ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் இனிய உறவே இறுதி அத்தியாயம்

Status
Not open for further replies.

lakshman

Member
Wonderland writer
என் இனிய உறவே இறுதி அத்தியாயம்

காலை உணவு முடிந்த பின்னர், கிருஷ்ணனும் சுதனும் விடைபெற்றுச் சென்றனர். அவர்களை வழி அனுப்பிவிட்டு, உள்ளே வந்த ஆரன் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தான். உள் நோக்கிச் சென்ற சுமியை “சுமி இஞ்ச வா...” என அழைத்து அவனருகில் அமர்த்தினான்.“என்னில உனக்கு இருந்த தப்பான எண்ணம், கோபம் எல்லாம் இன்னமும் இருக்கிறதா?” என அவளைப் பார்த்து ஆரன் கேட்டான்.அவள் ‘இல்லை’ எனத் தலையாட்டினாள்.“இந்த நாள் வரையில் நான் உன்னைத் தவிர வேற யாரையும் தொட்டதில்லை, இனியும் நான் தொட மாட்டேன் என்பதை நீ நம்ப வேணும்” என்றான்.அவள் ‘சரி’ என்பது போல் தலையாட்டினாள்.“தேவை இல்லாம கண்டதையும் யோசித்து மனதை குழப்பாம, என்னென்றாலும் உடனேயே என்னட்டை கேள்”“ம்...”“ஏன் அகானா உருவானதை பற்றி நீ எனக்கு சொல்லேல்லை…?” இவ்வளவு நாளும் அவனின் மனதில் இருந்து உறுத்திய விஷயத்தை ஒருவிதமான குற்றம் சாட்டுதல் உடன் கேட்டான்.“நீங்கள் என்னைப் பற்றி தவறாக புரிஞ்சு கொண்டு, என்ர விருப்பத்துக்கு மாறாக நடந்தது எனக்கு பிடிக்கல்ல, அதால உங்களுக்கு சொல்ல வேணும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றாள் சாதாரணமாக.“நான் ஒரு நாளும் உன்னை தவறாக நினைச்சதே இல்லை சுமி” எனப் பொறுமையுடன் கூறினான்.“சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவர் தவறு செய்வது சகஜம் தான், ஆனால் அதையே தொடர வேணும் என நினைச்சுத் தானே என்னை உங்களோட வந்து தங்கச் சொன்னீங்க. அதுக்கு நான் சம்மதிப்பன் என நீங்கள் எதிர்பார்த்ததே என்னைப் பற்றி நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டதால் தானே, அதுமட்டுமல்ல அண்டைக்கு அப்பிடி நடந்ததுக்கு நான் தான் காரணம் என்றும் சொன்னனீங்க” என்றாள் அவள்.“எனக்கும் தன்மானம், சுயமரியாதை எல்லாம் இருக்கு, அதால தான் உங்களுடனான சகல தொடர்புகளையும் துண்டிச்சனான். அகானாவை பற்றி தெரிவிக்காமல் விட்டதுக்கு கூட இன்னும் ஒரு காரணமும் இருக்கு”“ம்…, என்ன காரணம்? அதையும் சொல்லி விடு” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.“அது வந்து… நீங்கள் என்னைப் போல வேற பெண்களோடும் பழகி இருக்கக்கூடும்... என்ற டவுட் எனக்கு இருந்தது...” என அவள் தயக்கத்துடன் கூறி முடித்து அவனைத் திரும்பிப் பார்க்கவும் அவனது முகம் பாறை போல் இறுகி, கடிகமாகக் காணப்பட்டது.அவன் எதுவும் பேசாமல் இருக்கவும், அவனிடம் இவ்வாறு கூறியது தவறோ என நினைத்தவாறு, அவனது கைகளைப் பற்றி “ஆரன்...” என அழைத்தாள்.நீண்ட நாட்களின் பின்னர் அவளின் வாயால் தனது பெயரைக் கேட்டதும் அவன் மனம் துள்ளினாலும், அவள் தன் மீது வைத்திருந்த மிகக் கேவலமான அபிப்பிராயத்தினால் ஏற்பட்ட கோபத்துடன் “என்னைப் பற்றி மிக மிக உயர்வாக தான் கணிச்சு வைச்சிருக்கிறாய்” என்றான் தன்னிரக்கத்துடன்.