ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரின் தேடல் நீய(டா)டி- கதைதிரி

Status
Not open for further replies.

Anucharan

Active member
Wonderland writer
அத்தியாயம் 24

இருளைக் கிழித்துக் கொண்டு ஆதவன் தன் கதிர்களை இந்த பூமியில் பரவிக் கொண்டிருந்த வேளையில் ஸ்ரீ மற்றும் ஆருஷி பயணித்த பேருந்து கோவையை அடைந்தது...

இருவரினுள்ளும் இந்த இறுதிப் பயணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது....

ஒருவரை மற்றொருவர் நன்கு புரிந்து கொண்டனர்... ஆருஷிக்கோ இந்த பயணம் வாழ்நாளிலேயே மிகப்பெரிய பொக்கிஷம் ... அவனைப் பொருத்தவரை இதுவேப் போதும் இனி வெளிச்சத்திற்கு சென்றாலும் கவலை இல்லை என்ற நிலையில் தான் இருந்தான்...

ஸ்ரீக்கோ என்ன உணர்வென்றே புரியவில்லை.. ஏதோ ஆண்டாண்டு காலங்கள் அவனுடன் பழகியது போன்று இருந்தது... தன் குடும்பத்துடன் இருந்த போது உண்டான பாதுகாப்பு உணர்வை தற்போது ஆருஷியிடம் உணர்கிறாள்...சில சமயங்களில் அதைவிட ஒருபடி மேலே சென்று தாயின் கருவறை கதகதப்பையும் அவனுடன் இருக்கையில் உணர்ந்தாள்...

அவர்களின் பேருந்து அடுத்து நான்கு மணி நேரம் கழித்து தான் அடுத்த பயணத்தை துவங்க இருந்ததால் நடத்துனர் பேருந்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்... ஸ்ரீ ஆருஷி இருவருக்கும் இந்த பயணம் இன்னும் சில மணி நேரங்கள் தொடராத என்று இருந்தது அதனால் பேருந்தை விட்டு இறங்காமல் அதே இருக்கையில் அமர்ந்திருந்தனர்...

பேச்சினூடே ஆருஷி அவனையறியாமலேயே ஸ்ரீ யை நெருங்கி தன் இரு கைகளால் அவளின் இருபுறமும் அணைகட்டியது போல கைகளை முன்பின் இருக்கையில் வைத்தவன் முழுதும் திரும்பி அவள் முகம் பார்த்து அமர்ந்திருந்தான்...அவளின் பேச்சில் தன்னை மறந்து அவளின் இதழசைவும் ,அதற்குப் போட்டியாய் கண்களில் தோன்றிய பாவனைகளையும் பார்த்தவன் அதன் அழகில் சொக்கிப் போனான்....

காதலர்களுக்கு தன் காதலி தான் அழகு என்பதிற்கேற்ப அவள் அழகில் இமைக்க மறந்து கண்களில் காதல் வழிய அமர்ந்திருந்தான்...

"ஒருநாள் அந்த பூனை நான் வளர்த்தின கிளியை பிடிச்சுட்டு போயிருச்சு... " என்று பேசிக்கொண்டே திரும்பியவள் அப்போதுதான் ஆருஷியின் நெருக்கத்தைக் கவனத்தாள்...

அதிர்ச்சியுடன் அவனின் கண்களை பார்த்தவளுக்கு அதில் தெரிந்த உணர்ச்சிகளில் வாயடைத்துப் போனாள்.. சில நொடிகளிலேயே அவனின் நீலநயனமும் இவளின் நீலநயனங்களும் ஒன்றையொன்று கவ்விக் கொண்டது... நீண்ட சில மணித் துளிகள் கடந்த பின்னும் பார்வையை மாற்றாமல் அமர்ந்திருந்தனர்...

மொழியற்ற அவனின் காதலினை தன் விழிகளில் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான்... ஆனால் காதலின் அரிச்சுவடி கூட அறியாத நம் ஸ்ரீ யோ ஏதோ மாயவலையில் சிக்கியது போல அவன் விழிகளில் கட்டுண்டு கிடந்தாள்...

ஆருஷியோ ஒருநிமிடம் தன்னையும் ,தங்களை சுற்றியுள்ள உலகம் ஆபத்து என அனைத்தையும் மறந்தான் அவனைப் பொருத்தவரை ஸ்ரீ மட்டுமே அவன் உலகம் .. மிகுந்த உணர்ச்சி வசத்தில் இருந்தவன் மெல்ல மெல்ல ஸ்ரீ யின் முகத்தை நெருங்கி தன் வலது கையை அவளின் கன்னத்தில் மென்மையாய் பதித்தவன் அதிர்ச்சியில் விரிந்திருந்த ஸ்ரீ யின் இதழை நோக்கி முன்னேறினான்....

அவனின் முகத்தை புரியாது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னை நோக்கி முன்னேறுவதை பார்த்து அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதை நினைக்க மனது பக்கென்று இருந்தது .. இருந்தும் அவனின் விழியசைவில் மயங்கியவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை... அவளும் உணர்வுகளுக்கு ஆட்பட அவன் கண்களை எதிர் கொள்ள இயலாது அவளின் விழிகள் மெதுவாய் மூடிக் கொண்டது...

இருவரின் இதழ்களுக்கும் நூலளவு இடைவெளி இருக்க எங்கோ அடித்த ஹாரன் சத்தத்தில் நினைவுலகம் வர தங்களின் நிலையை உணர்ந்து பதறி அடித்துக் கொண்டு விலகி அமர்ந்தனர்...

ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ளவே மிகவும் சங்கடப்பட்டுப் போயினர்.. ஸ்ரீ க்கோ தன்னை நினைத்தே மிகுந்த அவமானமாக இருந்தது...' ச்ச... ரிஷி என்னபத்தி என்ன நினைச்சுருப்பான்... என்னால் ஏன் என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியல... ஹையோ இனி எப்படி அவன் முகத்துல முழிப்பேன்.' என மனதினுள் புலம்பியவள் சன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...

ஆருஷியோ ' என்னடா பண்ணி வச்சுருக்க ...... சும்மாவே லேசர் கண்ணால நம்ம ஸ்கேன் பண்ணுவ ... இப்ப என்ன சொல்லி சமாளிக்க போறேனோ தெரியலையே...'என ஒரு மனது புலம்பினாலும்... மற்றொரு மனமோ ' ச்ச .. நல்ல சான்ஸ் மிஸ் ஆகிடுச்சே... இந்த பிளடி பஸ்.. சவுண்ட் விட்டு நல்ல மூட கெடுத்துருச்சு' என எரிச்சல் பட்டான்...

இருவரின் மன குமுறல்களையும் கலைக்கும் விதமாக வந்து சேர்ந்தது மக்களின் சலசலப்பு... அப்போது தான் இருவரும் சுற்றுப்புறத்தை ஆராய நன்கு வெளிச்சம் பரவியிருந்த வானம் சட்டென கருமேகங்களால் சூழ்ந்து இருந்தது...

இருவரும் பேருந்திலிருந்து வெளியே வந்தவர்கள் வானத்தை பார்த்தனர்... இது வெயில் காலம் ஆச்சே எப்படி திடிரென மழை வர மாதிரி இப்படி மாறுச்சு அதுவும் காலையில் வானம் தெளிவாக இருந்ததே என இருவரும் குழப்பமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்....

காற்று ஒரு பக்கம் வேகமாக வீச... மக்கள் மழை வரப் போகிறது என வேகமாய் அங்குமிங்கும் ஓடினர்... அதில் ஸ்ரீ யைக் கடந்தும் சிலர் செல்ல அவளோ தடுமாறி கீழே விழுந்தாள்....

ஆருஷி அவளின் தோளைத் தொட்டு "ஸ்ரீ என்னாச்சு ஒன்னும் இல்லையே" என கேட்டுக் கொண்டே எழுப்பியவன் தன்னுடன் அணைத்தவாறு அவளைத் தாங்கி கொண்டான்...

ஸ்ரீ "ரிஷி என்னாச்சு தீடிரென வானிலை ஏன் மாறிருச்சு... எனக்கு ரொம்ப பயமா இருக்கு..." என்க

ஆருஷி " ஒன்னுமில்லை ஸ்ரீ... நீ பயப்படாதே " என்றவன்... குழப்பமாய் கரு மேகங்களைப் பார்த்தான்... அவனுக்கு ஏதோ தவறாய் பட்டது சித்தரின் சக்திகள் அவனுக்கு ஏதோ ஆபத்து வருபோவதாய் உணர்த்திக் கொண்டே இருந்தது...

இடியின் சத்தத்தில் இருவரும் வானத்தை பார்க்க அதில் கருமேகங்கள் நடுவே நிறைய ஜோடி சிவப்பு நிறக் கண்கள் இவர்களுக்கு மட்டும் தெரிந்தது....

அதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு புரிந்து விட்டது பிசாசுகள் தங்களை நெருங்கி விட்டது என...

ஸ்ரீ " ரிஷி அங்க பாரு அதுங்க நம்ம நெருங்கிருச்சு... ஆனா அதுங்களாலதான் பகல்ல வெளிவர முடியாதுல அப்புறம் எப்படி...." என இழுக்க...

ஆருஷி "தெரியல ஸ்ரீ... இதுவரை நம்மை ஒன்று ரெண்டு பிசாசுங்க தான் துரத்திட்டு இருந்தது இப்போ நிறையா இருக்கும் போல தெரியுது ... என்ன பண்றதுன்னு தெரியல ஸ்ரீ "என்றான்...

ஆம்... ஆதிலிங்கம் காட்டை எறித்ததற்கு பிறகு ஒன்றை கற்றுக் கொண்டான்... ஒரே நேரத்தில் பல பிசாசுகளை ஒன்றாய் ஒரு காரியத்தை ஏவினால் பலன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு என்பதை ... அதனால் தான் தன்வசம் இருந்த பிசாசுகள் அனைத்தையும் ஏவ அவைகளோ காலநிலைகளை தனக்கு சாதகமாக மாற்றியுமிருந்தது....

மழைத்துளி விழ ஆரம்பிக்க அந்த நீர் இருவரின் ஆன்மாவிலும் பட்டவுடன் இருவருக்கு அது மிகுந்த உஷ்ணத்தை உருவாக்கியது... சாதாரண மனிதர்களுக்கு இது மழையாக தோன்றினாலும் , ஸ்ரீ மற்றும் ஆருஷிக்கு அக்னி மழையாகவே பட்டது....

ஆருஷிக்கு ஒன்று நன்றாய் புரிந்தது இவை தங்கள் இருவரையும் பலவீனப்படுத்த முயற்ச்சிக்கிறது என்று.... ஸ்ரீ " ரிஷி என்னால முடியல ரொம்ப எரிச்சலா இருக்கு ஆ..ஆ..." என மழைத்துளி படும் ஒவ்வொரு பகுதியும் தீயாய் தகிக்க வலி பொருக்க இயலாது கத்தினாள்...

