ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

புரியாத புதிர் நீயடா !!! கதை திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
புதிர் 13

அவனுக்கு அதெல்லாம் பொருட்டில்லை என்பது போல தனது தேவை முடிய தூங்கி விட்டான்.. இப்போது விழித்துக் கொண்டு தூக்கம் இல்லாமல் தவித்தது என்னவோ கோபிகா தான்.. மேனி எல்லாம் அருவருக்கும் உணர்வாகி போக, கண்களை துடைத்துக் கொண்டே எழுந்து சென்றவள் ஷவரின் கீழ் நீண்ட நேரம் நின்று கொண்டாள்.

அவனது எந்த முத்தமும் அணைப்பும் முதல் நாள் தித்தித்ததோ இன்று அது கசந்து தான் போனது. இதே சமயம் அனிருத்தின் வீடே அமைதியாக தான் இருந்தது. கோதாவரி கடமைக்கு சமைத்து வைத்து இருக்க, ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து இருந்தார்கள் வீட்டினர். நேரம் தாண்டி சென்ற போதும் யாரும் சாப்பிட்ட அரவம் இருக்கவே இல்லை. திவ்யா மட்டும் கர்ப்பமாக இருப்பதால் என்னவோ சாப்பிட்டு விட்டு அறைக்குள் முடங்கி போனாள்.

முதல் நாள் இருந்து இதே போல தான் வீடு இருக்க, பொறுமை இழந்த அனிருத்தோ, "எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போறீங்க.. சாப்பிட வேண்டியது தானே" என்று சொல்லிக் கொண்டே போய் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டான். அவன் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து திவ்யாவும் வெளியே வந்து எட்டி பார்க்க, தேவராஜ்ஜோ, "மனசே சரி இல்லடா, நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல, தாயில்லா பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு" என்று தந்தையின் ஆதங்கத்தில் பேச, மனம் குறுகுறுத்தது என்னவோ திவ்யாவுக்கு தான்.

கோபிகா ஷியாமுடம் அத்து மீறி பழகிய விஷயம் திவ்யாவையும் அனிருத்தையும் தவிர யாருக்கும் தெரியாது அல்லவா? அவர்களும் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க, பெருமூச்சு விட்டு நரசிம்மனோ, "நம்ம ஷியாம் தானே... சேர்த்துக்கலாம்னு தோணுது" என்று முடிக்க முதல், "அவனை இங்க சேர்த்துக்கிட்டீங்கன்னா உங்க பொண்ண கண்டிப்பா டைவர்ஸ் பண்ணிட்டு பொய்ட்டு இருப்பேன்.. அன்னைக்கு சும்மா ஒரு பத்திரத்துல தான் கையெழுத்து வாங்கினேன்.. அத நிஜமாக்கிடாதீங்க மாமா" என்று அழுத்தமாக சொன்னவன் சாப்பிட ஆரம்பிக்க, அவன் பேச்சு அனைவர்க்கும் தூக்கி வாரிப் போட்டது.

கோதாவரியோ, "என்ன பேசுற அனிருத்.. என்ன இருந்தாலும் அவ உன்னோட தங்கச்சி... எத்தனை நாளைக்கு இப்படி முகத்தை திருப்பிட்டு இருக்க முடியும்?" என்று கேட்டார்.

அங்கே ஷியாமை பற்றி யாருக்குமே தெரியவில்லை என்பது தான் உண்மை..

உண்மை தெரிந்த அனிருத்துக்கோ அவனை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாமல் இருக்க, "நான் சொன்னது தான் இறுதி முடிவு.. ஒண்ணு நான் இல்லன்னா ஷியாம்.. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க" என்று சொல்லிக் கொண்டே வேகமாக சாப்பிட, அவர்களும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து போனார்கள்.

வேறு சந்தர்ப்பம் என்றால் திவ்யா ஏட்டிக்கு போட்டி பேசி இருப்பாள். ஆனால் தவறு செய்த அவளுக்கு வாயையும் திறக்க முடியாத நிலை. மௌனமாகவே தனது அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு கண்ணீர் மட்டுமே நிற்கவில்லை.