“கம்பஸில, ஆரம்பத்தில் நீங்களும் எமிலியும் லவ் பண்ணுவதாக தான் எல்லாரும் நினைச்சினம். லைப்ரரியிலும் சரி காண்டீனிலும் சரி நீங்கள் இரண்டு பேரும் எப்பவும் ஒன்றாக இருப்பதை நானே பல தடவை கண்டிருக்கிறன். ஆறேழு மாதங்களுக்கு பிறகு டியானவோட சேர்த்து கதைத்தார்கள். அவள் உங்களை லவ் பண்ணினவள் என்று அந்த கிறிஸ்மஸ் பார்ட்டியில் வைத்து எனக்கு சொன்னவள். நீங்கள் கம்பஸுக்கு வரேக்க அயலீனையும் கூட்டுக் கொண்டு தானே வாறனீங்க. அத்தோடு நாங்கள் பழகத் தொடங்கிய பிறகு என்னோட நீங்கள் இருக்கிற நேரங்களில அவையள் உங்களுக்கு போன் பண்றதும் எனக்கு தெரியும். அது தான் நான் அப்பிடி சந்தேகப்பட்டனான்” என அவனுக்கு விளக்கம் கூறினாள்.அவள் கூறியதைக் கேட்ட அவன் “எமிலிக்கும் டியானாவுக்கும் என்னில விருப்பம் இருந்தது உண்மைதான், அவையள் என்னட்டை தங்கட விருப்பத்தை சொன்ன போது நான் அதை நாகரீகமாக மறுத்து விட்டேன். அவையளும் அதை ஏற்றுக் கொண்ட விலகி விட்டினம். அயலீனும் நானும் ஒரே அப்பார்ட்மென்டில இருந்தனாங்கள் எண்டது உனக்குத் தெரியும் தானே...? ஆரம்பத்திலேயே அவையள் எல்லாரும் அப்பிடியான எண்ணத்தோடு தான் பழகினம் என்பதை என்னால கண்டுபிடிக்க முடியாது. சாதாரணமாக கதைக்கிறார்கள் எண்டு நினைச்சுத் தான் நானும் கதைத்தனான். ஆனால் அவையளின் எண்ணம் புரிஞ்சதும் நான் என்ர மறுப்பை சொன்னேன், அவையும் ஒதுங்கீட்டீனம். அதுக்குப் பிறகு அவையள் என்னோடு சாதாரணமாக கதைக்க வரேக்க அவையளைப் பார்த்து என்னால ஓடி ஒழிய முடியாது, நின்று ஓரிரு வார்த்தை கதைப்பது தான் நாகரீகம். இதெல்லாம் பெரிய விஷயமாக நான் நினைக்கவே இல்ல, அதால தான் நான் உன்னட்டை சொல்லேல”“உன்னை மட்டும் தான் நான் விரும்பியதும், தொட்டதும். உன்ன முதல் நாள் வகுப்பில் பாத்த போது எனக்கு பெருசா எதுவும் தோன்ற இல்லை, ஆனால் அன்றிரவு எல்லா வேலைகளையும் முடித்து நான் படுத்த போது, உன்ர முகம் மனதில் வந்தது. பிறகு உன்னை காண வேணும் என்பதற்காக உன்ர வகுப்புக்கு எப்ப போவம் என்று ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பேன். ஒரு மாதத்திலேயே நீ தான் என்ர வாழ்க்கைத் துணை என்று நான் முடிவு செய்து விட்டாலும் கொஞ்சம் விலகி நின்று தான் உன்னோட பழகினனான். உனக்கும் என்னில நாட்டம் இருக்குது என்பதை அறிந்த பிறகு தான் நான் உன்னோட அதிக நேரம் செலவிட ஆரம்பிச்சனான். எனக்கு உன்னில விருப்பம் இருப்பது உனக்குத் தெரியும் என்பதையும் நான் அறிஞ்சு தான் இருந்தனான். நான் என்ர விருப்பத்தை வெளிப்படையாக உனக்கு சொல்லாவிட்டாலும் என்ர நடவடிக்கைகள் மூலம் நீ அறிஞ்சிருந்தாய் தானே? பிறகு ஏன் மற்றவர்கள் சொல்வதை எல்லாம் காது கொடுத்து கேட்டாய்? உனக்கு அப்பிடி ஏதும் டவுட் இருந்தால் உடனேயே என்னிடம் கேட்க வேண்டியதுதானே? மனதில டவுட்டை வைச்சுக் கொண்டு தான் என்னோடு பழகி இருக்கிறாய்” என அவன், அவள் மீது குற்றம் சுமத்தினான்.