ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 24

🌟தலையணைகள் கோவித்து கொள்ளும்
உனை அணைத்து
நான் தூங்க...
தாயின் மடி இனி எனக்கு
மறந்துவிடும் நீ இருக்க..
யாரடா கண்ணா
உன்னை செய்தான்
உயிர் தந்து என்னை
பழியை தீர்த்தான்🌟

பிரகதியை காணாது ஒரு நொடி அதிர்ந்தவன் வாசல் பக்கம் தன் பார்வையை திருப்ப, கதவோ உள் புறமாக தாங்கள் பூட்டிய படி அப்படியே தான் இருந்தது. குமார் அண்ணா கொறட்டை சத்தத்தில் தன் அறைக்கே சென்று விட்டாளா? என்ற சிந்தனையில் அவள் அறையை பார்க்க அவள் அறை கதவு வெளிப்புறமாக பூட்டி இருந்தது.
அவன் மனம் இப்போது சற்று பதப்பதைத்து, சிறு பயம் கூட வந்து ஒட்டிக் கொண்டது. யாரேனும் பிரகதியை தூக்கி சென்று விட்டார்களா? அது நிகழ சாத்தியம் இல்லை என்று அறிந்தாலும் காதல் கொண்ட மனதோ ஒரு நொடி தன் செயலை நிறுத்தி காவலனாக அன்றி காதலனாக தன் நினைவலைகளை எண்ணி பயம் கொண்டது.

பின் தன்னை சமன் செய்து கொண்டவன் ஒரு நிமிடம் தன் கண்களை மூடி தன் பதட்டத்தை குறைத்து தெளிவாக யோசிக்க தொடங்கினான். அந்த வரவேற்பறை முழுவதும் அலசியவன் கண்கள் ஓர் இடத்தில் அப்படியே நிற்க, அங்கு அவன் கண்ட காட்சி அவன் இதழ்களில் புன்னகையை தான் வரவழைத்தது.

அவள் படுக்கையை விட்டு சற்று தள்ளி இருந்த சோபவில் தலையை முட்டிக் கொண்டு தூக்கத்திலேயே தன் கைகளால் அதை வளைத்து பிடிக்க முயன்று தோற்று போய் அதன் மேலே தன் ஒரு கையை போட்ட படி உறங்கி கொண்டிருந்தாள் பிரகதி.
எப்போதும் தலையணையை கட்டி கொண்டு தூங்கிய பழக்கம். அதன் நினைவில் சோபாவை கட்டி கொண்டிருந்தாள்.

இதை கண்டவன் சில வினாடிகள் முன் தான் பயம் கொண்டதை எண்ணி தன் கையை தலைக்கு முட்டுக் கொடுத்து அவளின் குழந்தை முகத்தை பார்த்து இதழ் மூடி சிரித்துக் கொண்டிருந்தான்.
அவளை நெருங்கி "பிரகதி" என்று அழைக்க, ம்ஹும்.. அவள் அசைந்த பாடில்லை. இடியே விழுந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று தூங்கி கொண்டிருந்தாள். அவளை எழுப்பும் தன் முயற்சியை கைவிட்டு, அவன் தன் கைகளில் அவளை தூக்கி கொள்ள, அவன் மார்பில் சாய்ந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

அவள் படுக்கையில் அவளை கிடத்தி போர்வையால் போர்த்தியவன் தன் இடத்தில் படுத்து தூங்கி போனான்.
அதிகாலையில் எப்போதும் போல் 5.30 மணிக்கே விழிப்பு தட்ட, தன்னை ஏதோ ஒன்று அழுத்தும் உணர்வில் தன் பக்கவாட்டில் தலையை தாழ்த்தி பார்க்க, பிரகதி தான் அவன் மார்பில் புதைந்து அவனை கட்டிக் கொண்டிருந்தாள்.

இரவு நேர மின் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் தன்னை பஞ்சனையாக நினைத்து தன் மேல் மொத்தமாக சரிந்திருக்கும் தன் காதலியின் அழகு முகம் மிக அருகில் அவனை இம்சிக்க,

🌟ஹே பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய் !
நீ அருகில்
புரியாத மாயம் செய்கிறாய்!🌟

என்று யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் குரல் மனதில் ஒலிக்க, தன் தாபத்தை தட்டி கழிக்கும் வழி அறியாது அவள் அதரங்களை நெருங்கியவன், பின் இது தவறு என்று மண்டைக்குள் மணியடிக்க அவள் உச்சந்தலையில் அழுத்தமாக தன் அதரங்களை பதித்து நிமிர்ந்தான்.

மெல்லிய புன்னகையோடு அவ னும் அவளை அணைத்து கொள்ள, அப்போது தான் ஹாலில் படுத்திருப்பது நியாபகம் வந்தது. கூடவே குமார் அண்ணா நினைவும் வந்து, தன் செயலை எண்ணி முகம் சுருக்கியவன் அவர் படுத்திருந்த திசையை பார்க்க, நல்ல வேலை குமார் அண்ணா இல்லை. எப்போதோ எழுந்து சென்று விட்டார் போல, நிம்மதி பெருமூச்சு விட்டு இதுக்கு மேல இங்க இருப்பது சரியில்லை என்று அவள் தலையை மெதுவாக தலையணையில் வைத்து விட்டு அவளிடம் இருந்து விலகி எழுந்தவன் அவள் கட்டிக் கொள்ள இன்னொரு தலையணையை அவள் கை வளைவில் வைத்து விட்டு தன் அன்றாட வேலையை பார்க்க சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் கண் விழித்த பிரகதி, ஹாலில் மங்கலான வெளிச்சம் தாண்டி சமையல் அறையில் போடப் பட்டிருந்த விளக்கின் வெளிச்சம் அதன் வாசல் நேர் ஹாலிலும் சிறிது ஒளியை பரப்பிக் கொண்டிருக்க, குமார் அண்ணா கிச்சனில் தான் இருப்பர் என்று எழுந்து கிச்சனுக்கு சென்றவள் அங்கு குமார் அண்ணாவுக்கு "குட் மார்னிங் குமார் அண்ணா" என்று உற்சாக குரலில் கூற அவரும் "குட் மார்னிங் பாப்பா" என்று அதே உற்சாகத்தில் கூறினார்.

மூன்று கோப்பைகளில் தேநீரை ஊற்றியவர் ஒன்றை அவளிடம் கொடுத்து விட்டு வெளியேற எத்தனிக்க, "இது யாருக்கு?" என்று விடை தெரிந்தே கேள்வி கேட்டாள். "தம்பிக்கு தான் பாப்பா" அவர் கூறிய அடுத்த நொடி காபி டிரையை தன் கையில் வாங்கி கொண்டவள் "நானே கொண்டு போய் கொடுக்கிறேன்" என்று செல்ல,
குமார் அண்ணா "தம்பி வெளிய தான் தோட்டத்துல யோக பண்ணிட்டு இருக்கும்" என்று கூடுதல் தகவல் ஒன்றையும் கொடுத்தார்.

வரண்டாவில் வலது பக்க மூலையில் கிழக்கு திசை பார்த்து இமை மூடி கைகள் இரண்டையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி தன் ஒரு காலை மடக்கி ஒற்றை காலில் நின்று சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான் நிரஞ்சன்.

சூரியனின் செந்நிற கதிர்கள் மேனியில் படுமாறு அவன் நின்றிருந்த வதனத்தில் தன்னிலை மறந்து இமைக்க கூட மறந்து போன விழிகளில் அவளவனை நிரப்பி கொண்டிருந்தாள் பிரகதி.

அடர் நீல நிறத்தில் டிராக் ஷூட் அணிந்திருந்தான். எப்போதும் ஒட்ட வெட்டிய போலீஸ் கட் தலை விடுமுறையின் காரணமாக வெட்டுவதற்கு அவசியமின்றி நன்கு வளர்ந்து இருந்தது. உடற்பயிற்சியின் காரணமாக கட்டுக்குள் இருந்த உடம்பும், திமிறேரிய புஜங்களும் என முழு தீர ஆண் மகனாக இருந்தான். அடர்ந்த புருவங்கள், எப்போதும் தன்னை கட்டி போடும் விழிகள், கூர் நாசி, சிரிக்கும் போதெல்லாம் அவளை வசியம் செய்யும் உதடுகள், ஆனால் இப்போது அழுந்த மூடி இருந்த அந்த அதரங்களை கடித்து சுவைக்க தோன்றிய ஆசையை புறம் தள்ள அவள் மனமோ அவளிடம் இல்லையே.

அவன் ஆண்மையில் தன்னை மறந்து மெல்லிய காலடிகளோடு அவன் அருகில் சென்றவள் பக்கத்திலிருந்த மூங்கில் நாற்காலி முன் போட பட்டிருந்த குட்டி மேஜையில் கையில் வைத்திருந்த காபி டிரேயை வைத்து விட்டு, அருகில் இருந்த குட்டி முக்காலியை இழுத்து போட்டு அதில் ஏறி அவன் உயரத்திற்கு வளர்ந்து நின்றவள், தன் கையை அவன் கன்னம் அருகே கொண்டு சென்று 'அழகன் டா' என்று இவள் தலையை ஆட்டிக் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவன் கண் திறந்திருந்தாள் இதற்கெல்லாம் அவளுக்கு எங்கே தைரியம் இருக்கிறது. அவன் மீது பயம் இல்லை என்றாலும், பெண்மைக்கான தயக்கம் அவனை நெருங்க அனுமதித்ததில்லையே! அவன் விழி மூடி நிற்கும் தைரியத்தில் கொஞ்சம் ஆட்டம் அதிகமாக தான் இருந்தது.

அவனது இறுக்கமாக மூடியிருந்த உதடுகள் என்னை மறந்து விட்டாயா? என்று கேட்க, பின்னால் திரும்பி குமார் அண்ணா வருகிறாரா? என்று பார்த்து விட்டு திரும்பியவள் இதழ்கள் இரண்டும் சிறையானது காவலன் அவனின் முரட்டு இதழ்களுக்குள்.

அவள் பின்னால் திரும்பி பார்த்து விட்டு திரும்பும் முன், அவள் பின் தலையில் கை வைத்து தன் முன் இழுத்தவன், அவள் இதழ்களில் தன் இதழை அழுத்தி விடுவித்தான்.

எதிர் பாராத இந்த தாக்குதலில் விழி விரித்து அதிர்ந்து நின்றவளின் கோலம் மனதில் சிரிப்பை மூட்ட "குட் மார்னிங்" என்று கண் சிமிட்டி கூறியவன், அவள் கொண்டு வந்த தேநீர் கோப்பையை எடுத்து கொண்டு மர்ம புன்னகையுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

பாவம் அவனும் என்ன தான் செய்வான்? அதிகாலை உறக்கத்தில் தன்னை இம்சித்தது பத்தாது என்று இங்கும் வந்து தன்னை சோதித்தால்? இதோடு விட்டதே பெரிய விசயம்.

காற்றில் கன்னத்தை கிள்ளி கொஞ்சியது போல் காற்றிலே அவன் உதட்டை வழித்து முத்த மிட நினைத்து அவள் குமார் அண்ணா வருகிறாரா? என்று பார்க்க, இங்கு நடந்த நிகழ்வில் உறைந்து நின்றவள் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை.
அவளுக்கான தேநீர் ஆரி போக சூடாக்கி வேறு எடுத்து வந்து அவளை தேடிய குமாருக்கு, அங்கு முக்காலியின் மீது ஏறி உறைந்த நிலையில் நின்றிருந்தவளின் திருவுருவமே காண கிடைத்தது.

அவள் அருகில் வந்த குமார் அண்ணா அவள் பெயரை கூறி கத்தி அழைக்க, அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் அவரை பார்த்தாள்.

"என்னாச்சி பாப்பா? ஏன் இப்படி மந்திரிச்சி விட்ட மாதிரி நிற்கிற? இந்தா டீ குடி" என்று அழைத்து சென்றார்.
நிரஞ்சன் முகம் காண அவஸ்தையாக வெட்கம் பிடுங்கித் தின்க, அவனை இப்போது எதிர் கொள்ளும் சக்த்தியும் அவளிடம் இல்லை. அவளின் நல்ல நேரமோ என்னவோ அவன் ஹாலில் இல்லை. அதுவே சிறிது இதய துடிப்பை சீராக்கியது.

