ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

எனக்கானவளே நீதான்- கதை திரி

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 35

சுபன் நேராக தாரணியிடம் வந்து அவள் மறைத்து வைத்திருந்த போனை பிடுங்கி எடுத்தவன், சரவணனின் கையை பிடித்து இழுத்து சென்று அங்கு ராஜவேல் அமர்வதற்காக போடப்பட்டிருந்த இருக்கையின் பின்னே சென்று நின்று கொண்டான்.

சரவணனுக்கோ அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தாரணி அவர்கள் இருவரையுமே பார்த்து இருக்க, சரவணனின் போனை அவனிடம் கொடுத்த சுபன், “ அசோக் இங்க வந்துட்டு இருக்கான். “என்று சொன்னான்.

சரவணனோ போனை சுபனிடம் இருந்து வாங்கியவன் ஆதேஷின் அழைப்பை துண்டிக்க, உள்ளே நுழைந்த அசோக், அவர்கள் இருவரும் அங்கு நிற்பதை பார்த்து, “ நான் இவ கிட்ட தனியா பேசணும். ஸோ கெட் அவுட். “ என்றான்.

சுபனோ, “அசோக் இது விசாரணை நடக்குற இடம். இங்க உன் தனிப்பட்ட கோவத்தை எல்லாம் காட்டாத. ஏற்கனவே அவளால முடியல. இதுக்கு மேலே தாருவ டார்ச்சல் பண்ணாத. “ என்றான்.

அசோக், சுபனை பார்த்து முறைத்தவன், “ உன்னோட பாசத்தை எல்லாம் மூட்டை கட்டி போடு. என்னை அவமான படுத்திட்டு அவன் கூட போயிருக்கா. இவளை எல்லாம் சும்மாவே விட கூடாது. “ என்று பேசிக்கொண்டே தாரணியின் கன்னத்தில் அறைந்தான்.

சரவணனுக்கு தலைக்கு மேல் கோபம் வந்தாலும் அதை காட்டிக் கொள்ள முடியாத நிலையில் அவன் விரல்களை பொத்தி அவன் தொடையில் அவனே குத்திக் கொண்டு நிற்க, சுபனோ, “அசோக், இதுக்கு மேலே அவ மேலே கை வச்சா நடக்குறது வேற. “ என்றான்.

அசோக் சுபனை மேலிருந்து கீழ் பார்த்தவன், “நீ இவளோட அக்காவை தானே லவ் பண்ணின. இவளை இல்லையே அப்புறம் இவளுக்கு அடிச்சா உனக்கு ஏன்டா வலிக்குது? “ என்று அசிங்கமாக பேச, சுபனோ பொறுமை இழந்தவன் அசோக்கை அடிக்க வர, தாரணியோ, “ சுபன் அண்ணா, இவன் கூட சண்டை போட்டு உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க. மற்றவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க தெரியாத மனிதமிருகம் இவன். “ என்றாள்.

சுபனோ அவளின் வார்த்தைகளை கேட்டு அவனை கட்டுபடுத்திக்கொண்டு நிற்க, அவனின் போன் அடித்தது.

அதை எடுத்தவன், தாரணியை பார்த்து, “ தர்மி கிட்ட இருந்த அதே தைரியம், பிடிவாதம் இரண்டுமே உன்கிட்ட இப்போ பல மடங்கு இருக்கு. உங்க அக்கா எப்பவுமே உன்னை நினைச்சிதான் கவலை படுவா. உனக்கு அதை பண்ணனும் இதை பண்ணனும் என்று சொல்லிட்டே இருப்பா. இப்போ அவ இல்லை. ஆனா அவ இப்போ இருந்திருந்தா என்ன முடிவு எடுத்திருப்பாளோ, அதே முடிவுல தான் நானும் இருக்கேன். எனக்கு எவனுக்கும் பயம் இல்லை. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன் கூட இருப்பேன். “ என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.

சரவணனோ, “இவன் நமக்கு சப்போர்ட் பண்றானா? ஆனால் எதுக்கு? “ என்று நினைத்துக் கொண்டு சுபன் போனை அவன் காதில் வைத்து பேசிய படி செல்வதையே பார்த்து நின்றான்.

அசோக்கோ, “ ஏய், ரொம்ப ஆடாதடி. என்ன நடந்தாலும் கடைசில நீ என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும். “ என்று சொல்ல, கேலியாக புன்னகைத்த தாரணி, “ செத்தாலும் சாவனே தவிர உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். “ என்றாள்.

அசோக் கோபத்தில் அவளை இரு கெட்ட வார்த்தைகளை உபயோகித்து திட்டியவன், “ உங்க அப்பன் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த பயமும் இல்லை. நீ என்னதான் முரண்டு புடிச்சாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணியே தீருவேன். “ என்று சொல்லிக்கொண்டு இருக்க, ராஜவேல் ஒரு வைத்தியரை அழைத்துக்கொண்டு அங்கு நுழைந்தார்.

இதற்கிடையில் ஆதேஷ் விடாமல் சரவணனுக்கு அழைப்பை எடுத்துக் கொண்டு இருக்க, அவனும் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

வெளியே வந்த சரவணன் ஆதேஷின் அழைப்பை எடுத்து பேச “ என்னடா ஆச்சு? அங்க வந்தது யாரு? ஏதும் பிரச்சனையா? “ என்று கேட்க, சுபனை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தான் சரவணன்.

ஆதேஷோ எளிதில் யாரையும் நம்ப மாட்டான், அதனால் சுபன் மீதும் அவன் சந்தேகபட்டு, “சரவணா அவனை விட்டு விலகியே இரு. “ என்றான்.

சரவணனோ, “சரி, பார்த்துக்கிறேன். “ என்று சொல்ல, “ தாரு.. அவ கிட்ட நீயாவது சொல்லி புரியவைடா. என்னோட உயிருக்கு எப்பவுமே உத்தரவாதம் இல்லை. நிச்சயம் இல்லாத வாழ்க்கையை அவள் என்னோட வாழ வேண்டாம். “என்றான் ஆதேஷ்.

சரவணன் இதை கேட்டிருந்தவன், “ ஆதேஷ் உன் மனசாட்சிக்கு உண்மையா நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. தாரணிய உனக்கு புடிச்சிருக்குல? “ என்று கேட்டான் .

ஆதேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, “ நீ அமைதியா இருக்குறதிலையே உன்னோட பதில் தெரியுது. உன்னை நீயே ஏமாத்திக்காத. தாரணி இங்க இருக்குறது அவளுக்கு நல்லதில்லை. நானே அவளை அழைச்சிட்டு வந்து உன்கிட்ட விடுறேன்.” என்று சொன்னான் சரவணன்.

அப்போதும் ஆதேஷ் அமைதியையே கடைபிடிக்க, சிரித்துக்கொண்ட சரவணன், “எதுக்குடா இந்த வெட்டி பந்தா? வாய துறந்து அவளை எனக்கு புடிச்சிருக்கு என்று சொன்னா குறைஞ்சா போயிடுவ? உனக்கு சரியான ஆள் தாரணிதான். “ என்று சொல்லிக்கொண்டு இருக்க, சில பொலீஸ் அதிகாரிகள் தாரணி இருந்த அறையை நோக்கி ஓடுவதை அவதானித்தான் அவன்.

உடனே, “நான் அப்புறம் எடுக்குறேன். “ என்று சொல்லி ஆதேஷின் அழைப்பை துண்டித்தவன், அந்த பொலீசார் பின்னால் அவனும் ஓடினான்.

கதவை திறந்து உள்ளே சென்று அவன் கண்ட காட்சியில் தலையே சுற்றிபோனது அவனுக்கு.

