ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்க வா பெண்ணே _ கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
கொஞ்சி தீர்க்கவா பெண்ணே...

பகுதி 1

ஒரு மாலை பொழுதில் வீட்டுத் தோட்டத்தில் சுற்றி திரிந்த பறவைகளின் ஒலிகளை கேட்டவாரு, தனது மேட்டிட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் ஒருவள்.

அப்போது "பல்லவி" என்ற அவனது அழைப்பு அவளது செவிகளை அடைந்த அக்கணம் அஞ்சனமிட்ட விழிகள் அச்சத்தில் விரித்தன... சட்டென திரும்பி பார்த்தவள் நிலை தடுமாறி கீழே விழ போகவும் எதிரில் நின்றவனை பற்றுதலாக பிடித்துக் கொண்டாள்.

"நான் தான். எதுக்கு இந்த பதட்டம்? உன் வயித்துல குழந்தை இருக்கிறதை மறந்துட்டியா?" என்று அவன் அக்கறையாக உதிர்த்த வார்த்தைகள் கூட கேட்பவர்களுக்கு அதிகாரமாகவே தெரியும்... அந்த அளவுக்கு தான் அவனுக்கு அன்பு காட்ட தெரியும். அதனை பல்லவி நன்கு அறிவாள், அதனால் இது அவளுக்கு பெரிய விஷயமாக இருக்கவில்லை.

"இப்போ எல்லாம் அதிக பதட்டமா இருக்கு என்னன்னே தெரியல... டெலிவரி டைம்னால இப்படி இருக்கும்னு நெனைக்கிறேன்"

"அப்படியா? அப்போ எதுக்கும் ஒருமுறை ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்திடலாமா?" என்று அவன் கேட்க... உடனே சரி என்று தலையசைத்தவள் அவனோடு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

செல்லும் வழி எங்கிலும் ஏதோ வேறு ஒரு உலகத்தில் இருப்பது போலவே முழித்துக் கொண்டிருந்தாள் பல்லவி...

"என்ன ஆச்சு?" அவளது அமைதியை உணர்ந்து கேட்டான்.

"ஒன்னுமில்லயே" என்றவளின் உடல் வியர்த்து வடிந்தது. உடனே இடது கரத்தால் அவளது கன்னத்தை ஆதரவாக அவன் பற்ற முன்னேறுகையில் "கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க" என்று சொன்னாள்.

"எதுக்கு?" புரியாமல் அவன் கேட்க...

"வண்டியை நிறுத்துங்க ப்ளீஸ்" என்று அவள் அழுத்தமாக சொன்னதும் வண்டியை நிறுத்தினான்.

"என்ன ஆச்சு பல்லவி?"

"எனக்கு மூச்சு அடைக்கிற மாதிரி இருக்கு?" என்றவள் நெஞ்சை பிடித்துக் கொள்ள... "தண்ணீ குடிக்கிறியா?" என்று கேட்டவன் பின் இருக்கையில் தண்ணீர் பாட்டிலை தேடிக் கொண்டிருக்க, அவ்வேளையில் காரை விட்டு கீழே இறங்கினாள் பல்லவி... "பல்லவி" என்றவாறு அவளை தொடர்ந்து அவனும் கீழிறங்கினான்.

"எங்க போற" என்று கேட்டவன் அவளை தொட போகவும் தலையை பிடித்துக் கொண்டு அவனை விட்டு விலகி சென்றவள், அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து கொண்டாள்.

"பல்லவி என்ன பண்ணுற? என்ன ஆச்சு உனக்கு?" அவளது செயல்கள் அவனுக்கு சினத்தை உண்டாக்கியது.

"தண்ணீ வேணும்" என்று நெஞ்சம் படபடக்க அவள் கேட்கவும், கண்களை மூடி திறந்தவன் மீண்டும் காரை நோக்கி வந்தான். அவனுக்குமே லேசாக மயக்கமாக தான் இருந்தது. காரணம் புரியாமல் தலையை உலுக்கிக் கொண்டான்.

அந்நேரம் எங்கிருந்தோ வந்த தோட்டா ஒன்று அவனது தோல் பட்டையை துளைத்து சென்றது. நூலிழையில் உயிர் தப்பினான் என்று தான் கூற வேண்டும். அந்த பதட்டத்திலும் பல்லவி இருக்கும் இடத்தை நோக்கி
ஓடி வந்தவன், அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏற பார்க்க... கார் கதவுகள் மூடி இருந்தது திறக்க முடியவில்லை...

"இது எப்படி லாக் ஆச்சு?" என்று அவன் யோசிக்கும் முன்னே சரமாறியாக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்... சுற்றியும் இருளாக இருக்கவே யார் எங்கிருந்து சுடுகின்றனர் என்பது தெரியாமல் தடுமாறியவன் காரின் மறுபக்கமாக பல்லவியை பிடித்துக் கொண்டு மறைந்து கொண்டான்.

"என்ன நடக்குது யார் அவங்க?" பயத்தில் பல்லவிக்கு பேச்சு வரவில்லை... மூச்சு திணற ஆரம்பித்தது...

"எனக்கு தெரியல... நீ கொஞ்சம் அமைதியா இரு பதட்டப்படாத" என்றவனுக்கு உயிர் போகும் அளவுக்கு வலித்தது... மயக்கம் வேறு வருவது போல இருக்க அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை... ஒருகையால் தலையில் தட்டிக் கொண்டவன் மறு கையில் பல்லவியை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று எண்ணி அவன் அலைபேசியை கையில் எடுத்தான். அந்நேரம் அவனுக்கு வலது பக்கமாக வந்த ஒருவன் பல்லவியினை தாக்க முன்னேறவும், விரைந்து செயல்பட்டவன் அவனை அடித்து தள்ளி விட்டு பல்லவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.

பல்லவியால் ஓட முடியவில்லை நிறைமாத கருவை சுமந்து கொண்டிருந்தவளால் அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை... அவனாலுமே முடியவில்லை தலை சுற்ற ஆரம்பித்தது மயக்க மருந்து உட்கொண்டதை போல அவனது உடல் வலுவிழந்து இருந்தது.

"என்னால முடியல" என்றவள் திணறி நிற்கவும், அவளை அழைத்துக் கொண்டு சோளம் பயிரிடப்பட்டிருந்த வயலுக்குள் புகுந்து கொண்டான்.

சினிமாவில் மட்டுமே ஒருவனால் பல பேரை தன் வலிமையால் வெல்ல முடியும் ஆனால் நிஜத்தில் அது சாத்தியமில்லாதது. சில இடத்தில் பயந்து பதுங்கி தான் ஆக வேண்டும். அறிவுக்கான களத்தில் ஆயுதத்தை கொண்டு போராடுவது மடத்தனம்.