எப்போதும் போல் குமார் அண்ணாவுடன் கதையளந்து விட்டு தன் தேநீர் கோப்பையுடன் சேர்த்து சில நொறுக்கு தீனிகளையும் அள்ளிக் கொண்டு ஹாலில் சோபாவில ஏறி காலை மடக்கி அமர்ந்து அதை கொரித்தவாறே தொலைகாட்சியில் மூழ்கி விட்டாள்.

🌟பிரச்சனை கொடுக்க வந்துருக்கோம் நாங்க..
முயற்சி பண்ணா
தோத்து போவிங்க நீங்க..
உலகத்தை காப்பாத்துறது
மட்டும் தான்
எங்க லட்சியம்...
அதுல காட்டமாட்டோம்
என்னைக்கும் அலட்சியம்..
எங்க குறிக்கோள்ல
ஜெயிச்சு காட்டுவோம்..
பேர் புகழோடு
அந்த விண்ணையும் எட்டுவோம்..
ஜெஸி.. ஜெயின்..
டீம் ராக்கெட் வேகத்துக்கு
ஈடு இணையே இல்லை..
சரணடைஞ்சிடிங்கனா
உங்களுக்கு நாங்க
கொடுக்க மாட்டோம் தொல்லை..
பாப்பாவ்வ்...🌟


"என்ன பார்த்துட்டு இருக்க?" டிவியில் ஓடிக் கொண்டிருந்த கார்ட்டூனை பார்த்து கேட்டான் நிரஞ்சன். தன் தலைக்கு பின்னால் கேட்ட குரலில் கண்கள் சுருங்க தன் குழந்தை தனம் மாறாத சிரிப்பை காட்டியவள், அவன் தன் அருகில் வந்து அமர்ந்ததும் சோபாவில் ஒழுங்காக அமர்ந்து நியூஸ் சேனல் மாற்றி வைத்து ரிமோட்டை அவனிடம் கொடுத்து விட்டு, நல்ல பிள்ளை போல் டீ யை குடிக்க தொடங்கினாள்.

அவளின் இந்த திடீர் மாறுதலை புரிந்துக் கொண்டவன். ரிட்டர்ன் பட்டன் அழுத்தி அவள் இதற்கு முன் பார்த்துக் கொண்டிருந்த சேனல் மாற்றி அவளுடன் சேர்ந்து தானும் அதை பார்க்க ஆரம்பித்தான்.

அதில் திகைத்து சட்டென்று அவன் புறம் திரும்பி அவனை அவள் வியந்து பார்க்க, "உனக்கு பிடிச்சத பாரு" என்று மெல்லிய புன்னகையுடன் அனுமதி வழங்கியவன், "இது என்ன சீரிஸ்?" என்று அதை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
இவற்றை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது இனி வரும் காலங்களில் அவனுக்கு நல்லது தானே. அவளுடன் அவளுக்கு பிடித்ததை பார்க்க ஆரம்பித்த பிறகு கதையின் கரு தெரியாமல் பார்த்தால் எதுவும் புரியாதே.

நிரஞ்சன் கேட்டதும் உற்சாகமாக அதை பற்றி விளக்க ஆரம்பித்திருந்தாள் பிரகதி. இது பேரு போகிமான் (Pokemon) என்று ஆரம்பித்து அதில் அவளுக்கு மியாவ் தான் பிடிக்கும் என்றும் தன் தங்கைக்கு பிகசு பிடிக்கும் என்றும் கூறி முடித்தாள்.
அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் அவன் விளக்கம் கேட்க, அவளும் சலிக்காமல் அதைப் பற்றி கூறினாள். இதை பார்ப்பது அவனுக்கு சற்று போர் அடித்தாலும் அவளின் சந்தோசத்தை ரசித்தவாறே அதை சிறு சிரமத்துடனே பார்த்தான்.

அன்றைய காலை பொழுது அவ்வாறே கழிய, மதியம் பிரகதி தன் வீட்டிற்கு தொடர்பு கொண்டு தன் தாய் தந்தையின் நலனை விசாரித்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் தாய் இராஜேஸ்வரி "குட்டிமா.. நல்லா இருக்கியா? ஏன் இவ்வளவு நாள் போன் பண்ணல? உடம்பு ஏதும் சரியில்லையாடா?" என்று அவள் மேல் கொண்ட பாசத்தில் அக்கறையாக வினவ,

"நான் நல்லா இருக்கேன் ம்மா. டிரெய்னிங் கொஞ்சம் அதிகமா இருக்கு. அதான் கால் பண்ண முடியல நீங்க அப்பா எல்லாரும் எப்படி இருகிங்க?"

"எல்லாரும் நல்லா இருக்கோம் குட்டிமா. நேத்து அம்மு கால் பண்ண போது அவளுக்கும் நீ கால் பண்ணி பேசலனு வருத்த பட்டா, உனக்கு டைம் கிடைக்கும் போது அவளுக்கும் கால் பண்ணி பேசு" என்று அவர் பிரகதி தங்கையை நினைவு படுத்த, கூடவே பிரகதி செய்த தவறும்அவள் நினைவில் வந்து, அவளை வாட்டியது. அதை தன் குரலில் காட்டாத,
தனது தந்தை மாணிக்க வேலிடமும் ஒரு சில வார்த்தைகள் பேசியவள், குமார் அண்ணாவின் பெண் தேடும் படலத்தை பற்றி தன் தாயிடம் கூறி அவரின் உதவியை நாடினாள்.

அவரும் மென்னகையுடன் அதற்கான முயற்சியில் தான் ஈடுபடுவதாக கூறினார்.
சில பல செல்ல சண்டைகள் குட்டி கோபங்கள் கெஞ்சகள் என பேசி முடித்தவளின் இதயம் இப்போது நிரஞ்சன் விசயத்தில் தான் செய்தது எண்ணி தவித்து கொண்டிருந்தாள். இத்தனை நாட்கள் அந்த நினைவே அவள் மனதில் தோன்றவில்லையே!
ஆனால் இன்று மறக்க நினைத்தவைகள் யாவும் வரிசையாக அவள் மூளையை ஆக்கிரமித்து அவள் நிம்மதியை குலைந்தது.
எல்லாவற்றிற்க்கும் மேலாக அவள் தான் அவனின் துரதிஷ்ட வசமான நிகழ்விற்கு காரணம் என்பதை மறைத்து அவனை ஏமாற்றி கொண்டிருப்பதாக என்ற அவள் எண்ணமே ஆயுதம் ஏதுமின்றி கொன்றது.

"அவனிடம் எல்லா உண்மைகளையும் கூறி விடட்டுமா?" என்று கேட்ட மனதின் கேள்விக்கு,


'நான் கூறி அவர் என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டால்?' இன்னொரு மனம் பதைக்க, அந்த சிந்தனையே கண்களை கரிக்க செய்தது.

'இது சரியல்ல இப்போது மறைக்கும் விடயங்கள் யாவும் என்றோ ஒரு நாள் வேறு யார் மூலமாகவோ தெரிந்தால்? அப்போது இதை விட அதிகமான இரணங்களை சுமக்க வேண்டி வரும்.
எதுவாயினும் சரி அவரிடம் கூறி விடுவது தான் சரி' என்று தனக்குள்ளே ஒரு பட்டிமன்றத்தை நடத்தி இறுதி முடிவு எடுத்தவள் கண்களில் மட்டும் நீர் நிற்கவில்லை.

அப்பா அம்மாவிடம் பேசி விட்டு வருவதாக கூறி சென்றவள் ஏதோ யோசித்து அழுது கொண்டிருந்ததை பார்த்து அவள் அருகில் வந்தான் நிரஞ்சன்.

அவன் அறியவில்லை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கும் அவன் அறிந்த உண்மையை அவனிடம் கூறுவாளா????
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer

அத்தியாயம் : 25
நிரஞ்சன் பிரகதி அருகில் வந்து "என்னாச்சி?" என்று அவள் வாடிய முகத்தை பார்த்து கனிவாக கேட்க, மூக்கை உறிஞ்சி "ஒண்ணும் இல்ல. அம்மா அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்" என்று அவள் அழுது கொண்டே கூற, அவனும் "இன்னும் கொஞ்ச நாள்ல டிரெய்னிங் முடிஞ்சிரும் அப்புறம் போய் பாக்கலாம்" என்று அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.
அந்த கசப்பான உண்மையை கூறி இப்போது இருக்கும் மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. நேரம் பார்த்து பிறகு பொறுமையாக தன் சூழ்நிலையை விவரித்து கூறலாம் என்று அரை மனதுடன் அதை மறைக்க நினைத்தாள்.
நிரஞ்சன் வீட்டிற்கு வந்த வருண் வாசலின் இருபுறமும் இருந்த எலுமிச்சை பழத்தை யோசனையோடு பார்த்த படி கையில் எடுத்தவன், "இத யாரு இங்க வச்சாங்க? குமார் அண்ணா கிட்ட கொடுத்து ஜூஸ் போட சொல்லலாம்" என்று நினைத்தபடி வீட்டிற்குள் வந்தவன் குமார் அண்ணாவிடம் "அண்ணா இந்த எலுமிச்ச பழத்துல சீக்கிரம் ஒரு ஜுஸ் போட்டு கொண்டு வாங்க, போங்க" என்று அவரை விரட்ட,
அவர் அப்போது தான் வருண் கையில் இருந்ததை பார்த்தார். "அய்யோ இத ஏன் தம்பி எடுத்துட்டு வந்தீங்க?" என்று குமார் அண்ணா வருண் ஏதோ வெடிகுண்டை கையில் வைத்திருப்பது போல் பதட்டமாக கேட்க, "ஏன் என்னாச்சி?" என்று அவரின் பதட்டம் புரியாமல் சாதாரணமாக கேட்டான் வருண்.
நிரஞ்சனும் வருண் கையில் இருந்ததை பார்த்து சிறிது அதிர்ச்சியுடனே "இத ஏன் டா இப்போ எடுத்துட்டு வந்த?" என்று கேட்ட படியே அவனை நெருங்கி வந்தான்.
"ஒரு சாதாரண எலுமிச்ச பழத்துக்கு இப்போ ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு சீன் போடுறீங்க?"
"சாதாரண எலுமிச்ச பழம் இல்ல. இது பிரகதி பாப்பா வச்சது" என்று அவர் சற்று பீதியுடன் கூற, வருண் அவரை ஒரு அசால்ட்டான பார்வை பார்க்க, வருண் தாடையை பிடித்து தன் புறம் திருப்பிய நிரஞ்சன் "தயவுசெய்து எங்க இருந்து எடுத்தியோ? அங்கேயே கொண்டு வச்சிரு டா, இல்லனா வெளிய போன பேய் உன்னால உள்ள வந்துடுச்சினு சொல்லுவா" என்று இரண்டு நாட்களாக அவள் செயலில் நொந்து சொன்னான்.
"எலுமிச்ச பழத்துக்கும் பேய்க்கும் என்ன டா சம்பந்தம்?" வருண் புரியாமல் கேட்க, நிரஞ்சன் பிரகதி பேய் விரட்ட இதை வைத்ததை பற்றி கூறினான்.
அவன் கூறி முடிக்க "அய்யய்யோ! எனக்கு லெமன் ஜுஸ் இல்லனாலும் பரவாயில்ல, அவளோட அந்த பேய் கதையைலாம் கேட்க முடியாது" என்று பதறியவன் ஒரே ஓட்டமாக ஓடி வந்து வாசலில் வைத்து விட்டே உள்ளே வந்தான்.
அவன் உள்ளே வர, பிரகதியும் அவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.
"வருண் அண்ணா வந்துட்டிங்களா? உங்களுக்காக தான் வெயிட் பண்ணேன்" பிரகதி உற்சாகமாக கூற, 'இந்த குட்டி தக்காளி நமக்காக எதுக்கு வெயிட் பண்றா?' யோசனையாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அடுத்து கூறியதை கேட்டு பதறி விட்டான்.
"இன்னைக்கு குமார் அண்ணாவுக்கு லீவ். நான் தான் சமைக்க போறேன்" இதை கேட்டு ஆண்கள் மூவரும் 'எத? இவ சமைக்க போறளா?' என்று குரூப் மைண்ட் வாய்ஸ்சில் ஒரு சேர "வேணா....." என்று கத்தினர்.
அவர்கள் மூன்று பேரும் ஒரு சேர கத்தியத்தில் திடுக்கிட்டு போனாலும், அசராமல் "ஏன்? ஏன்? வேண்டா சொல்றீங்க?" என்று கேட்டவளை,
"உனக்கு எதுக்கு அந்த சிரமம். அதான் குமார் அண்ணா இருக்காங்கலே எப்பவும் போல அவரே சமைக்கட்டுமே?" என்று நிரஞ்சன் அனைவரையும் அவள் சமையலில் இருந்து காப்பாற்ற முயன்றான்.வருணும் "ஆமா, உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?" சிரித்து கொண்டே அவள் எண்ணத்தை செயல்படுத்த விடாமல் தடுக்க நினைத்து கூற, அவனின் 'தேவையில்லாத வேலை' என்ற வார்த்தையில் அவனை கண்களால் எரித்து கொண்டிருந்தாள் பிரகதி.அவள் கோபத்தை பார்த்த நிரஞ்சன் குமார் அண்ணாவிடம் கண்களால் கெஞ்ச, அவரும் பிரகதியின் இந்த வீண் முயற்சியை தடுக்க நினைத்தார். ஆனால் அவர்கள் மூன்று பேரின் முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கி, "நான் தான் இன்னைக்கு சமைப்பேன். நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு உதவி செய்யணும்" என்று நிரஞ்சனையும் வருணையும் தன்னுடன் இணைத்துக் கொண்டவள், குமார் அண்ணா கையில் தன் கைபேசியை திணித்து "நீங்க கேம் விளையாடுங்க" என்று கூறி விட்டு கிச்சன் நோக்கி சென்று விட்டாள்.
"உன் வீட்டுக்கு நான் வர்றது பிடிக்கலனா நேரடியா சொல்லிரு டா. இந்த மாதிரி என் உயிரோட விளையாடுற வேலையெல்லாம் வேண்டாம்" என்று வருண் பிரகதி சமைக்க போவதை எண்ணி நிரஞ்சனிடம் குறைபட்டு கொள்ள, நிரஞ்சனோ "சும்மா புலம்பிட்டு இருக்காம வா டா" என்று அவனை இழுத்து சென்றான். வருணும் வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்றான்.பிரகதி சமைக்க நண்பர்கள் இருவரும் கத்தியை கையில் எடுத்து அவள் கொடுத்த வெங்காயத்தையும் தக்காளியையும் வெட்ட ஆரம்பித்தனர். அவள் சமைத்து முடிப்பதற்குள் இவர்களை ஒரு வழி செய்து விட்டாள். "வருண் அண்ணா.. வெங்காயம் பெருசு பெருசா வெட்டாதிங்க, நீள நீளமா வெட்டுங்க" என்று அவள் கூறியது போல் வருணும் வெட்ட, கண்ணீர் ஆறாக ஓட அவள் கொடுத்த அனைத்து வெங்காயத்தையும் வெட்டி முடிக்கும் பொது "அய்யோ.. நீளமா வெட்டிடிங்களா? வதக்க கொஞ்சம் லேட் ஆகுமே! அது நடுவுல ஒரு கோடு போட்ட மாதிரி பாதி பாதியா வெட்டுறிங்களா" என்று ஒவ்வொரு முறையம் ஒவ்வொன்றாக கூற, ஏற்கனவே அவள் சமைக்கிறேன் என்று படுத்துவது பத்தாமல் அவனை வேலை வாங்கியே கொன்றுக் கொண்டிருந்தாள்.
'வீட்ல இருந்தா அம்மா வேலை சொல்லுவாங்கனு தப்பிச்சு ப்ரெண்ட் வீட்டுக்கு வந்தா? இங்க இவ கொலையா கொல்றாலே?' மனதில் புலம்பிக்கொண்டே அவள் கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தான் வருண். பிரகதி நிரஞ்சனையும் சும்மா விட்டு வைக்கவில்லை "மிளகாய் பொடி எங்க இருக்கு? உப்பு எடுத்து கொடுங்க?" என்று அவள் நின்ற இடத்தை விட்டு அசையாமல் எடுத்து கேட்க, நிரஞ்சனுக்கு தன் வீட்டில் கிச்சன் எங்கே இருக்கு? என்று மட்டும் தான் தெரியும். அதில் இதெல்லாம் எங்கே இருக்கிறது என்று கேட்டால்? அவனும் என்ன தான் செய்வான்? பாவம் ஒவ்வொன்றாய் தேடி தேடி அழுத்து போனான்.
இப்படி இருவரையும் வறுத்து எடுத்து செட்டிநாடு சிக்கன் என்ற பெயரில் அவள் பாணியில் ஏதோ ஒரு பதார்த்ததை செய்து முடித்தாள்."மச்சா.. இவ்வளவு வேலை வாங்கிருக்கா, சாப்பாடு மட்டும் வாயில வைக்க முடியாம என்னை பட்டினி போட்டானு வை, இன்னைக்கு உன் ஆளுக்கு சாம்பார் அபிஷேகம் தான்" என்று வருண் தன்னை கண்கள், கைகள் எரியும் அளவிற்கு வெங்காயம், பச்சை மிளகாயை வெட்ட வைத்த கடுப்பில் நண்பனிடம் எச்சரித்து சென்றான்.டைனிங் டேபிளில் அமர்ந்து தங்கள் முன் இருந்த உணவு பொருட்களை சற்று பீதியுடனே பார்த்து கொண்டிருந்தனர் நான்கு பேரும். யார் முதலில் சுவைத்து சோதனை எலியாவது என்ற பயம் தான்.
பிரகதி ஒருமுறை தான் சமைத்த உணவையும் மற்ற மூவரையும் பார்த்தவள் வருணிடம் பார்வையை நிறுத்தி "வருண் அண்ணா நீங்க முதல்ல சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்கு சொல்லுங்க?" என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்க, அவனும் "ஏன்? நீங்களே முதல்ல சாப்பிடலாமே!" என்று சிரித்துக் கொண்டே அவள் போட்ட பாலை அவள் புறமே திருப்பி விட்டான்.
"ஹி.. ஹி.. சில நேரங்கள்ல.. நான் சமைகிறதாலையோ என்னவோ? எவ்வளவு டேஸ்டா இருந்தாலும் எனக்கு பிடிக்கிறது இல்ல" என்று அவள் ஜகா வாங்க, "இந்த எஸ் ஆகுற கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நீ தான் முதல்ல சாப்பிடுற" என்று கூறி கொண்டே அவள் அருகில் வந்த வருண் அவள் மறுக்க மறுக்க கம் போட்டு ஒட்டிக் கொண்டது போல் இறுக்க மூடிக் கொண்ட வாயை நிரஞ்சன் உதவியுடன் பிரித்து சாப்பாட்டை அவள் வாயில் திணித்தான்.
'நீங்களுமா?' என்ற தோனியில் பாவமாக நிரஞ்சனை பார்த்துக் கொண்டே வேறு வழியின்றி மென்று முழுங்கியவள், மெதுவாக தலையை ஆட்டி "நல்ல இருக்கு. நீங்களும் சாப்பிடுங்க" என்று கூற, ஆண்கள் மூவரும் அவளை நம்பாத பார்வை பார்த்தனர்.
வருண் மனதில் 'இது மூஞ்சியே சரி இல்லையே! நல்லா இருக்கா?' என்ற யோசைனையோடு 'நம்மல சாப்பிட வைக்க பொய் சொல்றாளா?' என்று சந்தேகத்துடன் அவளை பார்க்க, மற்ற இருவரையும் கெஞ்சி சாப்பிட சொன்னாள். அவர்களும் அவளுக்காக ஒரு வாய் எடுத்து வைத்த நிரஞ்சன் "நிஜமா நல்லா இருக்கு டா" என்று கூற, அப்போதும் வருண் நம்பவில்லை.'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் மாதிரி இவங்களும் பொய் சொல்றாங்கலா?' என்றே நினைத்தான். ஆனால் அவர்கள் மூவரும் அவன் சாப்பிடுவதற்காக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க "சரி தின்னு தொலைக்கிறேன்" என்று சலித்து கொண்டே சாப்படை எடுத்து வாயில் வைத்தான். பரவாயில்லை, மோசம் என்று சொல்லும் அளவிற்கு இல்ல. ஏதோ ஒரு புதுவித சுவையில் நன்றாக தான் இருந்தது. ஆனால் இதை செட்டிநாடு சிக்கன் என்று சொன்னால் அதை அந்த கோழி கூட நம்பாது.
"பரவாயில்லை தப்பிச்சிட்ட" என்று பிரகதியை பார்த்து கூறிய வருண் அதன் பிறகு யாருக்கும் காத்திருக்காது காலி செய்ய ஆரம்பித்தான். நிரஞ்சனும் குமார் அண்ணாவும் நல்லா இருக்கு என்று அவள் மனம் குளிர பாராட்ட அவளும் புன்னகையுடன் சாப்பிட்டாள்.
மாலை செடிகளுக்கு பிரகதி தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, "என்ன? மதியானத்துக்கு அப்புறம் எந்த என்டர்டைன்மென்டும் இல்லை" என்ற சலிப்புடன் நிரஞ்சனுடன் வெளியே வந்த வருண் கண்ணில் சிக்கினால் பிரகதி..'இவ இருக்கும் போது நமக்கு என்டர்டைன்மென்டுக்கு குறையேது' என்று உற்சாகமாக அவளை அழைத்தான். அதுவும் சாதாரணமாக இல்லை, வானில் ஏதோ அதிசயத்தை பார்த்தது போல் "பிரகதி சீக்கிரம் வா..." என்று கத்தினான்.
அவன் கத்தியதும் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவள் ஓஸை அப்படியே போட்டு விட்டு "என்ன?" என்று அவன் அருகில் ஓடி வந்தாள்.
"அங்க பாரு வெள்ள காக்கா பறக்குது" அவன் மேலே கை நீட்டி கூற அவளும் எங்கே? என்று ஆவலாக பார்த்தாள். பக்கத்தில் நின்றிருந்த நிரஞ்சன் தான் 'ஐய்யோ!' என்று தலையில் அடித்துக் கொண்டான்.
பிரகதி ஆவலாக தேட, வருணிற்கு இது போதுமே அவளை கலாய்த்து தள்ள, "ஏய் லூசு வெள்ள காக்கானு எதுவும் கிடையாது. நான் சும்மா சொன்னா, நீயும் யோசிக்காம எங்கனு தேடிட்டு இருக்க. உனக்கு மூளையே கிடையாதா?" என்று அவளை கிண்டல் செய்ய, பிரகதியோ அதற்கெல்லாம் அசராமல் "யார் இல்லைனு சொன்னாங்க? வெள்ள காக்கா இருக்கு. நான் பார்த்துருக்கேன். ஏன் நீங்க பாத்ததே இல்லையா?" என்று கேட்டு அவனை கிறங்கடித்தாள்.
'எத? வெள்ள காக்கா இருக்கா? அதையும் பார்த்தேன் வேற சொல்றா? என்ன டா இது? இவ என்ன வேர்ல்டுலையே இல்லாத புது கதையை சொல்றா?' என்று மைண்ட் வாய்சில் யோசித்துக் கொண்டே, அவளை வித்தியாசமாக பார்க்க, அவளோ கண்கள் பளிச்சிட "அங்க பாருங்க வெள்ள காக்கா" என்று கத்தினாள்.
"என்னை என்ன உன்ன மாதிரி முட்டாள்னு நினைச்சியா?" என்று வருண் அவளை நம்பாமல் சொல்ல, "ஐயோ! நிஜமா கூட்டமா பறந்து போகுது பாருங்க" என்றாள்.
"இல்ல நான் பார்க்கமாட்டேன். நீ என்னை கலாய்க்கிற" அவன் பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்க, நிரஞ்சனும் மேலே பார்த்துக் கொண்டிருந்தான். நண்பன் பார்க்கவும் 'உலக அதிசயம் நிஜமாவே வெள்ள காக்கா இருக்கா?' என்று மேலே பார்த்தான் வருண்.
பார்த்தவன் கொலைவெறியுடன் கண்களை தாழ்த்தி பிரகதியை பார்த்து முறைக்க, அவள் இன்னும் மேலே வானத்தை தான் 'ஆ..' வென பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் இன்னும் கடுப்பான வருண் "ஏய் லூசு அது பேரு கொக்கு" என்று கடுப்பாக கூற, "அதோட இன்னொரு பேரு தான் வெள்ள காக்கா" அவள் இன்னும் அந்த பெயரையே கூறி அவனை கடுப்பாக்க, அவளை கண்கள் இடுக்கி முறைத்துக் கொண்டிருந்தான் வருண்.
"முறைக்காதீங்க, இப்போ காமராஜர கருப்பு காந்தினு சொல்றோம்ல, அதே போல தான் இதுவும் வெள்ள காக்கா" என்று விளக்கம் கூறியவள் தன் வேலையை பார்க்க சென்று விட, இங்கே வருண் தான், "இவ முட்டாளா? இல்ல என்னை முட்டாள் ஆக்கிட்டு போறாளா? இவளுக்கு இதெல்லாம் யார் சொல்லி கொடுக்கிறது?" என்று யோசித்து கொண்டே திரும்ப, அங்கு நிரஞ்சன் அவனை பார்த்து நமட்டு சிரிப்புடன் "வெள்ள காக்கா? உனக்கே தொப்பியா?" என்று கேட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
'இப்படி ஊரே என்னை பார்த்து சிரிக்க வச்சிட்டாளே! அவள...' என்று பிரகதியை பழிவாங்க எண்ணி, அவள் பிடித்திருந்த ஓஸ் மீது காலை வைத்து தண்ணீரை தடுத்து வைத்தான்.
இவன் ஓஸை மிதித்திருப்பது தெரியாமல் 'என்ன தண்ணி நின்னு போச்சி?' "குமார் அண்ணா பைப் ஆஃப் பண்ணிட்டிங்களா?" என்று சற்று தொலைவில் புற்களை வெட்டிக் கொண்டிருந்த குமாரிடம் சத்தமாக கேட்க, அவரும் "இல்ல பாப்பா" என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.
'அப்புறம் ஏன் தண்ணி வரல?' அவள் திருப்பி அதன் துளை வழியே பார்க்க, வருண் தன் காலை அதன் மீதிருந்து நகர்த்த பிரகதி முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. அவன் எதிர் பார்த்ததும் இதை தானே! வருண் சத்தமாக சிரிக்க, அப்போது தான் இது வருணின் சதி என்று புரிந்துக் கொண்ட பிரகதி,
கோபத்தில் வருண் புறம் ஓஸை திருப்ப, அவள் அடுத்து இதை தான் செய்வாள் என்று எதிர் பார்த்தவன் போல், அவள் தாக்குதலில் இருந்து தப்பிக்க வருண் விலகி நிற்க, நிரஞ்சன் போதாத காலம் அவன் முழுவதும் நனைந்து விட்டான்.
இருவரையும் பார்த்து கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்த வருண் மீது இருவர் கோபமும் திரும்ப நிரஞ்சன் பிரகதி கையில் இருந்த ஓஸை வாங்கி வருண் மீது அடிக்க ஆரம்பித்திருந்தான். வருண் என்ன தான் வளைந்து நெளிந்து ஓடினாலும் அவனால் நிரஞ்சன் தாக்குதலில் இருந்து முழுதாக தப்பிக்க முடியவில்லை. பிரகதியும் ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து வந்து அவன் மீது ஊற்றி விட, வருணும் முழுதாக நனைந்து விட்டான்.
மூன்று பேரும் ஒருவர் மீது மற்றவர் தண்ணீர் அடித்து விளையாட, குமார் அண்ணாவையும் விட்டு வைக்கவில்லை. அவரையும் குளிப்பாட்டி விட்டனர். இவர்களின் இந்த விளையாட்டு தோட்டத்தில் இருந்து பிரகதி வீட்டுக்குள் ஓடியதால் அங்கேயும் தொடர்ந்தது.வருண் ஒரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளைத்து இன்னொரு கையில் பக்கெட் தண்ணீரை அவள் தலையில் மொத்தமாக கவிழ்த்து விட்டு வாசல் நோக்கி ஓடி சென்றவன் திரும்பி பார்க்க, இங்கு அவளுக்கு உதவியாக குமார் அண்ணா ஒரு ஜக்கில் தண்ணீர் எடுத்து அவள் கையில் கொடுத்தார்.அவளும் அதை வருணை துரத்தி சென்று அவன் மீது ஊற்ற, வருண் அதை கவனித்து மறுபடியும் விலகி கொள்ள, அந்த தண்ணீர் மொத்தமும் நிரஞ்சன் தந்தை ரகுராம் மீது விழுந்து அவரை நனைத்தது.
கண்கள் சிவக்க ருத்ர மூர்த்தியாக நின்றிருந்த நிரஞ்சன் தந்தையை பார்த்தவள் விழிகள் விரிய அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள். அவளின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து தான் ஆண்கள் மூவரும் அங்கு நின்றிருந்த ரகுராமை கவனித்தனர்.
நிரஞ்சனும் குமார் அண்ணாவும் பரவாயில்லை, சற்று விலகி தான் நின்றிருந்தனர். ஆனால் பாவம் வருண், அவன் திரும்பி பார்த்த போது அவருக்கும் அவனுக்கும் ஒரு இன்ச் தான் இடைவெளி இருந்தது. அவ்வளவு அருகில் அவர் கோப முகத்தை பார்த்தவன் துள்ளி குதித்து இரண்டடி பின்னால் வந்தான்.
பிரகதிக்கு நிரஞ்சன் தந்தையுடன் இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கும் என்று அவள் சிறிதும் யோசித்திருக்க மாட்டாள் அல்லவா! அவர் தகவல் ஏதும் சொல்லாமல் இப்படி வந்து நின்றது அனைவருக்கும் அதிர்ச்சியே!
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 26

