அத்தியாயம் 1
“அக்கா!!, " என்று சரண் அழைத்த சத்தத்திலே கண்விழித்தாள் சான்யா.”அக்கா உனக்கு ரொம்ப வலிக்குதா, என்ன மன்னிச்சுக்கோ. என்னாலதான் பெரியம்மா நேற்று உன்ன அடிச்சாங்க”என்று கண்கலங்கி மேலும் பேச தொடர்ந்தவனிடம்,“இப்போ எதுக்கு கண்கலங்குற?எனக்கு ஒன்றுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கன்.”என்றபடியே சுவரில் இருந்த கடிகாரத்தை பார்க்க அது ஏழு மணியை காட்டியது. “சரண் ரொம்ப லேட்டாயிடிச்சுடா போய் ரெடியாகு. நானும் ரெடி ஆகிட்டு வாறன். “என்று படுக்கையில் இருந்து எழுந்தாள் சான்யா.
அவள் அருகில் வந்த சரண் அவள் கன்னத்தை பார்த்து, “ அக்கா அவங்க ஏன் உன்ன அடிக்குறாங்க?பாரு உன் கன்னம் எப்படி வீங்கிருக்கென்று. “ அப்போதுதான் முன்னே இருந்த கண்ணாடியுடு அவள் முகத்தை பார்த்தாள் சான்யா.
பால் வெள்ளை நிற தேகமும், இயற்கையாக அடர்ந்து வளர்ந்த புருவமும், முழங்காலளவு இருக்கும் நீண்ட தலைமுடியையும்,மெலிந்தும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் அளவான உடலமைப்பு கொண்டவள் சான்யா.மேக்அப் ஏதும் அவளுக்கு தேவையில்லை. இயற்கை அழகில் ஜொலிப்பவள்.
அவ்வாறு இருந்த அவள் கன்னமதில், அவள் பெரியம்மாவனா வாசுகியின் கையச்சு தெரிந்தது. நேற்று இரவு சரணிற்காக நடந்த சண்டையில் சரணை காக்கும் பொருட்டு இவள் இடையில் வந்ததால் இவளின் கன்னம் வீங்கிருந்தது.
பதினாறு வயதுடைய சரண் பாஸ்கெட்பால் விளையாட்டில் அதிக நாட்டம் உடையவன். பாஸ்கெட் பால் விளையாட வேண்டும், அதில் சாதனைகள் புரிய வேண்டும் என்பது அவன் கனவு. அவன் ரோல்மாடல்” அர்ஜுன் “என்னும் ஒரு பாஸ்கெட்பால் விளையாட்டு வீரனே. ஸ்கூல் முடிந்து சான்யாவிற்காக பஸ்ஸ்டாண்ட்ல் காத்திருக்கும் போது, பஸ்ஸ்டாண்ட் முன்னால் உள்ள பாஸ்கெட்பால் விளையாடும் இடத்தில் அர்ஜுன் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருப்பான். அவனின் அட்டிடியுட், விளையாடும் விதம் எல்லாமே அவனுக்கு பிடித்து போக அவனது தீவிர ரசிகன் ஆகிவிட்டான்.
அவன் விளையாடி வந்தவுடன் அவனிடம் சென்று பேசுவான். பாஸ்கெட்பால் பற்றி நிறைய விடயங்களை கேட்டறிந்து கொள்வான். அர்ஜுனும் அவன் ஆர்வம் கண்டு அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பான். ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரம், அர்ஜுன் சரணை பாஸ்கட்டபால் கோச்சிங் சேர்த்துவிடுவதாகவும், அவனுக்கான முழு செலவையும் அவனே பார்த்துக்கொள்வதாகவும் சொல்லி சரணிடம் சொல்லிருக்க, அவன் சான்யாவிடம் சொல்லி அடம்பிடித்து சம்மதமும் வாங்கிருந்தான்.