அவனது தோள்பட்டையில் இருந்து வடிந்த ரத்தம் பல்லவியின் முகத்தில் படவும் பயத்தில் "ஆ" என்று அவள் கத்த, அவளது வாயை மூடியவன் "ஷ் கத்தாத... கொஞ்ச நேரம் அமைதியா இரு" என்றான்.

"உங்களுக்கு காயம்" என்றவள் விக்கித்து உரைக்கவும்

"நேரம் காலம் புரியாமல் இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற? நான் உயிரோட தானே இருக்கேன்" அவனது வலிகள் கோபமாக வெளிப்பட்டது.

பல்லவியின் சத்ததை வைத்து அவர்களை இனங்கண்டு கொண்ட நெடியவன் ஒருவன், இவனது தலையில் ஓங்கி அடித்திருந்தான்.

அந்த அடியில் இவனது தலை முழுக்க ரத்தம்... சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவும் இவனுக்கு புரியவில்லை... அந்த நெடியவனோ இவனது கரத்தில் இருந்து பல்லவியை இழுத்துகொண்டு அங்கிருந்து சென்றான்.

"அவளை விடு" என்று போராட கூட அவன் உடலில் தேம்பில்லை.... கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவளை பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற நெடியவனை பின் தொடர்ந்து சாலைக்கு வந்தவன் நடு வழியில் தலையை பிடித்துக் கொண்டு நிற்க அந்நேரம் அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று அவனை அடித்து தூக்கி வீசியது...

"பல்லவி" என்று கத்தியபடியே தூக்கி எறியப்பட்டவனை இதழ் வளைத்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் காரில் வந்தவன்.

"இருந்தாலும் உனக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்க கூடாது ஆர்யா உன்னையும் ஒரு பொண்ணு பலவீன படுத்திட்டால்ல" என்று உச்சி கொட்டியவன் "டேய் நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல அவளை என்ன பண்ணனுமோ பண்ணிடுங்க" என்று பல்லவியை பார்த்து சொன்னவன் அங்கிருந்து காரை ஓட்டி சென்றான்.

"பல்லவி… பல்லவி" காயம் பட்டு மூர்ச்சையாகும் நிலைமையிலும் ஆர்யனது உதடுகள் உரைத்தது அவளது பெயரை தான்.

பல்லவியின் நினைவுகளை சுமந்தபடி அதே இடத்தில் அதே நினைவுகளுடன் ஒருநாள் அவன் திரும்பி வருவான்… ஆனால் அவள்???

சில வருடங்களுக்கு பிறகு....

மாளிகை போன்ற வீடு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒரு ஜீவன் தன்னிலை இழந்து மருத்துவ படுக்கையில் கிடந்தது. அவன் ஆரிய வினோதன்.

அந்த அறையே மருத்துவமனை போல தான் இருந்தது. அவனுக்காக அந்த இடமே அப்படி மாற்றியமைக்கப் பட்டிருந்தது. பணம் உள்ளவன் படுக்கையை தங்கத்தில் அல்ல வைரத்தில் கூட அலங்கரித்து கொள்ளலாம்... அதற்கு தான் இந்த வையகத்தில் வழி உள்ளதே! இருந்தும் என்ன பயன்? உடலில் வலு இல்லாமல் பக்கத்தில் கொட்டி கிடக்கும் தங்கத்தை கூட எட்டிக் கையால் தொட முடியாது.

வாழ்க்கைக்கு பணம் தேவை தான் ஆனால் அதை அனுபவிக்க ஆரோக்கியம் அத்தியாவசியமாகும்.

ஒன்று இரண்டு அல்ல நான்கு வருடமாக இதே நிலைமையில் தான் இருக்கிறான். இருந்தும் அதற்காக கவலை கொள்ளவோ, அவனை பற்றி சிந்திக்கவோ அங்கு யாரும் இல்லை...
ஆனாலும் அவனுக்காக இறைவனை வேண்டிக் கொள்ள இங்கு ஆட்கள் இருக்கின்றனர்.

"எதற்காக? அவன் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காகவா? இல்லை... இல்லை அவன் கோமாவில் இருந்து விழித்து விடவே, கூடாது என்பதற்காக அந்த வேண்டுதல்"

"ஏன்? என்று கேட்டால் என்ன சொல்வது அங்குள்ள அனைவரும் சிறுவயது முதல் அவனது அரக்க குணத்தை அறிந்தவர்கள்... ஆகையால் அவன் மீண்டு வந்தால் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் இப்படி ஒரு வேண்டுதலை வைக்கின்றனர்.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் " என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப வாழ தெரியாதவர் போல இவர்கள் கூட்டத்திலும் தனித்து விட பட்ட ஒரு ஜீவன் இருக்கிறது... உலகத்தோடு ஒத்து வாழாமல் நீதி நேர்மை என்று பேசி திரியும் முதியவர் ஒருவர் அவர் பெயர் மாணிக்கவேல்.

ஆரியனின் தந்தைக்கு விசுவாசமான வேலைக்காரர். தனது முதலாளி இறந்த பிறகு அவரது மகனை கவனித்து கொள்வது மட்டுமே தனது தலையாய கடமை என்று வாழும் ஒரு விசுவாசி...

முதலாளியின் மகன் மீது என்ன தான் அக்கறை இருந்தாலும் அவன் கண்விழித்து மீண்டு வருவதை அவரும் விரும்பவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு... ஆனால் இவரது வேண்டுதல் அனைத்தும் ஆரியனின் நன்மைக்காக தான்.

ஆரியனின் வீட்டில் வேலை பார்க்கும் அனைவரும் ஆட்டம் பாட்டமாக அந்த வீட்டையே தன் வசப்படுத்தி சந்தோஷமா இருந்தனர்... படுக்கையில் கிடக்கும் பணக்கார முதலாளிக்கு பாதுகாப்பாக தூணில் சாய்ந்து நிற்கும் ஒரு வேலை... அதற்கு ஆயிர கணக்கில் சம்பளம், முழு சுதந்திரம், கேள்வி கேட்க யாரும் இல்லை... இப்படி ஒரு வேலை கிடைத்தால் வாழ்க்கை கசக்கவா செய்யும்? சில நேரம் வெளியாட்களையும் அங்கு அழைத்து வந்து அட்டூழியம் செய்யும் அளவுக்கு அங்குள்ளவர்கள் சுதந்திரமாக இருந்தனர். இதை எல்லாம் கண்டு மாணிக்கவேலுக்கு கோவம் வரும் இருந்தும் அவரால் என்ன செய்ய முடியும்? வாலிபனே அங்கு வலு இல்லாமல் கிடைக்க முதியவரின் பேச்சுக்கு அங்கு என்ன மரியாதை இருக்கும்.

வேலையாட்கள் எப்போதும் போல மகிழ்ச்சியாக தங்கள் அன்றாட பணிகளை அரட்டை அடித்தவாறே செய்து கொண்டிருந்தனர்... அப்போது நுழைவாயில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது... அந்த சத்தம் கேட்டு அனைவரது முகமும் கலவரமானது.