தாரணியின் உடலில் அங்கும் இங்குமாக நிறைய வயர்கள் பொருத்தப்பட்டு இருக்க, அவளோ அங்கிருந்த கண்ணாடி குவளை ஒன்றை எடுத்து உடைத்து, மணி கட்டில் கிழித்துக்கொண்டு கையில் இரத்தம் வழிந்தபடி அமர்ந்திருந்தாள்.

அங்கிருந்த வைத்தியரோ அவள் உடலில் பொருத்தப் பட்டிருந்த வயர்களை கழற்றிக் கொண்டு இருக்க, ராஜவேலோ அவளின் அருகில் நின்றுகொண்டு, “ எதுக்குடி இப்படி பண்ணி தொலைச்ச? உன் உயிர விட அவனை காப்பாற்றுறது முக்கியமா உனக்கு? “ என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

சரவணன் அங்கு இருந்த ஏற்பாடுகளை பார்த்தே, அவளின் சுயநினைவை மறக்க செய்து அவளின் வாயால் உண்மையை சொல்ல வைக்க முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைத்தவன், “ என்ன தாரு இப்படி பண்ணிட்ட? “ என்றுதான் நினைத்துக்கொண்டான்.

ராஜவேலோ அசோக்கை அழைத்தவர் அவளை தூக்கிக்கொண்டு ஜீப்பில் ஏற்றுமாறு சொல்ல, அவனும் அவரின் பேச்சை கேட்டு அவளை தூக்க போனான்.

தாரணியோ, “என் மேலே கையை வச்ச, இன்னொரு கையையும் அறுத்துப்பேன். “ என்று சொன்னவள்,கண்ணாடி துண்டை கையில் எடுத்து அடுத்த கையின் மணிகட்டில் வைத்துக்கொண்டு இருந்தாள்.

அவளது இந்த செய்கையால் அவமானமும் கோபமும் அடைந்த அசோக், மேலும் அங்கு நிற்காது வெளியேறி விட, சரவணனே அவள் அருகில் ஓடிச்சென்று அவளை தூக்கிக் கொண்டான்.

ராஜவேல் அவர் இருந்த மனநிலையில் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், “ சரவணன் சீக்கிரமா கொண்டு ஜீப்ல ஏத்துங்க. “ என்று சொல்ல அவனும் அவளை தூக்கிக் கொண்டு ஓடினான்.

தாரணியோ, “ அண்ணா, இப்போவாவது என்னோட லவ்வ ஆதேஷ் புரிஞ்சிப்பானா? “ என்று மெல்லிய குரலில் கேட்க, அவளை பார்த்த சரவணன், “ எதுக்கு அவசர பட்ட? “ என்று கேட்டான்.

அவளோ, “ என்னோட நினைவை மறந்து நானே ஏதோ உளறுற மாதிரி பீல் ஆச்சு. அதுதான் ஆதேஷ் பற்றி ஏதும் சொல்லிடுவனோ என்று பயந்து இப்படி பண்ணிட்டேன். “ என்றவள் அப்படியே மயங்கி சரவணனில் சாய்ந்தாள்.

அவனும் அவளது பேச்சில் கலங்கி போனவன், அவளை ஜீப்பில் ஏற்றி அவனும் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, ராஜவேல் ஜீப்பை ஒட்டி ஹாஸ்ப்பிட்டல் நோக்கி சென்றார்.





 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 36

ராஜவேல் என்னதான் பொலீஸ் அதிகாரியாக செயற்பட்டாலும் கூட, தாரணி அவரது மகள் என்ற எண்ணம் அவரது மனதில் எங்கோ ஒரு மூலையில் ஓட்டிக்கொண்டு தான் இருந்தது.

அவரது மகளை காப்பாறி விடும் எண்ணத்தில் அதிவேகமாக ஜீப்பை செலுத்தியவர், சிறிது நேரத்திலையே தாரணியை ஹாஸ்ப்பிட்டலில் கொண்டு சேர்த்திருந்தார்.

வைத்தியர்கள் அவளை பரிசோதித்து விட்டு, அதிக படியான இரத்த போக்கின் காரணமாகவே அவள் மயங்கியதாக சொன்னவர்கள், “ இன்னும் ஒரு இஞ்சி ஆழமா வெட்டி இருந்தால் உயிரே போயிருக்கும். “ என்றும் சொன்னார்கள்.

ராஜவேலோ, இனி அவளின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கேட்டு தெரிந்த பின்னே நிம்மதி அடைந்தவர், மீனாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அவரும் பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

தாரணியை உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்த மீனா, “ என்னங்க பண்ணீங்க என் பொண்ண? உடம்பு பூரா அவ்வளவு காயமா இருக்கு? அவ உங்களுக்கும் தானே பொண்ணு. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படி அடிச்சு வச்சிருக்கீங்களே?” என்று அவரது மனக்குமுறலை கொட்டிக்கொண்டு இருந்தார்.

ராஜவேலோ, “ உன் பொண்ணு பண்ணின காரியம் அப்படி. அவளை இப்படி கொடுமை பண்ணனும் என்று எனக்கு என்ன ஆசையா? “என்று மீனாவுக்கு திட்டியவர், “ இனியாவது உன் பொண்ண ஒழுங்கா இருக்க சொல்லு. “ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

சரவணன் அங்கு ஒரு ஓரத்தில் நின்றிருக்க, அவன் ராஜவேலின் பார்வைக்கு எட்டவே இல்லை. அதனால் அவன் ஏற்கனவே புறப்பட்டு சென்றிருப்பான் என்று நினைத்த ராஜவேல் அங்கிருந்து அகன்றார் .

சரவணனோ ராஜவேல் போனவுடன் அழுது கொண்டிருந்த மீனாவின் அருகில் வந்தவன், “ அம்மா, அழாதீங்க. டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லிட்டாரு. “ என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தான் சுபன்.

மீனா சுபனை கண்டவுடன், “ தம்பி, நான் என்னப்பா பண்ணுவேன்? ஏற்கனவே ஒரு பொண்ண பறிகொடுத்துட்டேன். இப்போ இவளையும் இழந்திடுவேனோ என்று பயமா இருக்குப்பா. “ என்று சொல்லி இன்னும் அழ ஆரம்பித்தார்.

சரவணனோ அவர்கள் இருவரும் தனியாக பேசட்டும் என்று நினைத்தவன் , சிறிது தூரம் தள்ளி சென்று நின்றவன், ஆதேஷ் தவிர மற்றய அவனது நண்பர் பட்டாளதுக்கு தாரணியின் விஷயத்தை தெரிவித்தான்.

அவர்களும் இதை கேட்டு தாரணி மேல் இரக்கப்பட்டவர்கள், “ சரவணா, இனி பொறுத்துட்டு இருக்க வேணாம். தாரணியை தூக்கிட்டு போய் ஆதேஷ் கிட்ட விட்டுடலாம். “ என்று சொல்ல, சரவணனும், “நானும் ஆதேஷ் கிட்ட இதைத்தான் சொல்லிட்டு இருந்தேன். ஆனால் இடைல இவ கைய அறுத்துகிட்டா. அவனுக்கு இந்த விஷயத்தை சொன்னா, இங்க வந்து அவளை பார்க்க ட்ரை பண்ணுவான். ஸோ அது வேணாம். நேரம் பார்த்து நான் சொல்றேன். உங்கள்ள நாலு பேர் வந்து தாருவ அழைச்சுட்டு போங்க. “ என்றான்.

இதே வேளை மீனா சுபனிடம் புலம்பியவர் ஒரு கட்டத்தில், “ இவ ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குறா என்றே தெரியல? அந்த பையன் நல்லவனா இருந்தா நானே இரண்டு பேரையும் சேர்த்து வைப்பேன். ஆனால் அவன் கிரிமினல் ஆச்சே. “ என்றார்.

