ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தந்த்ரா கதை திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 1

காரிருள் சூழ்ந்த நேரமதில், மழையோ அடித்து பெய்து கொண்டு இருக்க, யாருமில்லாத நடுநிசியில் அந்த வழியால் சென்று கொண்டு இருந்தது ஒரே ஒரு கார். காரில் மொத்தம் ஐவர் அமர்ந்து இருக்க, அனைவரின் முகமும் வெவ்வேறு உணர்வுகளை சுமந்து இருக்க, "குப் குப்" என்ற சத்தத்துடன் அந்த காரும் நடுவீதியில் நின்று விட ட்ரைவர் சீட்டில் அமர்ந்து இருந்த சாண்டில்யனோ அருகே இருந்த விதுரனைப் பார்த்தான்.

விதுரனோ "என்னாச்சுடா?" என்று கேட்ட அதே சமயம், பின்னால் இருந்த மாதங்கியோ "சாண்டி என்னாச்சு?" என்று பதற, அதிதியோ "இப்போ எதுக்கு ரொம்ப டென்ஷன் ஆகுற? என்னன்னு பார்ப்பாங்க தானே" என்று கடிந்தவள் பக்கவாட்டாக திரும்பி வருணைப் பார்த்தாள். அவனோ இந்த ரணகளத்திலும் நிம்மதியாக தூங்கிக் கொண்டே இருக்க, சலிப்பாக இருபக்கமும் தலையாட்டிக் கொண்டாள்.

இதே சமயம், சாண்டியோ, "இரு பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே மழைக்குள் இறங்கி செல்ல, "குடையை எடுத்துட்டு போடா" என்று மாதங்கி சொன்னது என்னவோ காற்றில் கரைந்து தான் போனது.

காரின் பொனெட்டை திறந்தவனுக்கோ இருளில் எதுவும் தெளிவாக தெரியவே இல்லை. எவ்வளவு முயன்றும் தோற்றுப் போனவனோ, தலையை கோதிக் கொண்டே வந்து அங்கே காரின் டயரில் ஓங்கி உதைத்து விட்டு காரில் ஏறிக் கொள்ள, விதுரனோ "என்னடா ஆச்சு?" என்று கேட்டான்.

"ஒண்ணும் தெளிவா பார்க்கவே முடியல, காலைல தான் என்ன பிரச்சனைன்னு பார்க்கணும்" என்று சொல்லிக் கொண்டே காரை ஸ்டார்ட் எடுக்க போனவன் தோற்று தான் போனான்.

இதனிடையே, பின்னால் இருந்த அதிதியோ "ஐயோ சாண்டி, இதென்ன இப்படி நனைஞ்சுட்டே" என்று சொல்லிக் கொண்டே தோளில் கிடந்த தனது ஷாலை எடுத்து எம்பி அவனுக்கு துடைக்க முற்பட, அவனுக்கோ கோபம் சுர்ரென்று எகிறியது. ஆக்ரோஷமாக ஷாலை பிடுங்கி கீழே போட்டவன், "இப்போ இது ரொம்ப முக்கியமா? எப்போ பாரு நொய் நொய்ன்னு சொல்லிட்டு" என்று கடுப்பாக உரைக்க, விதுரனோ, "அவ இப்போ என்ன பண்ணிட்டான்னு இப்படி திட்டுற?" என்று கேட்டான்.

அவனை முறைத்த சாண்டி , "உனக்கு தான் எல்லாமே தெரியும்ல... அது தான் இல்லன்னு ஆய்டுச்சுல.. இப்போவும் சாண்டி சாண்டின்னு சொல்லிட்டே இருக்கும் போது எரிச்சலா வருது" என்று சொல்ல, பின்னால் இருந்த அதிதிக்கோ கண்ணீர் முட்டிக் கொண்டே வந்தது.

கண்ணீரை கீழே சொரிய விடாமல் உள்ளே இழுத்துக் கொண்டவளோ, "சாரி, இனி உன் பெயரை கூப்பிடவே மாட்டேன்" என்று சொல்ல, ஒரு கணம் அவளை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் முன்னால் திரும்பி ஸ்டார்ட் எடுக்க ஆரம்பித்து விட்டான்.

நீண்ட நேரம் எடுத்து களைத்த சமயம், அதிதியோ "என்னால முடியல சாண்டி, எவ்ளோ நேரம் வலிக்காத போலவே நடிக்கிறது.. வாஷ் ரூம் போகணும்" என்று சொல்ல, அவளை சட்டென திரும்பி பார்த்த விதுரன், "காலைல வரைக்கும் வெய்ட் பண்ண முடியாதா?" என்று கேட்க, அவளை முறைத்தவள், "இங்கேயே அசிங்கமாய்டும், பரவாலையா" என்று கேட்டாள்.

சாண்டியோ சுற்றும் முற்றும் பார்த்தவன், "அங்கே ஒரு வீடு தெரியுது பாரு" என்று சொல்ல, மின்னல் வெளிச்சத்தில் அந்த பங்களா அவர்களுக்கு தெளிவாக தெரிய, "ம்ம், அங்கே போய் ஹெல்ப் கேட்கலாமா?" என்று கேட்டாள் அதிதி.

விதுரனோ "ஒரே ஒரு டிம் லைட் மட்டும் தான் இருக்கு, சரி வாங்க வேற வழி இல்ல, டேய் வருண் எந்திரிடா" என்று சொல்லிக் கொண்டே மழைக்குள் இறங்க, "இப்போ நான் எங்க இருக்கேன்" என்று கேட்டபடி கொட்டாவி விட்டான் வருண்.

அதிதியோ "சீக்கிரம் இறங்கு, எப்போ பார்த்தாலும் தூக்கிகிட்டு, கும்பகர்ணா" என்று திட்டியபடி குடையை எடுத்துக் கொண்டே இறங்கினாள்.

வருணும் அதிதியும் ஒரே குடைக்குள் வர, அடுத்த குடையுடன் நின்ற மாதங்கியோ விதுரனை அழைப்பதா இல்லை சாண்டியை அழைப்பதா என்று குழப்பத்துடன் நின்று இருக்க, சாண்டியோ "நான் தான் மொத்தமா நனைஞ்சுட்டேன்ல, நீ குடைல வா," என்று சொல்ல, "டேய் நானும் தான்டா நனைஞ்சுட்டேன்" என்று சொல்லிக் கொண்டே மழைக்குள் நடக்க, "என்னவோ போங்கடா" என்று சொல்லிக் கொண்டே குடையுடன் தனியாக நடந்தாள் மாதங்கி.

அந்த வீட்டின் வாயிலை அடைந்ததுமே, விதுரன் வாசல் கதவை தட்டினான். உள்ளே இருந்து "ம்ம்" என்று ஒரு குரல் மட்டுமே கேட்க, அதிதியோ "அப்பாடா யாரோ இருக்காங்க" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளுக்கு தான் அவசர தேவை அல்லவா?

கதவு திறக்கப்படுவதற்கான அறிகுறி அப்போதும் தென்படாமல் இருக்க, மீண்டும் விதுரன் தட்ட முனையும் போது கதவு பட்டென்று திறந்து கொண்டது. உள்ளே நின்றது என்னவோ எழுபது வயது என்று சொல்லக் கூடிய ஒரு பெண்மணி தான்.

புடவை, பொட்டு என்று மங்களகரமாக இருந்தவரோ, "நீங்க?" என்று கேட்க, ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள், "ஒரு வேலை விஷயமா இந்த பக்கம் போனோம். கார் நின்னு போச்சு.. வாஷ்ரூம் யூஸ் பண்ணிக்கலாமா?" என்று கேட்க, அவரோ அனைவரையும் உற்றுப் பார்த்து விட்டு "ம்ம் உள்ளே வாங்க" என்று சொல்லிக் கொண்டே ஹாலின் லைட்டை போட்டார். அப்போது தான் அந்த முன்னறையின் பிரமாண்டம் அவர்களுக்கு தெரிய, "வாவ்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள் அனைவரும்.