"கருணா சார் வந்துட்டாரு... எல்லாரும் அமைதியா அவங்க அவங்க வேலையை பாருங்க" என்று அங்குள்ள ஒருவன் கூற... ஒரு நிமிடத்தில் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு அவரவர்கள் அவர்களது இடத்திற்கு சென்றனர்.

கருணாகரண்... ஆணுக்கான கம்பீரமான தோற்றம் கொண்டவன். அன்பானவன், அமைதியானவன், மிகுந்த புத்திகூர்மை உடையவன். அனைத்தையும் கொடுத்த கடவுள் அவனது பேசும் திறனை எடுத்துக் கொண்டான்?!.

வீட்டிற்க்குள் வந்த கருணாகரண் அங்கு வேலை செய்வது போல நடித்துக் கொண்டிருந்த வேலையாட்களை எல்லாம் கூர்மையாக ஒரு பார்வை பார்த்தவாறே ஆரியனின் அறைக்குள் நுழைந்தான்.

கருணாவுடன் ஆரியனை கவனித்துக் கொள்ளும் மருத்துவரும் வந்திருந்தார். ஆரியனின் உடலை பரிசோதித்து பார்த்தார். எப்போதும் போல இப்போதும் அவனது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனை கேட்டு மாணிக்கவேலுக்கு சற்று வருத்தமாக இருந்தது. இருந்தும் எல்லாம் நன்மைக்கே என்று மனதை தேற்றிக்கொண்டார்.

மருத்துவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்த கருணாகரன் அவரை காரில் அமர சொல்லி விட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான்.

வாரத்தில் ஒருமுறை மட்டுமே கருணா இங்கு வருவான். ஆரியனின் தொழிலை கவனித்துக் கொள்ளவே அவனுக்கு நேரம் சரியாக இருப்பதால் அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களில் சரிவர அவனால் கவனம் செலுத்த முடியவில்லை... வேலையாட்களின் அலச்சியத்தை பற்றி மாணிக்கவேலும் கருணாவிடம் கூறிக்கொள்வது இல்லை. பொதுவாக யாரை பற்றியும் பிறரிடம் குறை கூறும் குணம் மாணிக்கத்துக்கு கிடையாது. அதனால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து விடுவார். அவர் சொல்லாவிட்டாலும் அங்கிருப்பவர்கள் மீது கருணாவுக்கு ஒரு நெருடல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தும் உடனடியாக எந்த முடிவும் எடுக்கும் அதிகாரத்தில் இப்போது அவன் இல்லை.

அங்கிருந்து செல்லும் முன் வேலையாட்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்த கருணாகரன் ஹாலில் இருந்த ஒரு ஒயிட் போர்டில் எதையோ எழுதிவிட்டு அங்கிருந்து சென்றான்.

"புலி உறங்கிக் கொண்டு தான் இருக்கிறது இறந்து போகவில்லை" என்று அதில் அவன் எழுதி இருந்ததை படித்தவர்கள் ஒரு சேர மிடறு விழுங்கி அச்சம் கொண்டு ஆரியனின் அறையை பார்த்தனர்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 2

செவ்வானம் மெல்ல மெல்ல இருளை பூசிக்கொண்டது... அந்த வானிலைக்கு வண்ணம் கொடுக்கும் விதமாக மின் விளக்குகள் வீதிகளுக்கு ஒளியூட்டியது.

சாலையின் இருபக்கமும் அவ்வப்போது வாகனங்கள் வந்த வண்ணம் இருந்த போதும், அவ்விடத்தில் சிறுவர்களின் விளையாட்டு சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது.

அந்நேரம் அந்த வீதியின் வழியே காரில் வந்து கொண்டிருந்தான் ஜீவா

ஜீவா

எதார்த்தமான குணம் கொண்டவன், 29 வயது ஆகியும் அந்த வயதிற்குறிய பொறுப்பு என்பது துளியும் இல்லாமல் தன் போக்கில் வாழ்க்கையை ரசித்து வாழும் இயல்புடையவன்.

ஒரே காதல்! ஒரே கல்யாணம்! ஒரே வாழ்க்கை! என்ற கொள்கை மனதில் இருந்தாலும், தான் ஒரு "பிளே பாய்" என்பது போலவே வெளியே காட்டிக்கொள்வான்.

அனைத்து பெண்களிடமும் சகஜமாக பேசுவான்... சுவாரஸ்யமான பேச்சுக்கள் உண்டு என்ற போதும் எல்லை மீறியது கிடையாது...

நண்பர்களுடன் போட்டிப் போட்டு மது அருந்துவது, புகை பிடிப்பது... மாதம் ஒரு முறை வெகேசன் என்ற பெயரில் வீணாக ஊரை சுற்றி பணத்தை விரையமாக்குவது என்று அனைத்து கெட்ட சகவாசங்களையும் கொண்ட ஒரு நல்லவன்.

"நிலவு அதன்
முன்புறம் அழகு
நிதம் அறிந்த போது உண்மை
பின்புறம் அழகா சொல் உண்மை..

நிலவுபோல் பெண்களை கண்டேன் முன் அழகு அழகாக
பின் அழகை கண்டேன் திடுக்கிட்டேன் ஓ.."


ரேடியோவில் ஒலித்த பாடலுக்கு படு குஷியாக வாயசைத்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அவனது அலைபேசி ஒலித்தது... அதில் மிளிர்ந்த எண்ணை கண்டு சந்தோஷமா பாடல் வரிகளை சொன்னபடி அழைப்பை ஏற்றான்.

'அடி பஞ்சாபி பகுலி
நீ பஞ்சாமிருதம்
பாஞ்சால புத்ரி
அடி போதும் விரதம்'

"ஹாய் யசோ என்ன பண்ணுற?" அவனது குரலே காட்டிக் கொடுத்தது அவன் போதையில் இருக்கிறான் என்று.

"ட்ரின்ங் பண்ணி இருக்கியா?"

"அய்யோ என்ன வார்த்தை சொல்லிட்ட யசோ, நான் அதை தொட்டே பத்து நாள் ஆச்சு"

"பொய் சொல்லாதடா உன் பேச்சுலயே தெரியுது..."

"நோ யசோ யூ ராங் குடிச்சிட்டு யாராவது வண்டி ஓட்டுவாங்களா சொல்லு?"

"ஆனால் நீ ஓட்டுவன்னு எனக்கு தெறியும்..."

"லைட்டா தாண்டி அடிச்சி இருக்கேன்... என்ன தான் போதையில் இருந்தாலும் என் டிரைவிங் தெளிவா இருக்கும்"

"உன்கிட்ட மனுஷன் பேசுவானா? சரி காலையில் போன் பண்ணி இருந்தியே எதுக்காக? என்ன விஷயம்?"