ஆனால், அவனை கோச்சிங் வகுப்பில் சேர்ப்பதற்கு முதல் நாள் நடந்த வாகனவிபத்தில் சிக்கி அர்ஜுன் இறந்திருந்தான்.இதை அறிந்த சரண், அர்ஜுனை நினைத்து அழாத நாட்களில்லை,இன்றும் அவனை நினைத்து வருந்திக்கொண்டிருப்பவன் அவன்.அவனது இன்ஸ்பிரேசன் ஆக இருந்த அர்ஜுன் இறந்ததை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. பாஸ்கெட்பால் மேலிருந்த அவனது நாட்டம் இன்னும் அதிகமானது. அர்ஜுன் அவனுடன் பகிர்ந்த அவனுடைய கனவுகளையும் இவன் செய்து முடிக்க எண்ணினான்.
அவ்வாறே அன்று இரவு அவனது பெரியம்மாவான வாசுகியிடம், பாஸ்கட்பால் கோச்சிங் கிளாஸ் சேர வேண்டும் என்று பணம் கேட்க அவனை திட்டி அடிக்க வந்த வாசுகியை தடுக்க இடையில் வந்த சான்யா அறை வாங்கிருந்தாள்.
சரணிடம், “அதெல்லாம் ஒன்றும் இல்லைடா. எனக்கு காலேஜ் போகவும் டயம் ஆகுது, போய் ரெடி ஆகு சீக்கிரம் போகணும். “என்று சொல்லிவிட்டு காலேஜ்ற்கு செல்ல சான்யா தயாராக, சரணும் பள்ளி செல்ல ஆயத்தமானான்.
தம்பி மீது அளவில்லா அன்பை பொழிபவள் சான்யா.சரண் பிறந்த ஆறு வருடங்களில் அவர்களின் அம்மா நீரேடுக்க குளத்தடி சென்றபோது அங்கே வழுக்கி விழுந்து, தலையில் பலத்த அடி பட்டு படுத்தபடுக்கை ஆகிவிட்டவர், சில மாதங்களிலே காலமாகி இருந்தார். அப்போது சான்யாவின் வயது பத்து.
சான்யாவின் அப்பா சுதகாரின் காதல் மனைவிதான் அவர்களின் அம்மா செல்லம்மா.சுதாகரிற்கு ஏற்கனவே திருமணமாகி வாசுகி என்ற மனைவியும்,அவர்களுக்கு சௌமியா என்ற மகளும் இருந்தாள். இதை அனைத்தும் அறிந்தே சுதாகருடன் இல்லறம் நடத்தினாள் செல்லம்மா. சுதாகர் வாசுகியையும், சௌமியாவையும் பிரிந்து வந்து இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.அழகிய கிராமமதில் இவர்களின் வாழ்கை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது அவர்களின் தாயான செல்லம்மா இறக்கும் வரையில்.
செல்லம்மா இறந்த பின்னர் சுதாகரிற்கு அங்கு வாழ பிடிக்கவில்லை அவரது காதல் மனைவியின் நினைவுகள் அவரை வாட்டிக்கொண்டிருக்க அவரின் உடல்நிலையும் மோசமாக இருந்தது. இதேவேளை சான்யா மற்றும் சரணை கவனித்துக்கொள்ளவும் யாரும் இல்லாதநிலையில்தான் அவர்களை தனது முதல் மனைவியான வாசுகியிடம் கொண்டு சேர்த்தார். சான்யாவையும், சரணையும் வாசுகியிற்கு பிடிக்கவே இல்லை. எப்போதும் அவர்களை வசைபாடிக்கொண்டிருந்தார்.
அதேவேளை வாசுகியின் மகளான சௌமியாவிற்கும் இவர்களை கண்டால் பிடிக்காது. எந்நேரமும் அவர்களின் மனதை நோகடித்துக்கொண்டே இருப்பாள். சான்யா அனைவரிடமும் நற்பெயர் வாங்குவதும், அவளை சுற்றத்தவர்கள் பாராட்டுவதையும் அவள் படிப்பு திறனையும் அவள் அழகையும் கண்டு பொறாமை கொண்டாள் அவள்.