சாண்டியோ "இங்க நீங்க தனியா இருக்கிற போல இருக்கே.. யாருன்னு தெரியாமலே எங்களை உள்ளே விட்டுடீங்க?" என்று அவன் மனதில் இருந்த ஐயத்தை கேட்க, அவரோ "கொலையா பண்ண போறீங்க நீங்க? இல்ல தானே.. இந்த வீட்டை தவிர கொண்டு போக எதுவுமே இல்ல, அப்புறம் நான் எதுக்கு பயப்படணும்?" என்று கேட்டவரது பேச்சும் நடவடிக்கையும் ஏனோ அசாதாரணமாக தான் தோன்றியது.

மாதங்கியோ அருகே நடந்து வந்த அதிதியிடம் "எனக்கு என்னவோ பயமா இருக்குடி, இவங்கள பார்த்தா வேற பேய் போல தோணுது.. ஒரு தடவை கால் இருக்கான்னு செக் பண்ணிடவா?" என்று மெதுவாக பேசுவதாக நினைத்து சத்தமாக பேசியவள், அந்த பெண்ணின் சிரிப்பில் பயந்து தான் போனாள்.

அவரோ திரும்பி மாதங்கியை பார்த்தவர், தனது சேலையை விலக்கி காட்டி, "நல்லா பார்த்துக்கோ ரெண்டு காலும் இருக்கு" என்று சொல்ல, அவளோ "ஹி ஹி " என்று அசட்டு தனமாக தான் சிரித்து சமாளிக்க, சாண்டியோ மானசீகமாக அவளை நினைத்து நெற்றியில் அடித்துக் கொண்டான்.

விதுரனோ "உங்க பெயர் என்ன ஆன்டி?" என்று கேட்க, அவரோ "ஆன்டின்னு கூப்பிடாதே.. எனக்கு பிடிக்காது.. கால் மீ அருந்ததி" என்று சொல்ல, "சரிங்க அருந்ததி" என்று அவன் சொல்ல, வருண் வாய்க்குள் சிரித்துக் கொண்டான்.

அவர்களை நேரே அழைத்து சென்றவர், வாஷ் ரூமை காட்ட, முதலில் அதிதி செல்ல மீதி அனைவரும் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். அவரோ "உங்க பெயர் என்ன?" என்று ஒவ்வொருவராக விசாரித்தவர், " கார் ரிப்பெயார்னா இங்கயே தங்கிக்கலாமே.. காலைல பக்கத்தில இருக்கிற மெக்கானிக்கை வந்து பார்க்க சொல்றேன்" என்று சொல்ல, அவர்களுமே தங்க இடம் கேட்கும் மனநிலையில் இருந்ததினால் உடனே சம்மதித்தும் விட்டார்கள்.

அதிதி வெளியே வந்ததுமே, மாதங்கி போக, ஒவ்வொருவராக தங்களை ப்ரெஷ் ஆக்கி விட்டு வெளியே வந்தார்கள்.

அருந்ததியோ அவர்களை மாடிக்கு அழைத்து சென்றவர், "சாப்பாடு எதுவும் இல்ல, பசிக்குதா?" என்று கேட்க. சாண்டியோ "இல்ல அருந்ததி, இடைல சாப்பிட்டோம்" என்று பதில் சொல்ல, அவரோ அவனை மேலிருந்து கீழ் பார்த்தவர், "குட் கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்டார்.

மாதங்கியோ "க்கும் ஆய்ட்டாலும்" என்று முணுமுணுக்க, சாண்டியோ அவளை முறைத்து விட்டு, "இல்ல அருந்ததி" என்று சொன்னான்.

அவரும் மெலிதாக புன்னகைத்தவர், "சரி உங்களுக்கு ரூமை காட்டுறேன்" என்று அங்கே இருந்த அறைகளை காட்ட, மாதங்கியும் அதிதியும் ஒன்றாக தூங்க சென்றார்கள். வருணோ, "நான் இந்த ரூம்ல படுத்துகிறேன்" என்று ஒரு அறைக்குள் புகுந்து விட, அங்கே ஒரே ஒரு கட்டில் தான் இருக்க, விதுரனோ "இங்க இடம் இல்ல, அவன் மட்டும் தூங்கட்டும், நாம அடுத்த ரூம்ல படுத்துக்கலாம்" என்று சாண்டியுடன் நுழைந்தான்.

நீண்ட நேரம் தூக்கத்துக்கு போராடி அவர்கள் தூங்கி விட, காலையில் முதலில் விழித்தது என்னவோ விதுரன் தான்.

பக்கத்தில் தூங்கிய சாண்டியிடம் "எந்திரி சாண்டி, விடிஞ்சிடுச்சு.. நாம கிளம்பணும்ல" என்று சொல்ல, அவனும் எழுந்து அமர்ந்தவன் கண்களை கசக்கிக் கொண்டே, "சீக்கிரம் கிளம்பலாம் டா" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த குளியலறைக்குள் நுழைந்தான்.

"முதலில அந்த கும்பகர்ணனை எழுப்பணும்" என்று சொல்லிக் கொண்டே வருணனின் அறையை தட்ட போக, அதுவோ தட்டியதுமே திறந்து கொண்டது. உள்ளே நுழைந்தவனோ, "இன்னுமா நீ எதிரிக்கல" என்று குப்புற படுத்து தூங்கிக் கொண்டு இருந்தவனை உசுப்ப, ஒரு சலனமும் இருக்கவே இல்லை.

இதே சமயம், அவனது பால்கனியில் நின்று உள்ளே மாதங்கியுடன் வந்த அதிதியோ "நாங்களும் வந்ததுல இருந்து அவன் பெயரை கூப்பிட்டு பார்த்துட்டோம்.. எந்திரிக்கவே இல்ல. கும்பகர்ணன்... இந்த வியூ நல்ல இருக்குன்னு பார்க்க போய்ட்டோம்" என்று சொல்ல, பெருமூச்சுடன் அவனை திருப்பிய கணம் அனைவருமே பதறி கதற ஆரம்பித்து விட்டார்கள்.. ஆம் அங்கே வாயில் ரத்தம் வடிய, கண்களை திறந்து கொண்டே இறந்து கிடந்து இருந்தான் வருண். 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் – 2

வருணை அந்த நிலையில் பார்த்த அனைவரும் அலற….அவர்களின் கதறல்கள் குளியலறையில் இருந்த சாண்டில்யன் காதிலும் விழவே செய்தது. ஆனால் அவனோ "காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்களா...இவன் ஒருவனை எழுப்புறதுக்குள்ள ஒரு ஊரையே எழுப்பிடலாம் போல" என சலித்துக்கொண்டவன்,

அதே எரிச்சலோடு தன் அறையில் இருந்து முகத்தை பூந்துவாலை கொண்டு துடைத்தபடி "ஒருத்தனை எழுப்ப எத்தனை ஆர்ப்பாட்டம்...டேய் எருமை இப்போ நீ எழுந்துக்கலை உன்னை கொலை பண்ணி….." என சொன்னவன் வார்த்தை காற்றில் கரைய, அங்கே நண்பன் இருந்த நிலையை கண்டு அப்படியே உறைந்து நின்றான்.

அவனின் அதிர்ச்சி எல்லாம் ஒரு நொடிகள் மட்டுமே….அதற்குள் தன்னை மீட்டவன் அவனை நோக்கி விரைந்தான்.

சுற்றி இருந்த அவர்களின் நண்பர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை….கண்ணீர் வடிய வருணின் முகத்தையே பார்த்திருந்தனர்.

"டேய் வருண்…. வருண்...நடிக்காதடா... எழுந்திருடா" என சொல்லியபடி அவன் கன்னம் தொட...சட்டென்று தலை கீழே சரிந்தது.அதில் கையை அவசரமாக எடுத்துக்கொண்டான்.

அவனால் இன்னும் நம்ப முடியவில்லை...ஒருவேளை இது கனவாக இருந்துவிடாதா என்று கூட மனம் எண்ணியது, உண்மை தான் என அறிவு உணர்த்தினாலும்.