அனிருத்தும் சாப்பிட்டு விட்டு எழுந்தவன், "எல்லாரும் சாப்பிடுங்க" என்று சொல்ல, நரசிம்மனோ வேறு வழி இல்லாமல் வந்து மேசையில் உட்கார்ந்தார்.

தேவராஜுக்கும் சாப்பிடாமல் இருந்து உடல் பலவீனமான உணர்வாகி போக அவரும் வந்து அமர்ந்து விட, அவர்களின் உண்ணாவிரதம் அன்று முடிவுக்கு வந்தது.

என்ன தான் மனஸ்தாபம் இருந்தாலும் பக்கத்தில் தானே கோபிகா இருக்கிறாள் சீக்கிரம் சரி ஆகி விடும் என்கின்ற நம்பிக்கை இருக்க, மனதை தேத்திக் கொண்டார்கள்.

அனிருத்தோ தனது அறைக்குள் நுழைய போனவன் ஒரு கணம் நின்று திவ்யாவின் அறைக் கதவை திறக்க, படுத்தபடி அழுது கொண்டு இருந்தவளோ, சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அனிருத்தோ , "ரூமுக்கு வா திவ்யா" என்று அழைக்க, அவளோ, "இல்ல நான் இங்கேயே இருக்கிறேன்" என்று ஆரம்பித்தவள் அவன் முறைப்பில் மீதியை சொல்லாமல் எழுந்து கொள்ள, அருகே வந்தவன் அவள் கையை பற்றிக் கொண்டே, "வா" என்றான். அவளும் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவன், "எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் நான் பண்ணின தப்புக்கு பிராயச்சித்தமே இல்லைல.. மனசு கிடந்து அடிச்சுக்குது" என்று சொல்ல, அவளை இறுக அணைத்துக் கொண்ட அனிருத்தோ அவள் முதுகை வருடி விட்டான். அவளுக்கும் அந்த அணைப்பு தேவையாக இருக்க, அவனையே இறுக்கி அணைத்து இருந்தாள்.

அடுத்த நாளில் இருந்து, ஷியாமும் பழைய அலுவலகத்துக்கு போவதை நிறுத்தி இருந்தவன், புது அலுவலக வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அதன் காரணமாக வீட்டிலேயே அதிகம் இருப்பதால் பக்கத்து வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் எட்டிப் பேசக் கூட முடியாத நிலை கோபிகாவுக்கு.. கோதாவரியும் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு ஷியாமின் வீட்டுப் பக்கம் செல்பவர் கோபிகா ஒரு நாளாவது வெளியே தலையை காட்ட மாட்டாளா என்று கூட்டிக் கொண்டே பார்த்து பார்த்து இருந்து தோற்று தான் போனார்.

இதே சமயம் ஷியாமின் தந்தையும் பிசினஸ் விஷயமாக வெளி நாட்டுக்கு சென்று இருந்த சமயம் அது..

இப்படியே நாட்கள் நகர, அனிருத்துக்கும் அவனை சந்திக்காமல் இருப்பது தான் நல்லது என்று பட்டது. அவர்கள் கம்பெனியை பிரிக்கும் வேலையும் மும்முரமாக நடக்க, எப்படி ஒரு மாதம் கடந்தது என்று தெரியவே இல்லை.

ஒரு நாள் ஷியாமின் வீட்டுக்கு வந்த சரவணனை, "வாடா" என்று அழைத்தான். அவனும் ஹாலில் இருந்த சோபாவில் அமர, "எல்லாம் ஓகே யா?" என்று கேட்க, அவனோ, "எல்லாமே ஓகே டா.. இந்த பேப்பர்ல அனிருத் சைன் பண்ணிட்டான்.. நீ சைன் பண்ணி அடுத்த கணம், அனிருத் தனியா ஷியாம் தனியா பிரிஞ்சிடுவாங்க" என்று சொல்ல, நாடியை நீவியவாறு அவன் சொல்வதை கேட்ட ஷியாம், "ஓகே" என்று சொல்லிக் கொண்டே அதனை வாங்கி கையெழுத்து இட முதல் அறைக் கதவில் நின்று கையை பிசைந்து கொண்டு இருந்த கோபிகாவின் மீது அவன் பார்வை ஒரு கணம் படிந்து மீண்டது.