அவனது குற்றச் சாட்டை கேட்டு மனம் வருந்திய அவள் “உண்மையிலேயே நான் அப்பிடி எதையும் மனசுல வைச்சுக் கொண்டு பழக இல்ல…”எனக் கூறி அதை மறுத்துவிட்டு “முதல் நாள் உங்களைப் பார்த்ததும் உங்கள் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆரம்பத்தில் நீங்கள் எனக்கு வேலை எடுத்து தந்த போது ஒரே நாட்டவர் என்றதால எனக்கு உதவி செய்தனீங்கள் என்று நான் நினைச்சன், பிறகு நீங்கள் எல்லார்கிட்டயும் சகஜமா பழகுவீங்கள் என்று தான் எனக்கு எண்ணத் தோன்றியது. ஒரு ஸ்னோ நாளில் வேலைக்கு கூட்டிக் கொண்டு போன போது உதவி செய்வதாகத் தான் கருதினேன். பிறகு அது தொடரவும் தான், நீங்கள் என்னில ஆர்வமாக இருக்கிறீங்களா என்பதை நான் கவனிக்க ஆரம்பிச்சனான். ஓர் சில நாளில் அது எனக்கு விளங்கினாலும், நீங்கள் என்னை நேசிக்கிறீங்க என்பது தாமதமாகத் தான் எனக்குப் புரிஞ்சது. அந்த நேரங்களில் உங்களோட கேர்ள்ஸ் கொஞ்சம் கூடுதலாக பழகுறது எனக்கு ஜெலஸ் ஆகத்தான் இருந்தது. நீங்கள் அவையளோட சிரித்து பேசுவதைப் பார்க்க எரிச்சலாகத்தான் இருந்தது. ஆனால் நான் அதை தப்பா நினைக்க இல்லை, ஒரு நாள் லைப்ரரியில் நான் வந்ததைக் கூட கவனிக்காமல் நீங்கள் டியானாவோட கதைச்சுக்கொண்டு இருந்தனீங்க, ஆனால் அந்த நேரத்தில அது யார்?, என்ன ரகசியமாக கதைக்கிறீங்க? என்று என்னால கேட்க முடியாது, ஏனென்றால் நீங்க உங்கட விருப்பத்தை வெளிப்படையா சொல்லேல்ல. ஆனால் … அன்னைக்கு… அந்த சம்பவத்திற்குப் பிறகு தான்.... என்னைப் போல வேற பெண்களோடும் பழகிவிட்டு… உங்கட தேவையை...” என்று அவள் சொல்லி முடிக்க முன்னரே அவன் கோபத்துடன் எழுந்து வெளியே சென்றான்.சிறிது நேரத்தின் பின் வெளியே சென்ற சுமித்ரா, வேதனை நிறைந்த முகத்துடன் அவன் எங்கோ இலக்கற்று வெறித்துப் பார்ப்பதைக் கண்டாள். அவனருகே சென்று, அவனை நெருங்கி நின்று, அவனின் கையைப் பற்றி “உங்களை வேதனை படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதையெல்லாம் சொல்ல இல்லை” என்றாள்.அவன் எதுவும் கூறவில்லை. முதல் தடவையாக அன்று தான் அவளாக அவனிடம் நெருங்கி நிற்கிறாள், அது அவனின் உடலை என்னவோ செய்தது.“உள்ள வாங்க… ஆரன்...” என அவனது கையைப் பிடித்து அழைத்துச் சென்று, அவனை சோபாவில் அமர்த்தி, அவளும் அவனோடு நெருங்கி அமர்ந்தாள்.அவனது இடக் கையை படித்துக் கொண்டு, தோளில் அவள் தன் தலையை சாய்த்து “ஆரன்...” என்றாள் காதலுடன். “அன்றைக்கு… முதல் நாள்… இரண்டு பேருமே நடந்து கொண்ட முறை சரியில்லை, ஆனால் அடுத்த முறை அது தவறு என்று சொல்லி நான் மறுத்தும் நீங்க பலவந்தப்படுத்தி அப்பிடி நடந்து கொண்டது, எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது, அந்தக் கோபத்தில எனக்கு என்னோவோ எல்லாம் நினைக்கத் தோன்றிச்சு. அதற்குத் தகுந்த மாதிரி பல சம்பவங்களும் ஞாபகத்துக்கு வந்தது, அதால தான் அண்டைக்கு அப்பிடி கதைத்தனான்” என்றாள்.