சுபனோ, “ அவனோட ஒரு சைட் பார்த்துட்டு நீங்க பேசுறீங்க அம்மா. ஆனால் உண்மையில அவன் ரொம்ப நல்லவன். ஆரம்பத்தில அவனை பற்றி நானும் தப்பாத்தான் நினைச்சன். ஆனால் ஒரு இன்சிடென்ட்க்கு அப்புறம் தான் அவனை பற்றியே எனக்கு தெரிஞ்சுது. “ என்றான்.

மீனாவோ அவனை கேள்வியாக பார்த்தவர், “ என்னப்பா சொல்லுற? “ என்று கேட்க, “ தாரு அவன் கூட இருந்தா அவன் நல்லாத்தான் வச்சு பார்த்துப்பான். என்ன பொறுத்த வரைக்கும் தாரு அவன் கூட போறதா இருந்தால் போகட்டும் என்றுதான் சொல்லுவேன். “ என்றான்.

மீனாவோ, “ எனக்கு என் பொண்ணு கஷ்ட படாம நல்லா இருந்தா மட்டும் போதும்பா. “ என்று சொல்லி சுபனின் கையை பிடித்தவர், “எனக்கு வேற யார்கிட்ட உதவி கேக்குறது என்று தெரியல. தயவு செய்து என் பொண்ண அவ விரும்புறவன் கிட்டயே கொண்டு சேர்த்திடு. இங்க இருந்தா அவளை கொடுமை படுத்தியே சாவடிச்சுடுவாங்கபா. “என்று கேட்டார்.

சுபனும் மெலிதான புன்னகையுடன் மீனாவை பார்த்து தலை அசைத்தவன், “இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலை படாதீங்க. “ என்று அவரை சமாதானபடுத்தி விட்டு நேராக சரவணனை பார்க்க சென்றான்.

சரவணனோ சுவரில் சாய்ந்து நின்று போனை பார்த்துக்கொண்டு நிற்க, அங்கு வந்த சுபன், “சரவணன், கொஞ்சம் தனியா பேசணும் “என்று சொல்லி முன்னால் நடந்தான்.

சரவணனும் கேள்வியுடனே அவனை பின்தொடர்ந்து செல்ல, ஹாஸ்ப்பிட்டலின் கார்டன் ஏரியாவிற்கு சென்ற நின்று கொண்ட சுபன், அங்கு யாரும் தங்களை சுற்றி இல்லாததை உறுதி படுத்திக்கொண்டு சரவணனுடன் பேச தொடங்கினான்.

“எனக்கு வர்மா பற்றி ஓரளவுக்கு தெரியும். எல்லாரும் சொல்ற மாதிரி அவன் அவ்வளவு கெட்டவன் எல்லாம் இல்ல. எனக்கு அவன் எங்க இருக்கான்?என்ன? என்று எதுவுமே தெரிய வேணாம். ஆனால் எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணு. தயவு செய்து தாருவ எப்படியாவது அவன் கிட்ட கொண்டு சேர்த்திடு. அவளுக்கும் அதுதான் நல்லது “ என்றான்.

சரவணன் எதுவும் பேசாமல் நிற்க “என்மேல உனக்கு சந்தேகம் கூட வரலாம். ஆனால் கண்டிப்பா நான் வர்மாவ காட்டி கொடுக்க முயற்சி பண்ண மாட்டேன். வர்மா எனக்கு பண்ணின உதவி ரொம்ப பெருசு. “ என்றான் சுபன்.

சரவணன், “என்ன சொல்ற? என்ன உதவி? “ என்று கேட்க, “ சங்கவி.., இந்த பெயரை மட்டும் வர்மா கிட்ட சொல்லு. அவனே நடந்த கதையை உனக்கு சொல்லுவான். “ என்ற சுபன்,பெருமூச்சை எடுத்தவன், “ இப்போ தாருவ எப்படியாச்சும் இங்க இருந்து கூட்டிட்டு போய்டு. “ என்று சொல்லி அங்கிருந்து சென்றான்.

ஏற்கனவே சரவணன் போட்டு வைத்த திட்டமும் அதுவாக இருக்க, அன்று இரவே சர்வேஷ், தினேஷ், நிமாஸ் மற்றும் சம்பத்தை அழைத்தவன், தாரணியை அங்கிருந்து அழைத்து செல்ல ஏற்பாடுகளை செய்தான்.

முதலில் சிசிடிவிகள் அனைத்தையும் சர்வேஷ் உதவியுடன் செயலிழக்க செய்தவன் அதன் பின்னர், மீனா நன்கு தூங்கியதும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தாரணியின் அறைக்குள் நுழைந்தான்.

தாரணியோ மாத்திரைகளின் வீரியத்தால் நன்கு உறங்கிக்கொண்டிருக்க அவளை தட்டி எழுப்பியவன், “ நீ இங்க இருக்க வேணாம். என்கூட வா, ஆதேஷ் கிட்ட போகலாம். “ என்று மெல்லிய குரலில் சொன்னான்.

அவளோ அவள் முன் இருந்த சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த மீனாவை பார்த்துவிட்டு, “ விளையாடுறிங்களா ப்ரோ? அம்மா எல்லாம் இருக்காங்க. பார்த்துட்டா ஏதும் பிரச்சனை ஆயிடும். அது மட்டும் இல்லை,நானே வந்தாலும் ஆதேஷ் என்ன திருப்ப கூட்டிட்டு வந்து இங்கேயே விட்டுடுவான்.” என்றாள்.

சரவணனோ, “ இந்த முறை அப்படி ஏதும் நடக்காது. அவன் உன்னை நினைச்சி ரொம்ப பீல் பண்றான். அதனால இனி உன்னை விட்டுகொடுப்பான் என்று எனக்கு தோணல. “ என்றான்.

தாரணியோ சிறிது நேரம் யோசித்த படி அமர்ந்து இருக்க, “சரி, நீ யோசிக்குறத பார்த்தா உனக்கு வாறத்துக்கு இஷ்ட்டம் இல்ல என்று நினைக்குறேன். பரவால்ல நம்ம பசங்கள அனுப்பிர்றேன். “ என்ற சரவணன் அங்கிருந்து செல்ல போக, அவள் போர்த்தி இருந்த போர்வையை விலக்கிய தாரணி, “ ப்ரோ, நான் வாறன். “ என்றாள்.

சரவணனும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டவன், அவள் கையில் மருந்துகளை செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை கவனமாக களற்றியவன், வெளியே சென்று பார்த்து அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் அவளை வெளியில் வரும் படி சைகை செய்தான்.

தாரணி உறங்கிக் கொண்டிருந்த மீனாவை பார்த்து, “சாரி மீனு. நீ எனக்காக நிறைய பண்ணிருக்க. ஆனால் இதுவரைக்கும் உனக்காக நான் ஏதுமே பண்ணது இல்லை. இப்போ கூட என்னோட சுயநலத்துக்காக உன்னை தனியா விட்டுட்டு போறேன். இதை விட்டா எனக்கு வேற வழியும் இல்லை. என்னை மன்னிச்சுடு. “என்று கண்ணீர் விட்ட படி மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் மீனாவை பார்த்துக்கொண்டே சரவணனுடன் சென்றாள்.

அவளை ஹாஸ்ப்பிட்டலின் பின் வழியாக யாரின் கண்ணிலும் படாதவாறு அழைத்து சென்ற சரவணன், அங்கு காரில் காத்திருந்த சர்வேஷ், தினேஷ், நிமாஸ் மற்றும் சம்பத்திடம் கொண்டு சேர்த்தவன், “நான் சொன்ன ரூட்ல போங்கடா. நான் ஸ்டேஷன் போய்ட்டு ஒரு அட்டென்டன்ஸ் போட்டுட்டு பின்னாலயே வந்துடுறேன். “ என்றான்.