ஆருஷி "ஸ்ரீ ஒன்னும் இல்லை பயப்படாத வா நாம மறைவான இடத்துக்கு போய்ரலாம்..." என் கூறிவிட்டு கைத்தாங்கலாக அவளை மழைத்துளி படாத இடத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டான் இருந்தும் அவர்களால் அந்த மழையில் இருந்து தப்பிக்கவே இயலவில்லை...

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன் ஸ்ரீ யைப் பார்த்து "ஸ்ரீ நாம இப்போ உடனே இங்கிருந்து மறையணும்.. என்னை கெட்டியா பிடித்துக் கொள்... " என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்தான்....

மழையின் மூலம் ஆன்மாக்களை அடைய முயற்ச்சித்த பிசாசுகள் அவர்கள் தப்பியதை எண்ணி கடுங்கோவத்தில் மழையாய் அவ்விடத்தில் கொட்டி தீர்ந்துவிட்டு மீண்டும் அவர்களை பிடிக்க கருமேகங்களாய் கலைந்து சென்றனர்...தீடிரென மாறும் வானிலைகளை கண்ட சாதாரண மக்கள் ஆச்சர்யத்துடன் கடந்து சென்றனர்....

இருவரும் ஸ்ரீ யின் வீட்டின் முன் நின்றிருந்தனர்... ஸ்ரீ அதிர்ச்சியில் கண்கள் கலங்க தான் வாழ்ந்த வீட்டினை பார்த்துக் கொண்டிருந்தாள்...

ஆருஷி தன் முழு சக்திகளையும் இழந்திருந்தான்... ஆருஷி " ஸ்ரீ ஸ்ரீ ... " என்ற மெல்லிய குரலில் திரும்பியவள் தான் கண்ட காட்சியில் அவ்விடத்திலேயே உறைந்து விட்டாள்.... அங்கு ஆருஷி நிற்க இயலாது தரையில் இருக்க அவன் கரங்கள் மட்டும் ஸ்ரீ யினை விடாது பற்றியிருந்தது....

ஸ்ரீ அவனுக்கு இணையாய் அமர்ந்தவள் "ரிஷி ரிஷி .... எழுந்திரு ..." என கூறிக் கொண்டிருக்கும் போதே அவனின் அருகில் மெல்லிய வெண்ணிற ஒளி தோன்றியது... அதைக் கண்டதும் அவளுக்கு பதற்றம் அதிகரித்தது ஏனெனில் ஆதித்யா மறைந்ததும் இந்த ஒளியில் தான்...

வேகமாய் அவனை தாவி அணைத்தவள் " ரிஷி ப்ளீஸ் என்னை விட்டு போகதடா.. என்கூடவே இருடா " என கதறி கண்ணீர் விட்டவளின் இறுக்கம் அதிகமானது...

அவளின் அழுகை அவனையும் தாக்க கண்கள் தாமாய் கலங்கியது.. அவனுக்கு இன்னும் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது... இதுவரை சரி இனி அவள் எப்படி அந்த பிசாசுகளிடம் இருந்து தப்பிப்பாள் என்பதை நினைத்தவன் தன்னை அணைத்திருந்தவளின் முதுகை ஆதரவாய் தடவி ஆசுவாசப் படுத்தினான்...

ஆருஷி " ஸ்ரீ ஸ்ரீ .. இங்க பாரு ... முதல்ல அழாத ... இந்த சூழ்நிலைய கண்டிப்பா நீ ஏத்துக் கிட்டுதான் ஆகணும்...என்னோட வாழ்க்கைல உயிரோட இருந்தபோதும் சரி இப்பவும் சரி நீ ரொம்ப முக்கியமானவ ... நான் செல்றத கவனமா கேளு ஸ்ரீ அதுங்க திரும்ப வரதுக்கு முன்னாடி நீ உன்னோட குடும்பத்தோட சேர்ந்திருக்கணும்... சரியா ..எப்பவும் தைரியமா இருக்கணும் அதுங்கள விட நம்ம ரொம்ப சக்தி வாயந்தவங்க ஸ்ரீ அத எப்பவும் மறக்காத... " என்றவனின் ஆன்மா மெல்ல மெல்ல அந்த ஒளியை நோக்கி இழுபட

ஸ்ரீ யோ "போகாத ரிஷி ப்ளீஸ் ... "என்றவள் அவனை அணைக்க வர .. ஆருஷி "வராத ஸ்ரீ என்னை பிடிச்சு வைக்க நினைச்சா நீ ரொம்ப காயப்படுவ " என்றவன் கடைசியாய் கண்ணில் தன்னுடைய ஸ்ரீ யை நிரப்பிக் கொண்டான்... அவளோ அழுது கொண்டே அவனின் வலது கையை கெட்டியாய் பிடித்திருக்க ...

ஆருஷி என்ன நினைத்தானோ வேகமாய் அவளை இழுத்து அணைத்தவன் அவளின் நெற்றியில் மென்மையாய் தன் இதழை ஒற்றி எடுத்தான் அவனின் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் ஸ்ரீ யின் கன்னத்தில் விழுந்து அவளின் கண்ணீருடன் கலந்தது...

