ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உறவுகள் தொடர்கதை- கதை திரி

Arthi Ravichandran

New member
Wonderland writer
0001-7181192809_20210904_085154_0000.png 1. உறவுகள் தொடர்கதை
பள்ளி பருவத்தை முடித்துவிட்டு கல்லூரி தாயின் கைப்பிடித்து நடக்க காத்திருந்த நாட்கள் அது.பல மைல் தூரங்கள் தாண்டி கோவை மண்ணில் கால் பதித்த நாள் அன்று.

அப்பொழுது இந்த மனதிற்கு தெரியவில்லை இந்த மண் என் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களுக்கு காரணமாகவிருக்கிறது என்று.

பல கல்லூரி வாசலில் காத்திருந்து பின்பு கடைசியாக இடம் பிடித்த கல்லூரியின் காலடியில் நானும் என் அம்மாவும் நின்றுக்கொண்டிருந்தோம்.

வழக்கமாக எல்லா அம்மாக்களுக்கும் தன் பிள்ளையை விடுதியில் சேர்க்கும் போது வரும் அச்சம் என் தாய் முகத்தில் சிறிதும் இல்லை.காரணம் நான் மற்றவர்களிடம் எளிதில் பழகிவிடுவதை பார்த்த அம்மாவுக்கு இவள் தன் சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கொள்வாள் என்று சற்று கூடுதல் நம்பிக்கை முன்னரே பதிந்து விட்டது.

அந்த கல்லூரியின் விடுதியைக் காண்பித்து உன் அண்ணனை விடுதியில் சேர்க்கும் போது இருந்த பயம் கூட உன்னிடத்தில் இல்லை என்று கூறி அதற்கான காரணத்தை மீண்டும் மனதில் பதித்தார்.

விடுதியில் சேரும் அச்சத்தில் சிறிதும் நனைந்திடாத அந்த மனம் தாய் சொல்லுக்கு புன்னகைத்து தலை அசைத்தது.

கல்லூரியின் முதல் நாள்.மனதில் பல ஆசைகளும் சில பதடங்களும் மனதை உழுக்க புதிய ஓர் உலகிற்கு வந்ததைப் போல் ஒரு உணர்வு.

அறிமுகம் இல்லாதவர்களிடம் ஆவலாய் சென்று பேசவும் இயலாமல் அமைதியாய் அமரவும் இயலாமல் மனம் பட்ட பாடு வார்த்தைகளால் சொல்ல இயலாது.நண்பர்களை தேடி தவித்த கொடூர காலங்கள் அது.
பள்ளி பருவத்தில் துள்ளி திரிந்த மனதிற்கு கல்லூரியில் முதல் சில நாட்களில் இந்த மனதின் அமைதியும் இந்த தேடலும் நரகம் போலவே தோன்றின.அன்றும் இந்த மனதிற்கு தெரியவில்லை இனிமைகள் எப்பொழுதும் காத்திருந்தே கையில் வந்து சேரும் என்பது.

பேச்சையே தன் மூச்சாக கொண்டவள் தற்பொழுது அமைதியே தன் அடையாளமாய் கொண்டு நடமாடுகிறாள்.......

கல்லூரியின் முதல் நாளிலேயே எனக்கும் இரண்டு தோழிகள் கிடைத்தனர். பின்பு ஏன் என்னுள் இந்த அமைதி என்ற கேள்வி பலர் மனதில் தோன்றும் ஒன்றுதான்.

அவர்கள் முன்பே ஓரே பள்ளியில் பயின்றவர்கள் என்பதால் அவர்கள் உரையாடல்கள் அனைத்தும் அந்த பள்ளி தோழிகளைச் சுற்றியே நகர்ந்தது. ஆகையால் நான் புரியாத புதிர் போல அமர்ந்திருப்பது வழக்கம்.

நான் புதிதாக அவர்கள் இருவரின் நட்புக்குள் சென்று குழப்பங்களை உதிர்த்து தோழமையின் விரிசலாய் விழ நினைக்காத காரணத்தினாலும் சற்று விலகி நின்று விட்டேன். இவைகளே என் பேர் அமைத்திக்கு காரணங்கள் ஆகின.

கல்லூரி முடித்து மாலையில் விடுதி திரும்பினால் அதிலும் ஒரு சிக்கல். தாய் தந்தை அருமை முன்னரே சற்று புரிந்து இருந்த போதிலும் பெற்றோரைப் பிரிந்து தவிப்போம் என்ற ஏக்கம் சிறிதும் இல்லாமல் இருந்த எனக்கு விடுதியின் முதல் நாள் வெறுமையாய் தோன்றிற்று.

அம்மாவின் கைப்பக்குவத்தை ஊதாசின படுத்தியதில்லை என்றாலும் கூட அதை பெரிதாக பாராட்ட மனம் கொள்ளாத எனக்கு தற்பொழுது அதனை போற்றி புகழ்ந்திட தோன்றியது.

வேண்டியதெல்லாம் தட்டில் கிடைத்த காலங்கள் போய் தட்டில் இருப்பதெல்லாம் வேண்டியதாய் ஏற்று கொள்ள மனம் மறுத்தது.