அவர்கள் பேசியதில் இருந்தே கம்பெனியை பிரிக்க போகின்றார்கள் என்று உணர்ந்தவளுக்கு மனம் எல்லாம் உறுத்தல் தான் எஞ்சி இருக்க, அவன் கையெழுத்து இடுவதை பார்க்க முடியாமல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் கோபிகா. அவனோ பெருமூச்சுடன் பத்திரங்களில் எல்லாம் கையெழுத்தை இட்டவன், தனக்கு உரிய பத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை சரவணனிடம் நீட்ட, அவனும் சலிப்பாக தான் அதனை வாங்கி கொண்டான்.

சரவணன் கிளம்பியதுமே அறைக்குள் நுழைந்த ஷியாம், "ரெடி ஆகு வெளிய போகணும்" என்று சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் செல்ல, அவளோ கட்டிலில் சோர்வாக அமர்ந்து இருந்தவள் கஷ்டப்பட்டு எழுந்து ஆயத்தமானாள். திருமணம் செய்து இத்தனை நாட்களில் இன்று தான் அவளை வெளியே அழைத்து செல்ல போகின்றான். ஆனால் அதில் அவளுக்கு கொஞ்சமும் சந்தோசம் கிட்டவே இல்லை.

ஷியாமும் டீ ஷேர்ட் அணிந்து ஆயத்தமானவன் அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏற, காரும் வீட்டில் இருந்து புறப்பட்டது.

நீண்ட நேரம் அமைதியாக இருந்தவளோ பொறுமை இழந்து, "எங்க போறோம்?" என்று ஒரு கட்டத்தில் கேட்க, அவனோ, "ஹாஸ்ப்பிடலுக்கு" என்றான்.

"என்னாச்சு? உடம்புக்கு ஏதுமா?" பதட்டமான குரலில் கோபிகா.

"எனக்கு ஒண்ணும் இல்ல, உன்னை தான் செக் பண்ணனும்"

"எனக்கு ஒண்ணும் இல்லையே, நான் நல்லா தானே இருக்கேன்" என்று தன்னை பார்த்துக் கொண்டே அவள் சொல்ல பக்கவாட்டாக திரும்பி அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "நீ ப்ரெக்னன்ட்னு தோணுது" என்றான்.

அவளோ புரியாமல் அவனைப் பார்த்தவள், "ப்ரெக்னன்ட் ஆஹ்? எனக்கே தெரியல.. உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்க, பெருமூச்சுடன், "டெய்லி உன் கூட இருக்கிற எனக்கு தெரியாதா?" என்று கேட்டவன் காரோ ஹாஸ்பிடல் வாசலில் நிற்க, காரில் இருந்து இறங்கி முன்னே செல்ல, அவளுக்கு தலை கால் புரியாத சந்தோஷம்.

என்ன தான் அவன் மீது வருத்தம் இருந்தாலும் குழந்தை செல்வம் புது உணர்வை தான் அவளுக்கு கொடுத்தது.

"அப்போ நான் கர்ப்பமா?" என்று நினைத்துக் கொண்டே வயிற்றை வருடி விட்டு அவனை தொடர்ந்து நடந்தாள்.

இருவரும் அங்கே இருந்த வைத்தியரிடம் செல்ல, ஷியாமும், "ஹாய் டாக்டர், என் பெயர் ஷியாம்" என்று தன்னை அறிமுகப்படுத்தி விட்டு எதற்காக வந்தார்கள் என்று காரணத்தை சொன்னான்.