இதை அனைத்தையும் சுதாகர் கவனித்தாலும், சான்யாவிற்கும், சரணுக்கும் இதுவே பாதுகாப்பான இடம் என்று நினைத்தவர், சான்யா மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். என்ன பிரச்சனை வந்தாலும் அவள் சமாளித்து தன் தம்பியை கரைசேர்ப்பாள் என்றும் அவள் வாழ்க்கையை அவள் நன்றாக அமைத்து இந்த நரகவாழ்க்கையில் இருந்து வெளிவருவாளேன்றும் .இவ்வாறு சில நாட்களிலேயே செல்லம்மாவை நினைத்து நினைத்து வருந்தி தனது உயிரைவிட்டார் சுதாகர்.இப்படி ஒரு நிலையில்தான் தனது தம்பியை முழுப்பொறுப்பெடுத்து கவனித்துக்கொண்டாள் சான்யா.அவளின் உலகம் சரணை சுற்றியும், சரணின் உலகம் அவளையும், அவன் கனவுகளையும் சுற்றியும் ஓடிக்கொண்டிருந்தது.
இதே நேரத்தில், கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களால் அமைக்கப்பட்டிருந்த அந்த கடற்கரையோர மாளிகையின் வாசல் வழி பிரவேசித்தது அந்த சிவப்பு நிற உயர்ரக கார்.
காரில் இருந்து இறங்கிய கார்த்திக் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த நேரம் ஹாலினுள் இருந்த கடிகாரம் மணி எட்டை நெருங்கி கொண்டிருக்க,அங்கு மேசையில் இருந்த சரக்கு பாட்டில்களை வீட்டின் வேலைக்காரரான முத்து எடுத்து கிளீன் செய்துகொண்டு இருந்தார்.”கார்த்திக்கோ, “குடிக்காத என்றால் கேக்குறான இவ்வளவு குடிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகுறது?”என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெண் மாடிப்படிகளில் இருந்து இறங்கிவந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து திரும்பி நின்ற கார்த்திக்கிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.
அந்த பெண் கார்த்திக்கை கடந்து வீட்டைவிட்டு வெளியேறியதும், கார்த்திக் அருகே வந்து அவன் முதுகில் கைபோட்டான் விஷ்ணு.அவன் கைப்போட்டதை வைத்தே அது விஷ்ணுதான் என்றறிந்த கார்த்திக், “உன்கிட்ட எத்தனை தடவ சொல்றது விஷ்ணு பொண்ணுகளை வீட்டுக்கு கூட்டி வராத என்று, தப்பு பண்ற விஷ்ணு இத நினைச்சு ஒரு நாள் பீல் பண்னுவடா. “என்றான்.விஷ்ணுவோ, “என்ன பண்ற மச்சான் நான் தேடி போகலையே நேத்து பப் போனேன் அங்க அவதான் என்கூட வந்தா.பணம் என்றதுமே வாலாட்டிட்டு பின்னாலயே வருவாளுகள் டா. பசங்கள ஏமாத்துறதுல இப்படியான சில பொண்ணுகள் பி.எச். டி முடிச்சிருப்பாளுகள் போல. “என்றான் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை வைத்துக்கொண்டு.
அவன் பேச்சில் முகம் சுழித்த கார்த்திக்கோ, “இப்போ மீட்டிங் போகணும் அந்த அமெரிக்கா ப்ராஜெக்ட் பைல்ஸ் எல்லாமே பார்த்து நீ சைன் போடணும் கூடவாடா. “என்றான் கோபமாக.