துணிகள் துவைக்க தெரிந்த போதிலும் கூட முதன் முதலில் என் உடைகளை நானே துவைக்க வேண்டும் என்று எண்ணிய போதே மனதோடு சேர்ந்து கண்களும் கலங்கின.

தன் மகள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையோடும் ஒன்றி விடுவாள் என்று பெருமைக்கொள்ளும் பெற்றோரிடம் என் தவிப்பை எடுத்துரைக்க முடியாமல் தவித்தேன்.

இந்த இன்னல்களுக்கு நடுவில் இன்பமாய் வந்து என் மனதில் குடிக் கொண்ட என் உடன் பிறவா சகோதரிகளும் கூட அதே விடுதியில் தான் தங்கியிருந்தனர்.

‌ அவர்கள் என்னை பார்த்துக் கொண்ட விதத்தில் அவர்களின் பாசம் ஒளிர்ந்ததை விட என் வார்த்தைகளை கேட்பதும் என்னிடம் நகைச்சுவையோடு உரையாடி என் துன்பம் என்ன என்பதையே மறக்கடித்த போதுதான் அவர்களின் அன்பை ஆழமாய் உணர தொடங்கினேன்.

இருட்டை முழுவதுமாய் வெறுக்கும் எனக்கு கிடைத்த பரிசோ தரைத் தளத்தில் கிடைத்த அந்த இருட்டு அறை.

பகலில் கூட மின்விளக்குகளை அனைத்து விட்டால் நடுஇரவு போல் தோன்றி நம்மை மிரள வைக்கும்.

மதிய உணவிற்கு உள்ளே நுழைந்து மின்விளக்குகளை போடும் தருணங்கள் திரில்லர் படங்களை பார்ப்பதை விட கொடூர கணங்களாய் மனதை ஒரு நொடி உழுக்கும்.

காலை முதல் மாலை வரை அமைதியால் களைப்புற்ற என்னை வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைப்பதுதான் அந்த ரூம்மெட்களின் சிறப்பு.

விடுதியில் இருள் சூழ்ந்த அறையில் துளியும் விருப்பம் இன்றி நுழையும் நான் வேறு விடுதியியைத் தேடி நாடி ஓடவில்லை காரணம் எனக்கு ரூம்மெட்டாக கிடைத்த மூன்று அக்காக்கள்.

அவர்கள் பெயர் அபிராமி, புஷ்பா, கார்த்திகா என திரையிலும் கதையிலும் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் போல் ஒலித்து என் வாழ்வில் நுழைந்தது.

அவர்கள் மூவருமே முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சீனியர் என்ற கெத்து சிறிதும் காட்டாமல் அன்பாகவே பழகினர். நானும் அவர்களின் அன்பு தங்கையாகவே மாறிவிட்டேன் விடுதியில் சேர்ந்த முதல் வாரத்திலேயே.

என் அம்மா என்னை அழைத்து, விடுதியை பற்றி விசாரித்த போது எனக்கு அந்த இருட்டு அறை காரணமாக விடுதி துளியும் பிடிக்கவில்லை என்றாலும் உடன் இருப்பவர்களை பிடித்து விட்டதால் இப்பொழுது விடுதியை மாற்றும் எண்ணம் எனக்கில்லை. அடுத்த வருடம் இவர்கள் எல்லாம் படிப்பை முடித்து சென்ற பின் நான் விடுதியை மாற்றிக் கொள்கிறேன் என்றதும் எப்பொழுதும் என் விருப்பத்திற்கு மதிப்பு குடுக்கும் அம்மா சரி என்ற வார்த்தையை சம்மதமாய் சமர்ப்பித்தார்.


(அடுத்து: பிரச்சனைகள் வந்தாள் தான் கதை சுவாரஸ்யம் பெறுமா?.. சுவாசங்கள் சுகங்களாய் மாறும் பொழுதும் கூட சுவாரஸ்யம் சூடு பிடிக்கும். கல்லூரி தாயும் விடுதி எனும் தாலாட்டும் தந்தையும் ஆனந்த அலைகளை அள்ளி தெளிக்கும் அடுத்த கட்டத்தில் சோகங்கள் சுவாரஸ்யங்கள் ஆகின)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம்

உறவுகள் தொடர்கதை-கருத்து திரி
 
Last edited:

Arthi Ravichandran

New member
Wonderland writer
அத்தியாயம் 2
உறவுகள் தொடர்கதை​

கஷ்டங்கள் கழுத்தை நெறித்திட அமைதியின் அகோரத்தை அறிந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. கல்லூரியை விட்டு விடுதி தாயின் மடியில் சென்று மன்றாடவே துடிப்பேன்.
விடுதியை விட்டு பறந்து சென்று கல்லூரியில் சிறைப்பிடிக்கப் பட்ட என்னை மீண்டும் சிறகடித்துப் பறக்க செய்ய கடவுள் தோழியின் தோற்றத்தில் துணையை அனுப்பி வைத்தார்.அவள் பெயர் நிலோ.