திரும்பி தன் நண்பர்களை பார்த்து "என்னடா ஆச்சு" என அதே படபடப்புடன் கேட்க,

"தெரியல மச்சி...நாங்க வரும்போது குப்புற படுத்திருந்தான்,கத்தி கத்தி பார்த்துட்டு அவனை திருப்புனா, இப்படி இருக்கான்" என இன்னும் அதிலிருந்து வெளிவர முடியாத நடுக்கத்தோடு விதுரன் சொல்ல,

பெண்கள் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நடுங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை திரும்பி பார்க்க, இருவரும் அவனை எழுப்பிவிட்டு தாம் பால்கனி சென்றுவிட்டதை சொல்ல,
சாண்டில்யன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

கடந்த ஐந்து வருடங்களாக தங்களோடு இருந்தவன் இப்போது இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தது. அனைத்தையும் அசால்ட்டா எதிர்கொள்ளும் சாண்டில்யனால் கூட நண்பனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் கண்களும் கலங்கி ஒரு துளி கண்ணீரை வெளியேற்றியது.

வருண்...எப்போதும் ஏதாவது கோமாளி தனம் செய்து திட்டு வாங்கிக்கொண்டே இருந்தாலும்...அவன் ஒருநாள் இல்லை என்றால் அவர்கள் கேங் மொத்தமும் களையிழந்து தான் காணப்படும். அவன் மட்டுமே இந்த கூட்டத்தில் மிகவும் கலகலப்பு பேர்வழி.

அப்படிப்பட்டவன் இப்போது இல்லையே என்ற வருத்தம் ஒருபக்கம்...அதையும் தாண்டி 'ஏற்கனவே இருக்குற பிரச்சனையில்….இப்போ புதுசா இதுவேறா' என்ற எண்ணமும் வராமல் இல்லை.
அடுத்து என்ன செய்வது என்று கூட அங்குள்ள யாருக்கும் தெரியவில்லை.

அப்போது எதுவும் அறியாத ஒரு முகபாவத்தோடு உள்ளே நுழைந்தார் அருந்ததி.

நேற்று அவரை பார்த்ததுக்கும் இப்போது பார்ப்பதற்கும் ஏதோ வித்தியாசமாக இருந்தது போல் தோன்றியது சாண்டில்யனுக்கு. நேற்று மங்களகரமாக தெரிந்தே அதே முகம்... பொட்டு...எல்லாம் இன்று ஏனோ சூனியக்காரி போல் அவரை காட்டியது.

கண்டிப்பா இது இயற்கையான மரணமாக இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது. அவன் வாயில் வழிந்த இரத்தமே அதற்கு சாட்சி. உடலில் வேறு காயங்கள் இல்லாத போதும் அவனால் அதை சாதாரணமா எடுத்துக்கொள்ள முடியவில்லை.

வேகமாக எழுந்தவன் "ஏய்….யார் நீ...எதுக்காக இப்படி பண்ண" என அருந்ததியை பார்த்து கத்த,

"டேய் என்னடா பண்ற" என்ற விதுரன் நண்பனை தடுக்க முயன்றான்.

"டேய் என்ன விடுடா...எனக்கென்னவோ இந்த கிழவி மேல தான் சந்தேகமா இருக்கு. யாரு என்னன்னு தெரியாம நம்மளை தங்க அனுமதிச்சப்பவே எனக்கு டவுட் தான். அதுல கொலை பண்ணவா வந்தீங்க அப்படின்னு நக்கல் வேற" என விடாப்பிடியாக நிற்க,

"டேய்...வயசானவங்க என்னடா பண்ணியிருக்க முடியும். அதுவுமில்லாம படியேறி வரதே கஷ்டப்பட்டு தான் வராங்க" என விதுரன் பாட்டிக்கு சப்போட் பண்ண,

"எது கஷ்டப்படுறாங்களா…
என்னவோ பாடி பில்டர் மாதிரி தெம்பா தான் ஏறி வராங்க. அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கே" என்றவன் மீண்டும் அந்த பாட்டியின் புறம் திரும்பி,

"ஏய் என்ன நடந்துச்சு சொல்லு" என கர்ஜிக்க… அவரோ "உங்களுக்கு தங்குறதுக்கு இடம் கொடுத்தா என்னையே மிரட்டுறீங்க. இதெல்லாம் சரிபட்டு வராது முதல்ல இந்த இடத்தை விட்டு காலி பண்ணுங்க...பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு.

தூங்கிட்டு இருக்குற அந்த தம்பியை எழுப்பிட்டு சீக்கிரம் நகருங்க" என்றவர், தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருந்த சாண்டில்யனை பார்த்து இவரும் முறைத்தார்.

"என்ன நடிக்கிறியா….அவனை கொன்னதும் இல்லாம எகத்தாளமா" என கேட்க,

"என்னது செத்துட்டானா…" என வாயை பிளந்தார் அந்த கிழவி.

"அடப்பாவிங்களா…நல்லவனுங்க மாதிரி நடிச்சு வீட்டுக்குள்ள வந்து, இப்படி அநியாயமா அந்த புள்ளையை கொன்னுட்டீங்களே" என தன் ஒப்பாரியை தொடங்க,

"ஏய் திரும்ப திரும்ப நடிக்காத….மரியாதையா சொல்லிடு இல்ல உன்னையும் இங்கேயே கொன்னு போட்டுடுவேன்" என கத்த,

அவனின் அந்த ரௌத்திரத்தில் சுற்றி இருந்த நண்பர்களுக்கு கூட பயம் வந்தது...ஆனால் அந்த கிழவியோ பயம் என்பது இல்லாமல் அதே நிலையில் இருக்க,

இப்போது மற்றவர்களுக்கும் அருந்ததி மீதுதான் சந்தேகம் பிறந்தது.

"உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆள் நானில்லை...முதல்ல இந்த வீட்டை விட்டு எல்லாரும் வெளிய போங்க. அவனையும் தூக்கிட்டு" என பொறிய தொடங்க,

"அதெப்படி போவோம் ...செத்தது எங்களோட ஃப்ரெண்ட். அவனுக்கு என்னாச்சுன்னு தெரியாம இங்கிருந்து போக முடியாது" என்றவன்,

ஏதோ சொல்ல வரும் முன்…"போலீஸுக்கு சொல்லிடலாம் சாண்டி. எனக்கு பயமா இருக்கு" என மாதங்கி சொல்ல,

அதற்குள் அதிதி தனது மொபைலை எடுத்து போலீஸ் எண்ணிற்கு அழைக்க முயன்றாள்.

சட்டென்று அவளின் கைகளில் இருந்து ஃபோனை பறித்தவன் "லூசாடி நீ...இப்போ போலீஸ்க்கு ஃபோன் பண்ணா, முதல்ல நம்மளை தான் உள்ள வைப்பாங்க" என கத்தியவன்,

"அவனோட இந்த வீட்டில் இருந்தது நாம நாலு பேர்,என்றவன் திரும்பி அந்த கிழவியை பார்த்துவிட்டு ஐந்து பேர் தான். அப்படியிருக்கும் போது போலீஸ்க்கு போனா எல்லாருக்குமே ஆபத்து தான். இதை நாமளே தான் சரி பண்ணனும்" என்க,

"அப்போ ... நம்மல்ல ஒருத்தர் தான் கொலைகாரன் அப்படின்னு சொல்றியா டா" என கோபமாக கேட்டான் விதுரன்.

அதற்கு அவனோ "அப்படியும் இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம். அது தெரியல, அதை நாம தான் கண்டுபிடிக்கணும்" என்றவனின் பார்வை விதுரனை அளவிட…

"டேய் என்னடா...என்னையே சந்தேகமா பார்க்கிற. நைட் ஃபுல்லா உன் கூட தானடா இருந்தேன். என்னை போய்" என இழுக்க,

இப்போது பெண்கள் இருவரிடமும் பார்வை பதிந்தது.