நிரஞ்சனின் தந்தையை பார்த்ததும் இரயிலின் வேகத்தை விட வேகமாக துடித்த தன் இதயத்தின் சத்தம் வெளியே கேட்பதற்குள் இங்கிருந்து சென்று விடலாம் என்று எண்ணிய பிரகதி, தன் அறை எந்த பக்கம் என்றே மறந்து போனாள். இரு பக்கமும் திரும்பி திணறிபடி ஒருவழியாக ஜக்குடனே தன் அறைக்குள் ஓடி வந்து கட்டிலில் அமர்ந்து மூச்சு வாங்கினாள்.

அங்கே வெளியே ஆண்கள் மூவரும் தான் பாவமாக நின்றிருந்தனர்.
'ஏன் டா? இன்னைக்கு உங்க அப்பா வருவாருனு சொல்லியிருந்தா, நான் உன் வீட்டு பக்கமே வந்திருக்க மாட்டேனே. இப்படி மூக்கும் மூக்கும் உரசுற அளவுக்கு அவர்கிட்ட மாட்டிவிட்டுடியே! கிராதகா! இனி என்ன பண்ண போறாரோ தெரியலையே? அவ்வ்..' என்று கதறி அழுத மனதை 'ஆல் இஸ் வெல்' சொல்லி சமாதானம் செய்து கொண்டே வருண் நிரஞ்சன் முகத்தை பார்க்க,

அவனும் அதிர்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்டியபடி தான் நின்றுக் கொண்டிருந்தான். 'அப்போ அவர் வர்ற விசயம் உனக்கே தெரியாதா?' என்று நிரஞ்சனை வசை பாடுவதை நிறுத்தி 'குமார் அண்ணா தான் ஒரு நாளைக்கு மூனு நேரம் அவர் கூட போன்ல பேசுற ஆளு, அவருக்கு தெரியாம கண்டிப்பா இருக்காது' என்று தன் பார்வையை அவர் புறம் திருப்ப, மற்ற இருவரை விட அவர் தான் நடுங்கிக் கொண்டிருந்தார்.
குமார் அண்ணா முகத்தை பார்த்ததும் பீறிட்டு வந்த சிரிப்பை கஷ்ட பட்டு அடக்கிய வருண் கமுக்கமாக தன் கூட்டத்துடன் இணைந்துக் கொண்டான். பிறகு தனியாக நின்று யார் திட்டு வாங்குவது. ஆப்போ அவார்ட்டோ கூட்டத்துடணே பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டான்.

நிரஞ்சன் தன் தந்தை இப்போது வருவார் என்று சிறிதும் எதிர் பார்க்கவில்லை என்றாலும், பிரகதி பற்றி கூற வேண்டிய விஷயங்கள் என்ன? அதை எப்படி கூற வேண்டும்? என்று மனதிற்குள் எடிட் செய்து கொண்டிருந்தான்.
அய்யோ பாவம் குமார் அண்ணா, அவர் நிலைமை தான் படு மோசமாக இருந்தது. இங்கு வந்த இந்த பத்து வருடத்தில் இதுவே முதல் முறை ராகுராமிடம் ஒரு விஷயத்தை மறைத்திருப்பது. இப்போது தன்னை பற்றி அவர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும். தன் விசுவாசத்தின் மீது சந்தேகம் கொள்வாரா? என்று பாவமாக பார்த்து கொண்டிருந்தார்.

மூன்று பேரையும் ரகுராம் பார்த்த பார்வையில் எந்த வித வேறுபாடும் இல்லை. பாகுபாடு இல்லாமல் மூன்று பேரையும் பார்வையாலேயே பொசுக்கியவர், அவர்களின் நனைந்த உடையை பார்த்து "டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு இன்னும் அஞ்சு நிமிசத்தில என் ரூம்ல இருக்கணும்" என்று மூன்று பேரையும் பார்த்து கூறியவர், தன் வேக நடையுடன் தன் அறையை நோக்கி சென்றார்.

அவர் கூறியது போலவே ஐந்து நிமிடத்தில் அவர் முன் சென்று நின்றனர் மூவரும். ரகுராம் நாற்காலியில் அமர்ந்து இறுக்கமான முகத்துடன் தன் முன் இருந்த சிறிய மேஜையை வெறித்துக் கொண்டிருந்தார்.
நிரஞ்சன் மனபாடம் செய்து வைத்திருந்ததை அவரிடம் கூறிவிடலாம் என்று "டாட் " என்று அழைத்தபடி அவரை நோக்கி அடிகளை எடுத்து வைக்க, ஒரு கை நீட்டி 'நீ எதுவும் சொல்ல வேண்டாம்' என்பது போல் தடுத்தவர், "அந்த பொண்ண ஹாஸ்டல்ல கொண்டு விடு" என்று மட்டும் தான் கூறினார் கட்டளை குரலில்.

அதற்கு மேல் நிரஞ்சன் எங்கே பேச 'அவர் தான் கூறுவதை கேட்கும் நிலையில் இப்போது இல்லை' என்று பின்வாங்கி விட்டான்.
"நா.. நான் கொண்டு போய் விட்டுறேன் ப்பா" வருண் பிரகதியை கொண்டு விடும் சாக்கில் தானும் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்து கூற, அவர் வருணை பார்த்த அந்த பார்வையில் 'இல்ல, இப்போதைக்கு உனக்கு இங்க இருந்து விடுதலை இல்ல' என்று மனதிற்குள் அவர் பார்வைக்கு கவுண்டர் கொடுத்தவாரே தலை கவிழ்ந்து நின்று விட்டான்.