"மார்னிங் கால் பண்ணா ஈவினிங் பதில் சொல்லுற? உன்னை எல்லாம் லவ் பண்ணிட்டு நான் படுற பாடு" என்று மெதுவாக முனங்கினான்.

"என்ன சொன்ன?"

"ஒன்னும் இல்லமா... காலையில் எதுக்கு கூப்பிட்டேன்னு எனக்கு மறந்துடுச்சு ஞாபகம் வந்ததும் நாளைக்கு காலையில் கால் பண்ணுறேன் நீ நாளைக்கு நயிட் பதில் சொல்லு"

"என்ன நக்கலா?" என்று அவள் கேட்க இங்கு இவனது இதழோரம் சிறு புன்னகை...

அந்நேரம் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் "ஒஹ் நோ" என்று கத்த... யசோதா பயந்து விட்டாள்

"ஏய் என்ன ஆச்சு?"

"அது" என்று அவன் தயங்க... இவளுக்கு பதட்டமாக ஆரம்பித்தது...

"என்னன்னு சொல்லு, யாரு மேலயும் வண்டியை கொண்டு போயி விட்டுட்டியா?"

"ப்ச் நோ யசோ காலையில எதுக்காக உனக்கு போன் பண்ணேன்னு எனக்கு ஞாபகம் வந்துடுச்சு" என்று சிரித்துக் கொண்டே சொன்னவனை நினைத்து கொலை வெறியானது அவளுக்கு... உடனே அழைப்பை துண்டித்து விட்டாள்.

"பேசிட்டு இருக்கும் போதே போன் கட் பண்ணிட்டா? என்ன தான் வேணுமாம் இந்த பொண்ணுக்கு, என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறா? ஒரு நாள் இல்லை ஒரு நாள் கண்டிப்பா இவளை பிரேக் அப் பண்ண போறேன்" என்று வீர வசனம் பேசியவன் மீண்டும் அவளது எண்ணிற்கு அழைத்தான்.

மூன்று முறைக்கு பிறகு நான்காவது முறை அழைப்பை ஏற்றாள் யசோதா.

"ம்ம்ம்"

"என்னடி ம்ம்ம் என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது" என்றதும் மீண்டும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அழைத்தான்... இம்முறை எடுத்ததும் "சாரி" என்று இவனே சொன்னான். அதன் பிறகு தான் அவள் சாதரணமாக பேச ஆரம்பித்தாள்.

"சொல்லு" வேண்டா வெறுப்பாக கேட்டாள்.

"எங்க வீட்டுல என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லி ரொம்ப போஸ் பண்ணுறாங்க" என்று அவன் சொல்ல...

"எதே?"

"ஏன் பொண்ணு வீட்டுல மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி போர்ஸ் பண்ணுவாங்களா, பையனோட வீட்டுல எல்லாம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி போர்ஸ் பண்ண மாட்டாங்களா?"

"விளையாடாத ஜீவா... என்ன விஷயம்ன்னு தெளிவா சொல்லு"

"ம்ம்ம் ஓகே நாளைக்கு எங்க வீட்டுக்கு வா என் பேரண்ட்ஸ் கிட்ட உன்னை அறிமுகபடுத்தி வைக்கிறேன்... இதுக்கு மேல என்னால வெய்ட் பண்ண முடியாது."

"நான் உன்கிட்ட ஒரு ஆறு மாசம் டைம் கேட்டேன்ல"

"எத்தனை ஆறு மாசம்டி உனக்கு டைம் வேணும்... எந்த ஊருலையும் இந்த அநியாயம் நடக்காதுடி"

"அவ்ளோ கஷ்டமா இருந்தா நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்" என்று சாதாரணமாக அவள் சொன்னதும் இம்முறை இவன் அழைப்பை துண்டித்து இருந்தான்.

ஜீவாவும், யசோதாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்... ஜீவாவை விட இரண்டு வயது சிறியவள் யசோதா.

ஜீவாவுக்கு, யசோதா மீது எட்டு வருட காதல்... ஆனால் யசோதா இரண்டு வருடத்திற்கு முன்பு தான் அவனது காதலை ஏற்றுக் கொண்டு காதலிக்க ஆரம்பித்தாள். எத்தனையோ சண்டை பிரிவு ஆனால் அது எல்லாம் ஒரு நாள் தாண்டி நீடித்தது இல்லை. அவனுடைய முதல் காதலும் கடைசி காதலும் அவளாக தான் இருந்தாள், இனியும் அப்படி தான்.

தன் காதலை அவள் ஏற்றுக் கொண்ட நாள் முதல் திருமணத்திற்கு சம்மதம் கேட்டு கொண்டு தான் இருக்கிறான்... அவளோ இப்போது போலவே மூன்று மாதம் ஆறு மாதம் என்று நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள்.

கோவத்தில் அழைப்பை துண்டித்தவன்
தலையில் கைவைத்து அமர்ந்திருக்க... யசோதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

என்ன தான் கோவம் இருந்தாலும் அவளது அழைப்பை அவன் ஏற்காமல் இருந்தது இல்லை... இம்முறையும் அதே போல தான் அழைப்பை ஏற்றான் ஆனால் ஒன்றுமே பேசவில்லை...

இருவரிடமும் பெரும் அமைதி "நாளைக்கு வரேன்" என்று மட்டும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் யசோதா.

தனது வீட்டிற்கு வந்த யசோதா சில மருந்து மாத்திரைகளை எடுத்து அங்கிருந்த ஒரு டேபிளில் வைத்து விட்டு உள்ளே சென்றவள், முகம் கழுவிட்டு மீண்டும் வெளியே வந்தாள்.

"யசோதா" என்றபடி காபி கப்பினை அவள் முன் நீட்டினாள். வைஷ்ணவி.

கண்ணுக்கு நிறைவான அழகு இரண்டு நொடி பார்த்தாலும் மனதில் பதிந்து விடும் அப்படி ஒரு சாத்வீகமான அழகு. மஞ்சள் தாலியுடன் அவளது தோற்றத்தை கண்டால் கண்களை விளக்க முடியாது, கண்களை கட்டி போடும் அவளது எழில் வனப்பு.

சமையல் அறையில் நின்று கொண்டிருந்த தனது தாயை பார்த்தபடியே வைஷ்ணவியின் கரத்தில் இருந்து காபியை வாங்கிக் கொண்டாள் யசோதா.

"காபி எப்படி இருக்கு?" என்று வைஷ்ணவி ஆர்வமாக கேட்க...

பதில் எதுவும் சொல்லாமல் முழுவதையும் குடித்து முடித்தவள் "நான் ஒரு பையனை விரும்புறேன்... நாளைக்கு அவங்க அம்மா அப்பாவை பார்க்க அவங்க வீட்டுக்கு போறேன்" என்று யசோதா சத்தமாக உரைத்தது, சமையலறையில் நின்று கொண்டிருந்த யசோதாவின் தாயுக்கு கேட்டு விட்டது.

