்ட முரட்டுத்தனமா நடந்துக்குறேன்' என்று தன்னை பற்றியே யோசித்தவனுக்கு தன் மேல் தான் கோபம் வந்தது.
'லிசன் விஜய், கோதை உனக்கு உரிமை இல்லாத பொண்ணு... அதனால உன்னுடைய அதீத கோபத்தை அவள் கிட்ட இனிமேல் நீ காட்ட கூடாது' என்று தனக்குள்ளேயே முடிவு எடுத்தான் தான்...
ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கே அவனின் முடிவு மீது நம்பிக்கை இல்லாமல் போனது. அதனால் இதற்கு எத்தகைய தீர்வு எடுக்கலாம் என்று யோசிக்க தொடங்கினான்.
இரவு ஒன்பது மணி போல் எழுந்த கோதைக்கு காய்ச்சல் சற்று பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் கை வலி அதிகமாகவே தான் இருந்தது. உடம்பிலும் சோர்வு மற்றும் அலுப்பு இருந்தது.
மெல்ல எழுந்தவளின் கண்ணில் ட்ரெஸ்ஸிங் டேபிளில் ஒரு புது போனும் சாக்லேட்டும் தென்பட,
'என்ன இது?' என்று யோசனையுடன் எழுந்துச் சென்று பார்த்தவளுக்கு, பேரதிர்ச்சியாக இருந்தது.
மொபைலையும் சாக்லேட்டையும் தாண்டி கண்கள் அந்த மஞ்சள் வண்ணம் ஸ்டிக்கி நோட்டில் பதிய அதை எடுத்து படித்தவளுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாய் இருந்தது.
'விஜய்க்கு இந்த மாதிரி எல்லாம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தர மாதிரி விஷயங்கள் பண்ண தெரியுமா? என்னால உன்னை புரிஞ்சுக்கவே முடியல விஜய்!' என்று மனதில் நினைத்தவள், புது போனை எடுத்து பார்த்தாள்.
'ஓ மை காட்! இப்போ மார்க்கெட்டுலேயே இந்த பிராண்ட்டட் போன் தான் ட்ரெண்ட்ல இருக்கு. ரேட் கண்டிப்பா ஐம்பது ஆயிரத்துக்கு மேல தான் இருக்கும். என்னால விஜய் இப்படி பண்ணுவாருனு நம்பவே முடியலையே!' என்று நினைத்தவளின் இதழ் அவளையும் மீறி பிரிந்து புன்னகைத்தது.
ஏனோ இந்த மொபைல், சாக்லேட் முக்கியமாக அவன் எழுதிய அந்த ஸ்டிக்கி நோட், கோதைக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை கொடுத்தது. அதனின் விளைவால் அவளின் கை வலி கூட பெரிதாக தெரியவில்லை அவளுக்கு..!
வெளியே எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் அரவம் கேட்க, போர்வையை பெட்டில் போட்டு விட்டு, ரெஸ்ட்ரூம்க்கு சென்று தன்னை கண்ணாடியில் பார்த்தவள், முகம் சோர்வாக தெரியவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு துப்பட்டாவை அணிந்துக் கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றாள்.
"கோதை, இப்போ எப்படி மா இருக்க?" என்று கேட்டார் ஆறுமுகம்.
"ஹான்... இப்போ கொஞ்சம் பரவாயில்லை அங்கிள்" என்று மெலிதாக புன்னகைத்தாள்.
பிரகாஷ், விஜய்யுமே அங்கே தான் இருந்தனர். விஜய் பேச கூடாது என்று கூறியதால் பிரகாஷ் கோதையிடம் எதையும் பேசவில்லை. விஜய்க்கும் பிரகாஷுக்குமே இப்போது பேச்சு இல்லை.
"முதல்ல சாப்பிடு மா, அப்புறம் மாத்திரை போட்டுட்டு நல்லா தூங்கு" என்று அக்கறையாக கூறினார் விஜயா.
"சரிங்க ஆன்ட்டி" என்று அவள் அமர்ந்து எதிரே பார்க்க, அங்கு விஜய் தான் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
"இந்தா ம்மா, சூடா இட்லி சாப்பிடு, வாய்க்கு பிடிக்கலைனா சொல்லு கஞ்சி செஞ்சி தரேன்" என்று கூறினார் விஜயா.
"சரிங்க ஆன்ட்டி" என்று கூறியவளுக்கோ விஜய்யிடம் போன் வாங்கி கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.
'நம்ம போன் வாங்கி வைச்சு இருந்ததை பார்த்தாளா இல்லையா னு தெரியலையே! ஒரு வேளை எல்லார் முன்னாடியும் நம்ம கிட்ட போன் பத்தி ஏதாவது கேட்டுட போறாள்... நமக்கு எதிர்ல வேற உட்கார்ந்து இருக்காளே! சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பிடு விஜய்' என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டான்.