சம்பத்தோ, “ ஆதேஷ் கிட்ட சொல்லிட்டியா? “ என்று கேட்க, தாரணியும் சரவணனின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அவனும் அதை கவனித்தவன், “ தாரு, உன்னை திருப்ப அழைச்சிட்டு வந்து ஆதேஷ் வீட்டுல விட்டான்ல? அதுக்கு அவனை பழி வாங்கலாமா? “ என்று கேட்டான்.

தாரணியோ, “ கண்டிப்பா.. இத்தனை நாள் எவ்வளவு கஷ்ட பட்டிருப்பேன்? இத்தனை அடியும் அவனால தான் வாங்கினன். அதனால கண்டிப்பா அவனை ஏதாச்சும் பண்ணனும். “ என்ற, சர்வேஷோ, “ அடிபாவி” என்று சொல்லிக்கொள்ள, நிமாஸ், தினேஷ், சரவணன் மற்றும் சம்பத் சிரித்துக் கொண்டனர்.

சரவணனோ, “சரி, பிளான நான் போடுறேன். இப்போ நீ இவனுக கூட போ. “ என்றான். தாரணியும் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டவள், “ தம்பிக்கு பேவர் எல்லாம் பண்ண கூடாது. அவனை அலைய விடுங்க கொஞ்சம். “ என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.

 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 37

சரவணன் போலீஸ் ஸ்டேஷன் சென்று அவனது வேலைகளை முடித்தவன், வெளியில் வந்து ஆதேஷிற்கு அழைத்து, “ சீக்கிரம் களம்பி அப்பார்ட்மெண்டுக்கு வா. “ என்று சொன்னான்.

ஆதேஷோ அவன் பதற்றமாக பேசுவதாக நினைத்தவன், “ என்னாச்சு சரவணா? எதுக்கு இந்த டைம்ல அங்க வர சொல்லுற? ஏதும் பிரச்சனையா? “ என்று கேட்க, “ கேள்வி ஏதும் கேட்காம வாடா. “ என்று கோபமாக இருப்பது போல் பேசிய சரவணன் அழைப்பை துண்டித்தான்.

ஆதேஷோ, சரவணன் பேசியதை வைத்து ஏதோ பிரச்சனை நடந்து விட்டதாக எண்ணியவன் , மனதினுள் தாரணிக்கு ஏதும் ஆகியிருக்க கூடாது என்றுதான் முதலில் நினைத்துக்கொண்டு அவனது அபார்ட்மென்டை நோக்கி புறப்பட்டான்.

சரவணனோ, “ மாட்டினடா இன்னைக்கு. மனசுல ஆசைய வச்சுட்டு உன்னையும் ஏமாத்தி, சுத்தி இருக்குறவங்களையும் ஏமாத்திட்டு இருக்கல? இன்னைக்கு உன் வாயாலயே தாருவ உனக்கு புடிக்கும் என்று சொல்ல வைக்குறேன் பாரு. “ என்று அவனுக்குள் சொல்லி சிரித்துக்கொண்டவன், அப்பார்ட்மென்டை நோக்கி விரைந்தான்.

ஏற்கனவே சர்வேஷ், தினேஷ், நிமாஸ் மற்றும் சம்பத் தாரணியை ஆதேஷின் அப்பார்ட்மென்டுக்கு அழைத்து வந்து கார் பார்க்கிங்கில் காத்துக்கொண்டு இருக்க, அங்கு வந்த சரவணன் அவர்களையும் அழைத்துக் கொண்டு, அவன் வைத்திருந்த இன்னுமொரு சாவி மூலம் வீட்டை துறந்து அவர்களை வீட்டினுள் அழைத்து சென்றான்.

சர்வேஷோ, “பிளான் என்ன சரவணா? “ என்று கேட்க, “ ஆதேஷ இங்க வர சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான். வந்ததும் நான் என்ன சொல்றனோ, அதை பொல்லொவ் பண்ணி நீங்களும் பெர்போர்மென்ஸ் கொடுங்க.” என்று சொல்ல, “ ஓஹ்! ஸ்கிரிப்ட் எல்லாம் இல்லையா அப்போ? ஒகே சிறப்பா பண்ணிடலாம். “ என்றான் சம்பத்.

அந்த நேரத்தில் கதவும் தட்டபட, “ஆதேஷ் வந்துட்டான் என்று நினைக்குறேன். “ என்றான் தினேஷ்.



சரவணன் அங்கு அமர்ந்து இருந்த தாரணியை பார்த்தவன், “ தாரு, நீ அந்த ரூம்ல போய் ஒளிஞ்சிக்கோ. “ என்று சொல்லி ஹாலை ஒட்டி இருந்த ஒரு அறையை கைகாட்ட, அவளும் அங்கு சென்று ஒழிந்து கொண்டு கதவை வெளியில் நடப்பதை பார்ப்பதற்காக முழுதாக மூடாமல் சற்று திறந்து வைத்தாள்.

சம்பத் கஷ்டப்பட்டு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டவன், சென்று கதவை திறந்து விட்டான்.

ஆதேஷ், “என்னடா ஆச்சு? “ என்று கேட்டபடி உள்ளே நுழைய, அனைவருமே ஒவ்வொரு மூலையில் எதையோ பறிகொடுத்தது போல நின்றிருந்தனர்.

ஆதேஷுக்கு இதை பார்த்து இருதயம் வேகமா துடிக்க தொடங்க, சரவணனிடம் சென்றவன், “ என்ன.... என்னாச்சு? ஏ.. ன்? எல்லா.. ரும் இப்ப... டி நிக்குறி.. ங்க? “ என்று தடுமாறிய படி கேட்டான்.

தினேஷோ, “ பையனுக்கு ரொம்ப ஸ்டர்க் ஆகுது போல! “ என்று சர்வேஷிடம் ரகசியமாக சொல்ல, அவனோ வாயில் கையை வைத்தவன், பேசாதே என்று சைகை செய்தான்.

சரவணனோ தன் முன்னால் நின்ற ஆதேஷின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவன், “ இதுக்கு மேலே என்னடா நடக்கணும் ? நாங்கதான் அன்னைக்கு அத்தனை தடவ சொன்னோமேடா! அந்த பொண்ண திருப்ப கொண்டு வீட்டுல விடாத விடாத என்று கேட்டியா? உன்னால இன்னைக்கு ஒரு பொண்ணு..... “ என்று இழுக்க, பதறிய ஆதேஷ், “ தாருக்கு என்னாச்சு? “ என்று கேட்டான்.

அவனின் கேள்விக்கு யாருமே பதில் சொல்லாது நிற்க, “ ஏன்டா எல்லாரும் ஜடம் மாதிரி நிக்குறீங்க? அவளுக்கு என்னாச்சுடா? சொல்லி தொலைங்களன் . “ என்று அடிகுரலில் கத்தினான்.

சரவணனும், “பிளான் வேர்க்கவுட் ஆகுது. “ என்று நினைத்தவன், “ அவ உன்னை காப்பாத்தணும் என்றதுக்காக சூசைட் பண்ணிகிட்டா. “ என்று சொல்ல, ஆதேஷ் மொத்தமாக உடைந்து போனான்.

சர்வேஷ், தினேஷ், நிமாஸ் மற்றும் சம்பத், அதிர்ச்சியாக சரவணனை பார்த்து, “ பாவம்டா. “ என்றவாறு சைகை செய்ய, அதை கண்டு கொள்ளாத சரவணன் அவனது பெர்போர்மென்ஸை தொடர்ந்தான்.