விஷ்ணுவோ,“அதெல்லாம் நான் நேற்று சைன் பண்ணி கொடுத்துட்டன்.நைட் ரகு என்ன பார்க்க வரும் போது பைல்ஸ் எல்லாமே கொண்டு வந்து சைன் வாங்கிட்டு போய்ட்டான் மச்சா. நீ கூட இருந்து பார்த்துக்கோ. என்னால எல்லாம் எங்கேயும் வர முடியாது. “என்று சொல்லியபடியே சென்று பிரிட்ஜ்ஜை துறந்தவன் அங்கிருந்த பீர் பாட்டில்களை எடுத்து குடிக்க தொடங்கிருந்தான். கார்த்திக்கோ, “காலையிலையே குடிக்கதொடங்கிட்டியாடா? ஏன் இப்படி பண்ற உன் வாழ்க்கைல மட்டுமா பிரச்சனை இருக்கு இப்படி குடிச்சு குடிச்சு வாழ்க்கையை தொலைச்சிடாதடா.மற்றது ஒன்று சொல்றன் கேட்டுக்கோ உன்ன சுற்றி இருக்குற எல்லாரையும் கண்ணமூடிட்டு நம்பாத இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். “என்றான்.
குடித்தபடியே கார்த்திக் சொல்வதை கேட்ட விஷ்ணு, “மச்சா நீ கந்தசாமி அங்கிளையும், ரகுவையும் தான் சொல்ற என்று நல்லா தெரியும் எனக்கு. ஆனால் அவங்க தான் என்ன எடுத்து வளர்த்தாங்க. அவங்க சின்னசின்னதா கம்பெனி விஷயத்துல பிராடு பண்ணுவாங்க. அதை தாண்டி அவங்க என்கிட்ட நேரடியா மோதமாட்டாங்கடா அப்படி மோதினா அவங்க நிலைமை என்ன என்று அவங்களுக்கே தெரியும். சரி டா நீ மீட்டிங் போ டயம் ஆகுது.வேற ஏதும் விஷயம் இருந்தால் ஈவினிங் வீட்டுக்கு வரும் போது சொல்லு. “என்று சொல்லி கார்த்திக்கின் பதிலை எதிர்பார்க்காமல் தனது வீட்டில் உள்ள ஜிம் அறைக்குள் சென்று கதவை சாற்றினான்.
அவன் செல்வதை பார்திருந்த கார்த்திக், “இவன் பழைய மாதிரி மாறினா நன்றாகஇருக்கும்.”என்று நினைத்துவிட்டு. அங்கு நின்ற வேலைக்காரன் முத்துவிடம், “விஷ்ணுவ பார்த்துக்கோங்க அண்ணா.“என்று சொல்லி காரை எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு சென்றிருந்தான்.
ஆறடிஉயரமும்,வெள்ளை தேகமும், அடர்ந்த தாடியும் கம்பீரமான தோற்றமும் உடையவனே விஷ்ணு. வி. ஏ கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியின் சி.இ.ஓ.அவன் பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே அவனது தாய் செல்வியும் அவனது தந்தை ராஜாவும் அவர்களது கம்பெனியில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் மாட்டி இறந்திருந்தனர். அதன் பின்னரே விஷ்ணுவின் தந்தையின் நண்பரான கந்தசாமி விஸ்ணுவை எடுத்து அவரது மகனான ரகுவுடன் சேர்த்து வளர்த்திருந்தார். அந்த நன்றிக்காகவே அவர்கள் இவனிடத்தில் பணவிஷயத்தில் மோசடி செய்தாலும் இவன் கண்டுகொள்வதில்லை.பணம் தானே போனால் திருப்ப உழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தான். ஆனால் அவன் அறியவில்லை அவர்கள் அவனை வீழ்த்த பல திட்டங்கள் போட்டு செயற்படுத்தியதை.