அவருக்கு கேட்க வேண்டும் என்று தான் சத்தமாக உரைத்தாளோ என்னவோ? வைஷ்ணவியின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி.

"எப்போ போறோம்?" என்று கேட்டாள்.

"நான் மட்டும் தான் போறேன்... வேற யாரும் வர தேவை இல்லை" என்று அதனையும் சத்தமாக உரைத்து விட்டு தனது அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

யசோதா சென்றதும் அவளது தாய் இந்திரா உடைந்த மனதுடன் எதுவும் நடக்காதது போல சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த வைஷ்ணவி என்ன செய்வது என்று புரியாமல் தனித்து நின்றாள்.

*****

அடுத்த நாள் காலையில் பட்டு சேலை உடுத்தி கிளம்பி நின்ற யசோதாவை, சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

"எதுக்கு இப்படி பார்க்குற?" என்று அவளிடம் கேட்ட யசோதா தன் புடவையின் மடிப்புகளை சரி செய்ய கஷ்ட படவும்...அதனை பார்த்த வைஷ்ணவி உடனே அவள் கீழே மண்டியிட்டு அமர்ந்தபடி புடவையின் மடிப்பை சரி செய்ய ஆரம்பித்து விட்டாள்.

"இல்லை அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துகிறேன்" என்ற யசோதாவின் பேச்சை கணக்கில் எடுக்காமல் சரியாக மடிப்பை எடுத்து விட்டவள் "இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று சொன்னாள்.

"அப்போ இதுக்கு முன்னாடி நான் அழகா இல்லையா?"

"அப்படி இல்லை..."

"ரொம்ப சமாளிக்காத என்ன இருந்தாலும் உன் அளவுக்கு நான் ஒன்னும் அழகா இல்லை" என்று சொன்னபடி அவள் அங்கிருந்து செல்ல பார்க்கவும்...

மல்லிகை பூவை எடுத்து வைஷ்ணவியின் கையில் கொடுத்து யசோதாவின் தலையில் வைத்து விடும் படி கூறினார் இந்திரா... வைஷ்ணவியும் யசோதாவுக்கு பூவை வைத்து விட்டாள்.

"நேத்தே சம்பளம் வாங்கிட்டேன்... இதுல செலவுக்கு பணம் இருக்கு எடுத்துக்க சொல்லு" என்று வைஷ்ணவியிடம் சொல்லிவிட்டு இந்திராவின் முகத்தையும் பார்க்காமல் அங்கிருந்து சென்றாள் யசோதா.

*****

"யசோ செமயா இருக்க... இப்போவே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்குடி" என்று சொல்லி அவளது தோள்களில் சாய்ந்தவனை இடித்து தள்ளினாள்.

"ஆ வலிக்குதுடி"

"பொது இடத்தில் கொஞ்சமாவது ஒழுக்கமா நடந்துக்கோ"

"அப்படி நான் என்னடி பண்ணேன்?"

"நீ ஒன்னும் பண்ணாமல் இருந்தாலே போதும், கையை கால வச்சிட்டு சும்மா வா" என்று கடுகடுவென பேசியவள் முன்னே செல்ல, அவளது கரத்தை பற்றி பிடித்தவன் "அங்க எங்க போறீங்க மேடம் நம்ம கார் இங்க இருக்கு" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு அவனது வீட்டிற்க்கு வந்தான்.

நேர்த்தியான குடும்பம் அவனுடையது... பாட்டி, அம்மா, தங்கை என எல்லோரும் அவனை போலவே சகஜமாக அவளிடம் பழகினர். புது இடம், புது மனிதர்கள் என்ற பயமோ பதட்டமோ சிறிது கூட அவளுக்கு தோன்றாமல் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான் ஜீவா.

"என் வீட்டுல உள்ளவங்களை எல்லாம் உனக்கு பிடிச்சி இருக்குல்ல யசோ?" என்று அவன் கேட்க... அவனது தோள்களில் சாய்ந்து கொண்டவள் எதுவும் பேசவில்லை. மனம் முழுவதும் நிறைந்து இருந்தது.

அந்த நிறைவை நெருடலாக மாற்றியமைக்கும் படி அங்கிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்தவள் ஷாக் அடித்தது போல அவனை விட்டு விலகினாள்.

"இது யாரு?" என்று அதிர்ச்சியுடன் அவள் கேட்க...

"இது என் அப்பா அவரை பத்தி உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல... அவருக்கு கொஞ்சம் வேலை அதான் இன்னிக்கு வர முடியல" என்று சொன்னவன் அவளது தோள்களை தொட போகவும், விலகி போனவளின் மனம் ரணமாக வலித்தது.

"யசோ என்ன ஆச்சு?"

"ஒன்னுமில்ல நான் கிளம்புறேன்" என்று தடுமாறி உரைத்தவள் அங்கிருந்த யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து விரைந்து சென்றாள்.

***

மாணிக்கவேலை காண அவரது மகனும், பேரனும் ஆரியனின் வீட்டிற்கு வந்தனர்.

"இங்க எதுக்கு வந்த?" கோபமாக கேட்டார் மாணிக்க வேல்.

"செலவுக்கு கொஞ்சம் காசு வேணும் அப்பா... உன் பேரனுக்கு பொம்மை வாங்கணுமாம்"

"பொய் சொல்லாதடா, உனக்கு குடிக்க பணம் வேணும் அதுக்கு எதுக்கு அந்த பச்சை பிள்ளையை காரணம் காட்டுற"

"அதான் தெரியுதுல்ல உடனே காசை கொடு இல்லன்னா" என்று அவன் ஏதோ சொல்ல, இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை முத்தி போனது.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அந்த பிரம்மான்டமான வீட்டை பார்த்து பிரமித்து போன சிறுவன்... தனியே அதனை சுற்றி பார்க்க ஆரம்பித்து விட்டான்.

நாசியில் ட்யூப் சொருகபட்டு தன்னிலை இழந்த நிலையில் எதுவும் அறியாமல் படுத்துக் கொண்டிருந்த ஆரியனின் அறைக்குள் அந்த சிறுவன் நுழைந்திருந்தான். தாழிட படாமல் இருந்ததால் அதற்குள் நுழைவது அவனுக்கு கடினமாக இருக்கவில்லை.

உள்ளே நுழைந்தவன் பக்கவாட்டில் இருந்த ஒரு டேபிள் மீது மோதினான் அதில் அழகழகான சிறு சிறு பொருட்கள் இருந்தன... கலைநயம் மிக்க சிறு சிறு சிலைகள் அது. சிறு பிள்ளை தானே அதனை கண்டதும் சுற்றும் மறந்து விளையாட்டு புத்தி முன் நின்றது எடுத்து விளையாட பார்த்தான் .