மாதங்கியோ…."டேய் ஓவரா போகாதடா. உங்க எல்லாரையும் விட அவனை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவன் ஒன்னும் உங்க ரெண்டு பேர் மாதிரி சிடுமுஞ்சு இல்ல….சோ ஸ்வீட். நான் எப்படி அவனை... போட பைத்தியம்" என சாண்டியை பார்த்து கண்ணீரோடு கத்த,

அதிதியோ அவனை முறைத்தவளாக…."இங்க பார் சா...ண்"...சாண்டி என பெயரை சொல்ல வந்தவள், அவன் காரில் பேசியது நினைவு வரவும்,அதனை விடுத்து "எனக்கு கொல்லனும்னு ஆசையிருந்தா முதல்ல உன்னை தான் கொன்னு இருப்பேன். ஏன்னா அந்தளவுக்கு உன்மேல் கொலைவெறியில் இருக்கேன். அதை விட்டுட்டு அவனே ஒரு அப்பாவி அவனை ஏன் நான் கொல்லனும்" என முகத்தை திருப்ப,

"இது என்னவோ ஒத்துக்க வேண்டிய விஷயம் தான்" என அவளை கூர்மையாக பார்த்தபடி சொன்னவன் கடைசியாக அந்த பாட்டியை பார்க்க,

ஒரு நொடி முகத்தில் தோன்றிய அதிர்வை சட்டென்று மறைத்தவர், "என்ன...என்ன…"என குரலில் மெல்லிய பதட்டம் கலந்தோட கேட்டார்.

"ஆமா... இந்த வீட்ல உன்னை தவிர யாருமே இல்லையா?" என அழுத்தமாக தனது பாதங்களை அவரை நோக்கி வைத்தவனாக நெருங்க,

"யா...யாரும் இல்லையே... நா...நான் மட்டும் தான் இருக்கேன்" என்றார் திக்கி திணறிய குரலில்.

அதேநேரம் விதுரன் எதுவோ நியாபகம் வந்தவனாக… "ஆமா நேத்து எதுக்கு நடுராத்திரியில் நீ ரூமை விட்டுட்டு வெளிய போன" என சாண்டில்யனை பார்த்து கேட்க,

"அது ஒன்னுமில்ல...ஒரு முக்கியமான ஃபோன் வந்துச்சு" என்றான் ஒரு மாதிரி குரலில். அதில் அதிதி அவனை முறைத்து பார்க்க,

அவனோ 'இவளுக்கு வேற வேலையே இல்ல' என நினைத்தவன், விதுரன் பக்கம் திரும்பி "என்ன ஒருவேளை நான் இந்த கொலையை பண்ணியிருப்பேன்னு சந்தேகமா" என்றவன்,

"கண்டிப்பா நான் இல்ல...நான் ஃபோன் பேசும் போது மணி ஒரு இரண்டு இருக்குமா. பேசிட்டு உடனேயே வந்துட்டேன். ஆனா நம்ம வருண் இறந்தது கண்டிப்பா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடியா தான் இருக்கணும்.

ஏன்னா….நான் அவன் கன்னத்தை தொடும் போது உடம்பில் இன்னுமே கொஞ்சம் சூடு இருந்துச்சு… ரொம்ப நேரம் ஆகியிருந்தா உடம்பு சில்லுனு விறைத்து போயிருக்கும். நான் தொட்டதும் தலை சாய்ந்திருக்காது. சோ கண்டிப்பா இது நடந்து ஒரு மணி நேரம் தான் இருக்கும்" என சொல்ல,

"ஒரு மணி நேரமா… என அதிர்ந்த மாதங்கி, நாங்க ரெண்டு பேரும் காலையில ஐந்து மணிக்கே எழுந்துட்டோமே… புது இடம் சரியா தூக்கம் வரலை.அதான் சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு கிளம்பி ரெடியா இருந்தோம். அதுக்கப்பறம் தான் இவனை எழுப்ப வந்தோம். எங்களுக்கு எந்த சத்தமும் கேட்கலையே....அத்தனை அமைதியா இருந்துச்சு வீடே" என சொல்ல,

மேலும் மேலும் குழப்பம் கூடிக் கொண்டே போனது… தீர்வு என்பது இல்லாமல்.

அப்போ யாரா இருக்கும் என யோசிக்கும் போதே...மாதங்கி கோபமாக "யாருக்கு தெரியும்,ஒருத்தன் கிட்ட வம்பு பண்ணியிருந்தா பரவாயில்ல...யாருன்னு தெரிஞ்சிருக்கும். நீங்க ரெண்டு பேரும் தான் பார்க்குற ஒருத்தனையும் விடுறது இல்லையே.

காலேஜ்….ஆபீஸ்... வெளிய... அப்படின்னு இருக்குற எல்லா இடத்திலும் எதிரியை தானே சம்பாதிச்சு வெச்சிருக்கீங்க. அப்படி என்ன தான் கோபம் வருமோ. அதுவும் இந்த சாண்டிக்கு கோபம் வந்தா என்ன பண்றோம்னு கூட தெரியறதே இல்ல….உடனேயே கையை நீட்டிட வேண்டியது.

நேத்து வரும் போதும் அப்படிதான், எவனோ தெரியாம கார்ல மோதிட்டான்னு... ரோடுன்னு கூட பார்க்காம அந்த அடி அடிச்சா. அதுல எவன் இப்படி பண்ணானோ" என கத்த,

அதுவரை அமைதியாய் இருந்த அதிதி, சாண்டியை பற்றி சொல்லவும் கோபமாக மாதங்கியை முறைக்க…

"இப்போ எதுக்குடி என்னை முறைக்கிற….உள்ளதை தானே சொன்னேன். இல்லாததை சொல்லலையே .. அவன் உன்கிட்ட இப்படி நடந்துக்கும் போதே அவனை எதுவும் சொல்ல விட மாடேங்குற" என தோழியையும் திட்டி தீர்த்தாள்.

"ஒரு நிமிஷம் இரண்டுபேரும் சும்மா இருக்கீங்களா" என அந்த மாளிகையே அதிரும்படி கத்தினான் சாண்டில்யன்.

"ஒருவேளை என்னை பழிவாங்க வந்திருந்தா...எதுக்காக என்னை விட்டுட்டு இவனை கொல்லனும்.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க...நான் என் வீட்ல தனியா தானே இருக்கேன். அப்போ எல்லாம் விட்டுட்டு நீங்க எல்லாரும் கூட இருக்கும் போது, அதுவும் இந்த காட்டுல கொல்ல வர என்ன அவசியம். நாம இன்னைக்கு இங்க வரது நம்மளை தவிர யாருக்கும் தெரியாது. அதுவும் கார் ரிபைர் ஆகி இப்படி ஒரு வீட்ல இருப்போம்னு நமக்கே தெரியாத போது….எப்படி பழிவாங்க ஒருத்தன் வருவான்.

இதுல வேற என்னமோ இருக்கு… சுத்தி வீடுகளே இல்லாத காட்டு வழியில ஒரு வீடு... அதுல ஒரே ஒரு வயசான கிழவி மட்டும் இருக்காங்க அப்படின்னா .. அது எப்படி சாத்தியம்" என சொல்ல,

நண்பர்களுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. இப்போது அனைவரின் சந்தேகத்திற்கு பாத்திரமாக அருந்ததி மட்டுமே காணப்பட்டார்.

மீண்டும் அனைவரின் பார்வையும் அவரையே நோக்க….அப்போது வீட்டின் வெளியே காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

அதில் கடுப்பாகி "ஏய் ஓல்ட் லேடி... இங்க உன்னை தவிர யாருமே இல்லன்னு சொன்ன….அப்போ வந்திருக்கிறது யாரு" என விதுரன் கேட்க,

சாண்டியோ ஜன்னல் வழியே எட்டி பார்த்தான்,யார் வந்திருக்கிறார்கள் என்று.

ஒரு நாற்பது...நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியே நின்றிருக்க...இவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவரும் அதே ஜன்னலை தான் பார்த்தார். அதில் சட்டென்று சாண்டி மறைந்து நின்றுகொள்ள….காலிங் பெல்லை தொடர்ந்து இப்போது கதவை தட்டும் சத்தமும் கேட்டது.

திருத்திருவென முழித்த அருந்ததியிடம் "யார் அது?.." என கேட்க,

"அது….தெரியல….யாருன்னு எனக்கு தெரியாது" என்பதையே திரும்ப திரும்ப சொல்ல,

"அப்படியா….ஆனா உன் முழியே சரியில்லையே… சரிவிடு,நீ சொன்னதை நம்பிட்டோம். போ...போய் கதவை திற" என்றான் சாண்டி.