அவரும் மென் புன்னகையுடன் , "ஓகே செக் பண்ணிடலாம்" என்று சொல்லிக் கொண்டே நெர்சை அழைத்தவர், "இவங்களுக்கு ப்ரெக்னன்சி செக் பண்ணுங்க" என்க, நெர்ஸும் கோபிகாவை உள்ளே அழைத்து சென்றாள். சிறிது நேரத்தில் உள்ளே சென்ற வைத்தியரோ, "கங்கிராட்ஸ் ஷியாம், அவங்க ப்ரெக்னன்ட் தான்" என்று சொல்லி கையை குலுக்க, அவன் இதழில் ஒரு வன்ம புன்னகை கண நேரத்தில் தோன்றி மறைய அவன் விழிகளோ புன்னகையுடன் நின்று இருந்த கோபிகாவில் ஒரு கணம் படிந்து மீண்டது.

அவனோ மறுபடியும் "ப்ரெக்னங்சி கான்பெர்ம் தானே" என்று உறுதி படுத்தும் பொருட்டு கேட்க, "எஸ் ஷியாம்... ஷீ இஸ் ப்ரெக்னன்ட்" என்றார் டாக்டர்.

ஷியாமின் அருகே இருந்த கோபிகாவின் இதழ்கள் புன்னகைக்க, டாக்டரை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்த ஷியாமோ "அப்போ நாங்க கிளம்புறோம்" என்று சொல்லிக் கொண்டே கோபிகாவை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறபட்டான். காரில் ஏறியதும் " எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?? " என்று பூரிப்புடன் சொல்லிக் கொண்டே வந்த போதிலும் அவன் மௌனமாக தான் வந்தான்.

அவர்கள் வண்டி அனிருத்தின் வீட்டை தாண்டி சென்ற கணம் கோபிகாவின் விழிகள் ஏக்கமாக அவர்கள் வீட்டில் படிந்தது.

சட்டென்று சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவனோ வண்டியில் இருந்து இறங்க "எதுக்கு இங்க நிப்பாட்டினீங்க??" என்று கேட்டுக் கொண்டே இறங்க "வா" என்று சொல்லி அவள் கையை பற்றிக் கொண்டே அனிருத்தின் வீட்டை நோக்கி சென்றான்.

உள்ளே செல்ல செல்ல கோபிகாவுக்கு இதயம் துடிக்க, "வீட்ல இருக்கிறவங்க கிட்ட ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கிறதா சொல்லவா வந்தோம்??" என்று கேட்க, ஒரு கணம் அவளை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு வாசல் கதவை தட்டினான்.

கதவை திறந்த கோதாவரியோ, "கோபிகா" என்று அங்கே நின்ற கோபிகாவை நெகிழ்ந்த குரலில் அழைக்க, "அத்தை" என்று சொல்லிக் கொண்டே அவரை இறுக அணைத்து இருந்தாள் கோபிகா. ஷியாமின் முகம் எந்த உணர்வையும் காட்டவே இல்லை. அக்கணம் அங்கே வந்த நரசிம்மனோ, "உள்ள வா ஷியாம்" என்க, தேவராஜ்ஜூம், "உள்ளே வா" என்று அழைத்தார்.

அவனோ குரலை செருமி விட்டு, வாயை திறக்க போன சமயம், சத்தம் கேட்டு வெளியே வந்த அனிருத்தோ அவனை முறைத்துப் பார்த்தான்.

ஷியாமோ அவனை ஒரு நக்கல் பார்வை பார்க்க, அனிருத்துக்கு அந்த பார்வை ஏனோ நெருட ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதாக தான் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

அதே உணர்வு தான் அனிருத் அருகே நின்ற திவ்யாவுக்கும் இருந்து இருக்க வேண்டும், சட்டென ஷியாமை நோக்கி செல்ல இருந்த அனிருத்தின் கரத்தை பற்றி அவனை தடுத்து நிறுத்தி இருந்தாள்.