"ஐ இது அழகா இருக்கே" என்றவன் அதனை எடுத்து பார்க்க, தெரியாத விதமாக அதில் அவன் எதையோ திருகவும் அந்த சிலையில் கையில் இருந்த சிறு அம்பு அங்கு படுத்துக் கொண்டிருந்த ஆரியனின் கரத்தில் சென்று சொருகியது. அப்போது தான் அங்கு ஆரியன் இருப்பதையே கவனித்தான் அச்சிறுவன்.

ஏற்கனவே அந்த சிறு சிலையில் இருந்து வெளிப்பட்ட அம்பை பார்த்து பயந்தவன், மேலும் அங்கு ஆரியனை கண்டு மிரண்டு போனான். அந்த பதட்டத்திலும் பயத்திலும் தன் கையில் இருந்த சிலையை கீழே போட்டு விட்டு மீண்டும் அந்த மேசையில் மோதி தள்ளி விட்டு கதவை திறந்து கொண்டு அங்கிருந்து ஓடினான். அப்போது டேபிளில் இருந்த பல்லவியின் புகைப்படம் உடைந்து சிதறியது.

அந்த சத்தம் கேட்டு அங்க வந்த மாணிக்கம் அவரது பேரனின் முதுகில் அடித்து விட்டு யாரும் பார்க்கும் முன் அந்த சிறுவனையும், அவரது மகனையும் பணத்தை கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

"என்ன ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது" என்று வேலையாள் ஒருவர் மாணிக்கத்திடம் வந்து விசாரிக்க...

"ஒன்னும் இல்லையே... எனக்கு அப்படி எந்த சத்தமும் கேட்கலையே யார் கதவை திறந்து வச்சது" என்று நிதானமாக சொன்னவர் ஆரியனின் அறைக்கதவை தாழிட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.

அந்த சிறுவன் எறிந்த அம்பின் விளைவாக ஆரியனின் உடலில் ரத்தம் வழிய தொடங்கியது....

மூடியிருந்த அவனது விழிகள் மெல்ல அசைய தொடங்கியது...

அந்நேரம் கண்ணாடியின் முன் அமர்ந்து தனது நயனங்களுக்கு அஞ்சனவிட்டவளின் விழிகள் சற்று கலங்கி போனது.

இங்கு ஆரியனின் காயத்தில் இருந்து வழிந்த ரத்தம் மெத்தையில் திட்டாக படர்ந்தது...

அங்கு மங்களநாணை நெஞ்சில் சுமந்து கொண்டவள் வெள்ளி குங்கும சிமிலில் இருந்து குங்குமத்தை எடுத்து தனது நெற்றி வகுட்டில் வைத்துக் கொண்டாள்...

இங்கு மெல்ல "ப...ல்...ல...வி" என்று முணுமுணுத்த ஆரியனின் விழியோரம் கண்ணீர் வழிந்தோடியது...

அங்கு அலைபேசி திரையில் ஒளிர்ந்து "கணவன்" என்று பெயர் கொண்ட எண்ணை பார்த்த வைஷ்ணவியின் இதழ்களில் மென் புன்னகை வெளிப்பட்டது.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 3


மெல்ல மெல்ல அவனது கருவிழிகள், இமை மீது அதன் அசைவை வெளிப்படுத்தியது. இருந்தும் அவனால் தனது விழிகளை திறக்க முடியவில்லை, இமைகளில் கடுமையான அழுத்தம் வெளிப்பட்டது.

"பல்லவி" என்று அவனது உதடுகள் மௌனமாக அவளது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்க... விபத்து நடந்த அந்த நாள் அவனுக்கு நினைவு வந்தது.

*****

நடந்த விபத்தில் தூக்கி வீசப்படவன், உடல் முழுக்க காயத்துடன் கேட்போர் யாருமின்றி நடு ரோட்டையில், குறை உயிரோடு போராடிக் கொண்டிருந்தான். உயிர் மட்டும் தான் இருந்தது. உடலில் சிறு அசைவு கூட இல்லை ஆனால் சுற்றுப் புறத்தை அவனால் உணர முடிந்தது... இருந்தும் தெளிவாக எதையும் மனதில் எடுத்துக் கொள்ள திறன் இல்லை...

அப்போது காயம் பட்டு கிடந்தவனது தலையை, மடி தாங்கியது ஒரு நல்ல உள்ளம்.

"பல்லவி… பல்லவி" தலையில் காயம் பட்டு மூர்ச்சையாகும் நிலைமையிலும் அவனது மனம் உரைத்தது அவளது பெயரை தான்.

புண் பட்ட உடலும், மனமும் அந்நொடி வரை அவளை மட்டும் தான் நாடியது… ஆனால் உதவிக்கு வந்தது அவள் இல்லையே!

அவளை காண வேண்டி அவனது மனம் அலைப்பாய்ந்தது இருந்தும் விழிகளை திறக்க முடியாமல் வலியில் முனங்கிக் கொண்டிருந்தான் ஆரியன்.

"உங்களுக்கு ஒன்னும் ஆகாது… நான் இருக்கேன், உங்களை அப்படி விட்டுட மாட்டேன்" என்று ஆறுதல் சொன்னபடி அவனது கரத்தை இறுக்கிப் பிடித்த அந்த நபரின் கண்கள் காரணமின்றி கண்ணீர் சிந்தியது.

அது யார்? அந்த நேரத்தில் அந்த இடத்தில் அந்த நபருக்கு அங்கு என்ன வேலை? என்று பல கேள்விகள் இருந்தாலும் மரணத்தின் விளிம்பில் நின்றவனுக்கு தன் உயிரை காக்க வந்த அந்த நபரை கடவுள் என்று தான் உணர முடிந்தது .

அந்த நபர் கொடுத்த ஆறுதல் இவனுக்கு போதுமானதாக இல்லை… சொல்ல போனால் அந்த நபர் பேசியது கூட இவனது காதுகளில் தெளிவாக விழ வில்லை... இருந்தும் என்ன நினைத்தானோ தன்னை மடி தாங்கியிருந்த அந்த நபரின் கரத்தை பதிலுக்கு பற்றியவாறே மயங்கி சரிந்தான் ஆரியன்.

நடந்த அந்த நிகழ்வு இப்போது அவனுக்கு நினைவில் வந்து போனதும்... இதுவரை இறுக்கத்தை கொடுத்த இமைகள் மெதுவாக திறந்து கொண்டது.

*****

தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசிவிட்டு வெளியே வந்த வைஷ்ணவி... "அம்மா நான் கோவிலுக்கு போறேன்" என்று இந்திராவிடம் சொன்னாள்.