"டேய் எதுக்குடா கதவை திறக்க சொல்லுற...தேவையில்லாம பிரச்சனை பெருசாக போகுது.வந்தவன் யாருன்னு தெரியலை...ஒரு வேலை போலீஸ் ஏதாவது" என விதுரன் பதற,

பெண்களும் “வேணாம் சாண்டி….எங்களுக்கு பயமா இருக்கு" என நடுங்க,

"நமக்கே இப்போதான் தெரியும்...அதுக்குள்ள எப்படி போலீஸ் வரும். வந்தது யாருன்னு கண்டிப்பா பாட்டிக்கு தெரியும்.. இல்லையா பாட்டி?" என கொஞ்சம் அழுத்தமாக சொன்னவன்,

நண்பர்களிடம் கண்ணை காட்டி பொறுமையாக இருக்குமாறு அடக்கியவன், "போ...போய் திற" என மீண்டும் கத்தினான்.

தலையை உருட்டியபடியே… அருந்ததி கீழே இறங்க…"டேய் விது நீ மட்டும் என் கூடவா. நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க வெளியே வராதீங்க" என பெண்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு நகர,

"நாங்க மட்டும் தனியாவா" என்று அலறிய அதிதி சட்டென்று சாண்டியின் கரத்தை பிடித்துக்கொள்ள…
அவனோ திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.

"இல்ல தனியா இருக்க பயமா இருக்கு அதான்" என வருணை பார்த்தபடி சாண்டியிடம் சொல்ல,

"உன்னை மட்டுமா விட்டுட்டு போறோம்...அதுதான் மாதங்கி இருக்காளே அப்பறம் என்ன?..ரொம்ப சைல்டிஷா பிகேவ் பண்ணாத.முதல்ல கையை எடு" என கடுப்பில் கத்திவிட்டு,
அருந்ததியை தொடர்ந்து இருவரும் கீழே இறங்கினார்கள்.

அவனையே பார்த்தபடி கதவை திறக்க உள்ளே நுழைந்தவர்…"பா….என வாயை திறக்கும்போது தான் பின்னால் நின்றிருந்த இருவரையும் பார்த்தார்.

"நீங்க" என அவர் இழுக்க….அவர்களும் "நீங்க யார்" என கேட்டிருந்தனர்.

"நான்"... என எதையோ சொல்ல வந்தவரை தடுத்து "என்னோட பையன் என்ற அருந்ததி.நாங்க ரெண்டு பேரும் தான் இங்க தாங்கி இருக்கோம்" என படப்படவென சொல்ல,

சாண்டியோ அப்படியா என்பதுபோல் தலையசைத்தவன்...இருவரையும் பார்க்க...இருவர் கண்களிலும் ஒருவித படபடப்பு...பயம் இருப்பதை உணர்ந்துக் கொண்டான்.

"அப்போ நேத்து நைட் கேட்டதுக்கு ஏன் இல்லைன்னு சொன்ன….இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியும் இவர் யாருன்னே தெரியாது அப்படின்னு சொன்னதா நியாபகம்…. எதுக்கு இந்த பொய்….யாரை ஏமாத்த" என கத்தியவன் சற்று நிறுத்தி,

"என்ன அம்மாவும் பையனும் சேர்ந்து தான் இந்த கொலையை பண்ணீங்களா" என கேட்க,

"என்னது கொலையா...இங்க என்ன நடக்குது...உங்க எல்லாருக்கும் இங்க என்ன வேலை" என வந்தவர் கத்த,

அவர்கள் அனைத்தையும் சொல்லவும்….இப்போது திரும்பி அருந்ததியை பார்த்து முறைத்தார்.

"உங்க அம்மா பையன் சண்டையை அப்பறம் வெச்சிக்கோங்க...இப்போ எனக்கு பதில் சொல்லுங்க" என விதுரன் கேட்க,

"இங்க பார் தம்பி….நடந்ததுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் வேலைக்கு போய்ட்டு இப்போதான் வரேன்,அதேமாதிரி கொலை பண்ற அளவுக்கு எல்லாம் இவங்களுக்கு தைரியம் இல்ல" என அருந்ததியை பார்த்து சொன்னவர்,

"தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்புங்க தம்பி...நாங்களே யாரும் வேணாம் அப்படின்னு தான், இங்க வந்து தனியா இருக்கோம். தேவையில்லாம உங்க பிரச்சனையில் எங்களை கோர்த்து விடாதீங்க" என்றார் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

"அப்படியா….என்ற சாண்டி, விதுரா போலீஸுக்கு ஃபோன் பண்ணுடா. கண்டிப்பா இவங்க தான் இதை பண்ணியிருக்கணும்..முகத்தை பார்த்தாலே எதையோ மறைக்கிற மாதிரி தான் இருக்கு" என விஷயத்தை போட்டு வாங்க முயல,.

போலீஸ் என்றவுடன் அந்த ஆளின் முகத்தில் வியர்வை துளிகள் அதிகரிக்க…"போலீஸ் எதுக்கு, இங்க பாருங்க எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்ல" என மீண்டும் மீண்டும் அதையே சொல்ல,

"எந்த சம்மந்தமும் இல்லனா...எதுக்கு பயம். போலீஸ் வரட்டும் வந்து யாரு குற்றவாளின்னு கண்டுப்பிடிக்கட்டும். நீங்க தான் ஒன்னும் பண்ணலயே அப்பறம் என்ன?..."என அவர்களின் பதட்டம் அதிகமாவதை சந்தேகமாக பார்க்க,

விதுரனோ…. போலீஸ்க்கு கால் பண்ணுவது போல் ஆக்சன் கொடுக்க...அதில் மொத்தமாக பயந்து போனார் அந்த மனிதன்.

"தம்பி...தயவு செஞ்சு போலீஸ் வேணாம். நான் உண்மையை சொல்றேன்" என சொல்ல,

இருவரின் தீவிரமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல்…"தம்பி போலீஸ் வந்தா என்னை பிடிச்சிடும், ஏன்னா நான் போலீஸ் தேடிட்டு இருக்குற திருடன். பெருசா எல்லாம் இல்ல சும்மா பிட்பாக்கேட் மாதிரி தான். ஏதாவது பொருளா கிடைச்சா அதை அப்படியே கைமாதி விட்டுட்டு கமிஷன் வாங்கிடுவேன்.

அதுமட்டும் தான் நான் பண்ணுற தப்பு...கொலை பண்ற அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்ல. போலீஸ் கிட்ட மாட்ட கூடாது அப்படின்னு தான், ஊரை தாண்டி இருக்குற.. இந்த காட்டு பாதையில் இருக்கோம்" என சொல்ல,

அவர்களை முழுவதுமாக நம்ப முடியவில்லை…. இன்னும் எதையோ இருவரும் சேர்ந்து மறைப்பது போலவே ஒரு பிம்பம் சாண்டில்யனுக்கு.

"நீங்களும் இல்லனா இந்த கொலையை யார் பண்ணது" என்றவனை பார்த்து…"ஒருவேளை பேய்...இல்ல காத்து கருப்பு இப்படி ஏதாவது அடிச்சிருக்குமோ. ஏன் சொல்றேன்னா இதேமாதிரி இதுக்கு முன்னாடியும் ஒரு சம்பவம் நடந்திருக்கு.

கொஞ்சநாள் முன்னாடி கூட உங்களை மாதிரியே வண்டி ரிபைர் அப்படின்னு சொல்லிட்டு இரண்டு பேர் வந்தாங்க…. அவங்கள்ல ஒருத்தன் இதே மாதிரி தான் இரத்தம் வாந்தி எடுத்து செத்தான்.

அதுமட்டுமில்ல இங்க வந்து தங்குற நிறைய பேருக்கு இப்படி ஆகியிருக்கு அப்படின்னு ஒரு வதந்தி. அதான் யாருமே இந்த பக்கம் வரது இல்ல" என்றார் அசால்ட்டாக.

அதை கேட்டதும் இன்னும் அதிர்ந்தனர் இருவரும். தொடர்ந்து இதே மாதிரியா?... என்ற கேள்வி இருவர் மனதிலும்.