ஷியாமோ, அனைவரையும் ஒரு கணம் பார்த்து விட்டு, "நான் ஒண்ணும் உள்ளே வந்து இருக்க வரல, உங்க வீட்டு பொண்ண உங்க கிட்டயே ஒப்படைச்சுட்டு போக தான் வந்தேன்" என்று சொல்லி முடிக்கவே அனைவர்க்கும் தூக்கி வாரிப் போட்டது அனிருத் உட்பட.

"ஷியாம்" என்று கர்ஜனையாக வந்தது அவன் குரல்.

ஷியாமோ, "ரிலாக்ஸ்.. இப்போ எதுக்கு இந்த பதட்டம்? உங்க எல்லாருக்கும் தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியல, உங்க வீட்டு பொண்ணு கர்ப்பமா இருக்கிறதா பொய் சொல்லி தான் என்னை கல்யாணம் பண்ணினா.. அவ பொய்யை நிஜமாக்கி உங்க வீட்லயே விட்டுட்டேன்" என்று கூலாக சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர, "ஷியாம்" என்று சொல்லிக் கொண்டே அனிருத் கோபமாக அவனை நோக்கி நகர முதல், ஷியாமின் கையை எட்டிப் பிடித்த கோபிகாவோ, "என்ன சொல்றீங்க?" என்று கண்ணீருடன் கேட்டாள்.

அவனோ, "கையை எடு" என்று அவள் கையில் இருந்து தனது கையை பிரித்து எடுக்க முயல, "விளையாடாதீங்க, மனசு பட படன்னு இருக்கு" என்றாள் அவள் கெஞ்சுதலாக. அவனோ சத்தமாக, "கையை எடுடி" என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தியவன், "நீ சொன்ன பொய்க்கு இது தான் தண்டனை அனுபவி" என்று சொல்லிக் கொண்டே கொஞ்சம் கூட அங்கே நிற்காமல் வேகமாக வெளியேற, "கொஞ்சம் நில்லுங்க" என்று சொல்லிக் கொண்டே கண்ணீருடன் அவனை பின் தொடர போன கோபிகாவோ கால் தடுமாறி விழ போனாள். அக்கணம் அவளை பாய்ந்து பிடித்து இருந்தது என்னவோ அனிருத் தான்.

அவளோ, "அண்ணா" என்று சொல்லிக் கொண்டே தேம்பி தேம்பி அவன் மார்பில் தஞ்சம் புகுந்து அழ, அனிருத்தின் கண்களோ ஷியாமின் முதுகில் கோபமாக படிந்தது. ஷியாமோ கூலாக காரை எடுத்துக் கொண்டே தனது வீட்டிற்கு சென்று விட, அங்கிருந்த யாருக்கும் அடுத்து என்ன செய்வது என்று கூட தெரியாத நிலை..

விக்கித்து போய் நின்று இருக்க, "நான் அவர் கிட்ட பேசிட்டு வரேன்" என்று சொன்னவள் விறு விறுவென செல்ல, "கோபிகா கொஞ்சம் நில்லு" என்று அனிருத் கத்தியது என்னவோ காற்றில் கரைந்து தான் போனது. ஷியாமோ காரை பார்க் செய்து விட்டு வீட்டினுள் நுழைய போக, "கொஞ்சம் நில்லுங்க" என்று சொல்லிக் கொண்டே அவன் முன்னே வந்து நின்றாள் பெண்ணவள்.

வீட்டு வாசலில் அவள் கண்ணீரும் கோபமுமாக நின்று இருக்க அவனோ கதவு நிலையில் சாய்ந்து நின்றவன் "எதுக்குடி இங்க வந்த??" என்று கேட்டான்.

கோபிகாவோ, "நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை?? " என்க, "பொய் சொன்னதுக்கு தண்டனை" என்றான் நக்கல் புன்னகையுடன்..

அவளோ ஆக்ரோஷமாக, "ஆமா பொய் தான்.. அந்த பொய் சொல்லலன்னா என்னை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டீங்க தானே" என்று கேட்க, அவனோ "ஒப் கோர்ஸ் கண்டிப்பா கட்டி இருக்க மாட்டேன்" என்றான் வெகு நிதானமாக.