தனிமை தாங்க மாட்டாமல் தவித்த நான் ஏதோ அவள் உதவுவாள் என்றெண்ணி என் நிலமையை கூற அவள் என் தனிமையை இனிமை ஆக்கினாள்.
நிலோ ஆங்கில துறையில் ஆசிரியர்களுக்கு சில உதவிகள் செய்ய அவ்வப்போது கிளம்பி சென்று விடுவாள். அப்பொழுதெல்லாம் நான் அவளுக்காக காத்திருந்து அவள் வந்த பின்னே இருவரும் சேர்ந்து செல்வதுண்டு. இவ்விதம் எங்கள் நட்பிற்க்கு நாங்கள் செலவிடும் நேரத்தை நேசம் வளர்க்க பயன்படுத்தினோம்.

அதன் பிறகு இன்றளவும் என்னை சிறுபிள்ளை போல் எண்ணி அவள் எங்கு சென்றாலும் யாரிடமாவது என்னை பார்த்து கொள்ள சொல்லி விட்டே செல்வாள்.அன்பின் ஆணிதரத்தை மனதில் பதித்து விட்டே செல்வாள்.

மெல்ல நாட்கள் நகர்ந்தது.தினமும் காலையில் கல்லூரிக்கு கிளம்ப தாமதித்து விடுவேன் என்று அவளே என் விடுதிக்கு வந்து என்னை கிளப்பி கூட்டிச் செல்வதுண்டு.கிளம்பும் அவசரத்தில் பொட்டு வைப்பதையே மறந்து விடுவேன் என்று அவளுக்கு தெரியும். எனவே நான் ஒரு பக்கம் கிளம்பிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் எனக்கு பொட்டு வைத்து நெற்றியில் திருநீறு இட்டு என்னை போராடி அழைத்து செல்வாள்.
நாங்கள் எள்ளளவும் எண்ணாத வண்ணம் எங்கள் உறவு மலை அளவு உயர்ந்தது.அவள் பாதி நேரம் ஆங்கில துறையில் வேலைகள் செய்ய அளைந்துக் கொண்டே இருப்பதால் எப்பொழுதேனும் சந்திக்கும் எங்கள் நட்பை தண்ணீரில் போட்டதும் கரைந்து போகும் ஐஸ் கட்டியாகவே பலர் பார்த்தனர்.
ஆனால் குருச்சேத்திரப் போரில் பூமிக்கும் வானுக்கும் விஸ்வரூபம் எடுத்தார் போல் எங்கள் அன்பு வானளாவி நின்றது. அவை அர்ஜுனன் போல் திவ்யநேத்திரம் பொருந்திய கண்களுக்கே தெரியும் போலாகியது.

கல்லூரி முடித்து விடுதி திரும்பினால் நிச்சயமாக இன்றும் ஒரு உவகை அங்கு காத்திருக்கும் என்று தெரியும். கல்லூரியில் 3.30 க்கு மணி அடித்ததும் மனதில் ஆனந்த மணி அடிக்கும். மறு கனமே விடுதியின் வாசலில் வந்து விழத்துடிப்பேன்.

விடுதியில் செலவிடும் நேரத்தில் துளியும் வீணடிக்க எண்ண மாட்டேன். அதற்க்கு ஏற்றார் போல் கல்லூரியில் இருந்து தடுக்கி விழுந்தாள் விடுதியுள் நுழைந்து விடலாம் என்பது போல் மிக சிறிய இடைவேளேயே இருந்தது இரண்டுக்கும்.

விடுதியில் நாங்கள் வாழ்ந்த விதமே வேறு. நான்தான் அங்கு கடைக்குட்டி என்பதால் என்மீது சற்று கூடுதல் அன்பு காட்டினர். சிறு காலத்திர்க்குள் எங்களுக்குள் ஏற்பட்ட இந்த பாச பிணைப்பை கண்டு விடுதியில் அனைவரும் கண் வைக்கும் அளவு மாறி போனது‌ எங்கள் உறவு.

அவர்களின் உள்ளங்களில் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக நாங்கள் அனைவரும் ஒரே கூடையில் அழுக்கு துணிகளை போடுவதும் ஒன்றாய் சேர்ந்து துவைப்பதுமாய் ஆபூர்வத்தின் எல்லைக்கே மற்ற அனைவரையும் அழைத்து சென்று விட்டோம்.

ஒரே அறையில் ஆறு பேர் ஒன்றாக சண்டை இடாமல் இருந்தாலே பெரிது. அதிலும் துவைப்பதிலிருந்து அனைத்துமே சேர்ந்து செய்வதென்றால் எவ்வளவு பிரச்சினை எல்லாம் வரும்‌ என்று அனைவரும் யோசித்து இருப்பாரோ என்னவோ.ஆனால் நாங்கள் அவற்றை உடைத்து விட்டே வாழ்ந்து வந்தோம்.