பிரகதி தன் அறையில் அமர்ந்து தன்னை தானே கடிந்து கொண்டிருந்தாள். 'இப்படியா அவர் மேல தண்ணிய ஊத்துவ? ஒரு சாரி கூட கேட்கலை. உன்ன பத்தி என்ன நினைச்சிருப்பாங்க? ஐயப்பா! ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?' தன் வருங்கால மாமனார் தன்னை பற்றி தவறான கருத்தை மனதில் பதிந்துக் கொள்வாரோ? என்ற அச்சத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது கதவு தட்டும் சத்தத்தில் தன் புலம்பல்களை ஒதுக்கி வைத்து யார் என்று பார்க்க நிரஞ்சன் தான் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் "பிரச்சணை ஏதும் இல்லையே" என்று பதட்டத்துடன் கேட்க, மெல்லிய புன்னகையுடன் "எந்த பிரச்சனையும் இல்லமா" என்று சாதாரணமாக பதில் அளித்தான்.

"உங்க அப்பா நான் இங்க இருக்கிறத பத்தி ஏதும் தப்பா நினைச்சிடாங்களா?" அவள் தயக்கத்துடன் கேட்க, இந்த தயக்கத்திற்கெல்லாம் எந்த அவசியமும் இல்லை என்பது போல் "நான் அப்பா கிட்ட நம்ம விஷயம் எல்லாம் சொல்லிட்டேன். அவர் நமக்கு ஓகே சொல்லிட்டார். எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூற "நிஜமாவா?" பிரகதி சந்தோசமாக கேட்க, அவனும் ஆம் என்று கூறி புன்னகைத்தான்.

தன் தந்தை தன்னுடன் இப்போது பேச கூட தயாராக இல்லை என்ற உண்மையை கூறி அவளை வருத்தபட செய்ய அவன் விரும்பவில்லை.

"நீ உன்னோட திங்கஸ் எல்லாம் பேக் பண்ணு. நாம ஹாஸ்டலுக்கு போகனும்" என்று அவன் கூறியதும் பிரகதி முகம் அப்படியே சுருங்கி விட்டது. 'அப்படியென்றால் அவருக்கு தன்னை பிடிக்கவில்லையா?' என்று சோகமாக நிரஞ்சனை பார்க்க, அவள் மனம் புரிந்தவனாக "அவருக்கு அவர் மருமக இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி இங்க இருக்க வேணாம்னு சொன்னார். அவ்வளவு தான். நீ வேறெதுவும் நினைச்சி குழம்பிக்காத" பிரகதி கன்னத்தில் கை வைத்து அவன் அன்பாக கூற,

நிரஞ்சன் தந்தை தன்னை மருமகள் என்று ஏற்றுக் கொண்டாரா? என்ற சந்தோசத்தில் அவர் சொல்வதும் சரிதான் என்று புணகையுடன் தன் பொருட்களை எடுத்து வைத்து கிளம்பினாள்.

அறையை விட்டு வெளியே வந்தவள், ரகுராம் அறையை பார்த்து "நான் அவர் கிட்ட போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு வரவா?" என்று அப்பாவியாய் பிரகதி கேட்க, நிரஞ்சனும் சரி என்று தலை அசைத்து அனுப்பி வைத்தான்.
திறந்திருந்த கதவை தட்டி அனுமதி கோரி நின்றவள் அவர் தன்னை பார்த்ததும் உள்ளே சென்றாள்.
இன்னமும் அவருக்கு எதிர் திசையில் குற்றவாளிகள் போல் கை கட்டி தான் நின்றிருந்தனர் குமார் அண்ணாவும் வருணும். பிரகதி அவர்களை கவனிக்காது நேராக ரகுராம் முன் சென்று பட்டென்று அவர் கால் அருகே குனிந்து ஆசிர்வாதம் வேண்டி நிற்க, அவரும் அவளின் திடீர் செயலில் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தாலும், கைகள் தானாய் அவள் தலையை தொட்டது. அவர் ஆசிர்வாதம் செய்து விட்டார் என்று புன்னகை முகமாகவே அவரிடம் பேச தொடங்கினாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அங்கில் நீங்க எங்க காதலை ஏத்துக்கிட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு" அவள் கூறி கொண்டே போக, பதில் ஏதும் பேசாமல் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தார் ரகுராம்.
இறுதியில் நான் போய் வருகிறேன் என்று அவள் விடை பெற அதற்கு மட்டும் சிறு தலையசைப்பை வழங்கினார். வாசல் வரை வந்தவள் திரும்பி சென்று இன்று தான் அவரிடம் நடந்து கொண்டதற்காக சாரி என்று கூறிவிட்டு அவர் பதிலிற்கு கூட காத்திருக்காது ஓடி வந்து விட்டாள்.
வாசல் நேர் அவர் பார்வை படும் தூரத்தில் சற்று தள்ளி நின்றிருந்த நிரஞ்சன் 'அவளிடம் மறுத்து பேசியிருக்க வேண்டியது தானே!' என்று தன் தந்தையை மிதப்பான பார்வை பார்க்க, தன் மகன் திட்டம் புரிந்தவராக உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர். தப்பி தவறி கூட அதை முகத்தில் காட்டி கொள்ளவில்லை.

நிரஞ்சன் பிரகதியை அழைத்துக் கொண்டு காரில் ஹாஸ்டல் நோக்கி சென்று கொண்டிருந்தான்.
காரில் ஹிந்தி பாடல் ஒன்று பிளேயரில் மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது. அமைதியாக அதை கேட்டுக் கொண்டிருந்த பிரகதி அடுத்து ஒலித்த தமிழ் பாடலை கேட்டு குதூகலம் அடைந்தாள்.

"ஐ சூப்பர் சாங். சவுண்ட் கொஞ்சம் அதிகமா வச்சிகிறேன்" என்று சவுண்ட் பட்டனை அழுத்தி சத்தத்தை அதிகரித்தவள், "எனக்கு இந்த சாங் ரொம்ப பிடிக்கும்" என்று நிரஞ்சனிடம் கூறி கொண்டே, மெல்லியதாக கை அசைத்து ஆடி கொண்டிருந்தாள்.

🌟கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனு-டி
கத்துகடி மாமன் கிட்ட
அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே🌟

பாடலை கேட்டு கொண்டே அவள் குதூகலத்தை மந்திர புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்த நிரஞ்சன், "நிஜமாவே இந்த சாங் உனக்கு ரொம்ப இஷ்டமா?" ஏதோ உள் அர்த்தத்துடன் கேட்க, அவன் எண்ணம் புரியாத பிரகதியோ "ம்ம்.. ரொம்ப பிடிக்கும்" என்று வெகுளியாயாய் பதில் உரைத்து தன் ஆட்டத்தை தொடர்ந்தாள்.
"அப்போ ஒத்திகை பார்த்திடலாமா?" அவன் விஷமமாய் கேட்க, 'என்ன ஒத்திகை' என்று அவனை புரியாத பார்வை பார்த்தவள், பின்பு தான் அந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை உள்வாங்கினாள். நிரஞ்சன் கண்களில் குறும்பு மின்ன சிரிக்க, அவன் முகம் காண முடியாமல் தன் மடமையை நொந்தவாறே ஆட்டத்தை நிறுத்தி அவனை விட்டு விலகி கதவை ஒட்டி அமர்ந்துக் கொண்டாள்.

'ஐயோ! இப்படி தான் பாட்டோட அர்த்தம் கவனிக்காம எல்லார் முன்னாடியும் சத்தமாக பாடிட்டு சுத்தியுருக்கேனே. லூசு பிரகதி' என்று அவள் மனம் அவளை திட்டிக் கொண்டிருந்தது.

அவள் செய்கையில் அவன் சத்தமாக சிரிக்க, அவளின் அசட்டு சிரிப்புடன் கார் விடுதி கட்டிடத்தின் முன் வந்து நின்றது.

மகிழ்ச்சி நீங்கி நெஞ்சில் ஏனோ இனம் புரியாதா வலி தோன்றியது. அவனை விட்டு விலகி செல்ல மனமின்றி அவள் இறங்காமல் இருக்க, அவனும் போ என்று சொல்லி அவளை தன்னை விட்டு தூரமாக வைக்க மனமின்றி அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கூடவில்லை.. மௌனம் மட்டுமே சூழ்ந்திருந்தது காரினுள். நிரஞ்சன் கார் ஸ்டியரிங்கை வெறித்துக் கொண்டிருக்க, பிரகதி முன் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மௌனத்தை கலைக்கும் விதமாக நிரஞ்சன் தான் பேச்சை ஆரம்பித்தான் "பிரகதி" அவன் மென்மையாக அழைக்க, அவன் விழி நோக்கியவள் விழிகள் காரணமேதுமின்றி கலங்கி இருந்தது. ஆதரவாக அவள் கன்னத்தில் கை வைத்து, "இப்போ ஹாஸ்டலுக்கு போ. நாளைக்கு நான் வந்துருவேன். டிரெயின்ங்ல பாக்கலாம். இன்னும் கொஞ்சம் நாள்ல டிரெய்னிங் முடிஞ்சதும், நானே உன் அப்பா அம்மா கிட்ட வந்து பேசுறேன்" என்று அவளுக்கு மட்டுமின்றி தனக்கும் கால அவகாசம் வேண்டும் என்பதை புரிந்து கூறினான்.

கண்களை விட்டு வெளியே சாடிவிட துடித்த கண்ணீரை மறைக்க அவனை ஒருமுறை அணைத்து விலகியவள், அவன் முகம் கூட பார்க்காமல் தன் பையுடன் விடுதியின் உள்ளே விரைந்தாள்.
இன்னும் சில வினாடிகள் அவன் முன் இருந்திருந்தால் கூட தன் கட்டுப்பாட்டை மீறி அழுதிருப்பாள். அதான் ஓடி வந்து விட்டாள்.
நேராக தன் அறைக்கு வந்தவள் அங்கு துணிகளை மடித்து வைத்து கொண்டிருந்த மிதுனாவை பார்த்ததும் "மித்து" என்று ஓடி சென்று அவளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.
நிரஞ்சன் பிரிவு மட்டுமே முதலில் தாக்க அவளை கட்டிக் கொண்டு அழுதவள், இத்தனை நாட்கள் மிதுனா பற்றிய நினைவுகள் கூட ஏதுமின்றி இருந்ததை எண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்டாள்.
"சாரி மித்து. நான் உனக்கு ஒரு போன் கூட பண்ணல"
பிரகதி இங்கே திரும்பி வரும் போது தன் முகம் பார்த்து கூட பேச மாட்டாள் என்று நினைத்திருந்த மிதுனாவிற்கும், பிரகதியின் இந்த அழுகையும் அவள் தன்னிடம் மன்னிப்பை யாசித்து நிற்பதும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அவளை சமாதானம் செய்யும் வேலையில் இறங்கினாள்.

பிரகதி நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தோழியை சந்தித்த மகிழ்ச்சியில் அவளிடம் பல விசயங்களை பகிர்ந்துக் கொண்டாள். முக்கியமாக பீட்டர் இறந்த செய்தி. இனி தன் வாழ்வில் நிம்மதியும் சந்தோசமும் மட்டுமே குடிக்கொள்ளும் என்று ஆனந்தமாக கூறி தன் தோழியை அணைத்து கொண்டு தூங்கினாள்.
பாவம் அவள் அறியவில்லை அவள் நிம்மதிக்கு ஆயுள் மிக மிக குறைவு என்பதை.

மிதுனா மனதில் ஒரு புயல் காற்றே வீசிக் கொண்டிருந்தது. பிரகதி தன்னிடம் பழகும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியென்றால் நிரஞ்சன் அவளிடம் தன்னை பற்றி எதுவும் கூறவில்லையா? ஏன்?" என்ற சிந்தனையிலேயே உறங்கி போனாள்.

நிரஞ்சன் பிரகதியை விடுதியில் விட்டு வீடு வந்து சேர்வதற்குள் ரகுராம் மற்ற இருவரையும் காய்ச்சி எடுத்து விட்டார். வேறு வழியின்றி இருவரும் அமைதியாய் நின்று அவரின் வசவுகளை வாங்கி கொண்டனர்.

அவர் கடைமை அழைக்க அவரும் புறப்பட்டு அலுவலகம் சென்றார். அதன் பிறகே நிரஞ்சன் வீடு திரும்பினான்.