அவனோ "ரொம்ப நாளாக உன்கிட்ட சொல்ல நினைச்சேன் ஆனா முடியல....
ஐ லவ் யூ அம்மு ..."என்றவனின் ஆன்மா முழுதும் அந்த ஒளியினுள் இழுக்கப்பட்டது... அவளோ அவனின் வார்த்தை அபபோதுதான் செவியடைந்து மூளையில் பதிந்திருக்க கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்... பின் அவன் இழுக்க படுவதை உணர்ந்தவள் அவன் வலது கையை விடாது பற்றியிருக்க எதர்ச்சியாய் அவனின் வலது கையைப் பார்த்தாள்.... பார்த்தவளுக்கு அதிர்ச்சி மேலுற ரிஷி..... என அழைப்பதற்குள் அவன் ஆன்மா முழுதுமாய் அந்த ஒளியினுள் மறைந்து போனது....

சிறுபுள்ளியாய் அவன் மறைவதைப் பார்த்தவள் வாய்விட்டே கதறினாள்..... ரிஷி ரிஷி.... என்றவள் கண்டது அவனின் வலது கையில் பெருவிரல் அருகில் இருந்த சற்று பெரிய மச்சத்தைதான்... ஆம் அவள் கனவு நாயகன் ஆருஷி என்பதை உணர்ந்த மறுநொடி அவன் இவ்வையகத்திலேயே இல்லை என்பதை ஏற்க முடியாதவள் இயலாமையில் அவ்விடத்திலேயே அமர்ந்து கதறி அழுதாள்......

"நிஜமாய் வந்தேன் நிழலைத் தேடி அழைந்தாய் என் கண்மணியே....

உன் மடியில் உயிர்நீக்க தவங்கள் செய்தோனோ என் கண்மணி..

உன் விழியில் நிறைந்துள்ளேன் கண்ணீராய் எனைக் கரைக்காதடி பெண்ணே....

இனியொரு ஜென்மமே வேண்டமடி...
இந்த நினைவுகளே போதும் என் கண்மணி..."

???

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??

Thread 'உயிரின் தேடல் நீய(டா)டி - கருத்துதிரி' https://pommutamilnovels.com/index.php?threads/உயிரின்-தேடல்-நீய-டா-டி-கருத்துதிரி.429/
 

Anucharan

Active member
Wonderland writer
அத்தியாயம் 25

நீண்ட நேரமாக ஆருஷி விட்டு சென்ற இடத்திலேயே அழுது கொண்டிருந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை....

அவன் இறுதியாய் கூறிய "ஐ லவ் யூ அம்மு" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது...

அதுமட்டுமின்றி அவன் கரத்தில் இருந்த மச்சம் வேறு அவளை கொல்லாமல் கொன்றது..இவ்வளவு நாள் ஏதோவொரு உணர்வாக தன்னுள் இருந்தது எப்போது தன் கனவு நாயகன் ஆருஷி என தெரிந்ததோ அதிலிருந்து அது காதலாக மாறிப் போனது ..

அதோடு இல்லாமல் காதலை உணர்ந்த மறுநொடியே பிரிவின் வலியையும் உணர்கிறாள்...

கட்டுப்படுத்த இயலாது கண்ணீர் ஒருபக்கம் வலிந்தாலும் , இன்னொரு மனமோ அவன் கடைசியாய் கூறிய வார்த்தையிலும் அவன் கூறிய விடயங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது அவனின் காதலி தான் தான் என்பதையும் புரிந்து கொண்டாள்....

இருவரும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விரும்பியிருந்தபோதும் அதை வெளிப்படுத்தாமல் விட்டதை நினைத்து மனம் கனத்து போனது... அவள் மனம் ரிஷி ரிஷி என உருப்போட... வாய்விட்டு அழுது கொண்டிருந்தாள்... வாழ்வின் நிதர்சனம் நன்றாக உறைக்க துவங்கியிருந்த வேளையில் வீட்டினுள் இருந்து வந்த சத்தம் அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது....

இதுவரை ஆருஷி நினைவில் இருந்தவளுக்கு தற்போதுதான் தான் தன்னுடைய வீட்டில் இருப்பதை உணர்ந்தாள்.... அவன் இறுதியாய் கூறிய அறிவுரைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டவள் முயன்று வரவைக்கப் பட்ட தைரியத்துடன் கேட்டினுள் நுழைந்தாள்....

வீடே ஏதோ கலை இழந்தது போல் இருந்தது... வீட்டின் பின்புறம் இருந்த மரத்தைப் பார்த்ததும் குடும்பத்துடன் சேர்ந்து அவளின் பிறந்தநாள் கொண்டாடிய நினைவுகள் என அத்தனையும் விழிகளில் சுழன்றது...அதை நினைத்ததுமே அவளின் இதழ்களில் ஒரு புன்னகை... எவ்வளவு அழகான நாட்கள் அவை ...

ஏதோ புதிதாய் பிறந்த குழந்தை போல் ஆவலுடன் தன் குடும்பத்தைக் காண வீட்டினுள் நுழைந்தவளுக்கு ஹாலின் நடுவில் அவளுடைய புகைப்படத்தின் அருகிலேயே தன் தாத்தாவின் புகைப்படம் மாலையுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அவ்விடத்திலேயே உறைந்து விட்டாள்....

ஆருஷி நினைவிலிருந்து சற்று விடுபட்டு நின்றிருந்த கண்ணீர் தற்போது தன் தாத்தாவின் நினைவில் மீண்டும் வழிந்தது...

விவரம் தெரிந்த வயதாகியும் கால் தரையில் படாமல் தன் தோளிலேயே வைத்துக் கொண்டு ஊரை சுற்றிக் காட்டியது அவளின் நினைவிலாட .... தன் தாத்தாவிற்கு என்னவானது என மனதினுள் புலம்பியவள் அவரை இறுதியாய் கூட பார்க்க முடியாமல் போனதை நினைத்து வருந்தினாள்...