"அப்பா, அகல்யா உங்க மேல உட்கார்ந்துட்டே தூங்கிட்டாள், இருங்க ப்பா, நான் வந்து அவளை தூக்கிக்கிறேன்" என்று விஜய் கூற,
"இல்லை விஜய், நீ இப்போ தான் சாப்பிடவே வந்து உட்கார்ந்து இருக்க... நான் சாப்பிட்டு முடிச்சுட்டேன். நான் அகல்யாவை படுக்க வைச்சுக்கிறேன்" என்று தந்தை கூற,
"அவள் நைட் முழிச்சுட்டாள்னா உங்களுக்கும் அம்மாவுக்கும் தூக்கம் போய்டுமே ப்பா, அதனால நான் சாப்பிட்டு முடிச்சிட்டு வந்து அவளை தூக்கிக்கிறேன். அவள் அது வரைக்கும் உங்களுடைய ரூம்க்குள்ள தூங்கட்டும்" என்று விஜய் கூற,
அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த பிரகாஷுக்கோ மனதில், 'என்னால என்னுடைய பொண்ணை என் கூட ரூம்க்குள்ள கூட தூங்க வைக்க முடியல... ச்சே, எனக்கே என்னை நினைச்சால் அசிங்கமா இருக்கு' என்று எண்ணி குமுறினான்.
"இன்னைக்கு ஒரு நாள் எங்களுடைய அறையிலேயே தூங்கட்டும் விஜய், நீ நிம்மதியா சாப்பிட்டு முடிச்சிட்டு தூங்கு" என்று கூறியவர் தன் பேத்தியை தோள்களில் சுமந்துக் கொண்டு வாஷ் பேஸினில் கைகளை கழுவி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றார்.
அதற்கு பின்னர் பிரகாஷும் சாப்பிட்டு முடித்து விட்டுச் செல்ல, "என்ன ம்மா இட்லி உன் வாய்க்கு பிடிச்சி இருக்கா?" என்று கேட்டார் விஜயா.
"ஹான்... இட்லியே நல்லா இருக்கு ஆன்ட்டி" என்று தயங்கியபடி கூறிக் கொண்டே சாப்பிட்டாள்.
"அம்மா, நான் சொன்ன ஸ்பிரே மறக்காமல் கோதைக்கு போட்டு விட்டுடுங்க" என்று எழுந்தவன் கை கழுவி விட்டு திரும்ப, அவனின் கண்களில் அது பட்டது.
'என்ன இது மஞ்சள் கயிறு கீழே கிடக்குது!' என்று யோசித்தபடியே அதை எடுத்தவன்,
"அம்மா, இது உங்களோடதா?" என்று விஜயாவிடம் காட்டிக் கேட்டான். அதை கவனித்து பார்த்த கோதை திகைத்தாள்.
விஜயாவோ, "நான் தங்கத்துல தான் சரடு போட்டு இருப்பேன் டா" என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே அவருடைய போன் அலற,
"விஜயா உன் அண்ணன் கால் பண்றாரு" என்று அறையில் இருந்தபடியே சத்தமாக கூறினார் ஆறுமுகம்.
"இதோ வரேன்ங்க" என்று வேகமாக எழுந்தவர், அறைக்குள் செல்ல மஞ்சள் கயிறுடன் தனக்கு பக்கவாட்டில் நின்று இருந்தான் விஜய்.
கோதைக்கு அடுத்த நாற்காலியில் தான் விஜயா அமர்ந்து இருந்ததால் தன்னுடைய தாயின் உடைய கயிறா என்று விசாரிக்க அவருக்கு பக்கத்தில் வந்து விஜய் நிற்க, அது கோதையின் பக்கவாட்டாகவும் இருந்தது.
"அது வந்து... என்னுடையது தான்" என்று தயங்கிக் கொண்டே கூறிய கோதை எழுந்தாள்.
"ஓ!" என்றவன், "சரி வாங்கிக்கோ" என்று சொல்ல,
"நான் ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்" என்று கூறி விட்டு வேகமாகச் சென்றவள், தன் கையை கழுவி விட்டு அவன் முன்னே வந்து நின்றாள்.
விஜய்யோ கோதையை பார்த்த வண்ணமாக மஞ்சள் கயிறை நீட்ட, அவளுமே அவனை பார்த்தபடியே கை நீட்ட, இருவரின் கைகளும் எதேர்ச்சையாக தொட்டு உரசிக் கொள்ள, கோதைக்கு அந்த உணர்வு புது விதமாய் இருந்தது.
விஜய்யின் மனதிலோ, 'இவள் போனை பார்த்து இருப்பாளா இல்லையா?' என்பது தான் ஓடிக் கொண்டு இருக்க, அவன் தற்செயலாய் தான் கோதையை கவனித்தான்.
'இவள் என்ன அந்த கயிறை பார்த்து சிரிச்சுட்டு இருக்காள்? ஒரு வேளை ஃபீவர் வந்து மெண்டல் ஆகிட்டாளா என்ன!' என்று நினைத்துக் கொண்டவன் பின் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.