நிரஞ்சன் வந்ததும் வழக்கம் போல தன் புலம்பல்களை கொட்டி தீர்த்த வருண், சில நாட்களாக அவனிடம் கேட்க நினைத்த கேள்வியை கேட்டான்.

"நீ ஏன் மிதுனா மேலையும் பீட்டருக்கு உதவி செய்த மத்தவங்க மேலையும் எந்த ஆக்சனும் எடுக்கல?"

"அதான் இப்போ பீட்டாரே உயிரோட இல்லையே! இவங்கள தண்டிச்சி என்னவாக போகுது. பணத்துக்காக பண்ணுனவாங்க தானே. கண்டிப்பா வேற ஏதாவது விசயத்துல மாட்டுவாங்க, அப்போ பார்த்துக்கலாம்" என்று சற்று மலுப்பலாகவே பதில் சொன்னான்.
"ஏன்? இந்த விசயத்தில ஆக்சன் எடுத்தா பிரகதி மாட்டிப்பானு பயமா? என்று கேட்ட வருண், "பீட்டர் செய்ததை விட மோசமான வேலை பாக்குற மாதிரி இருக்கு டா. தவறுகளை மறைக்கிறோம்" என்று
தன் மனதின் எண்ணத்தை வெளிப்படையாக கூற, அவனை பார்த்து சிரித்த நிரஞ்சன் "எவரிதிங்க் இஸ் ஃபெயிர் இன் லவ் அண்ட் வார்" என்ற மாய கண்ணன் வாக்கினை கூறி சமாளித்து வைத்தான்.

"நீ லவ் பண்றதுக்கு நான் ஏன் டா உன்கூட சேர்ந்து பிராடு வேலை பாக்கணும்?"

"ஏன்னா நீ என் நண்பேன் டா"

"ஹம்கும்... காதலிக்காக உயிரையே கொடுப்பிங்க, ஆனா எப்பவும் நண்பன் உயிர எடுக்கதுல தானே குறியா இருப்பீங்க" வருண் சலித்துக் கொள்ள, அவன் வார்த்தையில் சத்தமாக சிரித்த நிரஞ்சன் "உனக்காகவும் உயிர கொடுக்கிற காலம் வரும். அப்பே தெரிஞ்சிப்ப நிரஞ்சன் நட்ப பத்தி" என்று அவன் விளையாட்டாக கூற, "அய்யோ! நீ ஒருமுறை உயிரை கொடுத்ததே போதும் டா" என்று இப்போது விளையாட்டாக கூறினாலும் அந்த நாளில் அவன் அடைந்த துயரம் அவன் மட்டும் தானே அறிவான்.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
இன்றைய விடியல் அவர்கள் வாழ்வில் நிகழ்த்த போகும் துயரங்கள் ஏதும் அறியாமல் பிரகதி நிரஞ்சனை காணும் ஆவலில் நேரமே பயிற்சி நிலையத்திற்கு கிளம்ப, நிரஞ்சன் மனமும் அவளை காணும் ஆசையில் தன் ஓய்வு விடுப்பு முடிவடையும் முன்னமே மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க தயாராக வந்தான்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சாலினி பிரகதியை பார்த்த மகிழ்ச்சியில் அவளை கட்டி பிடித்து சில நலன் விசாரிப்புகளுடன் தன் பேச்சை தொடர்ந்தவள் தன் வழக்கமான கிண்டல் பேச்சுடன் முடித்தாள்.
தீபக்கின் தயவால் நிரஞ்சன் பிரகதி காதல் விவகாரம் அங்கு பயிற்சியில் இருக்கும் பாதி மாணவர்களுக்கு தெரிந்திருந்தது. அவர்களும் பிரகதியை கேலி செய்ய, அதற்கெல்லாம் சேர்த்து தீபக் பிரகதியின் பட்டு கைகளால் தண்டனை அனுபவித்தான். இவர்களின் செல்ல சண்டையில் தீபக்கும் பிரகதிக்கு உற்ற தோழனாக மாறி போனான்.
அன்றைய நாளிற்கான பயிற்சிகாக அவர்கள் ஒரு மலை பகுதிக்கு அழைத்து செல்ல பட்டனர்.
"அதான் மலையெல்லம் ஏற வச்சி நம்ம தலையெல்லம் சுத்த வச்சிடாங்களே? இப்போ மறுபடியும் வேற மலைக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க, இங்க என்ன பண்ணனும்? போன முறை கீழ இருந்து மேல ஏற சொன்னாங்க, இந்த முறை மேல இருந்து கீழ குதிக்கணுமா?" தீபக் விளையாட்டாக கூறினாலும் அதைதான் அவர்களை நிரஞ்சன் செய்ய வைக்க போகிறான் என்று அப்போது எவரும் அறியவில்லை.
உயரமான பச்சை பசேலென இருந்த அந்த மலையின் உச்சியில் சிறிய அளவிலான வீடு ஒன்று இருப்பது போல் தான் தெரிந்தது கீழ் இருந்து பார்க்கும் போது. அதன் அடிவாரத்தில் ஒரு கட்டிடமும், அந்த மலை அடியில் சிறு நீரோடை அமைந்திருந்தது.
அது பங்கீ ஜம்பிங் (bangee jumping) என்னும் உயரத்தில் இருந்து தலைகீழாக கீழே குதிக்கும் சாகசத்தை நிகழ்த்தும் இடம். அதன் செட்அப்பை பார்த்ததுமே அனைவருக்கும் புரிந்து விட்டது. தாங்கள் இங்கு அழைத்து வரப்பட்டதன் நோக்கம்.
மோனிகா அதைப்பற்றி அனைவருக்கும் விவரித்து கூறி அதை மேற்கொள்ள மாணவர்களை தயார்படுத்தினாள். அப்போது தான் நிரஞ்சன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். அலுவலகத்தில் சில வேலைகள் இருந்ததால் அவனால் மற்றவர்களுடன் பயிற்சி வாகனத்தில் இங்கே வர முடியவில்லை.
மோனிகா நிரஞ்சனிடம் அவன் உடல் நிலை பற்றி விசாரித்து, அவனை மேற்பார்வை மட்டும் பார்த்தாள் போதும் நான் மாணவர்களை பார்த்துக் கொள்கிறேன் என்று கண்டிப்புடன் கூறி, தான் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சென்று விட்டாள்.
மாணவர்கள் அனைவரும் அவனின் உடல் நிலை பற்றி விசாரிக்க அனைவருக்கும் பொறுமையாக பதில் அளித்தவன் விழிகளோ தன் அன்புக்குரியவளை தேடியது. அவன் தேடுதலின் பலன் அவனுக்கு கிட்டவில்லை. எங்கே பிரகதி சிக்கினால் தானே! அவள் அந்த இடத்திலே இல்லையே.
நேற்று தன்னை விட்டு செல்லும் போது அவன் கூறியதை வைத்து இன்று அவன் பயிற்சிக்கு வந்துவிடுவான் என்று ஆவலாக அவள் தேடிய நிமிடங்கள் எல்லாம் வீணானது. நிரஞ்சன் அவளுக்கு தரிசனம் தரவில்லை, இங்கும் இவ்வளவு நேரம் அவன் வருகைக்காக காத்திருந்தவள் மோனிகா கூறியதை கேட்டு வழக்கம் போல் பயம் பரவிக் கொள்ள, 83 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும் என்று மோனிகா கூறியதும் அடி வயிறு பிரட்ட ஆரம்பிக்க ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடி விட்டாள்.
அப்போது தான் நிரஞ்சன் உள்ளே வந்திருக்க, மாணவர்கள் அவனை விசாரித்து விட்டு களைந்து செல்ல, மிதுனா அவனை தயக்கத்துடன் நெருங்கினாள்.
நிரஞ்சன் பிற மாணவர்களுடன் பேசியது போலவே எந்த வேறுபாடும் இன்றி அவளிடமும் சகஜமாகவே பேசினான்.
"டிரெய்னிங் எப்படி போகுது?"
"நல்லா போகுது சார்" பதில் கூறினாலும் குற்றவுணர்வில் நின்றிருந்தாள். அவள் அறிந்த ஒரு விசயம் 'தான் இப்போது சிறையில் அடைக்கபடாமல் இங்கு இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் நிரஞ்சன் மட்டுமே என்று. இல்லையென்றால் மோனிகா அன்று இருந்த கோபத்திற்கு தன் உயிர் என்றோ தன் உடலை விட்டு பிரிந்திருக்கும் என்று அவளுக்கும் தெரியும்.
தன் மனதை அழுத்தி கொண்டிருந்த கேள்விகளை தயக்கத்துடன் கேட்டாள் மிதுனா.
"நீங்க ஏன் பிரகதி கிட்ட எதுவும் சொல்லல?"பதிலிற்காக அவன் முகம் பார்த்து நின்றாள்.
மெல்லிய புன்னகையை சிந்தியவன் "அவ உன்ன நல்ல ப்ரெண்ட் ஆஹ் நினைச்சிட்டு இருக்கா, அதை நான் பொய்யாக்க விரும்பல. இனியாவது அவ கூட ப்ரெண்ட் ஆஹ் இருக்க முயற்சி பண்ணு" என்று அவன் கூற, தான் செய்த தவறுகள் எல்லாம் கண் முன் தோன்றி மறைய தலை கவிழ்ந்து மௌனமாய் நின்றாள் மிதுனா.
"உன்ன கஷ்ட படுத்துறதுகாக இதை சொல்லல. இனிமேலும் பிரகதி கஷ்ட பட கூடாதுனு சொல்றேன். நீயும் அவகிட்ட எதையும் சொல்ல வேண்டாம். சில உண்மைகள் சில பேருக்கு எப்பவுமே தெரியாம இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது"
மிதுனாவும் அவன் கூறியதற்கு சரி என்று தலையசைத்தாள். பிரகதி எங்கே என்று விசாரித்தான் நிரஞ்சன். மிதுனா அவளும் சாலினியும் ரெஸ்ட் ரூம் சென்றதை கூறிக் கொண்டிருக்கும் போதே சாலினி மட்டும் தனியாக வந்தாள். வந்தவள் வழக்கமான நலன் விசாரிப்புகளுடனும் தன் பேச்சை ஆரம்பித்தாள்.
"பிரகதி உன்கூட தானே வந்தா? அவ எங்கே?" என்று மிதுனா சாலினியிடம் கேட்க,
"அவ வர லேட் ஆகும்னு சொன்னா, இப்போ வந்திருவா" என்று யாருக்கு தேவையோ அவனை பார்த்து பதில் கூறினாள்.
மோனிகா சேஃப்டி ஜாக்கெட் வாங்கி கொள்ள இவர்களை அழைக்க, மிதுனாவும் சாலினியும் அதை அணிந்துக் கொள்ள சென்றனர்.
மேலே இருந்து குதிக்கும் பொழுது பாதுகாப்பிற்காக அவர்களுக்கு சேஃப்டி பெல்ட் அணிவிக்கபடும். அதற்கு முன்பு அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் அணிந்து கொள்வதற்காக கருப்பு நிற ஜாக்கெட் கொடுத்தனர்.
மாணர்வர்கள் அனைவரும் வரிசையாக நின்று அதை வாங்கி அணிந்துக் கொண்டு மலை உச்சிக்கு செல்லும் மின்தூக்கி டிராமில் ஏறி சென்றனர்.
மிதுனாவும் சாலினியும் வரிசையில் நின்றுக் கொண்டிருக்க, எங்கிருந்தோ ஓடி வந்த பிரகதி மிதுனாவிற்கு முன் வந்து வரிசையில் புகுந்துக் கொண்டாள். அவளின் விளையாட்டு தனத்தை ரசித்தபடி செல்லமாக அவள் முதுகில் தட்டி அவளுக்கு இடம் கொடுத்து நின்றாள் மிதுனா.
மூவரும் அதை வாங்கி அணிந்துக் கொண்டு இருக்கும் போது சாலினி நிரஞ்சன் வரவு பற்றி கூற, பிரகதி கண்கள் தன்னவனை தேடியது. அவன் சற்று தொலைவில் தீபக் உடன் நின்று பேசிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி பிரகதி ஓடி வர மிதுனாவும் சாலினியும் அவளை தொடர்ந்து வந்தனர்.
ஓடி வந்தவள் வந்த வேகத்தில் சுற்று சூழல் மறந்து நிரஞ்சன் மார்பில் முகம் புதைத்து கட்டிக் கொள்ள, அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் புறம் தான் திரும்பியது. நிரஞ்சனும் கூட பிரகதியின் இந்த பிரதிபலிப்பை எதிர் பார்க்கவில்லை.
"ஹலோ மேடம்... நாங்களும் இங்க தான் இருக்கோம். இப்படியெல்லாம் பண்ணி என்னை மாதிரி சின்ன புள்ளைங்க மனச கெடுக்காதீங்க" என்ற சாலினியின் கேலி குரலில் தான், தான் இருக்கும் இடம் உணர்ந்து அவனை விட்டு விலகினாள் பிரகதி.
ஏதோ பயத்தில் தான் தன்னை கட்டி கொண்டாள் என்று ஊகித்த நிரஞ்சன் "பயமா இருக்கா?" என்று மேலே மலையை கண்களால் சுட்டி காட்டி வினவ, இல்லை என்று மறுப்பாக தலையசைத்தாள் பிரகதி."இன்னைக்கு தான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்" பிரகதி குரலில் ஏதோ ஒரு விரக்தி குடிக் கொண்டிருப்பதை மற்றவர்கள் உணரவில்லை என்றாலும் அவளின் சிறு அசைவின் அர்த்தம் கூட உணர்ந்து கொள்ளும் அவனுக்கு இது நன்றாகவே புரிந்தது.
நிரஞ்சன் கண்கள் ஆராய்ச்சியாய் அவளை நோக்க, அப்போது டிராம் வந்து விட்டது என்று இவர்களை மோனிகா அழைக்க, மோனிகாவின் கட்டளையின் பெயரில் நிரஞ்சன் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் அதில் ஏறி சென்றனர்.
பிரகதி முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று ஊகித்தவனுக்கு அது என்னவென்று மட்டும் அறிந்துக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
ஒரு நிமிடம் கண் மூடி அவள் அணைத்து நின்றதை நினைவில் கொண்டு வந்தவன், தங்களை சுற்றி கேட்ட மனிதர்களின் சலசலப்பு சத்தங்களை நீக்கி உன்னிப்பாக கவனிக்க, அவன் எண்ணத்தில் தோன்றிய விசயம் பொய்யாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் சட்டென்று கண்களை திறந்து பிரகதி போன டிராமை பார்க்க, அதுவோ மலை உச்சியை எப்போதோ அடைந்திருந்தது.
பிரகதியும் அதிலிருந்து இறங்கி டிராம் நிறுத்ததையும் குதிக்கும் இடத்தையும் இணைக்கும் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அதை பார்த்தவன் இதய துடிப்பு அதிகரிக்க, அவன் கண் மூடி தன் கவனத்தில் கொண்டு வந்தது அவன் செவிகளில் கேட்டு அவனை நிலை குலைய செய்தது. இப்போதும் அவன் செவிகளில் அவள் இதய துடிப்பை தாண்டி அவளிடம் இருந்து கேட்ட அந்த டிக் டிக் சத்தம் அவன் உயிரை உறைய வைத்தது.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 27