அனைத்திற்கும் காரணம் 'உயிரில்லாத பேயா... மனித உயிரை குடிக்கும் உயிருள்ள பேயா'…!

 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3

சாளரத்தின் வழியே சில்லென்று காற்று அவள் மீது பட்டும் படாமல் தீண்டிக் கொண்டிருக்க, வானையே உள்ளிருந்தபடி வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி. நேற்று நடந்த கூடலில் சிவந்திருந்தது பெண்ணவளின் வதனம். கழுத்தில் மங்கள நாண் பளிச்சென்று மிளிர்ந்துக் கொண்டிருக்க, மகிழ்ச்சியில் இருந்திட வேண்டியவளுக்கோ, மனம் முழுவதும் பாரம் உழன்றுக் கொண்டிருந்தது.

ஆசைப்பட்டவனை மணம் முடித்த போதும் பெண்ணவளின் மதி முகத்தில் கலக்கம் தோன்ற ஒரே காரணம், அவளது திருமணம் காதல் திருமணம் என்பது மட்டுமே. பெற்றோர்களின் ஆசியோடு தன் திருமணம் நடக்கவில்லையே? என்ற ஏக்கம் திருமணமாகி ஒரு மாதம் கடந்தும் இருக்க, அவளது மலர்ந்த விழிகளுக்குள் உவர் நீர் சுரந்திருந்தது.

பெற்றெடுத்த தந்தையும், தாயும் அவள் மீது வெறுப்பை உமிழ்ந்ததும், என்றும் வர்ஷி என்று உரிமையுடன் சண்டையிடும் தம்பியின் மௌனமும் அவளது மனக் கண்களில் தோன்ற, விழுக்கென்று அவளது கண்களிலிருந்து கண்ணீர் விழுக, அந்நேரம் திடீரென்று அவளது இடையில் பதிந்த அவளவனின் கைகள் தந்த அணைப்பில், தன் கண்ணீரை மறைத்தவளது உடலில் சிறு அதிர்வு தோன்றி மறைந்தது.

"ப்ச் விடுங்க.." என்றவள் சிணுங்க, அப்படி சொல்லிவிட்டால் விடுபவனா அவன்?

"என் பொண்ணு சும்மா இருந்தாலே விடமாட்டேன். இப்படி அழுதா விடுவேனா?" என்றவனின் கூற்றில் அவளது முகம் அதிர்ச்சியில் விரிந்தது. முகம் மறுபுறம் திரும்பி இருந்தும் எவ்வாறு இவர் கண்டு கொண்டார்? என்ற அதிர்ச்சி அவளது நயனங்களில் தெரிய, அதைக் கண்டு அவளவனது முகத்தில் சிறு முறுவல் அழகாய் மலர்ந்தது.

"ஹேய் பொண்ணு ரொம்ப யோசிக்காதடி, போலீஸ்காரன் அப்படி தான் பட்டுனு கண்டுபிடிப்பேன்." என்று கூறிக்கொண்டே தன்புறமாக அவளைத் திருப்பினான் அவன்.

தன்னவனை நிமிர்ந்து பார்த்தவளோ, அவனது கைகளை பிடித்து தன்புறமாக காட்டியபடி தன் பார்வையாலே அவனது கைகளில் ஈரமாக விழுந்திருந்த தனது கண்ணீரினை சுட்டிக் காட்டினாள். அவன் அவளைப் பிடித்த போது மறைக்க முயன்ற கண்ணீரின் ஒரு துளி அவனது கைகளில் பட்டென்று விழுந்திருக்க, அவளது கண்களும் அதனைக் கண்டுக் கொண்டது.

"இப்படி தானே?" என்றாள் புருவம் உயர்த்தி, அவளது சாதுர்யத்தைக் கண்டு புன்னகைத்தவன், "சரியான கேடி பொண்ணு." என்று அவளது நெற்றியில் முட்டினான்.

"போலீஸ்காரர் பொண்டாட்டியாக்கும். இதகூட கண்டுபிடிக்கலைனா எப்படி?" என்று மீண்டும் அவனது தலையை இவள் முட்டிவிட்டு கூற, தன் வெண்பற்கள் தெரிய புன்னகைத்தான் நிரல்யன். அமிர்தவர்ஷினியின் காதல் கணவன்.

தனக்கே உரிய தோரணையும், கம்பீரமும் நிறைந்தவனது இரும்பு திரையை விலக்கி அவனது மனதில் நுழைந்த பெண் அமிர்தவர்ஷினி. முதல் சந்திப்பில் அவனது மனதில் இவள் பதிந்திருக்க, இரண்டாம் சந்திப்பிலேயே அவளிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தான் நிரல்யன். அவனது அதிரடியில் மிரண்டவள், பேயைக் கண்டதுப் போல அவனை மிரட்சியுடன் பார்த்தபடி தெறித்து ஓடியிருந்தாள்.

அன்று அவளைக் கண்டு புன்னகைத்தவன் தான். அந்த புன்னகை மற்றும் அவனது மாறாத நேசம் கொண்டே அவள் மனதிலும் இடம் பெற்றவன், அவளது வீட்டில் பெண் கேட்க, காவல்துறையைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்தினால் மறுத்திருந்தனர் அவர்களது பெற்றோர். அதுமட்டுமின்றி அவரது வரட்டு கௌரவம் கூட காரணமாகி போக, அவசர அவசரமாக வேறு ஒரு வரனை அவளுக்காக பார்த்திருந்தனர். ஆதலால் வேறு வழியின்றி நடந்தது தான் இவர்களது திடீர் திருமணம்.

தன்னவளது முகத்தை தனது இருகரங்களால் ஏந்தியவன், "ஹே பொண்ணு எதுக்கு இந்த அழுகை? உனக்கு நான் இருக்கேன். நான் பார்த்துக்குறேன். சீக்கிரமே உங்க அப்பா அம்மா அப்புறம் உன் சிடுமூஞ்சி தம்பி மூணு பேரையும் உன்னோட சேர்த்து வைக்குறது என் பொறுப்பு." என்றான் உறுதியாக.

"எதுவும் மாறாதுப்பா. அப்பா பத்தி தான் உங்களுக்கே தெரியுமே? ஆனால் என் தம்பி ஒரு வார்த்தை கூட என்னோட பேசலை. அவன் பார்த்த பார்வை இருக்கே? அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு."

"அமிர்தா அவன் ஒரு ஆளுனு இப்படி ஃபீல் பண்ற? மனசுல பெரிய சண்டி வீரன்னு நினைப்பு அவனுக்கு." என்றான் எள்ளல் தொனிக்கும் குரலில். முதன்முதலாக பெண் கேட்க சென்ற போதும் கூட, சாண்டில்யனுக்கும் நிரல்யனுக்கும் இடையில் பார்வையாலே யுத்தம் நடந்தேறியது அல்லவா? அதன் தாக்கம் தான் நிரல்யனது சீண்டல்.

"நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் என் தம்பி சண்டி வீரன் தான். அவனை எதாவது சொன்னீங்க?" என்றவள் ஒற்றை புருவத்தை உயர்த்த,

"பார்ரா.... தம்பியை சொன்னதும் கோபம் வந்திடுச்சோ என் பொண்டாட்டிக்கு...." என்று கடைசி வார்த்தையில் அழுத்தமிட்டுக் கூற, அவளது கோப முகத்தில் நொடியில் வெட்கம் பிரதிபலித்தது.

"போங்க நிரல்." என்றவள் அவனை விட்டு விலகி வர எத்தனிக்க, அவளது இடையை சுற்றி வளைத்தவன், தன்னோடு சேர்த்தபடி இறுக அணைத்துக் கொண்டான். அவனது தீண்டுதலில் பெண்ணவளது தேகம் சிலிர்த்து அடங்கியது. அவனது கைகளோ அவளது மென்மையான சேலை விலகியிருந்த இடையை வருடிக் கொடுக்க, தன்னவனின் செயலில் இன்ப அவஸ்தையில் நெளிந்தாள் பெண். அவனோ, "சோ சாஃப்ட்." என்று கிறக்கமாக உரைக்க, "விடுங்க." என்று வெட்கத்தில் சிவந்தபடி உரைத்தாள் அமிர்தா.