“ எல்லார பத்தியும் அவ்வளவு யோசிப்ல? உன்னை நம்பி வந்த பொண்ண பத்தி ஏன்டா நீ ஒரு துளி கூட யோசிக்கல? அவளை எவ்வளவு டார்ச்சல் பண்ணினாங்க தெரியுமா? அடி, ஷாக் ட்ரீட்மென்ட் என்று அவள படுத்தி எடுத்துட்டாங்க. எங்க உன்னை பத்தி ஏதும் சொல்லிடுவமோ என்ற பயத்திலேயே அந்த பொண்ணு சூசைட் பண்ணிடிச்சு. இப்போதான் ஹாஸ்ப்பிட்டல போமல்டிஸ் எல்லாம் முடிச்சிட்டு வாறேன். பார்க்கவே பாவமா போச்சுடா. அவங்க அம்மா அப்படி அழுதாங்க. “என்று உண்மை பாதி பொய் பாதியாக சொன்னான் சரவணன்.

ஆதேஷுக்கோ அதற்கு மேல் அவனது உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியாமல் போக முதல் முறையாக வாய்விட்டு அழ தொடங்கினான்.

தரையில் முட்டி இட்டவன் தலை முடியை பிடித்துக் கொண்டு அந்த வீடே அதிரும் வண்ணம், “தாரு..... “ என்று கத்தியவன் அழ ஆரம்பித்தான் .

சர்வேஷ் அவனை சமாதான படுத்த அருகில் வர, அவன் கைகளை பிடித்து தடுத்த நிமாஸ், “ இரு, அவன் மனசுல இருக்குறது எல்லாம் சொல்லட்டும். அப்புறம் மொத்தமா சமாதான படுத்திக்கலாம். “ என்றான்.

இதையெல்லாம் கதவின் இடைவெளியூடாக பார்த்து நின்ற தாரணிக்கு , அவன் அழுவதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அதனால் அவனிடம் சென்று சமாதான படுத்தலாம் என்று நினைத்தவள் அங்கிருந்து வெளிய வர எத்தணிக்க, ஆதேஷ் மனவலியின் உச்சத்தில் அவனது மனதில் புதைத்து வைத்தவற்றை கொட்ட தொடங்கினான்.

“ நான் ஒன்னும் அவளை புடிக்காம கொண்டு வீட்டுல விடலடா, என்னோட இருந்தா அவளுக்குத்தான் நல்லதில்ல என்றுதான் நினைச்சன். ஆனால் அவ என்ன இந்தளவுக்கு லவ் பண்றது எனக்கு தெரியாம போச்சு... சின்ன பொண்ணு நாளாக மறந்துடுவா என்று நினைச்சன்.. பைத்தியமாடா அவ? எனக்காக சூசைட் பண்ணிருக்கா? நான் அவளுக்கு பொருத்தமானவனே இல்லை.

அவள மாதிரி ஒருத்தியோட வாழ கொடுத்து வச்சிருக்கணும். எனக்கு அவளை ரொம்ப ரொம்ப புடிக்கும். அவ பண்ற சின்ன சின்ன விஷயத்தை கூட அவ்வளவு ரசிப்பன். ஆனால் என்னால இதெல்லாம் வெளிய காட்டிக்க முடியல.

முதல் தடவை அவளை காபிஷாப்ல பார்த்தபோவே மொத்தமா விழுந்துட்டேன். ஆனால் கஷ்டபட்டு என்னை நானே கண்ரோல் பண்ணிட்டு இருந்தன். அவ நல்லா இருக்கணும் என்று நினைச்சிதான் எல்லாமே செய்தன் ஆனால் அவ இப்படி பண்ணுவா என்று கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கல. “என்று சொல்லி அழுதவன், தரையில் இருந்து எழுந்து சரவணனிடம் சென்று, “ சரவணா, எனக்கு அவளை பார்க்கணும்டா, ப்ளீஸ் எப்படியாவது என்ன அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ. “ என்று சொன்னான்.

சரவணனோ, “ இப்போ போய் என்ன பண்ணபோற? அங்க எல்லாமே முடிஞ்சு போயிருக்கும். “என்று சொல்ல, அவனை அணைத்து கொண்ட ஆதேஷ், “ தப்பு பண்ணிடேன்டா. எனக்கு அவ வேணும்... “ என்று சொன்னான்.

சரவணனோ, “ சரி, இப்போ அவ உன் முன்னாடி வந்தா பழைய புராணம் எல்லாம் பாடாம, இப்போ எங்கள்ட சொன்னதா எல்லாம் சொல்லி அவளை ஏத்துப்பியா? “ என்று கேட்க, அவனில் இருந்து விலகி நின்ற ஆதேஷ் அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டு நின்றான்.

சரவணனோ ஆதேஷின் முகபாவனையை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட, அவனை பார்த்து மற்றவர்களும் சிரித்து கொண்டார்கள்.

ஆதேஷோ அவர்களை சந்தேக கண்ணோட்டத்தில் பார்த்தவன், “ டேய் என்ன விளையாடுறீங்களா? எதுல விளையாடுற என்ற விவஸ்தையே இல்லையா? “ என்று கண்களை துடைத்து கொண்டே கோபப்பட்டு கேட்டான்.

சர்வேஷோ, “ சாரிடா, இப்போ நாங்க இப்படி பேசாம இருந்தா நீ தாருவ நீ விரும்புறத சொல்லிருப்பியா? “ என்று கேட்க, “ அதுக்காக இப்படி எல்லாம் பேசுவீங்களாடா? “ என்று கேட்டான் ஆதேஷ்.

தினேஷோ, “ சரவணன் சொன்னதுல பாதி பொய், ஆனால் மீதி உண்மை. “ என்று சொல்ல , திரும்பி சரவணனை பார்த்தான் ஆதேஷ்.

அவனோ, “ஆமாடா , தாரு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணது உண்மை தான். எங்க உன்னை பத்தி ஏதாச்சும் உளறிடுவமோ என்று பயந்து கையை அறுத்துகிட்டா. “ என்று சொல்ல, “ நான் இப்போவே அவளை பார்க்கணும். இப்போ தாரு எங்க?“ என்று கேட்ட ஆதேஷை திருப்பிய சரவணன், ரூமில் இருந்து வெளியே வந்து ஆதேஷின் பின்னால் நின்ற தாரணியை காட்டினான்.

ஆதேஷோ ஒரு நிமிடம் அவளையே பார்த்து நின்றவன், பின்னர் அவளிடம் சென்று அவளை இறுக்க அணைத்துக்கொண்டான்.

தாரணிக்கு அந்த தருணம் சந்தோஷமாக இருந்தாலும், அவளை அவன் கொண்டு வீட்டில் விட்ட கோபம் சற்று இருக்கதான் செய்தது.

கஷ்டபட்டு அவனில் இருந்து தன்னை விலக்கி கொண்டவள், “ எதுக்குடா என்னை கொண்டு வீட்டுல விட்ட? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? “ என்று சிறு பிள்ளை போல் கேட்க, அதை ரசித்து கொண்டு அவன் கண்களை துடைத்த ஆதேஷ், “சாரிடி “ என்றான்.

தாரணியோ, “ சிம்பிள்ளா சாரி சொல்லுற? “ என்று கேட்டுக்கொண்டே அவனது நெஞ்சில் அடிக்க தொடங்கினாள்.

அவனுக்கோ அவள் அடித்தது வலிக்கவில்லை என்றாலும், “ஆ.. வலிக்குது தாரு. “ என்று சொல்லி வலிப்பது போல் நடித்தவன், அவள் கைகளை பிடித்துக்கொண்டு, “ இங்க பாரு உனக்கு இன்னொரு சான்ஸ் தாரேன். ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிச்சுக்கோ. நீ என்கூடத்தான் இருக்க போறியா? “ என்று கேட்க, ஒரு செக்கன் கூட யோசிக்காது அவனை இறுக்க அணைத்த தாரணி, “ ஆமா, எனக்கு நீதான் வேணும். “ என்றாள்.