துணிகளை துவைக்கும் போதும் இருப்பதிலேயே ரொம்ப எளிதான வேலையாகிய துவைக்கும் வேலையை எடுத்துக் கொண்டு அதை அலசி காயவைத்து எடுத்து மடித்து வைக்கும் வேலை வரை மற்றவர்களிடம் தள்ளி விடுவேன்.
நான் கடைக்குட்டி என்பதால் அவர்களும் தங்கள் அன்பை கொட்டி தீர்க்கும் விதம் எல்லா துணிகளையும் அவர்களே காய வைத்து எடுத்து வந்து மடித்து என் பெட்டிக்குள் வைப்பது வரை பார்த்துக் கொள்ளவார்கள்.

பணக்கார வாழ்வை விட சொகுசான அன்பு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தேன் ‌நான்.
என்னை எங்குமே தனியே செல்ல அனுமதிக்காத அன்பு, சிறிதும் சுயநலம் இன்றி உதவும் உறவு, எதையுமே எதிர்பார்க்காத மனம் அனைத்துமே விடுதியில் புதிதாய் கால்பதித்த எனக்கு பூரிப்பை உண்டாக்கின.

இதற்க்கு நடுவில் நட்பை மேலும் மேற்கோள் இட்டு காட்ட நானும் நிலோவும் சேர்ந்து பேருந்து நிலையம் வரை தினமும் சென்று அவள் பேருந்தில் ஏறிய பின் வழியனுப்பி விட்டு நான் மட்டும் வருவதுண்டு.இதிலும் சிறு சந்தோஷத்தை இருவருமே பார்த்திருந்தோம்.

பார்த்துப்போ என்பதற்க்கு பதிலாக நாங்கள் பயன்படுத்தும் "நோக்கி போவா" என்னும் மலயாள வார்த்தையில் தான் எத்தனை சுகம்.இதை நாள்தோறும் சொல்லி விட்டே விடை பெற, என்றேனும் ஒரு நாள் சொல்லாமல் சென்று விட்டால் ஏதோ ஓர் ஏக்கம் மனதோடு தொற்றி விடும்.
எங்களுக்கு 3.30 க்கு எல்லாம் கல்லூரி முடிய என் ரூம்மெட்டுகள் அனைவரும் முதுகலை படித்து வந்ததால் விடுதி வர 5.30 ஆகும்‌. அதற்குள் வேலைகள் அனைத்தும் முடித்து விட்டு விடுதி திரும்பி விட வேண்டும் என்றே துடிப்பேன்.
நிலோவையும் அதற்குள் வழி அனுப்பி விட்டு வந்துவிடுவேன். ஆனால் என்றேனும் ஒரு நாள் அவளை வழி அனுப்பும் போது வழியில் ரூம்மெட்களில் எவரேனும் ஒருவரை பார்த்தால் அவர்களோடு செலவிடும் நேரம் தவறிவிடக்கூடாது என நிலோவிற்க்கு டாடா காட்டிவிட்டு வந்தவரோடு விடுதி சென்று விடுவேன்.

இது நிலோவிற்கு வருத்தம் அளிக்க அவள் என் மனம் நோகக்கூடாது என அதை நகைச்சுவையாய் சொல்லி சென்றாள். ஆனால் அப்போதே எனக்கு புரிந்தது அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று. செய்வதறியாது திகைத்து நின்றேன்.


(அடுத்து: இந்த இரண்டு உறவையும் எப்படி பேலன்ஸ் செய்வது என்று தெரியாமல் என் மனம் தவித்தது‌. இனி அவள் மனம் அடிக்கடி இப்படியோர் விஷயத்தில் வாடி தவிக்குமோ. அவளால் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுமோ? நான் இருவருக்கும் இருக்கும் இடம் ஒன்றுதான் என்று புரிய வைக்க தவறி விடுவேனோ என்று பலவாறு எண்ணம் கொண்டவளாக நடமாடினேன்).
 

Arthi Ravichandran

New member
Wonderland writer
அத்தியாயம் 3
உறவுகள் தொடர்கதை

இப்படி இரு உயிர்களுக்கு நடுவில் சிக்கலின் சின்னமாக நான் நின்றதில்லை. இந்நாள் வரை அனைவரிடமும் ஒரே போல் பழகி எல்லோருடனும் ஆடி பாடி சுற்றிவிட்டு தற்போது திடீரென ரூம்மெட்களுடன் இருக்க தவிக்கும் எண்ணமே பாதகமாகி விட்டதோ என்று பல எண்ண அலைகள் மனதில் ஊசல் ஆடின.

ஆனால் நிலோ இதில் எதையுமே பெரிதாய் மனதில் கொள்ளாமல் தன் வருத்தத்தை விட்டு, வானவில்லாய் மெலிர்ந்த நட்பை மேலும் மெழுகேற்ற அன்பையே அள்ளி தந்தாள். பொறாமை ஒரு புறம் பொங்கிக் கொண்டு இருந்தாலும் தெளிந்த மனதுடன் அதை அணுகி கடைசியில் அவள் அன்பால் எனது ரூம்மெட்கள் மனதிலும் குடிக் கொண்டாள்.