மெல்ல அருகில் வந்து அவரின் புகைப்படத்தை தன் விரலால் வருடினாள்...

அந்த நொடி அன்றிரவு நடந்த நிகழ்வுகள் அவளின் கண் முன்னே விரிந்தது.....

அதீத நெஞ்சுவலியால் துடித்த சுந்தரத்தை குடும்பத்தினர் அவசரமாக காரினுள் ஏற்றி மருத்துவமனை அழைத்து சென்றனர்... ஆனால் மருத்துவமனை அடையும் முன்னரே அவரின் உயிர் தன் மெய்க் கூட்டில் இருந்து விடுதலை பெற்றிருந்தது.

பார்வையாளராக மட்டுமே இருந்த ஸ்ரீ க்கு அவரின் இறுதித் தருணங்கள் மிகுந்த வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது... இருந்தும் காட்சிகள் கண்களில் ஓட அவரின் உடலினின்றும் ஆன்மா வெளியேற அந்த நிமிடமே அவரை சுற்றிலும் வெண்ணிற ஒளி தோன்றியது... அவரின் ஆன்மாவோ உடலைவிட்டு வந்ததும் தன்னை சுற்றி கதறிக் கொண்டிருந்த தன் குடும்பத்தை ஒரு நிமிடம் பார்த்தவர் ... மேலும் தன்னை மனக்கண்ணில் பார்க்கும் ஸ்ரீ யையும் பார்த்து அவளுக்கு மெல்லிய புன்னகையை மட்டும் தந்துவிட்டு அந்த வெளிச்சத்தினுள் மறைந்து போனார்....

கண் திறந்த ஸ்ரீ யின் இதழ்கள் தாத்தா... என்று உச்சரித்தது..

பூஜையறையில் இருந்து வள்ளிப் பாட்டியும் அவருடன் ஸ்ரீ தந்தை தாய் மற்றும் சித்தப்பாக்கள் என அனைவரும் வெளிவர பாட்டியின் முகத்தில் தெளிவும் மற்ற அனைவரின் முகத்திலும் ஒருவித கலக்கமுமே மிஞ்சியிருந்தது....

மாண்டவர் மீள்வதுண்டோ!!!! என்பது மூளைக்கு உறைத்தாலும் மனது உண்மையை ஏற்றுக் கொள்ள வெகுவாய் பயந்தது.... பழைய சந்தோசமான வாழ்க்கை இனி வராதுதான்... ஆனால் இறந்தவர்களையே நினைத்துக் கொண்டு இருந்தால் வாழ்பவர்களின் நாட்கள் நரகமாகிவிடுமல்லவா....

இருக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரவேண்டுமே என பெரியவர்கள் சிறியவர்களுக்காக இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்க .... சிறியவர்களும் தாங்கள் வருத்தப்பட்டால் பெரியவர்கள் வருந்துவர்கள் என ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்காக எண்ணி தங்கள் வலிகளை வெளிக்காட்டாமல் மனதில் புதைத்து கொண்டனர்....

இந்த சில வாரங்களில் மெல்ல மெல்ல ஸ்ரீ எல்லாருடைய நினைவிலும் நீங்காது இருந்தாலும் மிச்ச வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டுமே என்று வாழ ஆரம்பித்து இருந்தனர்....

வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவு சொல்லியும் வள்ளி பாட்டி கேட்பதாய் இல்லை அவரின் முடிவில் உறுதியாய் இருந்தார்... அவரின் சொல்படி ஸ்ரீ யின் நினைவாக அந்த வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் பெரிய பெட்டிகளில் அடுக்கியவர்கள் அதனை ஒரு சிறிய அறையினுள் வைத்துப் பூட்டினர்...

அதோடு ஸ்ரீ அஸ்தியின் ஒரு பகுதியும் சுந்தரத்தின் அஸ்தியையும் கங்கையில் கரைப்பதற்காக ஸ்ரீ யின் தந்தை ரவி ராம் மூவரையும் வழியனுப்பும் படலமே தற்போது பரபரப்பாய் நிகழ்ந்து கொண்டிருந்தது...

குருஜி சொன்ன அனைத்தும் அச்சு பிசகாமால் வள்ளிப் பாட்டி ஒவ்வொன்றையும் செய்ய மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தாலும் அவர் இவ்வளவு உறுதியாய் இருக்க நிச்சயமாக ஏதேனும் காரணம் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவரின் போக்கிலேயே விட்டனர்...

அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ க்கு என்ன உணர்வென்றே வரையறுக்க முடியவில்லை.... தன்னை தாங்கி தூக்கி வளர்த்த குடும்பம் தன் பிரிவில் வெறும் நடைபிணமாய் இருப்பதைக் கண்டவளுக்கு தான் இன்னும் உங்களுடன் தான் இருக்கிறேன் என கத்த வேண்டும் போல இருந்தது... ஆனால் நிஜத்தில் அதற்கான சாத்தியக்கூறுதான் இல்லை...

முகத்தில் சிரிப்பு மாறாமல் புகைபட சட்டத்தினுள் மறைந்து போன இருவரின் முன்னும் அனைவரும் கூட அதில் ஆறாம் மாத தொடக்கத்தில் தன் மேடிட்ட வயிற்றுடன் நின்றிருந்த சவிதாவின் மீது ஸ்ரீ யின் பார்வை வாஞ்சையுடன் பதிந்தது.....