அதை கேட்டு சிரித்து கொண்ட ஆதேஷும் அவளை அணைத்துக்கொண்டவன், “ அப்போ இனி நீ நினைச்சாலும் என்கிட்ட இருந்து விலகி போக முடியாது. “ என்றான்.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 38

போலீஸ் நிலையத்தில் அவரது வேலைகளை முடித்த ராஜவேல் தாரணியை பார்க்கும் பொருட்டு வைத்தியசாலைக்கு வந்தவர், அவள் அனுமதிக்க பட்டிருந்த அறைக்குள் நுழைய அங்கிருந்த படுக்கை காலியாக இருந்தது.

உடனே சோபாவில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த மீனாவை எழுப்பியவர், “ ஏய்! தாரணி எங்க? “ என்று கேட்க, மீனா தூக்க கலக்கத்தில் படுக்கையை காட்டி, “ இங்க தானே... “ என்று சொல்லிக்கொண்டு திரும்பி படுக்கையை பார்த்தவர் அங்கு தாரணி இல்லாததை கண்டுகொண்டார்.

ராஜவேலோ, “ எங்கடி அவ? “ என்று குரலை உயர்த்தி கத்த, “ இவ்வளவு நேரம் இங்கதான் படுத்திருந்தா, இருங்க பாத்ரூம்ல இருக்காளா என்று பார்க்கிறேன். “ என்று சொல்லி எழுந்தவர் பாத்ரூம் கதவையும் திறந்து பார்த்துவிட்டு, “ அவ இங்கேயும் இல்லங்க. எங்க போனாள் என்றே தெரியல. “ என்று பதற்றப்படாமல் சொன்னார்.

ராஜவேல், “ என்னடி அம்மாவும் பொண்ணும் சேர்ந்து ட்ராமா பண்றீங்களா? அவ எங்க போனா என்று உனக்கு தெரியாதா? “ என்று கேட்க, “ சத்தியமா எனக்கு ஏதும் தெரியாதுங்க. அசதில தூங்கிட்டேன். “ என்றார் மீனா.

ராஜவேலுக்கு மீனா பேசுவதை கேட்டு கோபம் தலைக்கேறியது. மகளை காணவில்லை என்ற பதற்றம் சற்றும் இல்லாமல், சாதாரணமாகவே பேசிக்கொண்டு இருந்தார் அவர்.

அதனால் மீனா எல்லாம் அறிந்தும் தன்னிடம் சொல்லாமல் மறைக்கிறார் என்று அறிந்து கொண்ட ராஜவேல், “ நீயும் அவளோட சேர்ந்துட்டியா? யாரு அந்த முகமூடிகாரன் வந்து அவளை கூட்டிட்டு போனானா? “ என்று கேட்டுக்கொண்டே, மீனாவின் கழுத்தை பிடித்தார் அவர்.

மீனா அவரின் பிடியில் திணறியவர், “ எனக்கு எதுவுமே தெரியாதுங்க. நான் தூங்கிட்டேன். “என்று சொன்னதையே திருப்பி சொல்லிக்கொண்டு இருக்க, எரிச்சல் அடைந்த ராஜவேல், “எனக்கு எதிரி வெளியில இல்ல வீட்டுக்குள்ளேயே இருக்கீங்க. “ என்று சொன்னவர் மீனாவை விட்டுவிட்டு தாரணியை தேடும் பொருட்டு அங்கிருந்து சென்றார்.

மீனாவோ, “ அவளோட வாழ்க்கையும் என்ன மாதிரி ஆக வேணாம். அவ விரும்புன வாழ்க்கையை தேடி அவ போயிருக்கா. அவளாவது சந்தோஷமா இருக்கட்டும். “ என்று மனதில் நினைத்துக்கொண்டவருக்கு, சரவணன் யார் என்பதில் தொடங்கி அவன் வந்து தாரணியை அழைத்து சென்ற வரை அனைத்தும் தெரிந்திருந்தது.

சுபன் என்னதான் ஆதேஷ் பற்றி நல்லவிதமாக மீனாவிடம் சொல்லிருந்தாலும், அவன் போலீசார் தேடும் குற்றவாளி, அவனை நம்பி தாரணியை எப்படி ஒப்படைப்பது என்ற பயம் அவர் மனதில் இருக்கத்தான் செய்தது.

உடனே சுபனை அழைத்து அவரது இந்த மனபயத்தை பற்றி அவனிடம் சொல்ல, ஆதேஷை பற்றி அவன் அறிந்து வைத்தது தொடங்கி, அவன் ஆதேஷை மதிப்பதற்கான காரணத்தையும் விளக்கி சொன்ன சுபன், சரவணன் பற்றியும் சொல்லிருந்தான்.

அதன் பின்னரே மீனாக்கு ஆதேஷ் மேல் நல்ல அபிப்பிராயம் வந்தது. சரவணன் தாரணியை அழைத்து செல்லும் போது தூங்குவது போல் நடித்தாரே அன்றி உண்மையில் அவர் தூங்கவில்லை. முழு மனதுடனே தாரணி ஆதேஷுடன் சென்று வாழட்டும் என்று நினைத்திருந்தார் அவர்.

ஆதேஷின் அபார்ட்மென்டில்...,

ஆதேஷும் தாரணியும் அணைத்து கொண்டு நின்றிருக்க, குரலை செருமிய சம்பத், “நாங்களும் இங்க தான் இருக்கோம். “ என்று சொல்ல, மற்றய நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

ஆதேஷோ அப்போதும் தாரணியை விட்டு விலகாமல் நின்றவன், “ நீங்க இன்னும் போகலையா? இனிமேல் உங்களுக்கு இங்க வேலை இல்ல. “ என்றான்.

சரவணனோ, “ அட பாவி, என்னடா கொஞ்ச நேரத்துல ஆளே மாறிட்ட? “ என்று கேட்க, “ இவனுக்கு இனி நம்ம கண்ணுக்கு தெரிய மாட்டம் “ என்றான் சர்வேஷ்.

தினேஷோ, “ இதற்கு மேலையும் நம்ம இங்க நிக்கணுமா? “ என்று கேட்க, “ அவன் நம்ம கழுத்தை புடிச்சு வெளிய தள்ளுறதுக்கு முதல் நம்மளே மரியாதையா போயிடுவோம். “ என்ற நிமாஸ் சிரித்துக்கொண்டே வெளியேற, அவனை தொடர்ந்து சர்வேஷ், தினேஷ், சம்பத், “ நீ நடத்து மச்சி. “ என்று சொல்லி ஆதேஷை நக்கல் செய்து கொண்டே சென்றனர்.

பின்னால் வந்த சரவணனோ, அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்த ஒரு மருந்து பெட்டியை சோபாவில் போட்டவன், “ அவ டப்லெட் எல்லாம் இதுல இருக்கு. டைம் பார்த்து கொடுத்துடு. அப்புறம் இதுல ஜெல்லும் இருக்கு, அடி பட்ட இடத்துல எல்லாம் அப்ளை பண்ணு வலி குறையும். “ என்று சொன்னவன், தாரணியை அணைத்து நின்ற ஆதேஷின் முதுகில் தட்டிவிட்டு மெல்லிய புன்னகையுடன் வெளியேறினான்.

எங்கே ஆதேஷ் வாழ்நாள் முழுக்க தங்களுக்காக மட்டும் இருந்துவிடுவானோ, என்று நினைத்து பயந்த அவர்களுக்கு, தனக்கான வாழ்க்கையை ஆதேஷ் தேர்ந்தெடுத்துக் கொண்டது சந்தோஷத்தை கொடுத்தது.

அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் மலர்ச்சியான முகமே அதை எடுத்துரைத்தது.

அனைவரும் அங்கிருந்து சென்றதும், தாரணியை தன்னில் இருந்து பிரித்தெடுத்து அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன், அவன் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி கீழே போட்டு விட்டு,அவள் உச்சந்தலையில் அவன் முதல் முத்தத்தை பதித்தான்.