சற்று நேரம் அமைதியாக இருந்த அவன் தொண்டையை செருமிக் கொண்டு “நான் டியானாவோட பல தடவை கதைச்சிருக்கிறன், நீ எதை சொல்லுறாய் என்று எனக்கு ஞாபகம் இல்லை, அவள் பல தடவை தன்ர விருப்பத்தை சொன்னவள், நான் அதை அவள் வருத்தப்படாத முறையில் தானே மறுக்க வேணும்..., அதை மற்றவர்கள் கேட்காத மாதிரி மெதுவாக கதைத்திருக்கலாம்” எனக் கூறி அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சவன் “முதல் நாள் நீ இணக்கமாக நடந்த படியால் அதில் உனக்கும் விருப்பம் என்று நான் நினைச்சன். அடுத்த முறை நீ மறுக்கவும் பிகு பண்ணுறாய் என்று தான் நினைச்சன், அதால தான் நான் கட்டாய படுத்த வேண்டி வந்தது, அதோட… என்னாலும்... என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்க என்னோட வேலை செய்தவை, என்னட்ட படித்தவை எல்லாரும் அவையின் லவ்வர்ஸோட ஒன்றாக சேர்ந்து தான் இருந்தவை, அவையளின்ர வீட்டுக்கு எல்லாம் நான் போயிருக்கிறேன். அப்ப எனக்கும் அது தப்பா தோணவில்லை. உனக்கும் இதை எல்லாம் சொல்லி புரிய வைப்பம் என்று நினைச்சன் ஆனால் அதுக்கு நீ இடம் தரவில்லை” என தனது அன்றைய நிலைப்பாட்டைக் கூறினான் அவன்.“அவையளுக்கு அது பெரிய விஷயமாய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்கட சமூகங்களில் கலியாணம் ஆகாமல் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருந்தால் அதைத் தப்பாத்தான் கதைப்பினம், அதோட எனக்கும் அதில சுத்தமா உடன்பாடில்லை எண்டதை அண்டைக்கே நான் தெளிவாகச் சொன்னனான் தானே? கனடாவில இருந்தால் நாங்கள் எங்கட பழக்க வழக்கங்களை மாற்றலாமா? அதை எங்கட பெற்றோர் விரும்புவினமா? இதையெல்லாம் ஏன் நீங்க யோசிக்கக்கூட இல்லை ஆரன்?” என அவள் பொறுமையாக கூறினாள்.“அந்த நேரத்துல அது எனக்கு தவறாக படவில்லை சுமி” என்றான் மெதுவாக.“சரி, உனக்கு என்னில கோபம், வெறுப்பு, நம்பிக்கையின்மை… எல்லாம் இருந்திருக்கலாம், அதுக்காக கொஞ்ச காலம் கதைக்காமல், பார்க்காமல் இருந்திருக்கலாம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மெயில் என்று அனைத்து வழியிலும் என்னுடனான தொடர்பை துண்டிக்க வேணுமா?” ஆதங்கப் பட்டான் அவன்.“நீங்க தான் என்ர உலகம், நீங்கதான் எனக்கு எல்லாம் என்று நான் இருக்க, நீங்களே இப்படி செய்ததை என்னால கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை… தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நீங்க என்னில காட்டின அன்பு, பாசம், அக்கறை எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது, ஆனால் நீங்கள் நடந்து கொண்ட முறையால இதெல்லாம் போலி என்று நினைச்சன்.... ஏதோ ஓர் உள் நோக்கத்துடன் தான் என்னோட பழகி இருக்கிறீங்க என்று எனக்கு எண்ணத் தோன்றிச்சு. அதால உங்களைப் பார்க்கவோ, கதைக்கவோ எனக்கு பிடிக்கல, அது தான் அப்படி செய்தனான்”“அகானா வயித்துல இருக்கேக்கையும் சரி, பிறந்த பிறகும் சரி எப்படி சமாளிச்சாய்?” அக்கறையுடன் விசாரித்தான்.