"அப்போ என் கூட தப்பா நடந்துகிட்டத பத்தி உறுத்தல் இல்லையா?" என்று கேட்க, "எதுக்குடி உறுத்தணும் ? நான் என்ன ரேப்பா பண்ணினேன்?? எல்லாத்துக்கும் மேல நீ ஒண்ணும் நான் தொட்ட முதல் பொண்ணு இல்ல.. பத்தோட பதினொன்னு தான்" என்று அவள் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சினான்.

அவளும் என்ன பதில் சொல்வாள்??

"உங்கள லவ் பண்ணினதால தானே எல்லாத்துக்கும் சம்மதிச்சேன்" என்று வலியையும் தாங்கி கொண்டே நலிந்த குரலில் சொல்ல, "மண்ணாங்கட்டி லவ்... உனக்கு வயசு கோளாறு... ஒருத்தன் மேல கையை வச்ச தள்ளி விடணும்னு சென்ஸ் கொஞ்சமும்.இல்லை.. எல்லாத்துக்கும் மேல என் ரூம்ல உனகென்னடி வேலை??" என்று கேட்டான்.

அதற்கும் அவளிடம் பதில் இல்லை.. சாதாரணமாக நினைத்த சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் இப்போது பூதாகரமாக தோன்றியது. அவள் எதிர்பார்க்காத அவதாரம் அவனுடையது.

"சரி என் மேல தான் தப்பு.. இப்போ நான் ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்... இப்போ போய் என்னை துரத்தி விடுறீங்களே" என்று கண்ணீருடன் கேட்க அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "எந்த பொய்யை சொல்லி என்னை இந்த கல்யாணத்துல சிக்க வச்சியோ.. அதுக்கு அனுபவிக்க வேணாமா?? இப்போவே இங்க இருந்து கிளம்பலென்ன நாயை விட்டு கடிக்க விடுவேன்" என்றான் மிரட்டல் குரலில்.
 

pommu

Administrator
Staff memberஅவன் பேச்சில் மொத்தமாக நொறுங்கி போன பெண்ணவளோ, "அப்போ இவ்ளோ நாள் நல்லவன் வேஷம் போட்டு நடிச்சீங்களா?" என்று கேட்டு விட, வெகு நிதானமாக உஷ்ண பெருமூச்சு விட்டவன், "நான் ஒண்ணும் என்னை நல்லவன்னு சொல்லவே இல்லையே.. நீயே நினைச்சுகிட்டா நான் என்ன பண்ணுறது? உன் அண்ணனை போல உத்தம சீலன் இல்ல நான்.. சிகரெட் பிடிப்பேன்.. தண்ணி அடிப்பேன்.. தேடி வர்ற பொண்ணுங்க கிட்டயும் போவேன்.. மை லைஃப் மை ரூல்ஸ்.. இடைல நீயா வந்து சிக்கிட்டு அப்படி பண்ணாதே இப்படி பண்ணதேன்னு சொன்னா நான் கேட்கணுமா?" என்று கேட்க, அவளுக்கு கண்ணீரை தவிர பதில் இல்லை.

"அப்போ எதுக்கு கல்யாணம் பண்ணுனீங்க?" என்று கேட்டு விட்டாள்.

அவனோ "வரே வா" என்று கைகளை தட்டியவன், "நானா பின்னால வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? நீ தானே ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கிற.. செத்திருவேன்னு சொல்லி மிரட்டி அந்த திவ்யா கூட கூட்டு சேர்ந்து என்னை இந்த கல்யாணத்துல சிக்க வச்ச.. நானும் டென்சன்ல என்ன பண்ணுறதுன்னு தெரியாம உன் ஆட்டத்துக்கு ஆடி உன் கழுத்தில தாலி வேற கட்டிட்டேன்.. உன் கிட்ட தப்பா நடந்துகிட்ட அன்னைக்கு நான் சேப் ஆஹ் இருக்கல.. அப்படி மட்டும் இருந்து இருந்தேன்னா நீ சொன்ன பொய்யை நம்பியும் இருக்க மாட்டேன்.. எல்லாமே என் தப்பு.. போதைல எல்லாம் பண்ணிட்டு இப்போ அவஸ்தப்படுறேன்" என்று நீளமாக பேசி முடிக்க, அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தவள், "அப்போ அவ்ளோ தானா?" என்று கேட்டாள்.