நமக்கு சோகங்களை தவிர்த்து சுகங்களை தருபவள் தான் தேவதை என்றால் இவர்கள்தான் என் வாழ்வின் தேவதைகள். எங்கு சென்றாலும் என்னை அளவுக்கு மீறி புரிந்துக்கொண்டு அளவில்லா அன்பை தர ஒருவரையாவது அருகில் அனுப்பி வைத்து விடும் கடவுளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் அல்ல வாழ்க்கையே போதாது.

என் விடுதி சகோதரிகளுக்கு என் மீது அக்கறை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. நான் ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என் மாமாவை காண போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன். பக்கத்துக் கடைக்கு கூட தனியே அனுப்ப மனம் கொள்ளாத அவர்கள் புது இடம் என்பதால் தனியே செல்ல வேண்டாம் என்றே கூறினர்.

நான் கல்லூரி முடிந்து 3.30க்கு வந்ததும் தன்னை வந்து பார்க்குமாறும் தான் முடிந்த அளவு வர முயற்ச்சிப்பதாகவும் அபி அக்கா கூறினார். அவரின் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அபி அக்காவை அழைக்காமல் நான் மட்டும் சென்று வந்தேன்.

விடுதி திரும்புகையில் அபி அக்கா எனக்காக விடுதி வாசலிலேயே காத்திருந்தார். நான் வந்ததும் அறைக்கு செல்வதற்க்கு முன்னரே கன்னத்தில் அரைந்தாற் போல் கேள்விகள் வந்தன. நான் என்னை வந்து கூட்டிக் கொண்டு போகும்படிதானே சொன்னேன் என்று வருத்தமும் கோபமும் பொங்க கொந்தளித்தாள் அக்கா.

இது போதாது என்று மேலே அறையில் கார்த்திகா அக்கா கனல் பொங்கும் கண்ணோடு காத்திருக்கிறார் என்றும் சொல்லி சென்றாள் . பயம் கரையோடு ஒட்டிச்செல்லும் கடல் அலைப்போல் மனதோடு மன்றாடியது. ஆனால் இன்னொரு புறம் இவர்களின் அன்பை ஆழ் கடலாய் பாவித்தது இச்சம்பவம். ஆழ்கடலின் ஆழத்தில் சிக்கிக் கொண்டவர் தப்பிக்க இயலாததைப் போல் அன்பின் ஆழத்தில் நான் மட்டும் தப்பி பிழைக்க முடியுமா. திட்டுகளை வாங்கிக் கொண்டு நான் சிரிக்க, பொறுக்க முடியாமல் அவர்களும் சிரித்துவிட்டு நகர்ந்தனர்.

மறுநாள் கிளம்பி கல்லூரிக்கு சென்றேன் என்பதை விட என்னை நிலோ கிளப்பிக் கூட்டி சென்றாள் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அரட்டை நேரங்கள் முடிந்து உணவு அருந்தும் நேரமும் வந்தது. முன்பெல்லாம் தினமும் விடுதி சென்று உண்டு வருவது வழக்கம். நிலோ தன் அம்மாவிடம் என்ன சொன்னாலோ தெரியவில்லை அன்று முதல் அவள் அம்மா எனக்கும் சேர்த்து சமைத்துக் கொடுத்து, பாவம் விடுதி சாப்பாட்டிலிருந்து விலகி ஒரு வேளையாவது வீட்டு உணவு உண்ணட்டும் என்று பாச கயிறு வீசி வசப்படுத்துவார்.

எனக்கென்று தனியாக முட்டைகளும் மிட்டாய்களும் அவ்வப்போது கையில் வரும் அம்மாவின் பெயர் சொல்லி. பழகாத ஒருவரின் பாசத்தையும் கண்ணார கண்டு விட்டேன். வாழ்வில் எனக்குக் கிடைத்த முத்து முத்தான உறவுகளை எண்ணி வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். எங்களின் உறவிற்குள் அம்மாவும் மூன்றாவது தோழி போல் வந்தமர்ந்தார்.

‌ மணலில் இருந்து கல்லைப் பிரித்து எடுக்க முடியாததைப் போல் மனமும் உணர்வும் இனைய வாழ்ந்து வந்தோம். நண்பர்களுக்கு நடுவில் பணத்தால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பார்கள் ஆனால் எங்களின் உறவில் அது புகுந்து விளையாடத் தொடங்கியது.

(அடுத்து : அன்பும் ஆர்ப்பாட்டமும் பொங்கி, அன்னாந்து பார்ப்பவர்களை ஆச்சரியத்தில்
ஆழ்த்திய உறவுக்கு பணத்தால் பங்கம் வருமா. உண்மையில் நடந்தது என்ன? காண காத்திருங்கள்........)
 

Arthi Ravichandran

New member
Wonderland writer
அத்தியாயம் 4
உறவுகள் தொடர்கதை
நிலோவுக்கும் எனக்குமான பாசம் கூடிக் கொண்டே போக நடுவில் அவ்வப்போது பணத்தினால் சலனங்கள் வந்து போனது. ஆனால் அவை சண்டைகள் உருவாக்கவில்லை ஏனெனில் எங்கள் பிரச்சினை பணத்தை தராததால் வருவது இல்லை நான் அவளிடம் வாங்கும் பணம் சிறிதளவே ஆனாலும் அதை திருப்பிக் கொடுத்து விடுவதுதான்.