விஷ்ணுவின் ஆருயிர் நண்பன்தான் கார்த்திக். நேர்மை, நியாயம் என்ற கொள்கைகள் உடையவன். யாரையும் ஏமாற்றி வாழக்கூடாது என்பதில் உறுதியாக நிற்ப்பவன்.அம்மா, அப்பா என்ற உறவுகளே யார் என்று அறியாது தன்னந்தனியே ஆச்சிரமத்தில் வளர்ந்தவன்.காலேஜ் நாட்களியே விஷ்ணு மற்றும் கார்த்திக்கின் நட்பு பயணம் தொடங்கியது. அதன் பின்னரே இருவரும் இணைந்து, விஷ்ணுவின் அம்மா அப்பாவின் இறப்பின் பின்னர் வீழ்ச்சி அடைந்த அவர்களின் கம்பெனியை மீட்டு இன்று டாப் பைவ் பொசிஷனில் நிறுத்திஇருந்தனர்.அதன் பின் சில மாதங்கள் முன்பு விஷ்ணுவின் வாழ்வில் நடந்த இழப்புக்கள் அவன் வாழ்வை புரட்டி போட்டிருந்தது. அவனின் செயல்கள் , எண்ணங்கள் அனைத்தும் மாறியிருந்தது.இன்று வரை அந்த ரணங்கள் தந்த வலியில் இருந்து மீள முடியாமல் விஷ்ணுவும்,அவனை பழையபடி மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவனது நண்பர்கள் இருவரும் தங்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.
இதே வேளையில் வாசுகியின் வீட்டில், காலேஜ் செல்ல ஆயத்தம் ஆன சான்யாவும், பள்ளி செல்ல ஆயத்தம் ஆன சரணும் ஒருங்கே வெளியே வர அங்கு நின்றிருந்த வாசுகியோ, “இந்த எருமைமாடுகளிற்கு படிப்பு ஒன்றுதான் குறை.இதெல்லாம் விட்டுட்டு வேலைக்கு போனாலாச்சும் வீட்டு செலவுக்கு பணம் கிடைக்கும். நானே எத்தனை நாள் உழைக்குறது. வீடு வீடா போய் பாத்திரம் கழுவியே என் இடுப்பெலும்பு உடைய போகுது.சான்யா எத்தனை தரம் சொல்லிருக்கன் என்கூட வேலைக்கு வா என்று.“என்று புலம்ப இதை கேட்டு கொண்டிருந்த சரணோ, “ஏன்?சான்யா அக்கா தானா உங்க கூட வேலைக்கு வரணும்?சௌமியா அக்கா வீட்ட சும்மா தானே இருக்காங்க அவங்கள கூட்டிட்டு போகலாமே!”என்றான்.
இதை கேட்ட சான்யாவோ, “சரண் சும்மா இருடா கொஞ்சம்.”என்று சொல்லிக்ககொண்டிருக்கும் போதே சௌமியா, “அம்மா உங்களையே எதிர்த்து பேசுறான் பாத்தீங்களா? என்னடி உன்னால பேச முடியல என்று உன் தம்பியை பேச வச்சு பாக்குறியா? “என்று கத்த, வாசுகியோ, “உன்ன எல்லாம் சோறு போட்டு வளர்க்குறேன் பாரு என்ன சொல்லணும். நன்றிகெட்ட ஜென்மங்கள். “ என்று திட்ட சான்யாவோ, “மன்னிச்சிடுங்க பெரியம்மா, சௌமியா அக்கா அவன் தெரியாம பேசிட்டான்.அவன்ட நான் சொல்லி புரியவைக்குறேன்.“என்று சொல்லி விட்டு இதற்கு மேல் அங்கு நின்றால் சரண் அவளுக்காக அவர்களிடம் சண்டையிடுவான் என்று அறிந்த சான்யா சரணின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றாள். இதனை பார்த்த சௌமியாவோ, “உனக்காக பேச அவன் இருக்கான் என்ற தைரியத்தில்தானே நீ இருக்க? பார்ப்பம் எத்தனை நாட்களுக்கு இதெல்லாம் என்று. “சொன்னவளிற்கு சான்யா மேல் கடுப்பாக இருந்தது. வாசுகியோ, “திருப்ப வீட்டுக்கு தானே வரணும்,வாங்க உங்க இரண்டு பேரையும் பட்டினி போடுறேன். அப்போதான் திமிர் அடங்கும்.”என்றாள்.