"தனியா எதுக்கு போகணும்... இரு யசோ வந்த பிறகு நானும் வரேன் சேர்ந்தே போயிட்டு வந்திடலாம்"

"இல்லமா அப்படியே எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு அதை முடிச்சிட்டு லேட்டா தான் வருவேன்... உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல் அதான் சொல்லுறேன், நானே தனியா போயிக்கிறேன் ம்மா"

"இல்லடா, யசோ எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவா, அந்த பையன் வீட்டுல என்ன ஆச்சுன்னு என்னால எதுவும் அவள் கிட்ட கேட்க முடியாது... நீ இருந்தா என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிக்கலாமேன்னு பார்த்தேன்... சரி பரவாயில்லடா நீ கிளம்பு நான் பார்த்துகிறேன்" அரை மனதுடன் அவளை வழி அனுப்ப பார்த்தார்.

"சரி அம்மா நான் கிளம்புறேன்..." என்றபடி வாசல் வரை போன வைஷ்ணவி திரும்பி நின்று "தப்பா எடுத்துக்காதீங்கம்மா ரொம்ப முக்கியமான வேலை" என்று தயங்கி நின்றாள்.

"புரியுதுடா நீ பார்த்து போயிட்டு வா" என்று சிறு புன்னகையுடன் அவளை வழி அனுப்பி வைத்தார் இந்திரா.

வைஷ்ணவி சென்ற அடுத்த கணமே உச்ச கட்ட கோவத்திலும், விரக்தியிலும் தனது வீட்டுக்குள் நுழைந்திருந்தாள் யசோதா.

கோவம், ஆங்காரம், ஏமாற்றம் என மாறி மாறி அவளது மனதை கூறு போட்டது அந்த நிகழ்வு... கத்தி அழ வேண்டும், இல்லையெனில் கத்தியை எடுத்து தன் துன்பத்துக்கு காரணமானவரை குத்திக் கொல்ல வேண்டும் என்ற மனநிலையில் வெறி பிடித்து நின்றாள்.

வாசலை மரித்தபடி வந்து நின்ற இந்திரா, யசோதாவின் முன்னே காபி கப்பினை நீட்டினார். ஏற்கனவே கோவத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவளின் பார்வை இந்திராவினை சுட்டெரித்தது.

ரத்தமென சிவந்த விழிகளின் அசைவால் தனது வழியில் இருந்து அவரை விலக்கி நிறுத்தியவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை... நேராக தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

கோவம், பெரும் கோவம்? ஆனால் அதனை எப்படி பிரதிபலிப்பது என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

மனதின் வைராக்கியம் எல்லாம் அவளது அறைக்குள் இருந்த அவளது தந்தையின் புகைப்படத்தை பார்க்கும் வரை தான் நிலைத்தது...

மனதின் திடம் எல்லாம் பொடிப் பொடியாக உதிர, இதுவரை தேக்கி வைத்திருந்த தனது மன குமுறலை எல்லாம் அவரிடம் கொட்டி தீர்க்கும் விதமாக தலையை பிடித்துக் கொண்டு "ஆஆ" என்று உச்ச பட்ச வேதனையில் கத்தி அழுதாள். தன்னை தானே தாக்கிக் கொண்டு கதறினாள். கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தை பார்க்க பிடிக்காமல் நகத்தால் முகத்தை பிராண்டி கொண்டு வலியில் அந்த அறை அதிர மனநலம் பாதிக்கப் பட்டவள் போல ஆக்ரோஷமாக நின்றாள்.

பெண்ணவளின் அழு குரல் கேட்டு வெளியே நின்ற தாய் உள்ளம் தவித்து போனது. ஆறுதல் சொல்ல கூட முடியாத நிலைமையில் தன்னை தானே நொந்து கொண்டார் இந்திரா...

"ஆஆ...." என்று கத்தி கதறியவள் கையில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தாள்.

தனது நிலையை எண்ணி சோர்ந்து போனவள் "எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்" என்றவளின் சத்தம் பெரு இடியாக வெளியே இருந்த இந்திராவின் காதுகளில் விழவும், பொறுக்க முடியாமல் மகளின் அறை கதவை தட்டினார்.

"யசோ... என்னமா ஆச்சு உனக்கு?" பல நாட்களுக்கு பிறகு தாயின் இந்த அழைப்பு... முன்பு போல அந்த ஏக்கம் இப்போது இல்லை மாறாக மனம் எல்லாம் அருவருத்து போனது. கோவத்தில் கையில் கிடைத்த பொருளை எடுத்து கதவில் விசிறி அடித்தாள்.

அவளது செயல் உணர்ந்து ஒரு கணம் அதிர்ந்த இந்திராவோ மறு கணமே மீண்டும் யசோதாவின் அறை கதவை துணிவுடன் தட்டினார். பெத்த மனம் பித்து அல்லவா

"யசோ எதுவா இருந்தாலும் முதலில் வெளியே வா அம்மா கிட்ட பேசு... என்னடா தங்கம் ஆச்சு உனக்கு அம்மா இருக்கேன்டா உனக்கு" என்று சொன்னவரின் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது.

ஆனால் அது எல்லாம் யசோவுக்கு எதையும் உணர்த்தவில்லை மாறாக மேலும் கோவமும் வெறியும் தான் அதிகரித்தது...

"யசோ அம்மா கெஞ்சி கேக்குறேன் கதவை திற" என்று சொன்னவர் அழுது கொண்டே அதே இடத்தில் மண்டியிட்டு அமர்ந்தார்.

"இங்க இருந்து போயிடு என்ன பேச வைக்காத" என்று மட்டுமே யசோவின் அறையில் இருந்து பதில் வந்தது.

"யசோ"

"பேசாத இங்க இருந்து போ ன்னு சொன்னேன்... உனக்கு அது புரியலையா? இங்க இருந்து போ என், கண்ணு முன்னாடி வராத, எங்கயாவது போ ... போ... போ என் கிட்ட வர நினைக்காத என்கிட்ட பேசாத... எனக்கு உன்னை பிடிக்கலை, உன்னை பத்தி நெனச்சாலே அருவருப்பா இருக்கு... இன்னிக்கு நீ என் வாழ்க்கையையே அழிச்சிட்ட அது உனக்கு தெரியுமா? என் கிட்ட இருந்து இன்னும் நீ எதை எதிர் பார்க்கிற? இன்னும் நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற? என்னை பேச வைக்காத, இனி எதுவும் மாறாது மாறவே மாறாது என் வாழ்க்கையில் இனி காதல், கல்யாணம், குழந்தை, சந்தோசம், நிம்மதி எதுவும் கிடையாது... எதுவுமே இல்லை எல்லாம் முடிஞ்சுது இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா? நீ தான்.. நீ மட்டும் தான். நீ ஒரு சுயநலவாதி... நீ என்னை பெத்தவள் இல்லை என் வாழ்க்கையை அழிக்க வந்தவள்" என்று வாயுக்கு வந்தபடி தன் மனதில் உள்ளதை எல்லாம் தன்னிலை மறந்து கொட்டித் தீர்த்தாள் யசோதா.