சில நிமிடங்கள் முன்பு.. தன் சந்தோசத்தை சீரழித்த அந்த சம்பவம் அவள் நினைவில் தோன்றி மறைந்தது.

பிரகதி ரெஸ்ட் ரூம் சென்று வந்து கொண்டிருந்த போது எதிரே இவளை நோக்கி இளம் வயது பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். பிரகதியை கடந்து செல்லும் போது அவள் கையிலிருந்த செல்போனை இவள் புறம் தூக்கி போட பிரகதியின் கைகள் தானாக அதை பிடித்துக் கொண்டது. பிரகதி "ஹலோ.. உங்க போன்" என்று அந்த பெண்ணை அழைக்க, அந்த பெண் திரும்பி கூட பார்க்காது வேகமாக சென்று விட்டாள்.

அவளை குழப்பமாக பார்த்த பிரகதியை அடுத்து யோசிக்க விடாமல் அவள் கையில் இருந்த போன் ஒலிக்க, அதன் திரையை பார்த்தவள் அப்படியே உறைந்து நின்று விட்டாள். அதில் அவள் தங்கை பிரித்திகா நாற்காலியில் கட்டபட்டிருந்த புகைப்படம் தான் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. இது பீட்டர் அவளை மிரட்ட பயன்படுத்தும் ஒரு யுக்தி. அவள் தங்கையின் இந்த புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி, அவளை மிரட்டி தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வான். இது பழைய புகைப்படம் தான் என்றாலும் அந்த அறிமுகம் இல்லாத பெண் மொபைலில் இது எப்படி? என்ற சிந்தனையில் அந்த பெண் சென்ற திசையை பார்க்க, அந்த பெண் எப்போதோ மறைந்திருந்தாள்.

நடுங்கிய விரல்களால் அழைப்பை ஏற்று காதில் வைக்க, "ஹலோ மை பார்பி டால்" என்று பீட்டரின் குரல் ஒலித்தது. அதில் நிலைகுலைந்து போன பிரகதி 'இது எவ்வாறு சாத்தியம்? பீட்டர் தான் செத்துட்டானே?' என்ற குழப்பத்தில் அப்படியே நின்று விட, எதிர் முனையில் இருப்பவனே தொடர்ந்தான்.

"உங்களோட ஹாலிடேஸ் முடிஞ்சிடிச்சி. இனி வேலையை ஸ்டார்ட் பண்ணலாமா?" என்று கேட்க, பிரகதி யோ பாரிய குழப்பத்தில் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

அவனே, "இப்போ நான் உனக்கு கொடுக்க போற வேலை ரொம்ப ஈஸி. இந்த முறை நீ யாரையும் கொல்ல வேண்டாம்" என்று அவன் கூற, பிரகதியோ 'அப்போ வேற ஏதோ பெரிசா பிளான் பண்ணிட்டான்' என்று மனதில் நினைத்தவள் அவன் என்ன கூறுகிறான் என்று கேட்டாள்.

"நீயே செத்து போயிரு" அவன் சாதாரணமாக கூற, பிரகதி முகத்தில் பயம் நீங்கி ஏதோ ஒரு மூலையில் நிம்மதி உருவானது. 'எவனோ ஒருவனுக்கு பயந்து நடுங்கி ஒவ்வொரு நாளும் செத்து செத்து வாழ்வதை விட ஒரேயடியாக சாவது எவ்வளவோ மேல் அல்லவா!' இது தான் அப்போது அவள் மனதில் தோன்றியது.

அவன் பேச்சை இன்னும் முடிக்கவில்லை, "நீ போன முறை நான் சொன்ன வேலையை சரியா செஞ்சதால இந்த முறை உனக்கு ரெண்டு சாய்ஸ் கொடுக்கிறேன். ஒண்ணு நீ சாகணும், இல்ல அங்க லைன்ல நிற்கிற உன் க்ளோஸ் ப்ரெண்ட் உன்னோட செல்ல மித்து உயிர விட வேண்டி இருக்கும்" அவன் புதிராய் கூற, புரியாமல் அவன் சொன்ன திசையில் நின்றிருந்த மிதுனா மீது பார்வையை பதித்திருந்தாள்.

அவனோ ஏளன சிரிப்புடன் "என்ன புரியலையா? அவ நிற்கிற வரிசையில அவ டர்ன் வரும் போது அவ வாங்க போற ஜாக்கெட்ல பாம் இருக்கு. நீயே முடிவு பண்ணிக்கோ, உன் உயிரா? இல்ல உன் மித்து உயிரா? சீக்கிரம் அவ நெருங்கிட்டா" என்று அவன் அவசர படுத்த, நொடி கூட தாமதிக்காது கோபத்தில் தன் கையில் இருந்த போனை விசிறி எறிந்து மிதுனாவை நோக்கி ஓடினாள்.

விளையாட்டாக இணைவது போல் அவளுக்கு முன் வரிசையில் புகுந்து கொண்டு அவள் பதட்டத்தை மறைக்க மிதுனாவையும் சாலினியையும் பார்த்து சிரித்து வைத்தாள்.

அவர்களும் அதை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டனர். அவள் முறை வரும் போது ஜாக்கெட் வாங்க சென்றவளை பார்த்து ஒரு கொடூர சிரிப்புடன் அதை அவளிடம் ஒருவன் வழங்க, பயத்தில் வியர்த்து நடுங்கிய தன் கைகளில் அதை வாங்கிக் கொண்டாள்.

சாலினி, நிரஞ்சன் பற்றிய கூறிய பிறகே அவள் மனம் அவனை விட்டு செல்வதை நினைத்து கலங்க, அந்த தாக்கத்தில் தான் இருக்கும் இடம் மறந்து ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.


நிரஞ்சன் கண் மூடி பிரகதி தன்னை அணைத்து நின்றதை நினைவில் கொண்டு வந்து பார்த்தவன் சிந்தையில் அவள் இதய துடிப்பின் சத்தத்தை தாண்டி கேட்ட அந்த டிக் டிக் சத்தத்தில் சட்டென்று கண் திறந்து பிரகதியைப் பார்த்தவன் நொடியும் தாமத்திக்காது அவளை நோக்கி ஓடினான்.


தளர்ந்த நடையுடன் குதிக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பிரகதியின் நினைவுகளில் கூட நிரஞ்சன் தான் ஆட்சி செய்துக் கொண்டிருந்தான்.


அவனை சந்தித்த முதல் நாள் தொடங்கி சற்று நேரம் முன் கட்டிக் கொண்டது வரை காட்சி படமாக ஓட, விழியில் தேங்கிய நீருடன் சேப்டி பெல்ட் அணிந்து பின் புறமாக குதிப்பதற்காக திரும்பி நின்றவள் கண்களை மூடி இருபுறமும் இருந்த கம்பிகளை அழுத்தி பிடித்து கொண்டு நின்றாள்.


நிரஞ்சன் மேலே வந்த நேரம் பிரகதி மூடியிருந்த கண்களில் அழுத்தம் கொடுக்க அவள் விழிகளில் இருந்து சில கண்ணீர் துளிகள் அவள் கன்னத்தை தொட, அவள் பிடித்திருந்த கம்பியில் விரல்களை தளர்த்த அங்கு நின்றிருந்த பணியாளர் ஒருவர் அவளை தள்ளி விட்டார்.


மின்னல் வேகத்தில் ஓடி வந்தவன், ஓடிக் கொண்டே அங்கு நின்றிருந்த ஒருவரிடம் இருந்து கயிற்றை பிடுங்கி தன் கால்களை மட்டும் கட்டி கொண்டவன் தானும் குதித்தான்.


தலை கீழாக பிரகதியை நெருங்கி அவளை ஒரு கையால் அணைத்து பிடித்தவாரே, மற்றொரு கையால் அவள் உடம்பில் அணிந்திருந்த சேஃப்டி பெல்ட்டை வேகமாக கழட்டியவன் ஜாக்கெட்டை கழட்ட அதில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்தவன் அதை நீரோடையில் வீசவும், அதிலிருந்த பாம் பயங்கர சத்தத்தில் வெடித்து சிதறியதில் பல அடி உயரத்திற்கு நீர் துளிகள் எழும்பி அமிழ்ந்து.


அதுவரை பிரகதி தன் கண்களை திறக்கவில்லை என்றாலும் நிரஞ்சன் அவளை அணைத்து பிடித்ததும் அவன் தான் என்று உணர்ந்தவள் அவன் மேல் இருந்த நம்பிக்கையில் அவனை இறுக கட்டிக் கொண்டிருக்க, பாம் வெடித்த சத்தத்தில் மயக்க நிலைக்கு சென்றிருந்தாள்.


நிரஞ்சன் டிராமில் ஏறி மேலே வரும் போதே மோனிகாவை எச்சரித்ததால் கீழே குதிப்பவர்களை இறக்கி கரை சேர்ப்பதற்காக நீரோடையில் படகில் நின்றிருந்தவர்கள் அவசரமாக அப்புறப்படுத்தபட்டனர். இல்லையென்றால், வீரியம் கூடிய அந்த வெடி குண்டால் அவர்கள் உயிரும் பறிக்க பட்டிருக்கும்.