நிரல்யனோ அவளது வெட்கத்தை ரசித்தபடி பெண்ணவளின் கழுத்தில் முகம் புதைத்தான். அவனது சூடான மூச்சுக்காற்று அவளது வெண்கழுத்தில் பட்ட நொடி சிவந்து போனது அவள் தேகம். வெட்கமும் பெண்ணவளின் முக சிவப்பும் போட்டி போட்டுக்கொண்டு தோன்ற, கழுத்தில் பதித்த தன் முகத்தை நிமிர்த்தி அவளைக் கண்டவனது பார்வை வெகுவாக அவளை ரசித்தது.

"இப்படி எல்லாம் வெட்கப்பட்டா, எப்படி என் பொண்டாட்டியை விட முடியும்?" என்றவன் அவளையே குறுகுறுப்பாய் பார்க்க, அவனது பார்வையில் நெளிந்தவள், 'இப்படி பார்த்தே இம்சை பண்றாரே' என்று மானசீகமாக மனதில் புலம்பினாள். அவளது செயலைக் கண்டு லேசாக புன்னகைத்தவன், அதற்கு மேல் அவளை சீண்டாமல் அவளது இடையிலிருந்து கைகளை எடுத்திருக்க, 'அப்பாடா' என்றிருந்தது அவளுக்கு.

"உங்க அப்பா அம்மாவை கன்வின்ஸ் பண்ண செம ஐடியா என்கிட்ட இருக்கு." என்றவன் அவளைப் பார்த்துக் கொண்டே கூறியதும், அவளது முகத்தில் ஆர்வம் தோன்ற, "என்ன ஐடியா?" என்றாள் உற்சாகமாக.

சுற்றி முற்றி பார்த்தவன், "காத காட்டு." என்று ரகசியம் போல் உரைத்த நொடி, அவளும் அவனுக்கு பக்கவாட்டாக நின்று காதினைக் காட்ட, அவன் கூறிய பதிலில் சிவந்தவள், அவனது காலை ஓங்கி மிதித்தாள். அவளது செயலில் அவன் பிடி விலகியிருக்க,

"போடா நீயும் உன் ஐடியாவும்." என்றாள் அமிர்தா முறைத்துக் கொண்டே.

"என்னடி பொசுக்குனு மரியாதை இல்லாமல் பேசிபுட்ட? நியாயப்படி, நீ ச்சீ போங்கனு தான் வெட்கப்படணும்." என்று பாவமாக உரைத்தவனை, கோபமாக உறுத்து விழித்தவள்,

"அடிக்காமல் விட்டனேனு சந்தோஷப்படுங்க. வந்துட்டாரு ஐடியா சொல்ல." என்றவள் அங்கிருந்து சென்றிருக்க,

"பொண்ணு நில்லுடி?" என்றவன் அழைத்த அழைப்பு அவளை எட்டும் முன், இவனுக்கு அழைப்பு வந்திருந்தது கைபேசியில்.

"சொல்லுங்க தணிகாசலம்."

"முக்கியமான கேஸ் விசயமா இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை வர சொன்னாரு சார்." என்று மறுபுறம் தொடர்பிலிருந்த ஏட்டு கூறியிருக்க,

நிரல்யனின் முகத்தில் யோசனை ரேகை படிய, "சரி வரேன்." என்றவன், விரைந்து தயாராகியபடி, அமிர்தாவிடம் விடைபெற்று சென்றான். தன் கணவனை வழியனுப்பியவள், வீட்டிற்குள் நுழைந்திருக்க, அந்நொடி கண்ணாடி உடைந்த சத்தம் அவளது செவிகளை அடைந்தது.

பதட்டத்துடன் உள்ளே சென்றவள், நாலாபுறமும் கண்களை சுழலவிட, பூனை ஒன்று சாளரத்தின் வழியாக குதித்தபடி ஓடிச் சென்றது. "உன் வேலை தானா? என்னத்த இது உடைச்சிட்டு போகுதோ?" என்று வாய்விட்டு புலம்பியவள் கீழே பார்க்க, அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அங்கு கீழே உடைந்துக்கிடந்தது என்னவோ, அவளும் அவளது தம்பியும் இருக்கும் சிறிய புகைப்பட ஃப்ரேம். அவளுக்கு மிகவும் பிடித்த புகைப்படமும் கூட. அதை கண்டதுமே அவளுக்கு பதட்டம் அதிகரிக்க, கீழே அமர்ந்தவள் கண்ணாடி சில்லை நீக்கியபடி தனது தம்பியின் புகைப்படத்தை பதட்டம் சிறிதும் குறையாமல் பார்த்தாள்.

அதில் சிரித்த முகத்துடன் அவளை அணைத்தபடி நின்றிருந்த தம்பியைக் கண்டவளுக்கு, கண்கள் கலங்கிப் போனது. அவளது கண்ணீர் அவனது புகைப்படத்தில் விழ, பெண்ணவளின் உதடுகளோ, "சாண்டில்யா." என்று அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ? என்ற அச்சத்தில் உரைக்க, அமிர்தாவின் இதயமோ பயத்தில் வேகமாக துடித்தது.

இங்கு அதைவிட பயத்திலும் பதட்டத்திலும், இருந்தனர் விதுரனும் சாண்டில்யனும். ஏற்றுக் கொள்ள இயலாத இழப்பு ஒரு புறமிருக்க, அந்த மனிதன் உரைத்த செய்தி வேறு இடியாக தலையில் இறங்க, அவ்விடம் நடக்கும் மர்மம் அறியாது தவித்துப் போய் அமர்ந்திருந்தான் சாண்டி.

வீட்டில் நடந்த பிரச்சினையில் விரக்தியில் இருந்தவனுக்கு அடுத்தடுத்து வந்தவை அனைத்தும்
சோதனைகளே. அக்காவின் காதல் திருமணம் வீட்டையே உலுக்கியிருக்க, அதிதியின் பிரச்சினை அவனைப் பாடாய் படுத்தியிருக்க, இதோ அடுத்த சோதனையும் வந்துவிட்டது. வருணை எண்ணி கலங்கவா? இல்லை மற்றவர்களுக்கு ஏதேனும் நேர்ந்திடுமோ?என்று கவலைக் கொள்வதா? என்று பதில் தெரியாத கேள்விகளுக்கு விழி பிதுங்கி போய் அமர்ந்திருந்தவனுக்கோ, பழைய நினைவுகள் அனைத்தும் மனத்திரையில் வந்து சென்றது.

வருண் விதுரன், மாதங்கி, அதிதி மற்றும் சாண்டி ஐவரின் நட்பும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே தோன்றியிருக்க, அதிதியிடம் மட்டும் நட்பில் தொடங்கிய உறவு காதலாக மலர்ந்திருந்தது. காதல் தந்த சுகத்தில் இருவருமே லயித்திருந்தனர். இந்நிலையில் தான் அதிதியின் திருமண பேச்சுக்கள் வீட்டில் எழுந்தது.

"சாண்டி, என் டாட் கிட்ட நம்ம லவ் பத்தி சொல்லிட்டேன். டாட் உன்னை மீட் பண்ணனும்னு சொல்றாரு. சீக்கிரமே டாடிகிட்ட வந்து பேசுடா." என்று ஆர்வத்துடன் கூறுபவளை காதலோடு பார்த்தான் சாண்டில்யன்.

அதிதியின் பெற்றோர்கள் இன்றைய நாகரீக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால் எளிதாகவே எடுத்துக் கொண்டனர். ஆனால் சாண்டில்யனின் வீட்டில் அவ்வாறு இல்லை. பாரம்பரியம், கௌரவம் இது தான் அவர்களது வீட்டினருக்கு மிக முக்கியமானதாக இருக்க, ஏற்கனவே அக்காவின் காதல் விவகாரம், அவ்விடம் பூகம்பம் போல் சென்றுக் கொண்டிருந்தது. அதை எல்லாம் மனதில் வைத்தவன்,

"அதி கொஞ்சம் வெயிட் பண்ணு பேபி. மொதல்ல எங்க வீட்டுல இருக்க பிராப்ளம் சரியாகட்டும். அப்புறம் உங்க வீட்டுல வந்து பேசுறேன்." என்றான் நிதானமாக.