எங்கள் நட்பு மெருகேற தொடங்கிய நாட்களில் நான் அவளை வழி அனுப்ப செல்லும் போது அவ்வப்போது திண்பண்டங்கள் வாங்குவது வழக்கம். ஆனால் நான் என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே வா சாப்பிட்டு போகலாம் என்று அழைப்பேன். இல்லையேல் அவளாகவே கேட்டால் மட்டும் செல்வோம். இது அவளுக்கு தெரிந்து விட அன்று தொடங்கியது பிரச்சனை.

" உன்கிட்ட பணம் இருந்தா மட்டும் தான் சாப்பிட கூப்பிடுவியா ஏன் பணம் இல்லனாலும் வா போகலாம்னு சொல்ல கூட உரிமை இல்லாத நட்பா. நான் உனக்காக பணம் செலவழிக்க உரிமை இல்லையா" என்று சரமாரியாக திட்டுக்கள் வந்து குவிந்தன.

இவ்வாறு அவ்வப்போது செல்ல சண்டைகள் வர அதை பொருட்படுத்தாமல் இந்த குணம் தவறில்லையே என்று என்னை மாற்ற விருப்பம் கொள்ளாமல் ஓடிக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் அன்பிற்காக மாறுவதில் தவறொன்றும் இல்லை என்பதை உணர வைக்க ஒரு விஷயம் நடந்தது.

நான் கல்லூரிக்குச் செல்லும் போது வெறும் கை வீசிச் செல்வது வழக்கம். திடீரென்று நகழ் எடுக்க,இல்லை வேறு ஏதேனும் ஒன்றுக்கு காசு கேட்டால் என்னிடம் இராது. நிலோ எனக்கும் சேர்த்துப் போட்டுக்கொள்வது வழக்கம். ஐந்தோ பத்தோ என்பதால் திருப்பி தந்தால் சண்டை வரும் என்று அதை விட்டு விடுவேன்.

இதற்காகவே பர்ஸ் எடுத்து செல்ல வில்லை என்றாலும் ID card-ல் எப்போதும் ₹10 இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். அன்று நாங்கள் குடுக்க நேர்ந்த தொகையோ ₹40. அது இன்றும் நினைவில் இருக்கிறது‌.

நான் தான் அவள் பர்ஸ்-இல் இருந்து ₹80 எடுத்து எனக்கும் அவளுக்கும் சேர்த்துக் கொடுத்தேன். அடுத்த நாளே அந்த பணத்தை எடுத்து சென்று அவளிடம் கொடுத்தேன். எனக்கு அது சாதாரணமாக இருந்தாலும் அவளது மனம் ஏற்க மறுத்தது போலும். கையில் பணத்தை வாங்கும் முன் என்னை பார்த்து முறைத்தாள்.நான் " ஓவரா சீன் போடாத" என்று கூறி கையில் தந்து சென்று விட்டேன்.

அன்றுதான் வெடித்தது பூகம்பம். கோபத்தின் உச்சிக்கு அவள் சென்றிருந்தால் கூட கோவ கனலை கொட்டி தீர்த்து இரண்டு நிமிடத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பாள். அவள் வருத்தத்தை சொல்ல வாய் வராமல் திணறிக்கொண்டு இருந்தாள். பின்பு வந்த அவளின் அழுகை அழகாய் அவள் அன்பை வெளிப்படுத்தியது.

அவள் " ஏன் இப்படி பண்ற. சின்ன சின்ன amount ஆ இருந்தாலும் திரும்பி தர. என்ன ஏதோ மூனாவது மனுசியா பாக்குற மாறி இருக்கு .

எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா. நீ என்கிட்ட இருந்து காசு எடுத்துக்க கூட உனக்கு உரிமை இல்லையா?

இன்னைக்கு நீ காசு கொடுத்ததும் வாங்கவே கூடாதுனு நெனச்சேன். எனக்கு திட்டி காச திருப்பி தர அளவு அப்போ மனசு சரியா இல்ல. அழுகை தான் வந்துது..அதான் பேசாம வந்துட்டேன்.

எப்போதுமே இப்படிதான் பண்ற.உன் கைல காசு இருந்தாதான் வெளிய சாப்பிடவே கூப்புடுவ..

ஏன் பணம் நீ போட்டுக்கோ வா போலாம் -னு கூப்பிட முடியாத அளவு அன்னியமான உறவா? நம்ம அப்படிதா பழகிருக்கோமா?

இப்படி இருக்குறது உன்னோட பழக்கமா இருக்கலாம் அது நல்லதா கூட இருக்கலாம்..

ஆனா ஏன்கிட்ட அப்படி இருக்காத..எனக்கு கஷ்டமா இருக்கு" என்று அவள் கதறியது என் மனதை சற்று உலுக்கியது.

அன்றுதான் நான் முடிவு செய்தேன் எனக்காக இல்லை என்றாலும் அவளுக்காகவாது என் பழக்கத்தை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்று.