இதெல்லாம் வீட்டில் வாசலின் வழியே வெளியேறி பஸ்ஸ்டாண்டை நோக்கி சென்றுகொண்டிருந்த சான்யா மற்றும் சரணின் காதுகளில் தெளிவாக கேட்டது. சரணோ, “அக்கா அப்போ நம்ம இன்றைக்கும் பட்டினிதான் போல!”என்று சொல்லி சத்தமாக சிரித்தான். சான்யாவோ, “எத்தனை தரம் உன்கிட்ட சொல்லிருக்கன் அவங்கள எதிர்த்து பேசாத என்று. கொஞ்சம் கூட பொறுமை இல்லைடா உனக்கு.“என்று சொல்ல, “சரி சரி விடு அக்கா இதெல்லாம் வழமையா நடக்குறது தானே.இப்போ நம்ம சாப்பாட்டுக்கு என்ன பண்றது என்று யோசிக்கணும்.நமக்கு சோறு முக்கியம்.“ என்று சொல்லி சான்யாவின் தலையில் செல்லமாக அடித்தான்.
அப்போதும் சான்யா அவன் மீது கோபமாகவே இருப்பது போல் பாவனை செய்ய, “ஓ!மேடம் என்மேல கோவமா இருக்கீங்க போல,”என்று சொல்லி அவன் தனது முகத்தை சோகமாக வைத்தபடியே வந்து பஸ்ஸ்டாண்டை அடைந்தனர் இருவரும். அவன் சோகமாக இருப்பதையும், அவளிடம் எதுவும் பேசாமல் இருப்பதையும் பார்த்த சான்யா அவன் அருகில் சென்று அவனின் தலையை கோதியபடி, “எனக்கு கோவம் எல்லாம் இல்லை. இப்படி முகத்தை வைக்காத பார்க்க சகிக்கவில்லை.“ என்றாள் சிரித்தபடி. அவனும் சிரித்துவிட்டு அங்கு நின்று அவளுடன் விளையாடிக்கொண்டிருந்த நேரம் அவர்களிற்கான பஸ்சும் அங்கு வந்து சேர அதில் ஏறி அவரவர் இடங்களை நோக்கி பயணித்தனர்.
சான்யாவையும், சரணையும் வசைபாடிய படியே வீட்டுவேலைக்கு புறப்பட ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார் வாசுகி. சௌமியாவோ, அறையினுள் இருந்து பாட்டு கேட்டுக்கொண்டிருக்க,“வாசுகிஅக்கா,“என்று அழைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ருக்மணி.ஹாலில் நின்று தலைவாரிகொண்டிருந்த வாசுகி ருக்மணியை பார்த்து, “வாடி ருக்மணி எங்கபோயிருந்த? மார்க்கெட் போகும்போது பார்த்தன் வீடு பூட்டியிருந்துச்சு மூணுநாளா? “ என்று வினவ, “ அக்கா உனக்கும் தெரியும் தானே நம்ம செய்ற தொழில் அப்படி அப்பப்போ போலீஸ் ஸ்டேஷன் போய் அவங்கள கரெக்ட் பண்ணினாதான் நம்ம வாழமுடியும். இந்த முறை பொட்டலம் கொண்டுபோன பொண்ணு போலீஸ்கிட்ட மாட்டிக்கிச்சு. புடிச்ச போலீஸ்காரன் நீதி, நேர்மைனு பேசிட்டு இருந்தான். அவனை சமாளிச்சு பொண்ணயும் வெளிய எடுத்து சரக்கையும் காப்பாத்தி எடுக்க மூணு நாள் ஆச்சு அக்கா “என்று சொல்லி முடித்தாள் அவள்.