அவள் அருகே வந்தவனோ, "இங்க பாரு கோபிகா, என்னால இந்த பேமிலி லைஃப் கமிட்மெண்ட்ஸ் எல்லாம் தூக்கிட்டு சுத்த முடியாது.. அது என்னோட காரெக்டரும் இல்ல.. நீ ஏமாத்துன கோபத்தில் தான் உன்னை வேணும்னே ப்ரெக்னன்ட் ஆக்கினேன்.. உன் அண்ணா அவ்ளோ பேர் முன்னாடி கை நீட்டி அறைஞ்சான்ல., அதுக்கும் சேர்த்து தான் இந்த தண்டனை.. உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு.. குழந்தை வேணாம்னா அபார்ட் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ.. டாக்டர் கிட்ட நானே" என்று ஆரம்பிக்க ஒற்றை கையை நீட்டி தடுத்தவள் "இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க.. கொஞ்சமாவது நெஞ்சுல ஈரம் இருக்கும்னு எதிர்பார்த்தேன்.. அந்த எதிர்பார்ப்பு மொத்தமா சிதைஞ்சு போச்சு.. உங்க குழந்தையையே கலைக்க சொல்ற அரக்கன் தான் நீங்க.. இதுக்கு மேல உங்க கிட்ட கெஞ்சுறதே வீண்," என்று பேசி முடிக்க, அவனோ, "அரக்கன் கூட உனகென்னடி பேச்சு.. வெளியே போ" என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைய, "நீயெல்லாம் மனுஷனா" என்று வாய் விட்டு திட்டிக் கொண்டே விறு விறுவென அங்கே இருந்து வெளியே வந்தவள் கண்ணில் பட்டது என்னவோ அவள் வீட்டு வாசலில் அவள் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த அனிருத்தும் அவன் வீட்டினரும் தான்.

கோதாவரியோ அவள் கண்ணீரை பார்த்து மனம் வெதும்பியவர், "நான் வேணும்னா அவன் கிட்ட ஒரு தடவை பேசி பார்க்கட்டுமாம்மா" என்று கேட்டுக் கொண்டே ஷியாமின் வீட்டை நோக்கி நடக்க, அனிருத்தோ, "அத்தை" என்று அதட்ட முதலே அவர் கையை பிடித்த கோபிகா, "வேணாம் அத்தை.. மனுஷன் கிட்ட பேசலாம், மிருகம் கிட்ட பேச எல்லாம் முடியாது.. கடிச்சு குதறிடும்" என்று சொல்லிக் கொண்டே அவன் வீட்டை திரும்பி பார்க்க, அவனோ பால்கனியில் நின்று அவர்கள் அனைவரையும் ஏகாத்தாளமாக பார்த்துக் கொண்டே சிகரெட்டை ஊதி தள்ளினான். சத்தம் போடவில்லை, கை நீட்டவில்லை, கோபப்படவில்லை.. ஒற்றை நக்கல் சிரிப்பில் அனைவரையும் மொத்தமாக நொறுக்கி இருந்தான் ஷியாம்.

அவனை முறைத்த அனிருத்தோ கோபிகாவின் தோளில் கையை போட்டவன், "உள்ளே வா" என்று அவளை அழைத்து சென்றாலும் அவன் விழிகள் ஷியாமில் இருந்து அகலவே இல்லை...

எதிரி என்றால் ஒருவர் பலவீனம் அடுத்தவருக்கு தெரியாது.. ஆனால் நண்பர்கள் எதிரிகள் ஆகும் போது பலமும் பலவீனமும் அறிந்தவர்களின் போராட்டமும் ஆக்ரோஷமாக தான் இருக்கும்..

 
Status
Not open for further replies.
Top