தாரணி வெட்கத்தில் சிவந்து போனவள், தலையை குனிந்து கொள்ள, அதை பார்த்து ரசித்தவன், “ நீ ரொம்ப அழகா இருக்க தாரு. “ என்றான்.

தாரணியும், “ நீயும்தான். “ என்று வெட்கபட்ட படியே சொல்ல,கையை அறுத்து கொண்டதால் கட்டு இடப்பட்டு,அவனது இடையை இறுக்க பற்றிக் கொண்டிருந்த கையை மெதுவாக தூக்கி தன் இதழ் அருகில் கொண்டு சென்று முத்தமிட்டவன், “ வலிக்குதா? “ என்று மென்மையான குரலில் கேட்டான்.

தாரணியோ அவன் கண்களை பார்த்துக்கொண்டே, “ வலிச்சுது, இப்போ இல்ல. “என்று சொல்ல, “ என்ன உனக்கு அவ்வளவு புடிக்குமா? ஏன்? “ என்று கேட்டான் ஆதேஷ்.

தாரணியோ, “ ரொம்ப புடிக்கும். காரணம் எல்லாம் எனக்கு சொல்ல தெரியல. ஆனால் உனக்காக எதுவும் பண்ணலாம் என்று தோணிச்சு.” என்று சொல்ல, அவளின் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க, “ஆஆஆ... “ என்று கத்தினாள் அவள்.

உடனே அவளை விட்டவன், “என்னாச்சு தாரு? “என்று கேட்க, “ ஒன்றுமில்லை. “ என்று சொல்லி உடலை நெளித்து கொண்டு நின்றாள் தாரணி.

அப்போதுதான் சரவணன் சொன்னது ஆதேஷுக்கு நியாபகம் வர, “ உனக்கு அடி பட்டிருக்குல? ரொம்ப அடிச்சிட்டாங்களா? சாரி தாரு, என்னாலதான். “ என்று சொன்னவன், அவளை இழுத்து சோபாவில் அமர வைத்து, “ சரி எங்க அடி பட்டிருக்கு? காட்டு நான் மருந்து போடுறேன். “என்று சொல்லி சரவணன் வைத்து சென்ற ஜெல்லை கையில் எடுத்தான்.

தாரணியோ, “ என்ன??? “ என்று கேட்டு அங்கிருந்து எழுந்தவள், இரண்டடி தள்ளி நின்று, “ நானே போட்டுப்பேன். கொடு. “என்றாள்.

ஆதேஷோ, “ பரவால்ல நானே போட்டு விடுறேன். “ என்று சிரித்தபடி சொன்னவன் அவளை நெருங்கி வர, “ ஆதேஷ், கிட்ட வராத. கொடு நானே போட்டுப்பேன். “என்று சொல்லிக்கொண்டு பின்னால் சென்று கொண்டிருந்தாள் தாரணி.

ஆதேஷோ, “ நீதானே வாய்க்கு வாய் என்கூட வாழனும், நான் வேணும் வேணும் என்று சொன்ன, இப்போ என்னாச்சு எதுக்கு விலகி போற? “ என்று குறும்பாக கேட்டவன், அவளை குறுகுறுஎன்று பார்த்துக்கொண்டு நெருங்க, “ஆஹ்.. சொன்னேன்... அதுக்காக..., நீ முதல்ல என்ன இப்படி பார்க்காத . கூச்சமா இருக்கு.“ என்று சொன்ன தாரணியை தன்னை நோக்கி இழுத்து, தூக்கி தன் இரு கரங்களில் ஏந்திக் கொண்டவன், கதவை லாக் செய்து விட்டு, அங்கிருந்த அறைக்குள் புகுந்தான்.

தாரணியின் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது. வெட்கமும், ஒரு வகை பயமும் அவளை சூழ்ந்து கொண்டது.

“ஆதேஷ், பயமா இருக்கு. ப்ளீஸ்... வேணாமே. “ என்று சொல்லிக்கொண்டு அவனின் கழுத்தை பற்றிக் கொண்டு, அவனது இரு கரங்களில் இருந்து சென்றவளை,சிரித்துக் கொண்டே கட்டிலில் மெதுவாக படுக்க வைத்த ஆதேஷ், பக்கத்தில் இருந்த டேபிள் லாம்ப்பையும் ஓன் செய்தான்.

தாரணியோ, “பயமா இருக்குடா. “ என்று சொல்ல, வழமை போல் அவளின் தலையை தடவிக்கொடுத்தவன், “ எங்க எங்க அடி பட்டிருக்கு? நீயே சொல்றியா இல்ல நானே... “ என்று இழுக்க இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டாள் தாரணி
.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 39

ஆதேஷ் அவள் அணிந்து இருந்த டீஷர்ட்டை மேலே தூக்கியவன், அந்த லாம்பின் வெளிச்சத்தின் உதவியுடன் அவள் உடலில் இருந்த காயங்களுக்கு மருந்திட்டான்.

அவனுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்த போதிலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிலைமையை சுமுகமாக கையாண்டான்.

ஆனால் தாரணி தான் அவனது ஒவ்வொரு தீண்டலிலும் நிலை கொள்ள முடியாது தவித்துக் கொண்டு இருந்தாள்.

அவளது காயத்திற்கு மருந்திட்டு முடித்தவன், அவள் காதில் அவனது உதடுகள் உரசும் வண்ணம் நெருங்கி வந்து, “ பசிக்குதா? ஏதாச்சும் சாப்பிடுறியா? “ என்று சாதாரணமாக கேட்க, “ச்சீ போடா.” என்று வெட்க்கப்பட்டு சொல்லி,அவன் நெஞ்சில் அடித்தாள் தாரணி.

ஆதேஷோ, “ ஏய்! இப்போ நான் சாப்பிடுறியா என்றுதானே கேட்டேன். அதுக்கு ஏன்டி இப்படி வெக்கபடுற?” என்று கேட்க, மூடிருந்த கண்களை மெதுவாக திறந்தவள், “ ஓஹ்! நீ அப்படி கேட்டியா? இல்லை எனக்கு பசிக்கல. “ என்றாள்.

அவனோ, “அப்படி கேட்டியா என்றா எனக்கு புரியல. நீ எப்படி நினச்ச? “ என்று புருவம் உயர்த்தி கேட்க, எதுவும் சொல்லாமல் மீண்டும் கண்களை இறுக்க மூடிக்கொண்டு தலையணைக்குள் முகத்தை புதைத்தாள் அவள்.

ஆதேஷோ, “ உன்னை சின்ன பொண்ணு என்று நினைச்சது என்னோட தப்புத்தான். சரியான கேடிடி நீ. “ என்று சொல்லி அவள் தலையில் செல்லமாக கொட்டியவன், அவளின் அருகில் படுத்துக்கொண்டு தன் மார்பில் அவளை சாய்த்துக் கொண்டான்.

அவள் அவனது அணைப்பினில் அதுவரை இல்லாத ஒரு புதுவித சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்தவள், அவனை இறுக்க கட்டிக்கொண்டு, “கடைசி வரைக்கும் என்கூடவே இரு. “ என்றாள்.

அவன் அதை கேட்டு மெலிதாக புன்னகைத்துக் கொண்டானே அன்றி அதற்கு பதில் ஏதும் பேசவில்லை. அவனது வாழ்கை நிச்சயம் அற்றது என்றே அந்த நொடி வரை எண்ணிருந்தான் அவன்.

ஆதேஷோ, “சரி அதை விடு, எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டியே, வீட்டுல யாரையும் மிஸ் பண்ண மாட்டியா? “ என்று கேட்க, “ என்னோட மீனு குட்டிய ரொம்ப மிஸ் பண்ணுவேன். “ என்றாள் அவள்.