“தாமினி இல்லாவிட்டால் என்னால சமாளித்து இருக்கவே முடியாது...” என்று வான்கூவருக்குப் போனதில் இருந்து சகலதையும் அவனுக்கு கூறினாள்.அவள் கூறிய சகலதையும் பொறுமையுடன் கேட்டவன் “என்னில கோபம் பாராட்டாமல் அகானாவை பற்றி எனக்குத் தெரிவித்திருந்தால், நீயும் இவ்வளவு சிரமங்களையும் அனுபவித்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது, நானும், உன்ர அம்மா, அப்பாவும் உன்னை நினைத்து கவலைப் பட்டு இருக்கத் தேவையில்லை” என்றான் அவன்.அவள் தனது தவறை உணர்ந்து “நீங்க சொல்லுறது சரி தான்.... என்ர வீண்பிடிவாதத்தாலையும் அளவுக்கதிகமான கோபத்தாலையும் எல்லாரையும் சரியா கஷ்டப் படுத்திப் போட்டன். ஐயாம் ரியலி சாரி ஆரன்” எனக் கூறி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.அவனும் பதிலுக்கு அவளை முத்தமிட்டு “நான் செய்ததை நான் சரி என்று சொல்லேல்லை சுமி... அது உனக்கு அவ்வளவு பெரிய துயரைக் கொடுக்கும் என்றும் நாங்கள் இப்பிடி பிரிஞ்சு ஆளுக்கொரு திசையில இருப்பம் என்றும் நான் நினைக்கவே இல்ல…, இனிமேல் எந்த ஒரு துன்பத்தையும் உனக்கு நான் தரவே மாட்டேன்… ஐயாம் சாரி ரூ” என்று அவனும் அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.அவள் அருகே தானே இருக்கிறாள், இருவரினதும் கோபமும் கொஞ்சம் தணியட்டும் என்று அவன் பொறுமையாக அவனுடைய தொழிலில் கவனத்தை செலுத்தியதையும் தன் தங்கையின் திருமணத்திற்கு அழைக்க அவள் வீட்டுக்கு வந்த போது தான் அவள் அங்கே இல்லை என்பதை அவன் அறிந்து கொண்டதும் கனடாவில் வைத்து இலங்கைக்குப் போவதாக அவள், அவனுக்கு பொய் கூறி இருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்ததையும், அவளின் தந்தையிடம் போன் நம்பர் கேட்டதையும் அவர் அதற்கு மறுத்ததையும் அதன் பின் அவளைத் கண்டுபிடிக்க தான் எடுத்த முயற்சிகளையும் அவளுக்கு கூறிய அவன் “அன்றைக்கு ஏன் எனக்குப் பொய் சொன்னனீ…?” எனக் கேட்டவனின் குரலில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.“நீங்கள் எப்ப பிளைட் என்று தான் கேட்டீங்க, அதுக்கு நான் நாளைக்கு என்றன். நீங்கள் எங்க போறாய் என்று கேட்கவில்லையே” என கண்களை சிமிட்டி சிரித்தபடி கூறி அவனை மடக்கினாள் அவள்.அவன், அவளின் மூக்கை பிடித்தவாறு “கெட்டிக்காரி என்ற நினைப்பாக்கும்...” என நக்கலாக கூறினான்.“மீண்டும் உங்கட வீட்டுக்கு வருவம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது தான், மாமிக்கு அப்பிடி நடந்தது” என்று கூறி அவளை இறுக அணைத்தான் அவன்.அவனையும் அவன் தன் மீது வைத்திருக்கும் அளவில்லா அன்பையும் நன்றாக புரிந்து கொண்ட அவள் தனது இரு கைகளாலும் அவனை அணைத்து அவளைக் கவர்ந்த வனப்புமிக்க அவனின் வதனத்தில் முத்தங்களை பரிசாக வாரி வழங்கினாள்.ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட அவர்களின் வாழ்வு இனி மகிழ்ச்சியானதாக இருக்கும்!முற்றும்.


 
Status
Not open for further replies.
Top