விளக்கு ஏற்றி வைத்து விட்டு கண் மூடி நின்றவர்களின் மூடிய இமையிலிருந்து கண்ணீர் வழிந்தது.... ஸ்ரீ அவர்களின் துன்பத்தை போக்க இயலாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்....

இருவரின் அஸ்தியையும் மூவரிடம் கொடுத்தவர் திரும்பி பார்க்காது கிளம்புமாறு அவர்களை பணித்து மற்றவர்களை உள்ளே அனுப்பி விட்டு அங்கிருந்த சோஃபாவில் சற்று ஓய்வாக அமர்ந்தார்.... அவரருகில் சென்று அமர்ந்த ஸ்ரீ எப்போதும் போல அவரின் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.... காடு மேடு தாண்டி வீடு வந்த உணர்வு அத்துடன் அதனை கண்மூடி அனுபவித்தாள்....

ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவருக்கு
எப்போதும் போல ஸ்ரீ தன் மடியில் தலை வைத்து படுத்ததும் தலைகோதுவது போல் தானாக கை மேலெழுந்தது... திடுக்கிட்டவருக்கு வெறுமையான மடியே காட்சியளிக்க நெஞ்சில் சுருக்கென்று வலியெடுத்தது... இயலாமையில் வாய்மூடி அழ அவரின் கண்ணீர் நிழலாய் அவரின் மடியில் படுத்து இருந்த ஸ்ரீ யை ஊடுருவி விழுந்தது...

பாவமாய் அவரைப் பார்த்த ஸ்ரீ "ஸாரி பாட்டி உங்கள எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல... இனிமே உங்கள விட்டு எங்கையும் போக மாட்டேன்... உங்க கூடவே உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பா நா இருப்பேன் பாட்டி...."என்றவளின் வார்த்தை அவரின் செவியை அடைய வேண்டுமே!!!

கண்ணைத் துடைத்துக் கொண்டவர் கால் வலி காரணமாக எழுந்து அறைக்குள் செல்ல முற்பட்டவருக்கு சவிதாவின் அறையில் இருந்து வந்த சத்தத்தில் திடுக்கிட்டார்.....

ஸ்ரீ யின் தாய் வெளிவந்தவர் "என்ன சத்தம் அத்தை, ஏதோ கண்ணாடி விழுந்தது மாதிரி இருந்தது" என்க அவரோ "தெரியல மா சவிதா அறையில் இருந்து தான் சத்தம் வந்தது என்றவர் "அம்மாடி சவிதா என்ன சத்தம் மா என்னாச்சு" என சத்தமாய் அழைக்க அறையிலிருந்து எந்த பதிலும் இல்லாமால் போனதில் அனைவரும் பயந்தனர்....

அனைவரும் சவிதா அறையை நோக்கி விரைய அங்கிருந்த ஸ்ரீ க்கு ஏதோ விபரிதமாய் தோன்ற அவர்களுக்கு முன் அறையினுள் நுழைந்திருந்தாள்.... அங்கு அவள் கண்ட காட்சியில் அவ்விடத்திலேயே உறைந்து நின்று விட்டாள்....

ஏதோவொரு கண்ணாடிப் பொருள் அதனுடன் கைபேசியும் தரையில் சிதறிக் கிடக்க அதன் நடுவில் உணர்வற்ற நிலையில் அவளின் அண்ணி சவிதா மயங்கிக் கிடந்தாள்....

பதற்றத்துடன் அவரின் அருகே சென்றவள் "அண்ணி அண்ணி ... எழுந்திருங்க என்னாச்சு உங்களுக்கு" என்றவளுக்கு அவரின் குழந்தைக்கு ஏதேனுமாகிவிடுமோ என அவரைக் காப்பாற்ற போராடினாள் ...

அவரை உலுக்க முயற்சி செய்தவளுக்கு முயற்சிகளனைத்தும் தோல்வியில் முடிய இறுதியாய் வயிற்றில் கை வைக்க

அவளின் கண் முன்னே நீர் நிரப்பப்பட்டது போல ஒரு இடம் ஒன்றும் புரியாமல் விழித்தவளுக்கு மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருக்கும் இதய துடிப்பு காதில் விழ மெதுவாய் திரும்பி பார்த்தவள் முன் ரோஜா இதழ்களை விட சிவந்த கையளவே உள்ள சிறிய உருவம்...

கண்விழிக்காத அந்த உருவம் கை கால்களை சுருக்கியும் சில நொடிகளில் வெட்டுவது போலவும் மங்கலாக தெரிய அவளுக்கு வியர்த்து வழிந்தது... வேகமாய் வயிற்றிலிருந்து கையை எடுத்தவளுக்கு அங்கு நடந்தவற்றை கிரகிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது....

புரிந்த மறு நொடி அவளின் ஆன்மாவிற்குள் குளிர்பரவ " அண்ணி அண்ணி முழுச்சுக்கோங்க ... நம்ம பாப்பா பாவம் அண்ணி எழுந்துருங்க ... பாப்பாவுக்கு என்னமோ நடக்குது எழுந்திருங்க " என கண்ணீருடன் அழுது கொண்டே அவளை தட்ட முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே...

அறையினுள் வந்த குடும்பத்தினருக்கு பேச்சு மூச்சின்றி கிடந்த சவிதா வின் நிலையைக் கண்டதும் அதிர்ந்தவர்கள் .... நிலைமையின் வீரியத்தை உணர்ந்து சவிதாவைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தனர்...