பின்பும் அவ்வப்போது சில கிளர்ச்சிகள் தோன்றினாலும் இதனால் இருவரிடத்தில் பெரும் வருத்தம் நிலவவில்லை.

நான் அவளுக்காக ஏதேனும் சிறிதாய் செய்தாலும் பெரிதாய் எடுத்துக்காட்டும் பூத கண்ணாடியாகவே அவள் ஆனால்.

இவளின் பாசத்தில் தத்தளிக்கவே நேரம் பத்தாது இருக்க ரூம்மெட்ஸ் ஒருபுறம் என் வேலைகளை கூட அவர்கள் செய்து கொடுத்து அன்பின் பேரலையில் மூழ்கடித்தனர்.

என் ரூம்மெட்ஸ் பற்றி சொல்வதை விட என் அறையில் நாங்கள் அடிக்கும் கூத்தை சொன்னால் முதலையின் வாய்போல் கேட்போரின் வாய் பிளந்துக் கொள்ளும்.

எப்பொழுதுமே விளையாட்டாக சண்டையிட்டுக் கொண்டு நால்வரும் ஒரு சேர துணிகளை துவைப்பதைக் கண்டு விடுதியில் உள்ள அனைவருமே வியப்பதுண்டு. எங்கள் ஒற்றுமைக் கண்டு பொறாமைக் கொள்வதும் உண்டு.

மேலும் நாங்கள் என்னேறமும் ஒலிப்பெருக்கியில் சப்தமாக பாட்டு போட்டு விட்டு ஆனந்தமாய் கேட்டுக்கொண்டு அவ்வப்போது அதில் வரும் வரிகளை கிண்டல் செய்துக்கொண்டு இருப்போம்.

எங்கள் அறை எப்பொழுதும் சிரிப்பொலிகளாலேயே நிறைந்திருக்கும். ஆயிரம் கஷ்டங்கள் குறுக்கிட்டாலும் அறையில் சிரிப்பொலி கேட்காத நாள் என்ற ஒன்றே இருந்ததில்லை.

சில நேரம் பெரியவர்களை போல் சிலவற்றை எடுத்துறைப்பதும், சில நேரங்களில் சிறு பிள்ளை போல் அடம் பிடிப்பதும் எங்களின் ஓர் அங்கம். இதற்கு நடுவில் சாப்பாடு சரி இல்லை என்பதைக் கூட மறந்து விட்டது மனம்.

வாழ்க்கையின் ஆனந்த அமுதத்தை அள்ளிப் பருகிக்கொண்டு இருந்த நாட்கள் அவை.

அடுத்து : இவர்களின் அன்பை கண்டு வியந்த உள்ளம் இயல்பு நிலைக்கு திரும்பும் முன்பே புதிய உறவுகள் உட்புகுந்து உள்ள உவகையை உச்சந்தலைக்கு கொண்டு சென்றது. கல்லூரியும் விடுதியும் தாண்டி புதிய உறவு பிறக்க இடம் எதுவோ?
 

Arthi Ravichandran

New member
Wonderland writer
அத்தியாயம் 5
உறவுகள் தொடர்கதை

கல்லூரி நட்பும் விடுதி உறவும் கைக்கோர்த்துக் கொண்டு என்னை தாலாட்டின. இவர்களின் அருகில் நான் இருக்க, கஷ்டங்கள் கூட கண்ணுக்கு எட்டாத தூரம் சென்று விட்டது போலும்.இதை முழுவதுமாய் சுவைப்பதற்குள் மேலும் புதிய உறவுகள் சேர்ந்து திகட்ட திகட்ட அன்பை அள்ளி தெளித்தன.

இந்த புதிய உறவின் அமுது பெயர் அண்ணன். ஒவ்வொரு உடன்பிறவா அண்ணனும் என் வாழ்வில் நுழைந்ததே மிகவும் சுவாரஷ்யமான கதைதான்.

ஒரு நாள் அபி அக்கா துணி துவைத்துக் கொண்டே தன் நண்பருடன் தன் கைப்பேசியில் ஒலிப் பெருக்கியில் போட்டு பேசிக்கொண்டு இருந்தாள். அப்போது அந்த ஒலிப் பெருக்கி வாயிலாக ஓர் இனியக் குறள் என் செவியை வந்தடைந்தது. அப்போது நான் " அக்கா பாடுற குறள் நல்லா இருக்கு கா. யார் பாடுறா" என்றதும் எங்கள் இருவருக்குமான முதல் அறிமுகம் அரங்கேறியது.

அபி அக்கா " என் நண்பன் பரணி தான் ஆர்த்தி பாடுராங்க கேளு" என்று கூறி கைப்பேசியை சற்று அருகில் வைத்தார். அதை கேட்ட பரணி அண்ணா உடனே " என் குறளை நல்லா இருக்கு- னு சொன்ன டார்லிங் யாரு" என கேலி பேசினார்.

அடுத்த நாளே " என் ரசிகையிடம் கைபேசியை குடு" என்று வம்பாக கேட்டு என்னிடம் பேச தொடங்கினார்‌. பின்பு நான் " நிஜமாவே உங்க வாய்ஸ் நல்லா இருந்துச்சு அண்ணா" என்று கூற நெஞ்சம் கிழிந்ததை போல பொங்கினார்.