போதைப்பொருள் வியாபாரம் மட்டுமல்லாது பெண்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு விலைமாதுதான் இந்த ருக்மணி.அம்மணிக்கு பெரிய இடத்து சகவாசங்கள் இருக்க போலீசிடம் சிக்கினாலும் இலகுவில் தப்பித்துவிடுவாள்.அவளது சகவாசங்கள் மற்றும் அடியாள் பலத்தின் காரணமாவே அவள் வெளியில் சுதந்திரமாக நடமாடினாள்.இது அரசல் புரசலாக வாசுகிக்கு தெரிந்தாலும் அவசர தேவைக்கு அவள் கையெந்துவது ருக்மணியிடம் என்பதால் அவள் அதெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.
இந்த நேரத்தில் வீட்டினுள் சடுதியாக நுழைந்த ஒரு கும்பல், “என்ன வாசுகி வட்டி பணமும் வரல அசலும் வரல, இப்போ பணத்த கொடுக்குறியா இல்ல.. “ என்று சொன்னபடி சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்து கதவில் அதிர்ந்தபடி நின்ற சௌமியாவை பார்க்க, அவனின் பார்வை அறிந்த வாசுகி ஓடிச்சென்று சௌமியாவின் முன்னே நின்று கொண்டு, “தம்பி உங்க பணத்த நான் எப்படியாவது தந்துர்றன்.” என்றப்படி கையை கூப்பினார். அவனோ, “ ஏம்மா உனக்கும் இவ்வளவு நாள் பணம் வாங்காம விட்டுவச்சதே தப்பு.மாசத்துக்குரிய வட்டியும் கட்டுறதில்லை வட்டி குட்டி போட்டு மொத்த பணம் அறுபதாயிரம் ரூபாய்.இன்னும் மூணு நாள் தான் டயிம் அதுக்குள்ள பணத்த குடுத்துடனும் இல்ல..... “ என்றபடி எட்டி சௌமியாவை பார்த்தவன், வாசுகியிடம், “ புரியும் எண்டு நினைக்குறேன்.” என்றப்படி வெளியேறிருந்தான்.
தலையை பிடித்தபடி அமர்ந்த வாசுகியோ,”கடவுளே! இப்போ நான் என்ன செய்வன்?நான் வீடுவீடாய் போய் பத்துபாத்திரம் தேய்த்து வாற பணமே ஒருநாளைக்கு ஐநூறுரூபாய் தான். அதை வைத்து எப்படி இந்த கடனை அடைப்பேன்?வாங்குன பணத்தை விட வட்டிபணம் அதிகமா சொல்றானுகளே பாவி பயலுகள். இப்போ என் பொண்ண வைத்து வேற மிரட்டுறானுகள்.”என்றப்படி அழதொடங்கிவிட்டார்.அவர் அழுவதை பார்த்த ருக்மணி,”அக்கா! அழாதீங்க பார்த்துத்துக்கலாம். “என்றாள்.
சட்டென்று யோசனை வந்தவளாக ருக்மணியை பார்த்த வாசுகி , “ எனக்கு கொஞ்சம் பணம் தந்து உதவி செய் ருக்மணி என் மகள்ட வாழ்க்கையை காப்பாத்துடி,எனக்கு அவனுகள் சொல்றத பார்த்தா பயமா இருக்கு “என்று இறைஞ்சி கேட்டாள்.ருக்மணியோ,”பணம் கொடுக்குறதுல பிரச்சனை இல்லை அக்கா. ஆனால் இந்த மூணு நாள்ல, போலீஸ்க்கு, மற்ற செலவு என்று இருந்த பணம் எல்லாமே செலவாகிட்டு. இப்போ கையில பணம் இல்லை அக்கா.”என்க, தன் நலத்தையும், தனது மகளின் நலத்தையும் மட்டுமே உயர்வாக எண்ணிய வாசுகி தனது கொடூரகுணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். “இங்க பாரு ருக்மணி நீ எனக்கு சும்மா ஒன்றும் பணம் தர தேவை இல்லை. உன் தொழில்ல சான்யாவையும் சேர்த்துக்கோ.அது மூலமா வாற பணத்துல உன் கடனை கழித்துக்கோ.”என்று சாதாரணமாக சொன்ன வாசுகியை புரியாமல் பார்த்தாள் ருக்மணி.