"ப்ச் சாண்டி, ஜஸ்ட் டாட் கூட மட்டும் பேசு ப்ளீஸ்." என்றவள் கெஞ்சுதலாக உரைத்த நொடி, அவள் உதட்டை பிதுக்கிக் கொண்டு கூறிய பாவனையிலேயே எப்போதும் போல அவளிடம் விழுந்தான் சாண்டி.

"ஓகே மை டியர் பேபி." என்றவன் அடுத்த நொடியே மறுப்பின்றி கூற, அவனை தாவி அணைத்திருந்தாள் அதிதி. அவளது தலையை வருடியவனோ, பெண்ணவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டிருக்க, அவளும் பதில் முத்தம் அவனது கன்னத்தில் கொடுத்திருந்தாள். அன்றைய அணைப்பு தான் இருவருக்கும் கடைசி அணைப்பாக இருக்க, அதன்பின் விதி அவர்களது வாழ்வில் பெரிதாக விளையாடியது.

அதிதியின் தந்தையை சந்திக்கும் நாளில் தான், சாண்டில்யனின் அக்காவின் திடிர் திருமணம் நடந்தேறியது. வீட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் அவன் எவ்வாறு செல்வான்? தந்தையுடன் அதிதி வெகுநேரம் காத்திருந்து, தந்தையிடமிருந்து அவளுக்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம்.

அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சாண்டில்யனும் அதிதியும் சந்திக்க, தனது கோபத்தை அவனிடம் மொத்தமாகக் காட்டினாள் அதிதி.

"என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரியாமல் பேசாத அதிதி" என்றவன் உறுத்து விழிக்க,

"தெரிஞ்சதுனால தான் பொறுமையாக பேசுறேன் சாண்டி. ஒரு போன் கால் கூட பண்ணலை நீ? அட்லீஸ்ட் இதுதான் பிரச்சினைனு சொல்லியிருக்கலாம். எத்தனை கால் நான் உனக்கு பண்ணேன்னு தெரியுமா?..." என்றவள் கூறும் போதே அவளது முகத்தில் வேதனையின் வடுக்கள் அப்பட்டமாக தெரிய, நிதானித்தவள் மூச்சினை இழுத்து விட்டபடி, "சரி முடிஞ்சது பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்? இப்போவே பதில் சொல்லு சாண்டி. எனக்கு இப்போ கூட ஓகே தான்" என்றாள் உறுதியாக.

"வாட் அதிதி என்ன பேசுற? ஆர் யூ மேட்? எங்க வீட்டுல என்ன பிரச்சினை போகுதுனு தெரிஞ்சும் இப்போ இப்படி கேட்குற? உனக்கு யாரை பத்தியும் கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஓடி போய் கல்யாணம் பண்ணா வீட்டுல எத்தனை பிராப்ளம் வரும்னு கண்கூடா பார்த்தவன் நான். இப்போ நீ பேசுறது ரொம்ப செல்பிஸ்ஸா இருக்கு"

"வாவ் நான் முட்டாள் தான் சாண்டி. உன்னையே நம்பிட்டு இருந்தேன்ல முட்டாள் தான் நான். உங்க அக்காக்கு இருக்க தைரியம் கூட உனக்கு இல்லையா?"

"ஸ்டாப்பிட் அதிதி. எடுத்தோம் கவுத்தோம்னு செய்றதுக்கு இது ஒன்னும் விளையாட்டு இல்லை. வாழ்க்கை... எங்க அப்பா அம்மா மனசு நார்மல் ஆகட்டும். அப்புறம் மெதுவா பேசுவோம்."

"நினைச்சேன்டா. எங்க அப்பாவும் இததான் சொன்னாரு. நீ இப்படி தான் சொல்வேனு. கோபம் மட்டும் இருந்தால் பத்தாது? தைரியம் வேணும். தைரியம் இல்லாத உன்னை போய் காதலிச்சிருக்கேன் பாரு என்ன சொல்லணும்." என்றவள் கோபமாக பேசிய கணம் கைகளை நீட்டியிருந்தான் சாண்டி. அவனது அந்த செயலைக் கண்டு பயத்தில் அதிர்ந்தவள் பார்க்க, ஒருபுறம் மழை வேறு பொழிந்தது.

தைரியம் இல்லாதவன் என்று நினைத்துவிட்டாளே? தன்னை காதலித்ததே தவறு என்கிறாளே? என்ற கோபம் மட்டுமே அவனை கை ஓங்க வைத்தது. இருந்தும் காதல் கொண்ட மனம் அடிக்கவிடாமல் தடுத்து பிடித்திருந்தது‌.

"என்ன அடிக்க உனக்கு மனசு வருதா சாண்டி. நீ முன்ன மாதிரி இல்லைடா. மாறிட்ட..." என்றவளது கண்ணீரை மழைநீர் மறைத்தது.

"மாறிட்டேன்ல அப்புறம் இன்னும் ஏன் நிற்குற, போடி...." என்றவன் கோபத்தில் கத்த,

"அப்போ நான் உனக்கு வேண்டாமா? உன் காதல் பொய்யா சாண்டி?" என்றவள் கேட்ட நொடி ஏற்கனவே கோபத்தில் நின்றவனுக்கு கோபம் சுள்ளென்று பாதம் தொடங்கி உச்சந்தலை வரை ஏறியது.

"ஏய் கடுப்பேத்திட்டு இருக்காத? எங்க உன்னை அடிச்சிடுவேனோனு பயமா இருக்கு போடி இங்க இருந்து." என்றவன் கர்ஜிக்க, அவனது சிவந்த விழிகளைக் கண்டு அதிர்ந்தாள் அதிதி.

"போதும் சாண்டி. இனி நீ கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் போறேன். நமக்குள்ள இனி எதுவுமே இல்லை." என்றவள் விழி நீர் கலங்க கூறினாலும், அவள் மனமோ, 'போகாதனு சொல்லு சாண்டி.' என்று துடித்தது.

ஆனால் அவனோ எதுவும் பேசாது கை முஸ்டியை இறுக மடித்துக் கொண்டு நிற்க, அவனையே வலியுடன் பார்த்தாள் அதிதி.

"சாண்..." என்று அவள் உதிர்க்கும் முன்னர் கை நீட்டி தடுத்தவன், "அதுதான் ஒன்னும் இல்லைனு சொல்லிட்டியே கிளம்பு. டைம் பாஸ்க்கு லவ் பண்ணா இப்படி தான் சொல்லத் தோணும்." என்று இவனும் வார்த்தையை விட, அந்த வார்த்தை அவளை முழுவதும் காயப்படுத்தியிருந்தது.

"ஐ ஹேட் யூ சாண்டி. ஜஸ்ட் பிரேக் அப்." என்று கோபத்தில் உரைத்தவள், கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி அங்கிருந்து வேகமாக சென்றாள்.

தன்னிலையைப் பற்றி புரிந்துக் கொள்ளாது சுயநலமாக பேசுபவளைக் கண்டு கோபம் கொண்டவன், மழையில் நனைந்தபடி, "அதிதி" என்று பற்களை நறுநறுவென கடித்தபடி கத்தினான். இருவருக்குமே கோபம் கண்களை மறைத்திருக்க, அங்கு ஊசலாடியது என்னவோ இருவரது காதல் மட்டுமே.

கடந்த சில வாரங்களாக கோபத்துடனே உழன்றுக் கொண்டிருக்கும் தன் நண்பனின் மனதை சரி செய்திடவும், மீண்டும் அதிதி, சாண்டில்யனை சேர்ப்பதற்காகவுமே அவனது நண்பர்கள் மூவரும் இருவரிடமும் தனிதனியே வெவ்வேறு காரணங்களை கூறி வெளியே அழைத்து வந்திருக்க, அதிதியைக் கண்டதும் கோபம் கொண்டான் சாண்டி. பின் அவனை சமாதானம் செய்து காரில் அழைத்து வரும் வழியில் தான் அவர்களது மொத்த பயணமும் திசை மாறியது.
 
Status
Not open for further replies.
Top