அவனோ, “மீனு குட்டியா? “என்று கேட்க, “ஆமா, என்னோட அம்மா. அவங்க ரொம்ப பாவம். எனக்காக எல்லாமே பண்ணுவாங்க. வாழ்க்கைல ரொம்ப கஷ்டபட்டுடாங்க. “ என்று சொல்ல தொடங்கி மீனாவை பற்றி அனைத்தும் அவனுக்கு சொன்னவள் தன்னை மீறி கண்கள் கலங்கி போனாள்.

அவளது கண்ணீர் அவனது மார்பை நனைக்க, அவளது முகத்தை தாங்கி கண்களை துடைத்து விட்டவன், “ உன்னோட மீனு குட்டி உன்னோடையே இருப்பாங்க. அதுக்கு என்ன பண்ணணுமோ அதை நான் பார்த்துக்கிறேன். “ என்று சொல்ல, “உண்மையாவா? “என்று கேட்டாள் தாரணி.

ஆதேஷும், ஆம் என்ற வகையில் தலையை ஆட்ட , “தேங்க்ஸ் ஆதேஷ். “ என்று சொல்லி அவனது நெற்றியில் முத்தமிட்டாள் அவள்.

அன்று இரவு முழுவதுமே அவள் ஆதேஷின் மார்பில் படுத்துக்கொண்டு அவளை பற்றியும், அவளது குடும்பம், இறந்து போன அவளது அக்காவான தர்மிதா பற்றியும் பேசிக்கொண்டு இருக்க அவை அனைத்தையும் சலிக்காமல் கேட்டு கொண்டு, அவள் பேசுவதை இரசித்துக் கொண்டு இருந்தான் ஆதேஷ்.

அவள் பேசிக்கொண்டு தன்னைஅறியாமல் தூங்கவே மணி மூன்றை கடந்து இருக்க, ஆதேஷ் அவளின் தலையை கோதியபடி அவனும் தூங்கிப்போய் இருந்தான்.

மறுபக்கம் ராஜவேல் தாரணியை வலை வீசி தேடிக்கொண்டு இருக்க, அசோக் தாரணி மீது கொலை வெறியில் இருந்தான்.

தன்னை ஒரு பெண் நிராகரித்ததை அவமானமாக கருதியவன், அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நினைத்தான்.

அதற்காக ராஜவேலில் காலை கழுவியவன், “ மாமா, எனக்கு உங்களோட கொளரவமும் மரியாதையும் தான் முக்கியம். உங்களுக்காக நான் கண்டிப்பா தாரணிய ஏத்துப்பேன். “ என்று சொல்ல, ராஜவேலும் அவனது சுயரூபம் அறியாமல் அவனின் பக்கம் நின்றார்.

அடுத்த நாள் காலையில் போலீஸ்ஸ்டேஷன் சென்ற சுபன், தாரணி பற்றிய அரசல் புரசலான செய்தியை அறிந்து கொண்டு, சரவணன் வந்தவுடன் அவனிடம் சென்று, “ தாரு சேப்டியா இருக்காளா? ஏதும் ஹெல்ப் வேணும் என்றால் கேளு. “ என்று சொன்னான்.

சரவணன் பதில் ஏதும் பேசாது அவனை பார்த்து தலைஅசைத்து சிரிக்க, அவனின் முதுகை தட்டியவன், அங்கிருந்து சென்றான்.

சரவணன் அன்று அரை நாள் விடுமுறையை எடுத்துக்கொண்டவன், ஆதேஷை பார்க்கும் பொருட்டு சென்றான்.

ஆதேஷின் வீட்டில் தாரணி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்க, வழமையாக எழும் நேரத்துக்கு கண்விழித்த ஆதேஷ் அவளை தொந்தரவு செய்யாது ஹாலில் சென்றமர்ந்தவன், அன்று மாலை நடக்கவிருந்த டிரக் டீலருடனான மீட்டிங் தொடர்பான ஆயத்தங்களை செய்துகொண்டு இருந்தான்.

அந்நேரத்தில் வீட்டின் காலிங்பெல்லும் அடிக்கபட, ஆதேஷ் சென்று கதவை திறந்தான்.

வெளியில் நின்ற சரவணன், “ஹாய் டா “ என்றபடி உள்ளே நுழைய, “வா சரவணா “ என்று சொல்லி அழைத்து சென்றான் ஆதேஷ்.

சரவணனோ, “ எங்கடா தாரு? “ என்று கேட்க, “ ரூம்லடா. இன்னும் எழுந்திரிக்கல. “என்ற ஆதேஷ்,” அது சரி, என்ன டியூட்டி டைம்ல வந்திருக்க? “ என்று கேட்டான்.

“ஹாப் டே ஆதேஷ். அதை விடு,உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். “ என்றான் சரவணன். ஆதேஷோ, “ சொல்லுடா “ என்று கேட்க, “ சங்கவி யாருடா? “ என்று கேட்டான் அவன்.

ஆதேஷ் சற்று நேரம் யோசித்தவன், “ சங்கவி.... ஆஹ்..., ஒரு வன் இயர் பிபோர் எனக்கும், நம்ம பிளான் பண்ணி ஒரு ஆறு மாசத்துக்கு முதல் போட்டு தள்ளினோமே அந்த ரவி அவனுக்கு நடந்த ஒரு சண்டைல இந்த சங்கவி என்ற பொண்ணு நடுவுல வந்து மாட்டிக்கிச்சு. காலேஜ் போய்ட்டு வீட்டுக்கு வந்திருக்கும் போல அந்த பொண்ணு. ரவி அவனை காப்பாத்திக்கணும் என்று சொல்லி இந்த பொண்ண ஷூட் பண்ணிட்டு தப்பி ஓடிட்டான். அந்த பொண்ண அப்படியே நடு ரோட்ல போட்டுட்டு போக மனசு வரல, என்னோட கார்ல போட்டுட்டு நான்தான் ஹாஸ்ப்பிட்டல் கொண்டு சேர்த்தன். “ என்று சொன்ன ஆதேஷ், “நீ எதுக்கு இப்போ அந்த பொண்ண பற்றி கேக்குற? “ என்று கேட்டான்.

சரவணனோ, “ சொல்றேன், ஆனால் அந்த பொண்ண கொண்டு ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்த சரி, அந்த பொண்ணோட நேம் எப்படி தெரியும் உனக்கு? “ என்று கேட்க, “ கார்ல போகும் போது அவ கோன்ச்சியஸ்ல இருக்கணும் என்று நான் பேச்சு கொடுத்துட்டே போனேன். அப்போதான் அவளோட நேம் எல்லாம் கேட்டன். “ என்றான் அவன்.

ஆதேஷ் சொல்வதை கேட்டு நின்ற சரவணன், “ நேற்று சுபன் வந்து என்கிட்ட பேசினான். நான் உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கன் என்று தெரிஞ்சும் என்ன அவன் மாட்டி கொடுக்கல. அதுக்கு பதிலா தாரணிய உன்கிட்டயே கொண்டு விட சொன்னான். அவனுக்கு நீ பண்ணின உதவி ரொம்ப பெரிசு என்றான். நான் என்ன உதவி என்று கேட்க தான், சங்கவி என்ற பெயரை உன்கிட்ட சொல்லி, என்ன உதவி என்று உன்கிட்டயே கேட்க சொன்னான். “என்றான்.

ஆதேஷோ, “ அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்? நம்மளுக்கு அவன் ஏன் ஹெல்ப் பண்ண நினைக்கணும்? “ என்று கேட்டுக்கொண்டிருக்க, சோம்பல் முறித்துக் கொண்டு ரூமில் இருந்து வெளியே வந்த தாரணி, “ குட் மார்னிங். “ என்றாள்.



 
Status
Not open for further replies.
Top