அவசர பிரிவில் சவிதா அனுமதிக்கப்பட வெளியில் அனைவரும் கலக்கத்துடன் நின்றிருந்தனர்... என்ன நடந்தது எப்படி அவள் தரையில் கிடந்தாள் .... என பல யோசனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்க ஒரு ஓரமாய் கண்ணில் கண்ணீருடன் நின்றிருந்த விஷ்ணுவை ஒருவராலும் கண்ணால் காண இயலவில்லை...

மீண்டும் ஒரு இழப்பை தாங்க அந்த குடும்பத்தில் ஒருத்தருக்கும் தெம்பு இல்லை என்பது மட்டும் உறுதி....

ஐசியுவில் இருந்து வெளிவந்த மருத்துவர் முகத்தில் மிகுந்த சோகம் .. தன் கையுறையைக் கழட்டியவர்... "ஐயம் சாரி ... அவங்க வயித்துல இருக்க குழந்தையோட துடிப்பு ரொம்ப குறைந்து கொண்டே வருது... இப்போ குழந்தை இருக்க ஸ்டேஜே அல்மோஸ்ட டை கன்டிஷன் தான்.... அவங்க கீழ விழுந்ததால எந்த அடியும் பெருசா படல மே பி மயங்கர முன்னாடி எதையாவது பிடிக்க முயற்சி செய்து பலமான அடியில்லாம தப்பிருக்கலாம் ... ஆனால் அவங்க மயங்கும் போது ஏதோ அதிர்ச்சி தரக்கூடிய வகையில நடந்துருக்க அதனால பேபிக்கு போகிற ஆக்ஸிஜன் தொடர்ந்து கட் ஆகியிருக்கு ... சரியான நேரத்துக்கு நீங்க கொண்டுவந்தாலும் ஆக்ஸிஜன் திரும்ப பேபினால எடுத்துக்க முடியல சோ சாரி டூ சே திஸ்... இன்னும் கொஞ்சம் நேரத்துல பேபிய ஆப்ரேட் பண்ணி ரீமுவ் பண்றது தான் பெட்டர்..." என கூறிவிட்டு செல்ல மொத்த குடும்பமும் இடிந்து போனது... இன்னும் எத்தனை உயிர்களைக் தான் இழந்து எவ்வளவுதான் தாங்குவது.... விஷ்ணுவோ அதற்கு மேல் முடியாது கண்ணீருடன் மருத்துவமனையை விட்டு வெளியேறினான்....
***************************
சவிதாவை மருத்துவமனை அழைத்து செல்வதை ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்த ஸ்ரீ சிறு நடுக்கத்துடனும் ஏதும் தவறாக நடக்கக்கூடாது என்ற பிரார்த்தனையுடனும் அவர்களின் பின்னே செல்ல முயற்சிக்க அவள் இருந்த அறையின் கதவு மற்றும் சன்னல்கள் அனைத்தும் வேகமாய் அடைக்கப்பட்டது....

அவளோ இருந்த பதற்றத்தில் சுற்றிலும் நடக்கும் சூழ்நிலை மாற்றத்தை கவனிக்காது எப்போதும் போல சுவற்றில் ஊடுருவி செல்ல முயற்சிக்க அந்தோ பரிதாபம் சுவற்றில் இடித்து கீழே விழுந்தாள்....

அப்போது தான் சுற்றுப்புறத்தை கவனித்தவளுக்கு இவ்வளவு நேரம் வெளிச்சமாய் இருந்த அறை தீடிரென்று இருள் பரவி இருப்பதை கண்டு அதிர்ந்தாள்.... மீண்டும் மீண்டும் சுவற்றின் வழியே வெளியேற முயற்சித்து முடியாது போக பயத்துடன் திரும்ப ....

அவளின் பின்புறம் ஒரு கருப்பு உருவம் வேகமாய் அவளை நெருங்க நடுங்கிக் கொண்டே சுவற்றுடன் ஒன்றினாள்...

அண்ணியின் நிலையை அறியவேண்டும் குழந்தையை எப்படியாவது காக்க வேண்டும் என்ற மனப்பதற்றத்தில் இருந்தவளுக்கு ஆருஷி கூறிய எந்த தற்காப்பும் அவளின் நினைவில் வராமல் போனது அவளின் துர்தஷ்டவாசமாகியது..

நாற்புறமும் கருப்பு உருவ பிசாசுகள் அவளை முழுவதும் நெருங்கி தன் சக்திகள் மூலம் அவளை கவர்ந்து செல்ல இரத்தகறை படிந்த சங்கலியால் அவளை சுற்றி வளைத்தனர்...

சற்றேனும் சுயநினைவில் அவள் இருந்திருந்தால் அந்த சங்கலி ஒரு மாயை என அறிந்திருப்பாள் ஏனெனில் பிசாசுகள் நன் ஆன்மாவை தொட்டால் அவை சாம்பல் ஆகிவிடும் என்பதை அறிந்திருந்தனர்......

எவ்வளவு போராடியும் அந்த சங்கலியில் இருந்து வெளிவர இயலாதவள் தான் வசமாய் அவைகளிடம் மாட்டிக் கொண்டதை உணர்ந்தாள்....

பயத்தில் ஒரு நிமிடம் கண் மூடியவளுக்கு அந்த சிறு சிசுவின் துடிப்பைக் காண எங்கிருந்துதான் அவ்வளவு வெறி வந்ததோ ஆ....... என கத்திய சங்கிலியை உடைத்துக் கொண்டு வெளிவந்தவளின் கண்கள் சிவப்பு நிறத்தைப் பிரதிபலித்தது....