மறு கனமே கனத்த குறளில் என்னை அண்ணன் என்று மட்டும் அழைக்காதே எனக்கு அது பிடிக்காது என்றார்.

அதற்கு பதில் அளிக்க நான் " எனக்கு அண்ணன் - னா ரொம்ப புடிக்கும் " என்றேன்." என்னமா இப்படி சொல்ற" என்பதோடு நிறுத்தி அபி அக்காவிடமே கைபேசியைக் கொடுக்க சொன்னார்.

அபி அக்கா சிறிது நேரம் பேசிவிட்டு அறையின் உள்ளே வந்தமர்ந்தாள். பரணி அண்ணா நான் சொன்னது பற்றி ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள்.

பரணி என்னிடம் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்தார் " எனக்கு ஒரு தங்கை இருந்தால். எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லை என்று ஏங்கி என் பெற்றோர் தத்து எடுத்த தேவதை அவள். அவள் வந்ததும் என் வாழ்வில் வசந்த காலமும் வந்தடைந்தது. நான் கல்லூரி முடிந்த அடுத்த கனமே என் அன்பு தங்கையை தூக்கி கொஞ்ச சென்று விடுவேன்"

" தங்கையை வளர்கையில் அவளோடு சேர்ந்து நானும் வளர்ந்து தந்தை ஸ்தானத்தை அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு. ஒரு நிமிடம் அக்குழந்தை 'என் தங்கை' பிரிந்தாலும் என் புன்னகை என்னை விட்டு தூர சென்றது போல் இருக்கும். வருடமே நொடி பொழுதில் கடந்தது போல் ஓடிவிட்டது"

" யாரும் எதிர்பாரா வன்னம் அவளின் உண்மை தாயார் தன் குழந்தையை திரும்பி குடுக்க மன்றாடினர்‌. அவர்களை வருத்தி அந்த சாபகேடோடு இந்த குழந்தை வளர வேண்டாம் என்று என் தாயாரும் தந்து விட்டாள். ஆனால் என் மனதில் ஏற்பட்ட வலி மட்டும் இன்னும் நீங்கவில்லை. அந்த தங்கை இல்லாது போனால் என்ன இனி இவளே என் தங்கை ஸ்தானத்தில் என்றும் என் மனதில் இருப்பாள்" என்று கூறியதாய் அபி அக்கா சென்னாள்.

இதை கேட்டதும் என் மனம் பெற்ற இன்பத்தை மொழியில் சிறந்த வள்ளுவனிடமிருந்து 1000 வார்த்தைகள் கடன் வாங்கினாலும் விவரிக்க முடியாது.

" புதிய உறவு கிடைத்த உவகை, அந்த உறவு எனக்கு மிகப் பிடித்த அண்ணன் உறவாகி போன ஆனந்தம் , அதிலும் அவன் உயிராய் நேசித்த தங்கை இடத்தில் நான்" இவை அனைத்தும் சேர்ந்து என்னை தூங்க விடாமல் செய்தது.

என் உடன்பிறந்த சகோதரன் என் மீது மட்டற்ற பாசம் வைத்திருந்தாலும் அண்ணனுக்கே உரிய வம்பு பண்ணும் குணம் இருந்தாலும் படத்தில் திரையிடுவதை போல் என்னை சுற்றி அண்ணன் கூட்டம் இருக்க எல்லோரும் என் மீது அளவில்லா அன்பை பொழிய நான் அவர்களின் பாசத்தை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்க வேண்டும் என்று ஒரு நிராசை இருந்தது.

அது நிராசை அல்ல என்று உணர்ந்த அந்த தருணத்தில் மெய்சிலிர்த்தது. என்னவன் என்பதை போல் என் அண்ணன் என்பதிலும் எனக்கு ஒரு பேரானந்தம் இருந்தது. என்னை செல்லம் கொஞ்ச என்னிடம் அன்பை கொட்டி தீர்க்க ஓர் அண்ணன் வர போகிறான் என்று என் மனம் என் காதோரம் மெல்லிய குறளில் முனுமுனுத்தது.

இவை அனைத்தும் மனதில் உருண்டோட இன்ப வெள்ளம் கங்கை நதி என பொங்கி எழுந்தது‌. இரவு முழுவதும்
தன் தங்கை இடத்தில் என்னை வைத்த அண்ணனின் அன்பை நினைத்தே மனம் அலைப்பாய்தது‌.

அவனுக்கு இது சிறிதெனினும் அண்ணனின் அன்பை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு அது வானளவாக தோன்றியது‌.

(அடுத்து: என் நிராசை ஆசையாய் மாற அதை மேலும் அனுபவமாய் மாற்றும் நாள் அருகிலேயே தான் உள்ளது என்று உணர்த்த பிறந்தது இன்னொரு இனிமையான உறவு. உலகில் யாரும் பெறாத வரத்தை நான் பெற்றது போல் உணர செய்தது அந்த உறவு.)
 
Top