அவள் சொன்னதை எல்லாம் கேட்டபடி கதவில் சாய்ந்திருந்த இந்திராவின் கண்கள் நிலை குத்தி நிற்க, விழியோரம் உயிர் கசிந்தது... நேரம் ஆக ஆக அவரிடம் எந்த அசைவும் இல்லை... அப்படியே சிலை போல அமர்ந்திருந்தார்... திடீரென அவர் நாசியில் இருந்து குருதி வெளியேற தொடங்கியது... இது எதுவும் அறியாமல் தனது அறைக்குள் அழுது கொண்டிருந்த யசோதா கணக்கு இல்லாத அளவு மாத்திரைகளை எடுத்து விழுங்கிக் கொண்டு அப்படியே மெத்தையில் விழுந்தாள்.

கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வைஷ்ணவி வாசலில் யசோதவின் செருப்பை பார்த்தபடி சிறு புன்னகையுடன் விரைந்து உள்ளே நுழைந்தாள்.

"அம்மா யசோ என்ன சொன்னாங்க எல்லாம் ஓகே தானே? பையன் வீட்டுல என்ன சொன்னாங்களாம்?" என்று கேட்டபடி இந்திராவின் அருகில் வந்தாள்.

"அம்மா எதுக்காக இங்க உட்கார்ந்து இருக்கீங்க? என்ன ஆச்சு?" என்று சற்று பதட்டத்துடன் கேட்டவள் அவரை தொட போகவும் உணர்வின்றி கிடைந்தவர் அப்படியே தரையில் சரிந்தார்.

"அய்யோ அம்மா என்ன ஆச்சு?" என்று பதறியவள், அவரது நாசியில் வடிந்திருந்த ரத்தத்தை பார்த்ததும் பயந்து போனாள்.

"யசோதா கதவை திறங்க அம்மாவுக்கு என்னமோ ஆகிடுச்சு" என்று அவளது கதவை தட்டினாள்... அவனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.. வெகு நேரம் தட்டி பார்த்தும் அவள் திறக்க வில்லை என்றவுடன் வேறு வழி இல்லாமல் தனது அலைபேசியை எடுத்து ஒருவரின் எண்ணிற்கு அழைத்தாள்.

"சார் இந்திரா ம்மா மயங்கி விழுந்துடாங்க மூக்கில இருந்து பிளட் வருது என்ன பண்ணுறதுன்னே தெரியல, என்று அவள் சொன்னதும் பதறி துடித்த அந்த நபர் அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

இது எதுவும் தெரியாமல் தூக்க மாத்திரையை உட்கொண்டு தனது அறையில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாள் யசோதா.

*****

மருத்துவமனையில்...

"அவளுக்கு எதுவும் ஆக கூடாது" என்று கண்கள் கலங்கி போயி இந்திராவை பார்த்தபடி நின்றார் ஒரு ஐம்பது வயது நிரம்பிய நபர்.

"கவலைப்பாடாதீங்க அவங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று வைஷ்ணவி அவருக்கு தைரியம் கொடுத்தாள்.

"யசோதா எங்க?" என்று இப்போது தான் அவளது நினைவு வந்தவராக இவளிடம் கேட்டார் அந்த நபர்.

"வீட்டுக்குள்ள தான் இருந்தாங்கன்னு நினைக்கிறேன்... ஆனால் ரூம் லாக் பண்ணி இருந்தது. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல, சண்டை போட்டு இருப்பாங்கன்னு தோணுது அதனால தான் அம்மாவுக்கு இப்படி ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்"

"அந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா? இவள் வாழுறதே அவளுக்காக தான் அது ஏன் அந்த பொண்ணுக்கு புரிய மாட்டிங்குது"

"இதுல எனக்கு யாரை தப்பு சொல்லுறதுன்னு தெரியல சார்... எனக்கு சில விஷயம் தெரியும், அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க நியாயம்... உங்களை நான் தப்பு சொல்ல மாட்டேன், உங்களுடைய உணர்வுகள் எனக்கும் புரியும். அதே போல யசோதாவையும் நான் தப்பு சொல்ல மாட்டேன். அவளுடைய உணர்வும் எனக்கும் புரியும். அம்மாவை பார்த்துக்கோங்க சார் நான் ஒரு போன் பண்ணிட்டு வந்திடுறேன்" என்றபடி வெளியே வந்தாள் வைஷ்ணவி.

எத்தனையோ முறை யசோதாவுக்கு அழைத்து பார்த்தான் ஜீவா ஆனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை. உடனே அவளது வீடு நோக்கி கிளம்பினான். யசோதா ஜீவாவை தனது வீட்டுக்கு இதுநாள் வரை அழைத்து வந்தது கிடையாது... அவனும் வர நினைத்தது கிடையாது.

ஆனால் இன்று அவள் தனது அழைப்பை ஏற்கவில்லை, மேலும் தனது வீட்டுக்கு வந்ததும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள். ஏன் அப்படி செய்தாள்? என்று நேரடியாக கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், என்ன ஆனாலும் சரி என்று யசோவின் வீட்டிற்கு வந்தான் ஜீவா.

வாசல் கதவு தாழிடப் படவில்லை என்றவுடன் உள்ளே வந்தவன் யசோதாவின் அலைபேசிக்கு அழைத்தான். சத்தம் அவளது அறைக்குள் இருந்து வந்தது உடனே அறைக் கதவை தட்டினான்.

அவள் திறக்கவில்லை என்றவுடன் அச்சம் கொண்டவன் கதவை இடித்து தள்ளினான். பிளாஸ்டிக் கதவு என்பதால் உடனே உடைக்க முடிந்தது.

அங்கு மயக்கத்தில் கிடந்தவளையும் அவளுக்கு அருகில் கிடந்த தூக்க மாத்திரை பாட்டிலையும் பார்த்தவன் பதறி துடித்துக் கொண்டு அவளை தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தான்.

இந்திரா சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் அதே மருத்துவமனையில் தான் யசோதாவையும் சிகிசைக்கு அழைத்து வந்து சேர்த்தான் ஜீவா.

ஒரே தளத்தில் தான் இருவரும் அட்மிட் செய்யப்பட்டிருந்தனர். இந்திரா மருத்துவமனையில் இருப்பது ஜீவாவுக்கு தெரியாது. ஆனால் அந்த அறைக்கு வெளியே நிற்பது தனது வெகுவாக பரிச்சயபட்ட ஒருவர் தான் என்பதை அறிந்து கொண்ட ஜீவா... நின்ற இடத்தில் இருந்தபடியே "டேட்" என்று சந்தேகமாக அழைத்து பார்க்க, அவனது குரலுக்கு உடனே திரும்பினார் அவர்.

 
Status
Not open for further replies.
Top