தீய ஆன்மாக்கள் அவளை பயமுறுத்த நெருங்க அனைத்தையும் ஆக்ரோஷமாக தாக்க முயற்சிக்க அந்தோ அவளின் கரம் பட்டே அவைகள் அவ்விடத்திலேயே பொசுங்கி போனது...

மீண்டும் அவ்வறையில் வெளிச்சம் பரவத் துவங்க அவளின் விழியும் நீலநிறத்தில் மாறி அவளை சாந்தப் படுத்தியது....

தன் அண்ணி மற்றும் அவரின் குழந்தையையும் காண விரைந்தவளுக்கு இடிந்து போய் அமர்ந்து இருந்த குடும்பத்தைக் கண்டு மீண்டும் பதற்றமானது....

அந்த அறையை அவள் நெருங்கி செல்ல அவளின் பின்னே வெண்ணிற ஒளி தோன்றியது திரும்பி பார்த்தவளுக்கு அது தனக்கானதுதான் என்று புரிந்தது இருந்தும் அவளுக்கான கடமை இன்னும் முடியாமல் இருக்க அதற்குள் எப்படி செல்வது என்ற குழப்பத்தில் வேகமாய் சவிதா வை காண விரைந்தாள்.....

அதற்குள்ளாகவே அந்த ஒளியிலிருந்து ருத்ராட்சம் அணிந்த நீலநிற கை வெளிவந்து ஸ்ரீ யின் வலது கையை பிடிக்க அவளோ மேலும் பதறி "இல்லை இல்லை .... என்னை விடு நான் என்னோட அண்ணியையும் அவங்க குழந்தையையும் காப்பாத்தனும் என்னை விடுங்க..." என அக்கரங்களிலில் இருந்து விடுபட போராடினாள்.... ஆனால் வலிமை மிகுந்த அந்த கரமோ அவளை விடாது பிடித்து இழுக்க அவள் அழுகையினுடே கதற கதற அவ்வொளியினுள் முழுதும் கரைந்து போனாள்...

"எதை எடுத்து வந்தோம் இறுதியில் உடன் கொண்டு செல்ல ...
பிறப்பிற்கும் இறப்பிற்க்கும் நடுவிலே அன்பெனும் பாலமில்லையெனில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அது வீணே!!!!!!!"

முழுதும் அன்பினாலே திளைத்து வாழ்ந்த ஒரு அப்பாவி ஜீவனின் வாழ்க்கை விதி விளையாட்டில் சிக்கி உயிர்ப்பற்றுப் போனாலும் அவளின் எஞ்சிய நினைவுகள் என்றும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்............

**************************

"இல்லை........................." என கத்திய ஆதிலிங்கத்தின் ஆக்ரோஷம் அந்த காட்டை நிறைக்க..... இவ்வளவு வருட காத்திருப்பின் பலன் கை வந்தும் கிடைக்காமல் போன ஏமாற்றம் வலி அவனை மேலும் வெறியேற்ற.....
"உன்னை விடமாட்டேன்......." என்று உருப் போட்டவனின் உருவம் புதிய அத்தியாயத்திற்கான காத்திருப்பாய் மாறியது.......

முற்றும்...
 

Anucharan

Active member
Wonderland writer
ஹாய் மக்களே....


"உயிரின் தேடல் நீய(டா)டி - இறுதி அத்தியாயம்"


முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க .... இறுதி அத்தியாயம் எழுத எனக்கு சந்தர்ப்பமே அமையல ... உடம்பு முடியாம சரியானதும் எழுத ஆரம்பிக்க பெண்டிங் வொர்க் னு ரொம்ப பிஸி ஆகிட்டேன் மக்களே... மைண்ட் ரிலாக்ஸாவே இல்லைபா.... நான் ரொம்ப விருப்பப்பட்டு தான் இந்த எழுத்து பயணத்தை தொடங்கினேன்...

என்னை பொருத்தவரை இருக்கறது ஒரு வாழ்க்கை அதுல நமக்கு என்ன என்ன விருப்பமோ அதை எல்லாம் ட்ரை பண்ணி பாத்திரணும் அவ்வளவுதான்ங்க...

இந்த கதை ஆரம்பிச்சு சில எபி நல்லாவே ஒரு ப்ளோவுல போயிட்டு இருந்துதுங்க பட் ஒரு ஸ்டேஜுக்கு மேல என்னால சுத்தமான எழுதவே முடிலங்க... எத்தனையோ முறை பாதிலையே நிறுத்திரலாம்னு கூட யோசிச்சேன் ... ஆனா சில வாசகர்களின் ஊக்கம் என்னை தொடர்ந்து எழுத ரொம்பவே தூண்டியது... அதுவும் சில சமயம் நெகட்டிவ் ஆ தோணும் போது அவாசகர்களோட கமெண்ட் எல்லாம் திரும்ப ரீட் பண்ணி பார்த்து என்னையே நான் பாசிட்டிவ் ஆ மாத்திக்குவேன்...

ரொம்ப ரொம்ப நன்றி வாசகர்களே.... உங்களோட சின்ன சின்ன ஊக்கம் தான் என்னோட முதல் கதையை நல்ல படியாக முடிக்க முடிஞ்சுது....

கதை இன்னும் ஒரு வாரம் தளத்தில் இருக்கும் மக்களே .... படித்துவிட்டு என் முதல் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!!!!

உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும்
அணுசரண்❤️Thread 'உயிரின் தேடல் நீய(டா)டி - கருத்துதிரி' https://pommutamilnovels.com/index.php?threads/உயிரின்-தேடல்-நீய-டா-டி-கருத்துதிரி.429/
 
Status
Not open for further replies.
Top