சாகசகாரர்களுக்கு குதிக்கும் பொழுது ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டால் உடனே முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் எப்போதும் அங்கு நின்றிருக்கும். அதில் தான் இப்போது பிரகதிக்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்தனர். அவளை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி விட்டு நிரஞ்சன் நேராக சென்றது அவர்களுக்கு ஜாக்கெட் வழங்கியவனை தேடி தான்.

அந்த இடத்தில் நின்று கொண்டு இருந்தவனை சென்ற வேகத்தில் இரண்டு கன்னங்களும் பழுக்க அறை விட, அவனோ நிலை தடுமாறி தரையில் விழுந்தான்.


தரையில் கிடந்தவனை காலால் வயிற்றில் எத்த, அவனோ எதற்கு அடி வாங்குகிறோம் என்றே தெரியாமல் அடி வாங்கிக் கொண்டிருந்தான். மோனிகாவுடன் இன்னும் இரண்டு காவலாளர்கள் ஓடி வந்து நிரஞ்சனை தடுத்து, கீழே விழுந்து கிடந்தவனை இழுத்து சென்றனர்.


பிரகதியை காப்பாற்ற ஓடியது, மேலே இருந்து குதித்தது, அவளை ஆம்புலன்ஸ்சில் ஏற்றியது, அதன் பிறகு இவனை தேடி வந்து அடித்தது என்று நிரஞ்சன் ஒரு நிமிடம் கூட நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்ததால், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பிரகதிக்கு ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து இருந்தால் என்ற பயத்தில் மெல்லிய உதறலுடன் நின்றிருந்தான்.


மோனிகா அவனை உட்கார வைத்து ஆசுவாச படுத்தி தண்ணீர் கொடுக்க, அதை வாங்கி பருகியவன் அடுத்து பிரகதியை காண ஆம்புலன்ஸ்க்கு விரைந்தான்.


பயத்தில் ஏற்பட்ட மயக்கம் தான் என்பதால் ஒரு சில நிமிடங்களில் பிரகதி கண்களை திறந்தாள். கண் திறந்து பார்த்தவள் கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை சுற்றி நிற்கும் மனிதர்கள் மத்தியில் தன் தாயை தேடுவது போல மருண்ட விழிகளுடன் அங்கு நின்றிருந்த சாலினி, மிதுனா, மோனிகாவை தாண்டி நிரஞ்சனை தேடி தாயை கண்ட சேயை போல அவன் நெஞ்சில் சாய்ந்து இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியிட்டிருந்தாள்.


இது தான் காரணம் என்று ஏதும் சொல்லி அவளும் அழவில்லை, அவனும் எப்படி நடந்ததென்று எந்த காரணமும் அவளிடம் கேட்க வில்லை. அவளை அணைத்து சமாதானம் செய்து விட்டு, அவளை விடுதிக்கு அனுப்பி வைத்தான். மிதுனாவும் சாலினியும் அவளுடன் வந்தனர்.


பிரகதி சோர்வாக எதையோ யோசித்து கொண்டு அமர்ந்திருக்க அவள் அருகில் வந்த சாலினி "நிரஞ்சன் சார் மட்டும் சரியான நேரத்துக்கு அங்க வரலைன்னா? ப்பா.. என்ன நடந்திருக்கும்னு யோசிக்கவே பயமா இருக்கு" அதை கூறும் போதே சாலினியின் உடல் சிலிர்த்து விட்டது. "நல்ல வேலை உனக்கு எதுவும் ஆகல பிரகதி" என்று பிரகதியை தன்னுடன் அணைத்துக் கொண்டு தன் பேச்சை தொடர்ந்தாள். "நிஜமாவே நிரஞ்சன் சார் கிரேட் தான். உனக்கு ஒன்னுனா உன்ன காப்பாத்துறதுக்காக அப்படியே சூப்பர் மேனா மாறிட்டாரு" சாலினி நிரஞ்சன் புகழ் பாட பிரகதி மனதில் 'இப்படி தன் மீது உயிரையே வைத்திருக்கும் மனிதனிடம் உண்மையை மறைத்து வைத்திருப்பது நியாம் இல்லை. அடுத்த முறை அவரிடம் அனைத்தையும் சொல்லி விட வேண்டும்' என்று நினைத்துக் கொண்டு எப்படி சொல்வது என்று மனதுக்குள் ரிகர்சல் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.


சாலினி தான் பாவம் யார் பெத்த புள்ளையோ? அது பாட்டுக்கு புலம்பிட்டு இருக்கு. அதை யாரும் கண்டுகிட்ட மாதிரி தெரியல.

நிரஞ்சன் தான் அடித்தவனை விசாரணை செய்ததில் தெரிந்துக் கொண்ட ஒரு விசயம், இப்போது இங்கு இருப்பவன் பிரகதிக்கு ஜாக்கெட் கொடுத்தவன் அல்ல. அவன் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி இந்த அப்பாவி ஜீவனை தன் வேலையை பார்க்க கூறிவிட்டு எப்போதோ தப்பித்து இருந்தான்.


அந்த நபரை பற்றி விசாரிக்க, அவர் 48 வயது மதிக்க தக்க ஒரு நபர், பெயர் லக்ஷ்மி சங்கர். பல வருடங்கள் இங்கே வேலை செய்கிறார். மிகவும் நல்லவர். இதுவரை அவரை பற்றி எந்த ஒரு அவதூறு பேச்சுகளும் வரவில்லை என்று அவருக்கு சர்டிஃபிகேட் கொடுத்தனர் அங்கு வேலை பார்க்கும் அனைவரும்.
சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் அவர்களுக்கு இன்னொரு விடயம் புலப்பட்டது. பிரகதியிடம் ஒரு பெண் செல்போன் தூக்கி போடுவது அதில் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் பிறகு பிரகதியின் செய்கைகளை வைத்து நிரஞ்சனுக்கு அவளை மறுபடியும் யாரோ மிரட்டுகிறார்கள் என்று புரிந்தது.


அது யார்? என்ற சிந்தனையை புறம் தள்ளி முதலில் அந்த பெண்ணை பற்றி விசாரிக்க, அங்கிருந்த யாருக்கும் அவளை பற்றி தெரியவில்லை.

'ஒருவேளை சாகசம் மேற்கொள்ள வந்திருக்கலாம்' என்று அவர்கள் கூறி விட, வேறு கேமராவில் அவள் தெரிகிறாளா? என்று பார்த்தான். அவள் வெளியே செல்வது மட்டும் பதிவாகி இருந்தது. அவள் புகைப்படத்தை எடுத்து அவளை தேட சொன்னவன் அங்கு பணிபுரிந்த நபரை விசாரிக்க அவர் விலாசம் தேடி சென்றான்.


நிரஞ்சன் அங்கு சென்ற நேரம் அவன் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் தன் அபாய ஒலியை ஒலித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் இருந்து ஒருவரை அதில் ஏற்றி அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையை நோக்கி விரைந்தது அந்த ஆம்புலன்ஸ். நிரஞ்சன் அருகே நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்ததில் அவனுக்கு கிடைத்த செய்தி அவ்வளவு உவப்பாக இல்லை.


லக்ஷ்மி சங்கரை தான் ஏற்றிக் கொண்டு சென்றனர். தீராத வயிற்று வலி காரணமாக அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. நிரஞ்சன் ஆம்புலன்ஸ்சை பின் தொடர்ந்து மருத்துவமனை சென்று பார்க்க, யார் கெட்ட நேரம் என்று சொல்ல, வரும் வழியிலேயே அவன் உயிர் பிரிந்து விட்டது. சங்கரின் மனைவியும் அவரின் இரண்டு மகள்களும் அழுதது அங்கு நின்றிருந்த அனைவர் இதயத்திலும் நீர் சுரக்க செய்தது.


மேற்கொண்டு விசாரணைக்கு சங்கர் உறவினர் ஒருவரிடம் சங்கரின் இறப்பை பற்றி விசாரித்து விட்டு இரு தினங்கள் கழித்து சங்கர் மனைவி மகள்களிடம் விசாரணை நடத்துவதாக கூறி சென்றான்.


இப்போது பிரகதியின் எண்ணங்கள் யாவும் 'நிரஞ்சன் சார்க்கு எப்படி பாம் இருந்த விசயம் தெரிஞ்சிருக்கும்' என்ற சிந்தனையிலும், நாளை எப்படி அவனிடம் உண்மைகளை கூறுவது? என்பதிலுமே இரவை கழித்தாள்.

'பீட்டர் கூறியது போல் பிரகதி தன் உயிரை மட்டும் பறிக்கும் நோக்குடன் இங்கு அனுப்பி வைக்கபடவில்லை என்பதற்கு சான்றாக கண் முன்னே இன்று அரங்கேறிய கோர சம்பவம் அமைந்து விட, அப்படியெனில் இதன் பின்னனியில் யார் இருக்கிறார்? எதற்காக இதையெல்லாம் செய்ய வேண்டும்? எதற்கு பிரகதி உயிரை எடுக்க நினைத்தான்? அவன் யார்?????' என்ற கேள்விகளே நிரஞ்சன் மூளையை அரித்துக் கொண்டிருந்தது.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் ஒருவேளை அந்த பெண்ணிடம் இருக்கலாம். முதலில் அவளை கண்டு பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து உடல் அசதியில் படுக்கையில் விழுந்தாலும், ஏனோ தூக்கம் மட்டும் வரவில்லை. இப்படியே அவரவர் தனிப்பட்ட சிந்தனையில் நாளைய விடியல் தங்களின் சிந்தனைக்கு முற்று புள்ளி வைக்கும் என்று எவ்வளவோ முயன்றும் தூக்கம் அவர்களை நெருங்காது அன்றைய இரவை தூங்க இரவாக கழித்தனர் நிரஞ்சனும் பிரகதியும்.


மறுநாள் காலையில் அலுவலகம் வந்த நிரஞ்சன் பிரகதியை தேடி சென்றான். வகுப்பறையில் அவள் இல்லை என்றதும் அவள் எங்கே? என்று வாசலில் நின்றிருந்த தீபகிடம் கேட்க, அவனோ "நீங்க கூப்டதா சொல்லி தான் ஒரு கான்ஸ்டேபில் வந்து கூட்டிட்டு போனாரு" என்று கூற. "நான் கூப்பிட்டதவா?" என்று குழப்பமாக கேட்டவன் ஏதோ சரியில்லை என்று மூளை எச்சரிக்கை செய்ய, "எப்போ?" என்று கேட்டான் தீபக்கிடம்.

அவனோ "இப்போ ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான்" என்று சொல்ல, உடனே வருணிற்கு அழைத்து சிசிடிவி மூலம் பிரகதி எங்கே என்று தேட சொன்னான்.


வருணும் பத்து நிமிடங்கள் முன்புள்ள வகுப்பறை வீடியோவை ஓட விட்டு அவளை ஒரு காவலாளி வந்து அழைத்து சென்றதை பின் தொடர்ந்து அவள் தற்போது எங்கு இருக்கிறாள் என்று நிரஞ்சனுக்கு தகவல் கொடுத்தான்.
நிரஞ்சன் மனதில் 'பிரகதி எதையும் உளறி வைக்காதே!' என்று பதைபதைத்தபடியே வேகமாக ஓடி வந்தான் க்ரைம் பிராஞ்ச் கட்டிடத்தில் குற்றவாளிகளை விசாரிக்கும் அறைக்கு.

அனுமதி இன்றி சட்டென்று கதவை திறந்து அவன் உள்ளே வர, அங்கிருந்த உயர் அதிகாரிகள் நான்கு பேர் ரகுராம் உட்பட அனைவரும் சட்டென்று கதவு திறக்க பட்டதில் இவன் புறம் பார்வையை திருப்ப, பிரகதியின் கன்னத்தில் கண்ணீரின் தடயங்கள் கோடாக இருந்தது.
 
Status
Not open for further replies.
Top